லேபிள்கள்

திங்கள், 29 ஜனவரி, 2018

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

-மௌலவி அன்சார் (தப்லீகி)-
வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என்று வரும் ஹதீஸின் விளக்கம் " அவனுடைய அருள் இறங்குகிறது" என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா?
விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது எந்தவொரு ஆதாரமான ஹதீஸிலும் " அர்ஷிலிருந்து அல்லாஹ் இறங்குகின்றான்" என்ற வார்த்தை வரவில்லை என்றாலும் " அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என்ற வார்த்தையை குறிப்பிட்டு இக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும் காரணத்தை வாசகர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
சகோதரர் பீ. ஜே அவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் இந்த ஹதீஸைக் கூறும் போது " அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என ஹதீஷில் வருவதைப் போல் எடுத்துச் சொல்லி அந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கும் வேளையில் மேற்சொன்ன மாதிரி " அருள் இறங்குவதாக" விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனால் இந்த ஹதீஸின் சரியான வார்த்தைப் பிரயோகத்தை அறியாதவர்கள் இவ்வாறு வருவதாக நம்புகின்றார்கள்.


காரணம் :
ஹதீஸில் வராத வார்த்தைகளை ஹதீஸின் பெயரால் இது போன்ற மௌலவிமார்கள் சொல்லமாட்டார்கள் என்ற மக்களின் நம்பிக்கைதான்.

உண்மையில் இக்கேள்வியில் கூறப்பட்டதைப்போன்று " அர்ஷிலிருந்து அல்லாஹ் இறங்குகிறான்". என அர்ஷையும் குறிப்பிட்டு எந்தவொரு ஆதாரமான ஹதீதும் வரவில்லை.
இவ்வாறு ஹதிஸில் வராததை வந்ததென மக்கள் நம்பக்கூடிய விதத்தில் கூறுவது " நபிகளார் கூறாததை கூறினால் உண்டாகும் பெரும் பாவத்திற்கு காரணமாக ஆகிவிடும்.
ஹதீஸின் சரியான வடிவம்
இந்த ஹதீஸ் பின்வருமாறு வருகின்றது.
"இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி எஞ்சியுள்ள வேளையில் கீழ் வானத்திற்கு ஒவ்வொரு இரவிலும் எங்கள் ரப்பு தபாரகவதஆலா இறங்குகின்றான். என்னிடத்தில் யார் பிரார்த்திப்பாரோ நான் விடையளிப்பேன்…… எனக் கூறுவான்" (ஹதிஸின் இறுதிவரை பார்க்க) அறிவிப்பவர் : அபூஹுரைரா, ஆதாரம் : ஸஹீஹுல் புஹாரி
அல்லாஹ்வின் பண்புகளை நம்புதல்
பொதுவாக அல்லாஹ் தன்னைத்தான் எவ்வாறு வர்ணித்தானோ, அவனது பண்புகளை எவ்வாறு அவனுடைய தூதரும் எடுத்துச் சொன்னார்களோ அதை அவ்வாறே நம்ப வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்
"அவனைப் போன்று எதுவுமே இல்லை: அவன் செவியுறுபவனும் பார்ப்பவனும் ஆவான்" (சூறத்துல் சூரா : 11)
அல்லாஹ் கூறுவதைப் போன்று எந்தவொரு படைப்பின் பண்புக்கும் அல்லாஹ்வின் பண்பை ஒப்பாக்கி விடாமல் நம்புவதுதான் அல்லாஹ்வின் விடயத்தில் சரியான நம்பிக்கையாகும்.
மேற்சொன்ன வசனத்தில் அவன் " பார்ப்பவன், செவியுறுபவன்" என வந்துள்ளது. இதே வேளை அவனது படைப்புகளும் "பார்க்கின்றன, செவியுறுகின்றன" என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இங்கே அவனது படைப்பினங்களும் பார்ப்பவைகள், செவியுறுபவைகள் என்பதற்காக படைப்பினத்தின் பண்புகளுக்கு அல்லாஹ்வின் பண்பு ஒப்பாகி விடுமே எனப் பயந்து " அல்லாஹ் பார்ப்பவனோ, செவியுறுபவனோ இல்லை"யென யாரும் கூறுவதில்லை.
மாறாக மேற்சொன்ன வசனத்தில் முதற்பகுதியில் "அவனைப் போன்று எதுவுமில்லை" என சொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு கூறுகிறோம்.
"அல்லாஹ் பார்ப்பவன், ஆனால் படைப்பினத்தைப் போன்றல்ல. அல்லாஹ் செவியுறுபவன், ஆனால் படைப்பினத்தைப் போன்றல்ல. அவனின் தகுதிக்கும், கண்ணியத்திற்கும் ஏற்ற விதத்தில் அவனின் படைப்பினத்திற்கு ஒப்பற்ற விதத்தில் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான்" என நம்புகின்றோம். இவ்வாறே தனக்குள்ள பண்புகளாக அல்லாஹ் எதையெல்லாம் எடுத்துக் கூறுகின்றானோ அவைகளை படைப்பினத்திற்கு ஒப்பாக்காமல் அவனுக்கு இருப்பதாக நாம் நம்பிக் கொள்ள வேண்டும்.
தனக்கென அவன் சொன்ன பண்பொன்றை அவனுக்கு இருக்கிறது என நாம் கூறும் போது அது படைப்பினத்தின் பண்புக்கு ஒப்பாகிவிடுமே என கற்பனை பண்ணி அல்லாஹ்வின் அப் பண்புகளை அவனுக்கு இல்லையெனக் கூறுவது தெளிவான வழிகேடாகும்.
இது உலகில் தோன்றிய வழிகேடர்களான முஃதஸிலாக்களின் வழிதவறிய போக்காகும். எனவே மேற்கோளாகக் காட்டிய குர்ஆன் வசனத்திற்கேற்ப இந்த ஹதீஸில் வருகின்ற விடயத்தை நாம் நம்ப வேண்டும்.
அதாவது, எந்தப் படைப்பினத்திற்கும் ஒப்பில்லாதவனாக எங்களின் "ரப்பு" இறங்குகின்றான். அவனின் இப்பண்பை அவர்களின் கற்பனைகளினால் கற்பனை பண்ணவும் முடியாது அதன் வடிவத்தை நாம் சிந்திப்பதும் முடியாது.
இவ்வாறே அவன் தனக்கெனச் சொன்ன பண்பை அவனின் படைப்பினத்திற்கு ஒப்பாகிவடுமோ எனப் பயந்து (அப் பண்பை) அவனுக்கு இல்லையெனக் கூறுவதும் அல்லது அதற்கு வலிந்துரை கொடுப்பதும் "முஃதஸிலாக்கள்" எனும் வழிதவறிய பிரிவினரின் நடைமுறையாகும்.
மாற்றுக் கருத்துடையோரின் ஆதாரம் :
இவ்வாறு வலிந்துரை கொடுப்பவர்களில் ஒரு சாரார் சில ஆதாரங்களை தங்களின் வாதத்திற்காக முன்வைக்கின்றனர்.
அவர்களின் வாதம் :
"அல்லாஹ் அர்ஷின் மேல் உள்ளான்" என நம்புவது நமது கடமை.
எனவே "அல்லாஹ் கீழ் வானத்திற்கு அர்ஷிலிருந்து இரவின் மூன்றாவது பகுதியில் இறங்குகின்றான்" எனக் கூறும் போது "அர்ஷின் மேலுள்ளான்" என்ற நம்பிக்கை பிழைத்துப் போய்விடும்.
அதுமட்டுமன்றி உலகம் உருண்டையாக இருப்பதால் இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இப் பூமியின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும். அவ்வாறாயின் அந்த வேளைகளில் அல்லாஹ்வும் அர்ஷிலிருந்து இறங்கியாக வேண்டும். எந்த நேரமும் இரவின் மூன்றிலொரு பகுதி இருந்து கொண்டே இருப்பதால் அப்போதெல்லாம் அல்லாஹ் "அர்ஷின் மேல் இல்லாதவனாகி விடுகின்றான்" என வந்துவிடும். எனவே இம்முரண்பாட்டைத் தவிர்க்க "அர்ஷின் மேல் உள்ளவன்தான் அல்லாஹ்" என நம்பினால் "அவன் இறங்குகின்றான்" என்ற நம்பிக்கைக்கு வேறுகருத்துக் கொடுத்தாக வேண்டிவரும் அல்லது "அவன் இறங்குகின்றான்" என நம்பினால் "அர்ஷின் மேல் உள்ளான்" என்பதற்கு வேறுகருத்து கொடுத்தாக வேண்டிவரும்.
சுருக்கமாக கூறுவதாயின் ஒன்றை நேரடியான பொருளோடு நம்பினால் மற்றொன்றிற்கு வலிந்துரை கொடுக்க வேண்டியவரும்.
அதனால்தான் "அவன் அர்ஷின் மேலுள்ளான்" என நம்புவது அடிப்டையாகவுள்ளதால், அவன் இறங்குகின்றான் என்பதற்கு வலிந்துரை கொடுக்கிறோம் என்பது இவர்களின் வாதம்.
இவைதான் "அவன் இறங்குவதில்லை, அவனின் அருள் இறங்குகிறது" என இப்பிரிவினர் முன்வைக்கும் முக்கியமான வாதங்களாகும்.
எதிர்வாதமும் பதிலும்
01. ஹதீஸில் வராததை கூறுதல்
குறிக்கப்பட்ட ஹதீஸில் "எங்களின் ரப்பு இறங்குகின்றான்" என்ற வார்த்தைதான் வந்துள்ளது. "அர்ஷில் இருந்து இறங்குகின்றான்" என அர்ஷோடு தொடர்புபடுத்தி எந்த வார்த்தையும் ஹதீஸில் இடம்பெறவில்லை.
எனவே ஹதீஸைக் கூறும் போது "அர்ஷிலிருந்து" என்ற வார்த்தையை இணைத்து ஹதீஸில் வந்தது போன்று வராத ஒரு வார்த்தையைக் கூறுவதும், அதைவைத்து சட்டமேற்ற முயல்வதும் நபி (ஸல்) மீது பொய் கூறுகின்ற ஒரு பெரும் பாவமாக மாறிவிடும். இது முதலாவது தவறாகும்.
02. படைப்பினத்திற்கு ஒப்பாக்கி பேசுதல்:
"அல்லாஹ் இறங்குகின்றான் என்று நம்பினால் அர்ஷ் காலியாகிவிடும்" என்ற வாதம் மிகமிகத் தவறானதாகும்.
இவ்வாறு ஒரு வாதத்தை முன்வைப்பவர் மறைமுகமாக அல்லாஹ்வைப் படைப்பினத்தைப் போன்று கற்பனை பண்ணுகின்றார்.
ஏனென்றால், அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒரு பகுதி இன்னொரு இடத்திற்கு நகர்ந்தால் அப் படைப்புக்கள் அந்நகர்விற்கு முன் எங்கிருந்ததோ அந்த இடம் காலியாகிவிடும்.
உதாரணம்: "மரத்தின் மேல் இருந்து மனிதன் கீழ் இறங்கினான்" என்று கூறினால் உண்மையில் அவன் கீழே வருவதாயின் முன்பிருந்த இடத்தை விட்டு அவன் வெளியேறுவது அவசியம். அப்போதுதான் அவன் கீழே வருவது சாத்தியமாகும்.
இவ்வாறு உதாரணம் கூறுபவர்கள் "இது அவனின் அனைத்துப் படைப்புக்களின் பண்பு அல்ல" என்பதை புரியாமல் பேசுகின்றார்கள்.
ஏனெனில் இன்னும் சில படைப்புகள் ஓர் இடத்திற்கு வருவதாயின் அது முதல் இருந்த இடத்தை விட்டும் முற்றாக காலியாகத் தேவையில்லை.
உதாரணம் : "ஒளி"
இதை ஓர் உதாரணத்துடன் விளங்குவோம்.
இரண்டு அறைகள் ஒன்றன் மேல் ஒன்று உள்ளது. இவ்வறைக்கு இடையில் மூடப்பட்ட நிலையில் ஒரு கதவு உள்ளது. மின் விளக்கால் மேல் உள்ள அறை வெளிச்சமாகவுள்ளது. மற்ற அறை மின் விளக்கு இல்லாததால் முற்றாக இருளாகவுள்ளது.
இவ்வேளையில் மூடப்பட்ட அக்கதவு திறக்கப்பட்டால் மேல் உள்ள அறையின் ஒளி நகரும். அப்போது அவ்விரு அறைகளும் ஒளிமயமாகிவிடும்.
இவ்வுதாரணத்தில் "மேல் அறையிலிருந்து ஒளி கீழ் அறைக்கு நகரும் போது மேல் அறை ஒளியை விட்டும் காலியாகிவிட்டது" என சுயசிந்தனை உள்ள எவரும் கூறமாட்டார். மாறாக அவ்வொளி முன்பிருந்த அதே இடத்திலிருந்து கொண்டே மறு இடத்திற்கு விரிவடைந்த செல்கிறது.
எனவே அல்லாஹ்வின் படைப்பில் சிலது ஒரு இடத்திலிருந்து காலியாகாமலேயே இன்னோர் இடத்திற்கு நகரக்கூடியதாகவும் உள்ளது.
அல்லாஹ்விற்கு உதாரணம் கூறல்
எனினும் இவ்விருவகைப் படைப்பினங்களில் எதனையும் உதாரணம் கூறி அல்லாஹ்வின் பண்பை அவற்றிற்கு ஒப்பாக்கி கற்பனை பண்ணுவதும் அவற்றிற்கு ஒப்பாக்கி பேசுவதும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்
"நீங்கள் அல்லாஹ்விற்கு உதாரணங்களை கூறாதீர்கள். நிச்சயமாக நீங்களோ அறியாத நிலையில் அல்லாஹ் அறிபவனாக உள்ளான் ( அன்நஹ்ல் : 74)

எனவே அவன் படைத்த படைப்பினங்களின் பண்பைப் போன்று அல்லாஹ்வின் ஒரு பண்பை ஒப்பாக்கி பேசுவது "இணைவைத்தல்" என்ற மாபெரிய பாவத்திற்கு நம்மை அறியாமலேயே வழிவகுத்துவிடும்.
ஏனெனில் "அவனைப் போன்று ஒன்றுமே இல்லை" என்றிருக்கும் வேளையில் "இதைப் போன்றுதான் அல்லாஹ்வும்" என சித்தரிப்பது திருமறை வழிகாட்டலுக்கும் முற்றிலும் மாற்றமானதாகும்.
"அவனைப் போன்று எதுவுமே இல்லை: அவன் செவியுறுபவனும் பார்ப்பவனும் ஆவான்" (சூரத்துல் சூரா : 11)
எனவே, "அல்லாஹ் கீழ் வானம் இறங்குகின்றான்" என வந்துள்ளதால் அதில் கூட்டிக் குறைக்காமலும் வலிந்துரை கூறாமலும், அவனின் படைப்புக்களின் எந்தவொரு பண்பிற்கும் அவனின் பண்பை ஒப்பாக்காமலும் அல்லாஹ் இறங்குகின்றான் என நம்ப வேண்டும். அதுவே நேர்வழியும், ஈடேற்றமான வழியுமாகும்.
எவ்வாறு "படைப்புக்களின் பண்புகளுக்கு ஒப்பற்றவனாக அல்லா1ஹ் அர்ஷின் மேல் ஆகிவிட்டான்" என நம்புகிறோமோ அவ்வாறே இறங்குகிறான் என்பதையும் நம்புவது கடமையாகும்.
மாறாக வலிந்துரையும் விளக்கங்களும் கொடுத்து அல்லாஹ்வின் பண்பை எம் சிறிய சிந்தனையால் புரிய நினைத்தால் மறைமுகமாக அல்லாஹ்வை படைப்பினத்திற்கு ஒப்பாக்கிவிடுகிறோம் என்பதுதான் அதன் பொருளாகும்.
ஏனெனில் எமது சிந்தனைகளால் ஏதாவது உணரப்பட முடியுமாயின் அது அல்லாஹ்வின் படைப்புகளே அன்றி வேறில்லை. அவனோ எம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன்.
எனவே அல்லாஹ்விற்கென்றே தனித்துவமான பண்புகளை எமது பகுத்தறிவால் அல்லது சிந்தனைகளால் விளங்க முற்படுவது நாம் வழிகேட்டில் செல்வதற்கு காரணமாக அமைந்துவிடும். அல்லாஹ்வின் பண்புகள் மட்டுமல்ல மார்க்கத்தில் சொல்லப்பட்ட பல விடயங்களுக்கு எமது பகுத்தறிவால் விளக்கம் கொடுத்திட முடியாது.
உதாரணமாக விதியோடு சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்துக் கொள்ளலாம்.
"அணுவளவும் அல்லாஹ் அநியாயம் செய்யமாட்டான்" என திருமறையில் கூறும் அதே வேளையில்
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவன் சுவனவாதியின் அமலாக அமல் செய்வான். எதுவரையெனில் அவனுக்கும் சுவர்க்கத்திற்குமிடையில் ஒரு முழமே அன்றி இருக்காது. இவ்வேளையில் விதி அவனை முந்திவிடும். அதனால் நரகவாதிகளின் செயலை செய்து நரகம் நுழைவான் (புகாரி)

வெளிப்படையில் இவ்வசனத்திற்கும் ஹதீஸிற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. இதனை எமது சிறிய பகுத்தறிவு வாதத்திற்கு உட்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை நான் கூறத்தேவையில்லை. ஒருசாரார் இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் கொடுக்க முற்பட்டார்கள். அதனால் "பாவங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பதில்லை. அதற்கும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் சம்பந்தமில்லை" எனக் கூறியது மட்டுமல்லாமல் அது தொடர்பாக வந்த ஹதீஸ்களையும் மறுக்கத் தொடங்கினார்கள். இவ்வாறான கருத்துக் கொண்ட "கத்ரியாக்கள்" என்ற வழிகேடர்கள் இதனால் தான் தோற்றம் பெற்றார்கள்.
அறிவுரை
எனவே இறுதியாக, பகுத்தறிவுவாதத்தின் பெயரால் அல்லது இஸ்லாம் "ஓர் அறிவுபூர்வமான மார்க்கம்" என்ற பெயரில் இஸ்லாத்தில் ஒவ்வொரு விடயங்களையும் நமது இச்சிறிய அறிவின் மூலமாக சிந்தனைக்குப் படக்கூடிய விதத்தில் விளங்க வேண்டும். பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்ற முடிவும் அதற்கான முயற்சியும் எல்லா விடயங்களிலும் சரியாகிவிடாது.
அவ்வாறான பகுத்தறிவுவாதம் பேசி தர்க்கம் செய்ததால்தான் முஃதஸிலாக்களும், கத்ரியாக்களும் மற்றும் நவீன பகுத்தறிவு வாதிகள் போன்ற வழிகேடர்களும் தோற்றம் பெற்றனர்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு முன் முதலாவதாக பகுத்தறிவுவாதம் பேசியவன் இப்லீஸ் "மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு நெருப்பால் படைக்கப்பட்ட நான் சுஜூது செய்வதா?" என்று ஒரு வாதத்தை அன்று இப்லீஸ் முன்வைத்து இறை கட்டளைக்கு மாறு செய்தான். அதனால்தான் அவன் சபிக்கப்பட்டான். அதுமட்டுமன்றி அல்லாஹ் பின்வருமாறு ஓர் எச்சரிக்கையும் விடுத்தான்.
"நிச்சயமாக நரகமே (உன்னைப் பின்பற்றும்) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்"
எனவே, எவர்களெல்லாம் அவன் வழியில் சென்று பகுத்தறிவு வாதம் பேசி தம் சிந்தனைக்கு பட்டால்தான் நாங்கள் அங்கிகரிப்போம் என்று அல்லாஹ்வின் கட்டளைகளை தம் குறுகிய அறிவுக்கு கொண்டுவர நினைத்து தம் சிந்தனைக்கு புலப்படாததால், அதை மறுப்பார்களோ அவர்களும் இப்லீஸைப் போன்று சபிக்கப்படுவார்கள்.
அல்லாஹ் கூறுவதை இறுதியாக மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.
"அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களை கூறாதீர்கள். நிச்சயமாக நீங்களோ அறியாத நிலையில் அல்லாஹ் அறிபவனாக உள்ளான்" (சூறா அந்நஹ்ல் : 74)
http://www.islamkalvi.com/?p=107505

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts