லேபிள்கள்

சனி, 29 ஜூலை, 2023

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்

 


உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள்.

அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45)

மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின் ‘தொழுகையின் உண்மையான அழகை எப்படி சுவைப்பது’ என்ற தொடரின் அடிப்படையில் கீழே சில ஆக்கத்திறன் ஊக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளன:

 

1. அல்லாஹு அக்பர் சொல்லி, உங்களுக்குப் பின்னால் உள்ள உலகைத் தூக்கி எரியுங்கள்!

நாம் ஏன் தொழுகையை ‘அல்லாஹு அக்பர்’ என தொடங்குகிறோம்,  என என்றைக்காவது நீங்கள் சிந்தித்துப்பார்த்திருக்கிறீர்களா? அல்லாஹு அக்பர் என்று சொல்லும்போது, யாருக்கு முன்னால் நிற்கிறீர்களோ, அவன், உங்களை அந்த நிமிடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், உறக்கம், உங்கள் குடும்பங்கள், நீங்கள் கொடுக்க வேண்டிய கடன்கள், உங்களுடைய கவலைகள், மற்ற எதையும் விட மிக, மிக உயர்ந்தவன் என்பதை உறுதி செய்கிறீர்கள் என்பதை உணருங்கள். அல்லாஹு அக்பர்’ என்று சொல்லும்போது அவையனைத்தையும் பின்னால் தூக்கிப்போடுவதாக கற்பனை செய்து கொள்ளூங்கள்.

 2. திரையைக் கற்பனை செய்து பாருங்கள்!

நீங்கள் தொழுகைக்காக நிற்கும்போது, ‘அல்லாஹ் அஸ்ஸவஜல்: ‘எனக்கும் என்னுடைய அடியானுக்கும் இடையே உள்ள திரையை விலக்குங்கள்.’என்று கட்டளையிடுகிறான்.  நீங்கள் அல்லாஹு அக்பர் என்று சொல்லி, தொழுகையைத் தொடங்கியவுடன், அல்லாஹ் தன்னுடைய அழகிய முகத்தை உங்கள் பக்கம் திருப்புகிறான்.  நீங்கள் திரும்பும் வரை அவன் திரும்புவதில்லை. உங்களுடைய எண்ணங்கள் அல்லது பார்வை நகர்ந்து செல்லும்போது, அவன் திரையை மீண்டும் போடும்படி கட்டளையிடுகிறான்.

உங்களுடைய உள்ளமும், உடலும் தொழுகையில் கவனத்துடன் இருக்க இந்த திரை விலக்கப்படுவதை நினைத்துக் கொள்ளுங்கள்.  இன்னும் உங்கள் எண்ணங்கள் வழுவிச்செல்கின்றனவா?  அதனால் தான் ‘அல்லாஹு அக்பர்’ மீண்டும், மீண்டும், நீங்கள் ஒவ்வொரு நிலையிலிருந்து மாறும்போதும் சொல்லப்படுகிறது. கவனம் சிதறாமல் இருப்பதற்கு அது ஒரு நினைவூட்டுதலாகவும், புதிய வாய்ப்பாகவும் இருக்கிறது.

 3. அரசனுக்கு சிரம்பணியுங்கள்!

ஒரு அரண்மனைக்குள் நுழையும்போது, அரசனின் பணியாளர்களை எப்படி அடையாளம் காண்பீர்கள்? அவர்களுடைய பார்வை தாழ்ந்திருக்கும் பணிவான தோற்றத்தினால் இருக்கலாம். நீங்கள் சஜ்தா செய்யும் இடத்தில் உங்கள் பார்வையைப்பதித்து, இடது கையின் மேல் வலது கையை உங்கள் நெஞ்சின் மீது வைக்கும் சமயம் தான் உங்கள் அதிபதியை வணங்கும் நேரம்.

அல்லாஹ் அஸ்ஸவஜலுக்கு முன் நின்று, சுபஹானகல்லாஹும்ம வ பிஹம்திக, வ தபாரகஸ்முக வ த’அலா ஜத்துக வலா இலாஹ கைருக –

நீ எத்தனை குறைகளற்றவனாக இருக்கிறாய் யா அல்லாஹ், உன்னைப் புகழ்வதுடன், துதிக்கவும் செய்கிறேன், உன்னுடைய பெயர் மிகவும் அருள்வளம் மிக்கது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது.  உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவர் வேறு எவரும் இல்லை.’ என்று கூறுகிறீகள்.

தொழுகையில் நீங்கள் கவனமாக இருக்கும் பகுதிகள்  மட்டும் தான் ஒப்புக் கொள்ளப்படும் என்பதை உணருங்கள். நீங்கள் அல்லாஹ்வின் நினைவில் இருக்கும் இனிமையான நேரத்தைத் திருட ஷைத்தான் மிகச் சிறந்த முறையில் செயல்படுவான்.

 4. நீங்கள் ஓதும் சூரா ஃபாத்திஹாவின் ஒவ்வொரு வசனத்திற்கும் பதில் கூறப்படும் என்பதை உணருங்கள்!

இப்போது நீங்கள் சாராம்சத்திற்குள் நுழையத் தயாராக இருக்கிறீர்கள்: சூரா ஃபாத்திஹா, குர்’ஆனின் மகத்தான சூரா, அது இல்லாத தொழுகை maதள்ளுபடி செய்யப்படும்.  அல்லாஹ்வே நீங்கள் சூரா ஃபாத்திஹா ஓதும்போது பதில் சொல்கிறான் என்பதை அறியுங்கள். அதனால், இந்த வியக்கத்தக்க உரையாடலை உணர்ந்து, ஒவ்வொரு வசனத்துக்குப் பிறகும், ஒரு சிறு இடைவெளி விடுங்கள்.  தொழுகையின் இந்தப்பகுதியில் நீங்கள் எப்படி நழுவிச்செல்ல இயலும்?

 5. அல்லாஹ்வின் பெயரை தூய அன்புடன் உச்சரியுங்கள்!

இக்கணத்தில் இங்கே வந்து உங்களை நிற்கச் செய்தது எது? அல்லாஹ்வுடன் இருக்க வேண்டுமென்ற உங்களுடைய நேசமும், ஏக்கமும் தான். உங்களுக்கு பிடித்தவர்களைப் பார்க்கும்போது முதலில் என்ன சொல்வீர்கள்? அவர்களுடைய இனிமையான பெயரை.. ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரும்போது அது உங்கள் இதயத்தை வருடிக்கொடுப்பதை உணருங்கள்.

 6. “அகிலங்களின் அதிபதி” என்று சொல்லும்போது நிலையாக நில்லுங்கள்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  “அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது!” என்று கூறினார்கள்[முஸ்லிம்] அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும்போது உண்மையிலேயே நன்றியுணர்வோடு கூறுங்கள்.

ஒரு செடியின் இலையின் உயிரணுவைப் மிகப்பெரிதாகக் காண்பித்து, உடனே, கோள்களுக்கும், விண்மீன்களுக்கும் தாவும் ஆவணப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? இப்போது, அந்த இலைக்கு பதிலாக, அதே மாதிரி அல்லாஹ்வுக்கு முன்னால் நீங்கள் நிற்பது போல நினைத்து, உங்களிலிருந்து ஆரம்பித்து, கேமராவை திருப்பி, பிரபஞ்சத்தைச் சுற்றி, நீங்கள் தொழுகைக்கு நிற்கும் இடத்திற்கு வாருங்கள்.

அடுத்த முறை நீங்கள் தொழும்போது, மேலே, வெகு தூரத்திலிருந்து நீங்களே உங்களைப் பார்ப்பதைப்போல் நினைத்து, ரப்பில் ஆலமீன் – அகிலங்களின் நாயன் என்ற சொற்றொடரின் பொருளை உணருங்கள்.

 7. மாலிக்கி யவ்முத்தீன் என்று ஓதுவதற்கு முன் அர்-ரஹ்மானிர் ரஹீம் பற்றி சிந்தியுங்கள்!

அல்லாஹ்வுடைய அழகிய பெயரான மாலிக்கி யவ்முத்தீனு(நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி)க்கு முன்னால், அவனுடைய பெயர்களான அர்-ரஹ்மான், அர்-ரஹீம் ஏன் வருகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நியாயத் தீர்ப்பு நாளன்று நம்மை எடை போடுவது, மிகவும் அன்பும், கருணையும் உடையவன் என்பதை நினைவில் வையுங்கள். அதனால், நீங்கள் அர்-ரஹ்மான், ரஹீம் என்று ஓதும்போது, சக்தியையும், ஆறுதலையும் உணருங்கள், அதன் பின், சற்று நிறுத்தி, அந்நாளின் பயங்கரத்தை உணர்ந்த்னு ‘மாலிக்கி யவ்முத்தீன்’ என்று கூறுங்கள்.

 8. உண்மையிலேயே, ‘இய்யாக ந’புது வ இய்யாக நஸ்த’ஈன்’ என்றால் என்ன பொருள் என்பதை அறியுங்கள்!

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். இது அல்லாஹ் மட்டுமே உங்கள் இலக்கு, மக்கள் அல்ல, என்பதை உங்களுக்கு நினைவூட்டட்டும். அதனால், நீங்கள் ஏன் அதைச் செய்தீர்கள், அதைச் செய்தீர்கள் என கேட்கப்பட்டால், உறுதியாக பதில் சொல்லலாம், அல்லாஹ்வுக்காக என்று!

ஸாலிகானவர்கள் இந்த ஆயத்தை ஓதும்போது மணிக்கணக்காக தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்கள் என்பதை அறிந்து உணருங்கள். ஒருவர் மக்காவில் தொழுது கொண்டிருக்கும்போது, அவருடைய நண்பர் தவாஃப் செய்யச் சென்று முடித்து விட்டு மீண்டும் அவரிடம் திரும்பி வந்த போது அது வரை அவர் அதே வசனத்திலேயே, அழுது கொண்டே, அதை மீண்டும், மீண்டும், சூரியன் மேலே வரும் வரை ஓதிக் கொண்டிருந்தார்.

 9. உங்களுடைய வாழ்வு அதைத் தான் சார்ந்திருக்கிறது என்பது போல் ‘ஆமீன்’ சொல்லுங்கள்!

நீங்கள் கேட்கக் கூடிய மிகவும் முழுமையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு துவா: இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம் (எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக).

அல்லாஹ்விடம் கேட்பதற்கு பின்பற்ற வேண்டிய சரியான முறையைப் பார்த்தீர்கள் அல்லவா?  அவனைப் போற்றி, புகழந்து அதன் பின் தான் உங்கள் கோரிக்கையை (எங்களுக்கு நேர்வழி காட்டு) அவனிடம் வைக்கிறீர்கள்.

உங்களுடைய முழு வாழ்வும் இந்த துவாவில் தான் அடங்கியிருக்கிறது என்பதை. நீங்கள் சொல்லப்போகும் ‘ஆமீன்; உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும். ஆமீன் என்றால், என்னுடைய ‘அதிபதியே, (என்னுடைய துவாவுக்கு) எனக்குக் கொடு அல்லது பதிலளி’ என்று பொருள். உங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது போலவும், நீங்கள் மன்னிப்புக்காக கெஞ்சுவது போலவும் உணர்வோடு யாசியுங்கள்.

 10. உங்கள் அதிபதியுடன் ஒரு பிணைப்பை உணருங்கள்!

ஸுபஹான ரப்பியல் அஸீம் (என்னுடைய அதிபதி எத்தனை குறைகளற்றவன், மேலானவன்) என்று ருகூவில் சொல்லும்போது, என்னுடைய ரப் என்ற பொருள் உள்ள ‘ரப்பீ’ என்ற சுட்டுப்பெயரின் தனிக்கவனம் செலுத்துங்கள். அது உங்களுடைய பிணைப்பைக் கூடுதலாக்கும். அவன் என்னுடைய ரப்பு, அவனுடைய கவனிப்பில் என்னை வளர்த்தவன், என்னைப் பரிபாலனம் செய்து கொண்டிருப்பவன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடைய தோழர்களும், எத்தனை நேரம் தொழுகையில் நிற்கிறார்களோ, அத்தனை நேரம் குனிந்த நிலையிலும் இருப்பார்கள்.  ஒரு நபித்தோழர் சூரா ஃபாத்திஹா ஓதி, அதன் பின், சூரா அல் பகரா, ஆல இம்ரான், அன்னிஸா மற்றும் அல் மாயிதா ஓதும் வரை, அவர் பக்கத்தில் தொழுது கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகூவிலேயே இருந்தார்கள், என்று கூறினார்கள்.

 11. மகத்தான இறுதி: உங்களுடைய ஸுஜுது!

உங்களுடைய ஸுஜுது தான் உங்களைப் படைத்தவனுக்கு நீங்கள் முழுமையாக அடிபணிகிறீர்கள் என்பதன் இறுதியான அடையாளம்.  நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘ஒரு அடியான் தன் அதிபதியிடம் மிகவும் நெருங்கியிருக்கும் சமயம் அவன் ஸுஜுதில் இருக்கும்போது தான்.’  [முஸ்லிம்]

மேலும்:: ஸுஜுது செய்யுங்கள். ஏனென்றால், ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு ஸுஜுது செய்வதனால் அல்லாஹ் சுவனத்தில் அவனுடைய அந்தஸ்த்தை ஒரு படி உயர்த்தாமலும், அவனுடைய ஒரு பாவத்தை மன்னிக்காமலும் இருப்பதில்லை.’. [அஹமது] என்றும் கூறினார்கள். உங்களுடைய ஒவ்வொரு ஸுஜுதுக்கும் சுவனத்தில் உங்கள் நிலை உயர்வதையும், உங்களுடைய் பாவங்கள் உங்களை விட்டு கழிவதையும் கற்பனை செய்து பாருங்கள்.  உடலாலும், உள்ளத்தாலும் ஆன்மாவாலும் ஸுஜுது செய்து உலகிலேயே மிக இனிமையான உணர்வை சுவையுங்கள்!

 12. தஸ்லீம்(ஸலாம் சொல்வது)முக்கு முன்னால் துவா செய்யுங்கள்!

தஷஹுது (தொழுகையில் உட்கார்ந்து ஓதும் அத்திஹியாத், ஸலவாத்) ஓதிய பின் தஸ்லீமுக்கு (தொழுகை முடிவில் கூறும் ஸலாம்) முன்னால், பெரும்பாலோர் வீணாக்கும் ஒரு அருமையான சமயம் உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்தல்லாஹ் இப்னு மஸ்’ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தஷஹுதைக் கற்றுக் கொடுத்த போது, “ஸஸஅதன் பிறகு அவர் தான் விரும்பிய துவாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

தஷஹுத் சொல்லி விட்டு தஸ்லீம் சொல்வதற்கு அவசரப்படாமல் அதற்கு முன்னால், மனமுருகி குறைந்தபட்சம் மூன்று துவாக்களாவது கேட்டு இந்த கருவூலத்திலிருந்து பயன் பெறுங்கள்!

இவ்வாழ்வின் இனிமை அல்லாஹ்வை நினைவு கூருவதில் தான் உள்ளது என்பதை மறக்காதீர்கள். மறுமையின் இனிமை அவனைப் பார்ப்பதில் இருக்கிறது!

அடுத்த முறை நீங்கள் தொழுவதற்காகப் புறப்படும்போது, அவன் மேல் உள்ள நேசத்தினால், அவனுடைய தேடுதலால், அவனுடன் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தினால் போகிறீர்கள் என்பதை உணர்ந்து செல்லுங்கள். உங்கள் இதயம் ஆவலால் வேகமாக அடித்துக் கொள்வதை உணருங்கள்.  அப்போது தான், தொழுகை எதற்காக கடமையாக்கப்பட்டதோ, அந்த அக அமைதியையும், சுகத்தையும் அடையும் பாதையில் இருப்பீர்கள். [மிஷாரி அல் கர்ரஸ்]

நாம் அனைவரும் பயனடைய பிரார்த்திக்கிறேன்.

– – கவ்லா பிந்த் யஹ்யா – யு.கே.

https://www.nidur.info/2021/09/24/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-2/


கருத்துகள் இல்லை:

சூரிய ஒளியில் சூடேற்றப்பட்ட தண்ணீர் பற்றி தெரியுமா? ஆயுர்வேத முறையில் அதன் பயன்கள்.

ஆயுர்வேத அறிவியல் என்பது பல நூற்றாண்டு வரலாற்றை கொண்டது. ஆயுர்வேத வாழ்க்கை முறையை கடைப் பிடிப்பதால் நம் உடல் நலனை சீராக வைத்துக் கொள்ள ...

Popular Posts