லேபிள்கள்

வியாழன், 19 ஏப்ரல், 2018

நோய் நாடி..! - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி?

நோய் நாடி..! - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி?
கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!
"இன்று, 'அல்சர்' என்கிற வார்த்தை பள்ளிக்குச் செல்பவர்களில் ஆரம்பித்து பணிக்குச் செல்பவர்கள் வரை பலதரப்பட்டவர்களையும் ஆட்டிப்படைக்கிறது. அந்தளவுக்கு அல்சர் பற்றிய விழிப்பு உணர்வு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை'' என்று ஆதங்கப்படுகிறார்,
  சென்னை - அண்ணா நகர் 'அரசுப் பொது மருத்துவமனை'யின் செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி.ராம்குமார்.


அல்சர் என்பது என்ன?
வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. இதில், வயிறு மற்றும் சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதிக்குள் காயம் அல்லது புண் ஏற்பட்டால், அதனை வயிற்றுப்புண் அல்லது அல்சர் என்கிறோம். சிலருக்கு வாய்ப்பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இதனை வாய்ப்புண் அல்லது 'மவுத் அல்சர்' என்போம். இந்த வயிற்றுப்புண் பெரும்பாலும் 18 வயதைக் கடந்தவர்களுக்கே வரக்கூடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களில் 95 - 98 சதவிகிதம் பேர் 18 வயதைக் கடந்தவர்களே! 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அல்சர் வரக்கூடும். அதற்கு 2 சதவிகித வாய்ப்பே உள்ளது. 10 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வயிற்றுப்புண் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

வயிற்றுப்புண் ஏன் வருகிறது?
'ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori)' எனும் கிருமித் தாக்குதல், வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம், ஸ்டீராய்டு (Steroid) மாத்திரைகள் சாப்பிடுவது, 'கேஸ்ட்ரினோமா (Gastrinoma)' எனும் கட்டி ஏற்படுதல் போன்ற காரணங்களால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.

அல்சர் பற்றிய தவறான புரிதல்கள்
red-dot1 காரம் சாப்பிட்டால் அல்சர் வரும் என்பதில் உண்மையில்லை. அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் காரம் சாப்பிட்டால் பாதிப்புகள் அதிகமாகும்.

red-dot1சரிவர மற்றும் சரியான நேரத்துக்குச் சாப்பிடாததால் அல்சர் வருமென்பதும் தவறு. அல்சர் வந்தவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.

red-dot1வயிற்றுவலி என்றாலே அல்சர் என்று பதற வேண்டாம். அல்சருக்கான அறிகுறி இது என்று நினைத்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் வரும்?
புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், கல்லீரல் அழற்சி நோய் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு (Renal failure) உள்ளவர்கள், உப்புக்கருவாடு அதிகம் சாப்பிடுவோர், மூட்டுவலிக்கு
  அதிக அளவில் மாத்திரை எடுத்துக்கொள்வோர் ஆகியோருக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

அல்சருக்கான அறிகுறிகள்
வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 - 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (சடாரென 2 - 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.
உடனடி மருத்துவம்!

மேற்கண்ட அறிகுறிகள் இருப்பவர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவர் அல்லது செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில் உடனடி அறிகுறியோ பாதிப்போ தென்படாது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதிப்பே குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளிப்படத் தொடங்கும். அதனால், உடனடி மருத்துவம் அளித்துச் சரிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
 

வயிற்றுப்புண் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி வேண்டிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரத்த வாந்தி, அதிக அளவில் எடை குறைதல், மிகுந்த சோர்வு நிலை ஆகியவை ஏற்படக்கூடும். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம். அதனால், சாதாரண அல்சர்தானே என நினைத்து விட்டுவிடாமல், உடனடி மருத்துவம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வயிற்றுப்புண் பிரச்னையை மிக எளிதில் மாத்திரை, மருந்துகள் மூலமாக அரசு மருத்துவமனைகளில் இலவச மாக சரிசெய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர பாதிப்புகள்
1. வயிறு, சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதியில் ஓட்டை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக
  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

2. சிறுகுடல் புண் நீண்டகாலமாக இருந் தால், சிறுகுடலில் அடைப்பை ஏற்படுத்தி அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குப் பிரச்னையை உண்டாக்கிவிடும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத் தும் பிரச்னை.

பரிசோதனைகள்
1. மேல் உள்நோக்குக் குழாய் (Upper GI Endoscopy): உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் 5 செ.மீ வரை வாய்வழியாக உள்நோக்குக் குழாயைச் செலுத்தி
  புண் இருக்கிறதா, எங்கே இருக்கிறது, என்ன அளவில் இருக்கிறது, ரத்த வாந்தி ஏற்பட்டிருந்தால், ரத்தக்கசிவு எந்த இடத்தில் இருந்து வந்தது, இரைப்பைச் சதையில் புற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா என்பனவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 2,500 முதல் 3,500 ரூபாய் வரை கட்டணத்திலும் இந்த சோதனை செய்யப்படுகிறது.

2. பேரியம் உணவுச் சோதனை: எண்டோஸ்கோப்பி
  சோதனை முறை வருவதற்கு முன்பு இந்த சோதனையே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், பேரியத்தைத்  தண்ணீரில் கலந்து விழுங்கவைத்து, வயிறு மற்றும் சிறுகுடல் பகுதியில் தடயம் அல்லது அடையாளம் ஏதேனும் தென்படுகிறதா என்பதை எக்ஸ்ரே மூலம் பார்த்து, என்ன பிரச்னை உள்ளது எனக் கண்டறிந்து வந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தச் சோதனை வெகு அரிதாகவே செய்யப்படுகிறது. சிறுகுடல் புண், சிறுகுடல் அடைப்பு போன்றவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்பட்டு வருகிறது.  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

சிகிச்சைகள்
1. உள்நோக்குக் குழாய் மூலம் வழங்கப்படும் சிகிச்சை: வயிற்றுப்புண் பிரச்னையால் ரத்த வாந்தி எடுப்போருக்கு உள்நோக்குக் குழாய் மூலமாக ரத்தக் குழாயில் எந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிந்து, அந்த இடத்தில் உள்நோக்குக் குழாய் மூலமாகவே `க்ளிப்' என்ற கருவியைப் பொருத்திச் சரிசெய்வது அல்லது ரத்தக் கசிவு ஏற்படும் ரத்தக் குழாயைச் சுற்றி, ஐந்தாறு இடங்களில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி, ரத்த வாந்தியை நிறுத்துவது என இரு வகை சிகிச்சைகள் இதில் உள்ளன. இவற்றோடு, மருத்துவர் வழங்கும் மாத்திரை மருந்துகளை
  2 - 6 வார காலம் தொடர்ந்து சாப்பிட வேண்டியதும் அவசியம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

2. அறுவைசிகிச்சை: அல்சரால் சிறுகுடலில் ஏற்படும் ஓட்டையைச் சரிசெய்ய அவசர அறுவைசிகிச்சை அவசியம். இரைப்பைப் புண் இருப்பவர்கள் சதைப் பரிசோதனை மேற்கொண்டு, புற்றுநோய் இருப்பது உறுதியானால், கட்டாயம் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இச்சிகிச்சை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

"மொத்தத்தில், வயிற்றுப்புண் பற்றிய அடிப்படைப் புரிதலை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொண்டாலே போதும்... அல்சர் என்னும் மெள்ளக் கொல்லும் நோயை நம் பக்கம் நெருங்கவிடாமல் விரட்டலாம்'' என்று நம்பிக்கை விதைக்கிறார்
  டாக்டர் ராம்குமார்.

-
  சா.வடிவரசு
வயிற்றுப்புண்...
வீட்டுமுறைச் சிகிச்சைகள்!
red-dot1குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்று எரிச்சலைப் போக்கும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை, நெய் ஜீரணமாகாவிட்டால், சுடுநீர் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது. 

red-dot1நெல்லிக்காய்ச் சாற்றை பனஞ்சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், வில்வ இலைகள் மற்றும் பழங்கள் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

red-dot1மாதுளம் பழச்சாறு, பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது.

red-dot1வாழைப்பழம் அதிக அமிலத்தைச் சரிப்படுத்தும் என்பதால், இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், மஞ்சள் வாழைப்பழத்தைவிட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

red-dot1ஒரே வேளையாக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. 

red-dot1அல்சர் இருப்பவர்கள், புளிப்புச்சுவை உடைய திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி  போன்றவற்றைத் தவிர்த்து,  ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவது எப்போதும் நல்லது.

சில கூடுதல் சிக்கல்கள்!
வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில், தொடர் சிகிச்சைகள் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் அல்சர், வயிறு மற்றும் சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று, கணையம், கல்லீரலை பாதிக்கக்கூடும். இதனால், தீவிர வலி ஏற்படும். அல்சர் பாதித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு மற்றும் சிறுகுடல் பாதையை அடைக்கக்கூடும். சாப்பிட்டவுடன் வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பதே இதன் அறிகுறி.

மேலும் சில காரணங்கள்!
red-dot1ஹர்ரி - வொர்ரி - கர்ரி மூன்றையும் தவிர்க்க வேண்டும். அதாவது அவசரம், டென்ஷன், பதற்றம் - கவலை, பொறாமை - காரசாரமான உணவு வகைகள், மசாலா போன்றவை அதிக அமிலத்தைச் சுரக்க வைத்துப் புண்களை உண்டாக்கக்கூடும்.

வயிற்றுப்புண் வர மிக முக்கியக் காரணம் 'ஹெலிகோபேக்டர் பைலோரி' என்ற ஒரு வகை பாக்டீரியா. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுவதாகவும், அது வயிற்று அமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்குவதாகவும், நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ் அல்சராக மாற ஹெச்.பைலோரி கிருமிகள் உதவுவதாகவும் விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

red-dot1தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.

red-dot1குடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு , அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, ஆங்கங்கே சிதைந்துவிடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். அதோடு.. வயிற்று 'லைனிங்'கில் ஓட்டை ஏற்பட்டுப் புண்கள் உருவாகக்கூடும்.

red-dot1அதிக டீ மற்றும் காபி குடிப்பது.

red-dot1மன அழுத்தம், படபடப்பு, பரபரப்பு, உணர்ச்சி வசப்படுதல் ஆகியவையும் காரணமாகும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts