லேபிள்கள்

ஞாயிறு, 27 மே, 2018

குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்!

குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்!
      
  வெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல  குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

1.இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில் வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்களில் குளிர் தாக்காத வகையில் கம்பளி, காதில் பஞ்சு, மப்ளர் அணிந்து கொள்ளலாம். குறிப்பாக, ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள்,  வயதானவர்கள் காலையில் நடைப் பயிற்சி செய்வதைத் தவிர்த்து, மாலை வெயிலில் நடக்கலாம்.
2.குளிர் காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.
 3.வெந்நீரில் சிறிதளவு அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவைத்து அருந்தினால்  சளி, மூக்கடைப்பு,தொண்டைவலி போன்ற நோய்கள் நம்மை நெருங்காது.
4.நம் உடலில் உள்ள நீர் சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.  உடல் சூட்டைத் தக்கவைக்க, மூலிகை டீ, சுக்குக்காபி, புதினா டீ, இஞ்சி டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். குழந்தைகளுக்குத் தரும் பாலில், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துகொடுக்கலாம்.
 5.சூடான தண்ணீர் சரும வறட்சியை அதிகரிக்கும் என்பதால் மிதமான சூடுள்ள நீரில் குளிப்பது நல்லது.  தும்மல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள், சுடுநீரில் ஆவிபிடிக்கலாம்.
6.குளிர்காலத்தில் தோலில் வறட்சி ஏற்பட்டு, பல இடங்களில் தோல் வெடித்து காணப்படும். இதனைத் தடுக்க கற்றாழை அல்லது எண்ணெய் ஆகியவற்றை தடவி வர, எளிதில் தோல் வெடிப்பு சரியாகும்.
7.பனிக்காலங்களில் வீட்டிற்குள் வெறும் கால்களால் நடக்காமல் வீட்டுக்குள் உபயோகப்படுத்தும் 'ஸ்லிப்பர்' வகை செருப்புகளை பயன்படுத்தலாம். அதன் காரணமாக தரையின் குளிர்ச்சியனது சுலபமாக உடலுக்குள் கடத்தாமல் தடுக்கப்படும்.
8.குளிர் காற்று உள்ளே வரும் ஜன்னலோரங்கள், பால்கனி  ஆகிய இடங்களில் அதிக நேரம் நிற்பதையும், மொட்டை மாடியிலும் தூங்குவதையும் தவிர்க்கலாம். தூங்கும்போது, கம்பளி அல்லது அழுத்தமான 'காட்டன்' துணியால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்த வேண்டும். போதுமான நேரம் தூக்கம் இல்லாவிட்டாலும் சளி தெந்தரவு ஏற்படும். எனவே குறைந்த பட்சம் 6 மணி உறக்கம் அவசியமாகும்.
 9.குளிர்காலத்தில் பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவி வரலாம்.
10.உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசலாம். வறண்ட சர்மம் உள்ளவர்கள் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வர சர்மம் சீராகும்.
11.உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
12.உணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, புதினா ஆகியவற்றைச் சேர்த்துகொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts