லேபிள்கள்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

"ஈரலில் கொழுப்பு" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொன்னால்.

"ஈரலில் கொழுப்பு" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொன்னால்.

ஸ்கான் பரிசோனை
ஈரலில் கொழுப்பு என்று மருத்துவர் சொன்னால்...

ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு என்பது இப்பொழுது புதினமான கதை அல்ல.

"
உங்கடை ஈரலிலை கொழுப்பு விழுந்திருக்காம்" என்று சொன்னதும் கொழு கொழு என மதத்திருந்த குண்டான மனிதரது முகம் தொய்ந்துவிட்டது.

"
இதென்ன புதுக் கதையாக் கிடக்கு. வயித்துக் குத்து எண்டு உங்களட்டை வந்தனான். சலக் குழாயிலை கல்லு இருக்கும் போலை எண்டு ஸ்கான் பண்ண அனுப்பினியள். இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு ஈரலிலை கொழுப்பு எண்டு சொல்லுறியள்."
உண்மைதான் இப்பொழுதெல்லாம் பலரது வயிற்றறையை வேறு தேவைகளுக்காக அல்ரா சவுண்ட் ஸ்கான் செய்த (ultra Sound Scan of Abdomen)  ரிப்போட்டுகளைப் பார்க்கும்போது அவர்களது ஈரலில் கொழுப்பு என ஸ்கான் செய்த ரேடியோலஜிட் ரிப்போட் அனுப்புகிறார்கள். கொழுப்புள்ள ஈரல் (Fatty liver) இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

எவரது ஈரலிலிலும் சற்று கொழுப்பு இருப்பது இயல்பானதே. ஆனால் அதன் அளவானது ஈரலது நிறையின் 5%-10% சதவிகிதத்திற்கு அதிகமாகும் போதுதான் அதை கொழுப்புள்ள ஈரல் என்போம்.

ஈரலில் கொழுப்பு படிவதை இரண்டு வகையாகப் பார்க்கலாம்

  1. மதுவினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்
  2. மது அற்ற காரணங்களினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்

மதுவினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்

முடாக் குடியர்களின் பிரச்சனை இது. மதுவை அதீதமாக உபயோகிக்கிறவர்கள் அமெரிக்காவில் மட்டும் 15 மில்லியன் மக்கள் இருக்கிறார்களாம்.

நாங்கள் குறைவில்லை. சராசரியாக அதிகளவு மது அருந்துவர்கன் நாடுகளின் பட்டியலில் செக்சொஸ்லேவியா. பிரான்ச் மற்றும் ரஷ்யா மட்டுமே இலங்கையை முந்தி நிற்கின்றன. அதிலும் யாழ் மாவட்டம் போட்டியில் முன் நிற்கிறது.

இவ்வாறு அதீதமாக மது பாவிக்கும் அனைவருக்கும் (90%-100% )  ஈரலில் கொழுப்பு வருவது நிச்சயம். தொடர்ந்து அதிகமாக மது அருந்துபவர்களில் மட்டுமின்றி குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு அதீதமாக மது அருந்துபவர்களிலும் ஈரலில் கொழுப்பு ஏற்படக் கூடும். மதுவைத் தவிர்ப்பது மட்டுமே இவர்கள் அனைவருக்கும் அவசியமானதாகும்.

ஒரே குடும்ப அங்கத்தவர்களிலும் பரம்பரையாகவும் ஈரல் கொழுப்பு பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. குடும்பத்தில் நிலவும் மதுப் பழக்கமும், அதிகமாக அருந்துகின்ற பழக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.

மதுப் பாவனையைத் தவிர வேறு காரணங்களும் ஈரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  • பொதுவாக எடை அதிகமாக உள்ளவர்களிடம் இது ஏற்படுகிறது. 
  • தவறான உணவு முறை மற்றொரு முக்கிய காரணமாகும். ஈரல் கொழுப்புக்குக் காரணம் உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பதே என்பதை ஊகிப்பது சிரமமல்ல. அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats - trans fatty acids) கொழுப்பு முக்கிய காரணமாகும். 
  • இரும்புச் சத்து அதிகமாகும்போதும் இது நேரலாம். 
  • ஹெபரைரிஸ் பீ (Hepaptitis B) எனும் வைரஸ் ஈரல் அழற்சியின் பின்னரும் இது ஏற்பட வாய்ப்புண்டு.
மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்

இப்பொழுதெல்லாம் மதுவைத் தொடாத பலரிலும் காண முடிகிறது. இது பற்றியே இங்கு அதிகம் பேசுகிறோம்.  'மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்' (Nonalcoholic Fatty Liver Disease -NAFLD) என்பார்கள்.

இது பொதுவாக ஆபத்தான பிரச்சனை அல்ல போதும் சிலரில் அது ஈரலில் அழற்சியையும் பின்னர் அதன் செயற்பாட்டுத் திறனையும் பாதித்து ஈரல் சிதைவு நோய் (Cirrhosis) ஆகலாம். அரிதாக ஈரல் புற்றுநோயும் ஏற்படலாம்.

காரணங்கள்

மது இல்லாமலும் ஈரலில் கொழுப்பு ஏன் விழுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

ஆயினும் அதிக மற்றும் அதீத எடையுள்ளவர்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இது பரம்பரையிலும் ஒரே குடும்பத்தவர்களிலும் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினரைப் பாதிக்கிறது. அத்துடன் கொலஸ்டரோல் அதிகரிப்பு, நீரிழிவு அல்லது நீரிழிவின் முன்நிலையும் சேர்ந்திருப்பதுண்டு.
வைரஸ் ஈரல் அழற்சி நோய்கள், சில மருந்துகள், போஷாக்கற்ற உணவு முறை, திடீரென எடை குறைதல் போன்றவையும் காரணமாகலாம்.
உணவு முறையே முக்கிய காரணமாகும்.

எடை அதிகரிப்பதற்கும், ஈரலில் கொழுப்பு விழுவதற்கும் அதிக கொழுப்புள்ள உணவுகள் பிரதான காரணமாகும். அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats - trans fatty acids) கொழுப்பு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலன கடைப் பண்டங்களிலும், துரித உணவுகளிலும் இது அதிகம் இருக்கிறது.

இந்த ரான்ஸ் கொழுப்பு என்பது என்ன?

தாவரக் கொழுப்புகளை (எண்ணெய்கள்) திடமானதாக ஆக்குவதற்காக ஹைரஜனை தயாரிப்பாளர்கள் சேர்க்கும்போதே Trans fats உருவாகிறது.

ரான்ஸ் பற்ஸ் சை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?

விலை குறைவாக இருப்பதுடன் இதைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்கும். அத்துடன் அச் சுவையானது வாயில் நீண்ட நேரம் நீடிக்கும். எண்ணெயில் பொரிக்கும் வதக்கும் வறுக்கும் உணவுகளில் இது அதிகம் உண்டு. உதாரணமாக ப்ரன்ஜ் ப்ரை, லோனட், பேஸ்ரி, பிட்ஸா, குக்கி, பிஸ்கற், எமது உணவு வகைகளில் பொரியல்கள், வடை, ரோல்ஸ், போண்டா, மிக்சர், போன்ற பலவும் அடங்கும்.

அப்படியானால் நாம் அத்தகைய உணவுகளை உண்ணவே கூடாதா? கூடும்! மிகக் குறைந்த அளவில் உண்ணலாம்.

ஆனால் நாம் ஒரு நாளில் உள்ளெடுக்கும் கலோரியின் அளவு 2000 எனில் அதில் 20 மட்டுமே ரான்ஸ் பட்டாக இருக்க வேண்டும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பால் போன்றவற்றில் இந்த ரான்ஸ் பற் சிறியளவு இருக்கிறது. இது மட்டுமே அந்த 20 தைக் கொடுத்துவிடுவதால் ஏனைய ரான்ஸ் பற் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஈரலில் கொழுப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?;

ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் மருந்துகளை நாடி ஓடக் கூடாது. எமது உணவு உடற் பயிற்சி அடங்கலான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதே முக்கியமானது

எடை குறைப்பு - ஈரல் கொழுப்பிற்கான சிகிச்சையின் முக்கிய அம்சம் எடையைக் குறைப்பதுதான். எடைக் குறைப்பைப் பற்றிப் பேசும்போது ஒருவரது உயரத்திற்கான மிகச் சிறந்த எடைக்கு (Ideal weight) வர வேண்டும் என்பதல்ல. பெரும்பாலோனோரில் அது முடியாத காரியமாகவும் இருக்கும். தங்களது தற்போதைய எடையில் 10 சதவிகிதத்தைக் குறைப்பதே மிக நல்ல பலனைக் கொடுக்கும். 5 சதவிகிதம் குறைத்தாலும் நன்மையே. எனவே எடை குறைப்பு முயற்சியில் தளரக் கூடாது.
எடை குறைப்புச் செய்ய முனையும்போது திடீரென கடுமையாகக் குறைப்பதும் நல்லதல்ல. ஒரு வாரத்திற்கு 1.5 கிலோ எடைக்கு மேலே குறைக்க முயல்வது உசிதமானதல்ல. எடை குறைப்பின் முக்கிய அம்சங்களாவன உண்ணும் உணவின் கலோரி அளவைக் குறைப்பதும் உடற் பயிற்சியை அதிகரிப்பதும்தான்.

உணவைக் குறைப்பது என்பது பட்டினி கிடைப்பதல்ல. உணவு முறை மாற்றங்கள்தான். உணவில் அதிக கலோரி வலுவைக் கொடுப்பது எண்ணெய் கொழுப்பு உணவுகள்தான். அதிலும் ரான்ஸ் பற் உணவுகள் பற்றி ஏற்கனவே சொன்னோம்.

ஆசிய நாட்டவர்கள் ஆகிய எங்கள் உடலில் மேலை நாட்டவர்களின் உடலில் இருப்பதை விட அதிக கொழுப்பு இருக்கிறது. இந்தக் கொழுப்பானது ஈரல் வயிற்றறை உறுப்புகளில் மட்டுமின்றி எமது சருமத்திலும் இருக்கிறது. இவ்வாறு கொழுப்பு அதிகமாயிருப்பதற்கு கொழுப்பு உணவுகள் மட்டும் காரணமல்ல. நாம் பிரதானமாக உண்ணும் அரிசி மற்றும் கோதுமை போன்ற மாப்பண்ட உணவுகளை அதிகளவில் உண்பதே காரணமாகும். அதாவது சோறு இடியப்பம். பிட்டு, போன்ற எல்லா மாச்சத்து உணவுகளை அதிகமாக உண்கிறோம்.

எனவே நாம் எடையைக் குறைக்க வேண்டுமாயின் மாச்சத்துள்ள உணவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். குறைத்த அளவிற்கு ஈடாக காய்கறிகளையும் பழ வகைகளையும் சேர்;த்துக் கொள்ள வேண்டும். அதனால் பசியை அடக்கும் அதே நேரம் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்க முடியும்.

ஈரல் கொழுப்பைக் குறைப்பதற்கு ஒமோகா 3 மீன் எண்ணெய் (omega-3 fatty acids)  உதவும் என நம்பிய போதும் அதற்கான திடமான விஞ்ஞான ஆய்வுகள் இல்லை. ஈரலில் குத்தி திசுக்களை எடுத்து ஆய்வு செய்து (Biopsy)  ஈரல் கலங்களில் பாதிப்பு உள்ளது எனக் கண்டறிந்தால் விற்றமின் ஈ (VitaminE)  கொடுப்பதுண்டு. ஏனையவர்களில் அவசியமில்லை.

எடையைக் குறைப்பதற்கு சத்திர சிகிச்சை உதவும் என்ற போதும் கொழும்பு ஈரல் பிரச்சனைக்காக அதைச் செய்வது நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரல் சிதைவு (cirrhosis)  ஏற்பட்டால் செய்வது நல்லது என்கிறார்கள்.

வேறு பரிசோதனைகள் தேவையா?

ஈரலில் கொழுப்பு இருப்பதான ஸ்கான் அறிக்கை கிடைத்ததும் உங்கள் மருத்துவர் நீரிழிவு, நீரிழிவின் முன்நிலை போன்றவை இருக்கிறதா எனக் கண்டறிவார். மதுப் பாவனை பற்றிக் கேட்டறிவார். பெரும்பாலும் வேறு பரிசோதனைகளைச் செய்வதில்லை.

இருந்தபோதும் ஈரலில் கொழுப்பு இருக்கிறதா என்பதை மட்டும் அறிவதற்காக
எவரையும் ஸ்கான் பரிசோதனை செய்வது அவசியமல்ல. அதேபோல ஒருவருக்கு இருந்தால் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களையும் ஸ்கான் செய்து பார்க்க வேண்டியதும் இல்லை.

எனவே உங்களுக்கு ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் கதி கலங்காதீர்கள். உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழுவதற்கான வழிகளைத் தேடுங்கள். அது போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/08/blog-post_16.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts