லேபிள்கள்

புதன், 26 ஜூலை, 2023

கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்…

 


குழந்தை வளர்ப்பின் தொடக்கம் ஒவ்வொரு மனிதனின் மணவாழ்வோடு தொடங்குகிறது. மணவாழ்வின் சரியான துணைதான் குழந்தை வளர்ப்பின் அடிப்படை. இந்த உலகில் சாந்தியும் – சமாதானமும், மனித நேயமும், அறநெறிகளும் தழைத்தோங்க காரணமாக இருப்பவர்கள் இளந்தலைமுறையினர்தான்.

அத்தகைய பண்பு சீலர்களை மண்ணுலகில் உருவாக்கி விண்ணுலக நாயகனான இறைவனின் பேரன்புக்கு ஆளாக்க பெரிதும் உழைப்பவர்கள் தாய்மார்கள். சமூகப் பெறுப்பும் – ஆன்மீக அருங்குணங்களும் கொண்ட பெண்களை தமது துணைவியராக்கிக் கொள்வதுதான் குழந்தை வளர்ப்பின் முதல் நிலையாகும்.

‘இறைவனுக்கு இணை வைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும்வரை நீங்கள் ஒருபோதும் திருமணம் செய்யாதீர்கள்’ (அல்குர்ஆன் 2:221)

அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள், ‘நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப் பற்றுக்காக. நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு நலன் உண்டாகும்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)

இறைவன் பெண்களுக்கு கண்ணியமளிக்க அறிவுறுத்துவதோடு, அவர்களில் சிறந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள்தான் என்று அடையாளமும் காட்டுகின்றான். திருமண பந்தத்தின் மூலமாக இஸ்லாம் ஆண் பெண் மற்றம் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. அவர்களது பவ்தீக – ஆன்மீகத் தேவைகளையும் நிவர்த்தி செய்கிறது.

”மேலும் அவர்கள்; ‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!’ என்று பிரார்த்தனை செய்வார்கள்.” (திருக்குர்ஆன் 25:74 )

மனைவியரிடம் இல்லற உறவு கொள்ளும் அந்த நேரத்தில்கூட, ‘இறைவா! ஷைத்தானின் தீங்கிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!’ (நூல்: முஸ்லிம்) என்று பிரார்த்திக்கும்படி சொல்கிறார்கள் அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

      உடலுறவின் போது ஓதும் துஆ:       

உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும்போது பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

====================================

بِسْمِ اللهِ

اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ

وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا

பிஸ்மில்லாஹி 

அல்லாஹும்ம

ஜன்னிப்னஷ்  ஷைத்தான

வ ஜன்னிபிஷ்   ஷைத்தான

மா ரஜக்தனா

====================================

[  திரும்பத்திரும்ப சொல்லிப்பாருங்கள், மனப்பாடமாகிவிடும்.

குறிப்பாக… புதுமணத்தம்பதிகளுக்கு அவசியம் சொல்லிக்கொடுங்கள்.]

பொருள்:      

அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு துவங்குகிறேன்.

யாஅல்லாஹ்!

எங்களை ஷைத்தானை விட்டும் விலக்கி வைப்பாயாக!

எங்களை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!

எங்களுக்கு நீ வழங்கிய குழந்தைகளை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!!

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தது முதல் மனிதனாக வளர்ந்து அவன் மரணிக்கும் வரை நல்லவனாக வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமாக இருக்கும். எவ்வளவு சிரமப்பட்டேனும் தனது குழந்தையை நல்லவனாக வளர்த்து உருவாக்க வேண்டும் என்பததூன் ஒவ்வொரு பெற்றோரின் கனவும்கூட! அப்படியிருந்தும்கூட சிலபேர் தீயவர்களாக வளர்ந்துவிடுவதும் உண்டு.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. ஆனால் பெரும்பாலோர் அதனை பெரிது படுத்துவதில்லை அல்லது அந்த நோக்கத்தில் சிந்திப்பதும் இல்லை.

 ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம் அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது. அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற குழந்தை ஸாலிஹான பிள்ளைகளாகத் திகழும் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா என்ன!

கணவன் -மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் ஆணின் விந்து பெண்ணின் கற்பப்பைக்குள் நீந்திச் செல்லும்போது இறைவனால் அதற்கு ‘ரூஹு’ ஊதப்படுகிறது என்று அறிஞர், ஓ.எம் அப்துல் காதர் பாகவி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்த நினைவு.

ஒரு நிமிடம் சிந்தனை செய்து பாருங்கள்! ‘ரூஹு’ ஊதப்படும் அவ்வேளையில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கோரினால் பிறக்கின்ற குழந்தை அல்லாஹ்வின் அருளோடு எவ்வளவு சிறந்த குழந்தையாக பிறக்கும்! அது வாழ்ந்து மரணிக்கும் வரை அல்லாஹ்வின் அருள்பெற்ற மனிதாக  திகழும் என்பதில் என்ன சந்தேகம்?

அதைவிடுத்து உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் இறைவனை மறந்து விட்டு குழந்தை பிறந்தவுடன் அதனை நல்லவனாக அல்லது நல்லவளாக வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! ஆகவே குறைந்தபட்சம் கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன் அவூது… பிஸ்மி… சொல்வதில் என்ன தயக்கம்!

சிலர் அறியாமையால் இப்படிகூட நினைக்கலாம், ‘அந்த நேரத்தில் அல்லாஹ்வையெல்லாம் அழைக்கலாமா – நினைக்கலாமா? அது அசிங்கமல்லவா?’ என்று! இங்குதான் நம்மில் பலர் மிகப்பெரிய தவறை மனதுக்குள் விதைக்கிறார்கள்.

உடலுறவு ஒரு அசிங்கமல்ல! அதுவும் ஒரு இபாதத்தே. ஆம்! மனைவியுடன் உடலுறவு கொள்வதையும் இஸ்லாம் ஒரு இபாதத்தாகவே கருதுகிறது. அதன் பொருட்டே மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்கிறது இஸ்லாம்.

இதைப்பற்றி ஸஹாபாப் பெருமக்கள் ஆச்சர்யத்துடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, ‘ஆம்! நீங்கள் உங்கள் மனைவியருடன் உறவு கொள்வதும்; நன்மையான காரியமே! ஏனெனில் நீங்கள் உங்கள் மனைவியரல்லாத மற்ற பெண்ணிடம் உறவு கொள்வது பாவமெனும்போது உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது நன்மையான காரியம் தானே!’ எனும் கருத்துபட பதிலளிக்கிறார்கள். நன்மையான காரியம் என்று அறிவுருத்தப்படும்போது அதற்கும் நன்மை எழுதப்படும் என்பது சொல்லாமலே விளங்குமே!

ஆகவே ஒவ்வொரு தம்பதியரும் உடலுறவு கொள்ளுமுன் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடும் விதமாக குறைந்த பட்சம் ‘அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் – பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்…’ என்று சொல்லிக்கொள்வோம். இறையருளால் ஸாலிஹான சந்ததிகளைப் பெறுவோம்.

அடுத்து, பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பெயரைச் சூட்டும்படி அறிவுறுத்தினார்கள் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தமது தந்தையார் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாகக் கூறுகிறார்கள்:

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது மகளுக்கு ஆஸியா என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இதை அறிந்த நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெயரை மாற்றி ‘ஜமீலா – அழகானவள், அழகி’ என்று பெயர் சூட்டினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)

இறைவனுக்குப் பிடித்தமான பெயர்கள் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

o நல்ல பெயரை குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும்.

o தந்தையின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படல் வேண்டும்.

குழந்தை பிறந்ததும் அதன் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் கூறி பெயர் சூட்டுவது நபிவழியாகும் (நூல்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதீ)

‘கால்நடையை அறுத்து அகீகா கொடுங்கள் முடியை நீக்குங்கள்’ (நூல்: புகாரி) என்கிறார்கள் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அகீகா பற்றிக் கேடட்டபோது, ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் அறுக்கும்படி கூறினார்கள்.’ (நூல்: திர்மிதீ)

‘குழந்தை பிறந்த ஏழாவது நாளிலும், 14, 21 ஆகிய நாட்களிலும் அகீகா கொடுக்கலாம்’ (நூல்: தப்ரானீ) இதுவும் முடியாத பட்சத்தில், எந்த நாளிலும் கொடுக்கலாம். ஆனால் சிறப்பிற்குரியது மேற்குறிப்பிட்ட நாளில் கொடுப்பதேயாகும்.

‘ஃபாத்திமாவுக்கு குழந்தை ஹஸன் பிறந்தபோது, தலை முடியை மழித்து அதன் சம அளவுக்கு வெள்ளியை ஏழை எளியோருக்குப் பகிர்ந்தளித்தார்கள்.’ (நூல்: அஹ்மது, திர்மிதீ)

குழந்தை வளர்ப்பு என்பது தாய் – தந்தை இருவரும் குழுவாக இணைந்து செய்யும் பணியாகும். சில நேரங்களில் மனைவியின் வேலையைப் பகிர்ந்து கொள்வதால்ஸ அவளுக்குக் கிடைக்கும் அதிகப்படியான நேரத்தை அவள் தனது குழந்தை வளர்ப்பில் பயன்படுத்த முடியும்’

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால்ஸ ‘முதல் குழந்தைக்கு அதிக உரிமை அளிப்பதா? இரண்டாவது குழந்தைக்கு அளிப்பதா? பெண் குழந்தை அதிக உரிமையுள்ளதா? ஆண்குழந்தைக்கா? – என்று பல்வேறு கேள்விகள் எழலாம். இதற்கு சுருக்கமான பதில் இதுதான்:

‘பெற்றோர் தமது எல்லாக் குழந்தைகளிடமும் சரிசமமாகவும், நீதத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.’

‘இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் சரிசமமாக நடந்து கொள்ளுங்கள்’ என்றார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

Posted by Abu Safiyah

www.nidur.info


கருத்துகள் இல்லை:

நாற்பது வகை கீரைகளும் அதன் பயன்களும்...!!*

அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். முடக்கத்தான் கீரை – கை , கா...

Popular Posts