லேபிள்கள்

வியாழன், 25 ஜனவரி, 2018

பேண மறந்த உறவுகள்

பேண மறந்த உறவுகள்

-எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி)-
-BA(Reading),Dip.in.Library & information science-

இஸ்லாமிய மார்க்கம் பூரணமானது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இஸ்லாம் அயலவர் உறவைப்பற்றிக் கூறவும் தவரவில்லை.


ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட செயற்பாடுகளின் போது, பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறான். அவ்வாறு பேணப்படுகின்ற உறவுகளில் ஒன்று தான் எம்மை அண்டியுள்ள அண்டை வீட்டாரின் அற்புதமான உறவு. எமக்கு எத்தனையோ கோடான கோடி குடும்ப உறவுகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் எம்மை அண்டி வாழ்வார்கள். அவசரத் தேவைகளுக்கு உதவுவார்கள். எமது அனைத்து கஸ்ட நஸ்டங்களிலும் இன்ப துன்பங்களிலும் பங்கு கொள்வார்கள் எனக்கூற முடியாது.
ஆனால், அயலவர்கள் மாத்திரம் அயராது முற்பொழுதும் எம் கஸ்ட நஸ்டங்களிலும் இன்ப துன்பங்களிலும் கரங்கொடுப்பர். இவ்வாறான அற்புத அண்டை வீட்டாரைப்பற்றி இஸ்லாம் மிகவும் அழகாகவும் கண்ணியமாகவும் கூறியுள்ளது.
அண்டை வீட்டார் பற்றி அல்குர்ஆன்,

"அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள். பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் நெருங்கிய உறவினரான பக்கத்து வீட்டாருக்கும், உறவினரல்லாத பக்கத்து வீட்டாருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், வலக்கரம் சொந்தமாக்கியவருக்கும் நல்லுதவி செய்யுங்கள்" (அந்-நிஸா-36)
இவ்விறை வசனம் அண்டை வீட்டாருக்கு நல்லுதவி செய்யுமாறு பணிக்கிறது. அதனை நபி(ஸல) அவர்கள் அழகிய முறையில் எமக்கு செயற்படுத்திக் காட்டியுள்ளார்கள்.
"அபூ ஷுறைஹ் அல் குஷாயி அறிவிக்கிறார்கள்,
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் தனது அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்" (புஹாரி, முஸ்ஸிம்)
"யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்" (அஹமத்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்ளவும் பணித்துள்ளார்கள.
ஆனால், இன்றைய எமது சமூகத்தவர்கள் அன்றைய அறியாமை சமூகம் போல் அற்பமான காரணங்களுக்காக இவ்வற்புத உறவினைக் கொச்சைப்படுத்துகின்றனர். அண்டை வீட்டாருடன் மிகவும் கேவலமாக நடந்து கொள்கின்றனர். அண்டை வீட்டு மரத்திலிந்து இலை தன்னுடைய வாளாகத்தில் விழுந்தால் சண்டை. அண்டை வீட்டு நீர் தனது வீட்டு வளாகத்திற்கு வந்தால் சண்டை, அண்டை வீட்டு மந்தை வந்தால் சண்டை, சிறு பிள்ளை போல் குழந்தைகள் சண்டையிட்டதற்காக சண்டை என எப்படி எப்படியெல்லாம் சண்டையிட முடியுமோ அப்படியெல்லாம் சண்டையிடுகின்றார்கள்.
யாருடன் சண்டையிடுகிறோம்? சகோதரர்களே!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அண்டை வீட்டார் எனக்கு வாரிசாக ஆகிவிடுவார் என்று நான் எண்ணுமளவு அண்டை வீட்டார் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்கள் எனக்கு உபதேசம் செய்து கொண்டே இருந்தார்கள்" (புஹாரி, முஸ்லிம்)

அண்டை வீட்டார் என்றால் யாரென்பதனை உணராது, அவர்களது சிறப்புக்களை உணராது, புனர்நிர்மானம் செய்து புதுப்பிக்க வேண்டிய புனித உறவைப் புறந்தள்ளுகிறோம். எந்தளவு உரிமையினை இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியுள்ளது என்பதனை மேலுள்ள பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.ஆனால், இன்று அதனை உணராததன் விளைவாக அவர்களை கண்ணியப்படுத்தத் தவறிய கைசேதத்தினை சுமந்த சமுதாயம் உருவாகிவருகின்றது.
உலகம் சுருங்கி விட்டது. விஞ்ஞானம் வளர்ந்து விட்டதென்று கூறிக்கொண்டு மடிக்கணணிகளோடும் கையடக்கத் தொலைபேசிகளோடும் நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம். நவீன உலகம் என்ற போர்வையில் Facebook, Twitter, Skype……….. என்று ஏதோ ஓர் தேசத்தின் ஏதோ ஓர் மூலையில் இருப்பவருக்கு நட்பின் அழைப்பு விடுக்கிறோம். நல்ல முறையில் பேசுகிறோம. அவரது சுக துக்கங்களைக் கேட்டறிந்து கொள்கிறோம். இரண்டு நாள் அவர் இணையத்தில் இல்லையென்றால், பதறுகிறோம்.
ஆனால், அண்டை வீட்டாரின் சுக நலம் தெரியாது. இன்று எமது அண்டை வீட்டான் என்ன சமைத்தான் என்று தெரியாது! நல்ல விதமாக அவனுடன் பேசுவது கிடையாது! விட்டுத்கொடுப்பு கிடையாது! சகிப்புத்தன்மை கிடையாது! ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசைகள் செய்வதும் கிடையாது!
அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அற்புதமான அண்டை வீட்டு உறவுகளை அற்பகாரணங்களுக்காக புறக்கணித்து விடாமல் இறைத்தூதர் காட்டிய இனிய வழி முறைகளைக் கடைப்பிடிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

அண்டை வீட்டு உறவைப்பேண சில இலகு வழிகள்
01.கண்ணியப்படுத்துதல்:
"அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட ஒருவர் தன் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்" (புஹாரி, முஸ்லிம்)

02.நல்ல வார்த்தைகளை பேசுதல்
";அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்" (புஹாரி, முஸ்லிம்)

03.நோவினை, துன்பம் விளைவித்தல் கூடாது:
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் தன் அண்டை வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம்" (புஹாரி, முஸ்லிம்)
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் முஃமினல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் முஃமினல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் முஃமின் அல்ல" என்று நபி(ஸல்)அவர்கன் கூறினார்கள். அப்போது நபி(ஸல்)அவர்களிடம்: "இறைத்தூதர் அவர்களே! எவர்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு எவனது தீங்கிலிருந்து அவனது அண்டை வீட்டான் பாதுகாக்கப்படவில்லையோ அவன் தான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றைய அறிவிப்பில் "தன் தீங்கிலிருந்து அண்டை வீட்டானைப் பாதுகாக்காதிருப்பவன் சுவனம் நுழையமாட்டான்"

04.தனக்கு விருப்பமானதை தனது அண்டைவீட்டாருக்கும் விரும்புதல்
"தனக்கு விருப்பமானதை தனது சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் முஃமினாகமாட்டார்" (புஹாரி, முஸ்லிம்)

05.அயலவர் உரிமைகளைப்பேணி நடத்தல்
நாம் எப்படி அயலவர்களிடம் உரிமைகளை எதிர்பார்க்கிறோமோ அதே போன்று அவர்களது உரிமைகளை நாம் பேணி நடத்தல் வேண்டும். மறுமையில் எம்மைப் பற்றி முதலில் வாதிடுபவர்கள் அயலவர்கள் தான். "மறுமை நாளில் முதலில் வாதிடுபவர்கள் அண்டைவீட்டார் தான்" (அஹ்மத்)

06.அன்பளிப்புக்களை வழங்குதல்
அன்பளிப்புக்களை வழங்குவதன் மூலமாக அண்டைவீட்டு உறவு மாத்திரமல்ல, அனைத்து உறவுகளுமே உறுதியடைகின்றது. அன்பளிப்புக்களை வழங்குவதாயினும், வாங்குவதாயினும் அதற்கென சில ஒழுங்குகளுண்டு.

1.அன்பளிப்பு வழங்குவதாயினும், அதனை இழிவாகக் கருதக்கூடாது.
"முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுப் பெண் மற்றைய அண்டைவீட்டுப் பெண்ணுக்கு ஒரு ஆட்டின் குழம்பை வழங்கினாலும், அதனை இழிவாகக் கருத வேண்டாம்" (புஹாரி, முஸ்லிம்)

2. அன்பளிப்பினை வழங்குகின்ற போது, பிரதிபலனை எதிர்பார்த்து வழங்தல் கூடாது-
அன்பளிப்பினை வழங்குகின்றவர் தான் அதனை வழங்குவதன் மூலம் வேறு எதனையும் எதிர்பார்த்து வழங்கக்கூடாது. ஏனெனில், சில நேரம் அன்பளிப்பை பெறுபவரிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லாது இருக்கலாம். எனவே, இறைவனின் கூலியை மாத்திரமே எதிர்பார்த்து வழங்குதல் வேண்டும்.

3.நெருக்கமாக உள்ளவருக்கு வழங்குதல்
ஆயிஸா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்,
 நபி(ஸல்)அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது? என்று கேட்டேன்." அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு" என்று பதில் கூறினார்கள். (புஹாரி)
4.தன்னிடம் இருப்பதில் நல்லதை வழங்குதல்
அன்பளிப்பினை வழங்கும் போது, நல்லதை வழங்க வேண்டும். பாவனைப்பொருட்களாயின் உபயோகிக்கக் கூடியதாகவும், உணவுப்ண்டங்களாயின் உண்ணக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
"அபூதர் அவர்களே! நீர் குழம்பைத் தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகமாக்கி, பின்பு உன் பக்கதது வீட்டாரைக் கவனித்து. அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக்கொடுப்பீராக." (முஸ்லிம்)
"தனக்கு விருப்பமானதை தனது சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் முஃமினாகமாட்டார்" (புஹாரி, முஸ்லிம்)

5.தேவையுள்ளவர்களுக்கு தேவையானதை வழங்குதல்
சில சந்தர்ப்பங்களில் உதவி தேவையுள்ள அண்டை வீட்டார் காணப்படலாம். அவர்களது தேவையை நிவர்த்தி செய்வதன் மூலம் அண்டை வீட்டு உறவும் பலமடையும். அவர்களது தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும.

6.அன்பளிப்பினை வழங்கி விட்டு சொல்லிக்காட்டுதல் கூடாது
அல்லாஹ் கூறுகிறான்,
 "இறை விசுவாசிகளே! சொல்லிக்காட்டுதல், நோவினை செய்வதன் மூலம் உங்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்கள்" (அல்குர்ஆன் 2:264) "எவர்கள் அல்லாஹ்வின் வழியில் தங்கள் பொருட்களைச் செலவு செய்த பின்னர், அதைத்தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக்காட்டி பேசாமலும், (மனம்)புண்படச்செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்குரிய நற்கூலி அவர்களின் அதிபதியிடம் இருக்கின்றது" (அல்குர்ஆன் 2:264)
அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நன்மையான காரியங்களில் எதையெல்லாம் செய்து அற்புத அண்டை வீட்டு உறவைப் பேண முடியுமோ, அதையெல்லாம் செய்தும் தீமையான காரியங்களில் எதையெல்லாம் தவிர்த்து அண்டை வீட்டு உறவைப் பேணி அல்லாஹ்விடம் சிறந்தவர்களாகப் பிரார்த்திக்கிறேன்.
"தன் அண்டை வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்" (திர்மிதி)
http://www.islamkalvi.com/?p=107633

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts