லேபிள்கள்

சனி, 26 செப்டம்பர், 2015

ஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-1

ஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-1


இஸ்லாமிய சமூகத்தின் வழிகாட்டல்களனைத்தும் அதி உன்னத நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது நாமனைவரும் அறிந்ததே. இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்கும் அல் குர்ஆன், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பதும், நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய சுன்னாவானது நபியவர்கள் தம் வாழ்நாளில் தம் தோழர்களுக்கு சொல்லியும், செய்தும், அங்கீகரித்தும் காட்டியதுதான் என்பதும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, உண்மையென நிரூபிக்கப்பட்டதாகும். 'ஆதாரத் தன்மையை நிரூபிப்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கொண்டதைப் போன்ற வழிமுறைகளை உலக வராலற்றில் வேறெவரும் கையாளவில்லை' எனுமளவிற்கு இந்த மூலாதாரங்களைப் பாதுகாப்பத்தில் அறிஞர்கள் அதிகூடிய கவனமும், கரிசனையும் காட்டியிருக்கின்றனர். இஸ்லாத்துக்கு வெளியிலிருக்கும் கிரிஸ்தவ, யூத, ஏனைய சக்திகளனைத்தும் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் கொண்டிருக்கும் இந்த அதி உன்னத நம்பகத்தன்மையினைத் தகர்ப்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்வதையும் காண முடிகிறது. குறிப்பாக ஹதீஸ்கள் இவ்வடிப்படையில் விமர்சிக்கப்பட்டிருப்பதை வரலாற்று நெடுகிலும் அவதானிக்கலாம். அந்நியர்களுடனான விவாதங்கள், அவர்களின் நூட்கள், உரைகள் போன்வற்றில் இவ்வாறான விமர்சனங்களை அதிகமாகக் காணலாம்.
குறிப்பாக கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் மூலாதாரங்களை சிதைப்பதற்காகவென்றே பல்வேறுபட்ட விமர்சனங்களைக் கட்டவிழ்த்து விடுவதைக் காண்கிறோம். நவீன காலத்தில் கிறிஸ்தவர்களுடனான விவாதங்களைஅளவில் சந்தித்தவர்களில் ஒருவரான 'அஹ்மத் டீடாட்' அவர்கள் இத்தகைய விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளார் எனலாம். தழிழுலகிலும் மாற்று மதத்தினருடனான விவாத அரங்குகளில் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் அவதானிக்கலாம். அஹ்மத் டீடாட் அவர்கள் கலந்து கொண்ட ஒரு விவாதத்தில் கிறிஸ்தவர்கள் தரப்புக்கு நஞ்கு போத்தலொன்று முஸ்லிம் தரப்பால் வழங்கப்பட்டபோது 'ஷெய்தானுடைய தூண்டுதலாலேயே இது வழங்கப்படுகிறது' என்று கூறி கிறிஸ்தவ தரப்பினர் அந்த நஞ்சைக் குடிக்காது கொட்டி விடுவார்கள். 'கர்த்தரைப் பற்றி அற்ப நம்பிக்கையுள்ள ஒருவர் நஞ்சைக் குடித்தாலும் அது அவரைப் பாதிக்காது' என கிறித்தவர்களின் வேத நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதனால்தான் அதைப் பரிசீலித்துப் பார்ப்பதற்காக இவ்வாறு நஞ்சு போத்தல் வழங்கப்பட்டது. அஹ்மட் டீடாட் மரணித்த பின்னர் இதற்கு மறுப்பு சொல்லும் வகையில் "அஜ்வா ஈத்தம் பழம் சாப்பிட்டால் நஞ்சும் சூனியமும் பாதிக்காது" என்று வரும் ஹதீஸைமேற்கோள்காட்டி ஒரு கிறித்தவ அறிஞர் வாதங்களை முன்வைத்தார். அண்மையில் கிறிஸ்தவர்களுடன் நடை பெற்ற விவாதத்திலும் இவ்வாறு நஞ்சு பற்றி பைபிலில் வரும் செய்தி முன்வைக்கப்பட்ட போது அதற்கு மறுப்பு சொல்ல முடியாமல் இதே ஹதீஸை அவர்கள் தூக்கிப்பிடித்ததையும் காண முடிந்தது.
ஆகவே 'நஞ்சு பாதிக்காது' என்று வரும் ஹதீஸ் நம்பகத்தன்மையுள்ளதுதானா? இது இஸ்லாத்தின் மூலாதாரங்களில் சந்தேகத்தை, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதா? என்பது பற்றி ஆராய்வதே நமது நோக்கமாகும். இஸ்லாத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் இவ்வாறான செய்திகளை நாம் விளக்கக் குறைபாட்டாலோ, நல்லெண்ணங்களாலோ புறக்கணித்து விடக் கூடாது என்பதனாலும், சத்தியத்திலும், நேர்மையிலும் நாம் ஒன்று சேர வேண்டுமென்பதனாலும் இந்த ஹதீஸை நாம் சரியாக விளங்க வேண்டிய முறை பற்றி விளக்குகின்றோம். 'நஞ்சுக்கு நஞ்சு' என்று போட்டியாக கிறிஸ்தவ சமூகத்தால் விமர்சிக்கப்படும் மேற்படி ஹதீஸானது பைபிலில் வரும் 'கர்த்தரைப் பற்றி அற்ப நம்பிக்கையுள்ள ஒருவர் நஞ்சைக் குடித்தாலும் அது அவரைப் பாதிக்காது' என்ற செய்தியைப் போன்று போலியானதா? புஹாரியில் திணிக்கப்பட்டதா? பதில் கூற முடியாததா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லவேயில்லை. இதை மிக எளிதாகவே விளங்கி விடலாம். ஆனால் நமது மூலாதாரங்கள் பற்றி நாம் சந்தேகிக்கும் நிலைமை தோன்றுமாயின் நாம் தடம் புரல நேரிடும் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.முதலில் பைபிளின் வாசகத்தை சரியாக விளங்கிக்கொள்ள கீழுள்ள வசனத்தைப் படியுங்கள்.
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
பாம்புகளை கையில் எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
(மாற்கு : 16 : 17 முதல் 19 வரை)
அஜ்வா ஈத்தம் பழம் பற்றிய குறிப்பிட்ட ஹதீஸ்:
صحيح البخاري 5445 – حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ اليَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ»
தினந்தோறும் காலையில் ஏழு 'அஜ்வா' பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ( புஹாரி 5445)
இந்த ஹதீஸ் கீழ்வரும் இலக்கங்களில் பதியப்பட்டுள்ளது. (புஹாரி : 5445, 5768, 5769, 5779, முஸ்லிம் 5460, 5461, 5459, அபூதாவூத் 3876, முஸ்னதுல் ஹுமைதீ 70, அஹ்மத் 1571, 24735, முஸ்னதுல் பஸ்ஸார்: 1133) இவை போன்று இன்னும் பல மூல நூட்களில் இது பதிவாகியுள்ளது. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் மூலமாகவும், அருடைய குடும்பத்தினராலும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுஆயிஷா (ரழி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 صحيح مسلم ـ 5462 – وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَابْنُ حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا إِسْمَاعِيلُوَهُوَ ابْنُ جَعْفَرٍعَنْ شَرِيكٍوَهُوَ ابْنُ أَبِى نَمِرٍ(صدوق يخطئ)عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى عَتِيقٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ فِى عَجْوَةِ الْعَالِيَةِ شِفَاءً أَوْ إِنَّهَا تِرْيَاقٌ أَوَّلَ الْبُكْرَةِ ».
"மதீனாவின் 'ஆலியா' என்ற பகுதியில் காணப்படும் 'அஜ்வா' ஈத்தம் பழத்தில் நோய்க்கு மருந்திருக்கின்றது. அல்லது ஒவ்வொரு காலையிலும் அதைச் சாப்பிடுவது நஞ்சுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்." முஸ்லிம் : 5462)
என்று எந்த வாசகம் என்ற சந்தேகத்துடன் இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் கூறுகின்றார். இந்த அறிவிப்பில்' ஏழு முறை சாப்பிட வேண்டும்' என்ற வார்த்தையெல்லாம் கிடையாது. புஹாரியில் வந்துள்ள ஹதீஸை விடவும் சற்று சுருங்கியதாக இது காணப்படுகின்றது.ஷரீக் இப்னு அப்தில்லாஹ் அல் காழீ என்பவர் ஆயிசா (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளார். இவர் மனனக் குறைபாடுள்ளவர்.என்றாலும் இந்த ஹதீஸ் கூறும் செய்தி நாம் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று புஹாரி போன்ற மற்றைய கிரந்தங்களிலும் இடம் பெறுவதால்இந்த இரண்டாவது அறிவிப்பை ஹஸன் என்ற தரத்தில் ஏற்றுக் கொள்ளலாம். இதனால்தான் இமாம் பகவீ அவர்கள் தனது ஷரஹுஸ்ஸுன்னா என்ற நூலில் 2889ம் இலக்கத்தில் இதை ஸஹீஹ் என்றுள்ளார். எனவே இந்த இரு வழிகள் வாயிலாகவும் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் சொல்ல வரும் செய்தி என்னவென்பது தொடர்பில் நாம் ஆய்வோம்.
'இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல' என்று மறுப்பது, மாற்றுத் தரப்பினரின் வாதத்துக்கும், இந்த ஹதீஸுக்கும் நாம் கூறும் பொறுத்தமான பதிலாக அமையாது. இது அவர்களுக்கு வெற்றியாகவே அமையும். ஏனெனில் அல் குர்ஆனுக்கு அடுத்த படியாக நம்பகத்தன்மையில் சிறந்து விளங்கும் புஹாரி கிரந்தத்தில் மிகச் சிறந்த, உறுதியான அறிவிப்பாளர் வரிசையின் மூலமாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அல் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று இதை மறுப்பதற்கு இதற்கு முரண்படுகின்ற எந்தவொரு அல் குர்ஆன் வசனமும் கிடையாது. 'நிதர்சன உண்மைக்கு இது முரணானது' என்று சொல்லித்தான் எங்களில் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர். நபியவர்கள் சொன்னதாக நிரூபணமான ஒரு செய்தி எந்த வகையிலும் நிதர்சன உண்மைக்கு முரண்பட முடியாது. இவர்கள் கூறுவது போன்று இந்த ஹதீஸ் முரண்படுகிறதா இல்லையா என்பதை இதன் தொடர்ச்சியில் அறிந்து கொள்ளலாம்.
ஹதீஸின் முழு வடிவம்
ஈத்தம் பழத்தில் பல்வேறு ஊட்டச் சத்துக்கள் பொதுவாக காணப்பட்டாலும் அவையெல்லாம் நஞ்சுக்கு மருந்தாக அமையும் என்று நபியவர்கள் சொல்லவில்லை. குறிப்பிட்ட சில பண்புகளையுடைய, மிக அரிதான 'அஜ்வா' வகை ஈத்தம் பழத்துக்கே இந்த சிறப்புப் பண்பிருப்பதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸின் அனைத்து வாசகங்களையும் வைத்து விளங்கலாம். நஞ்சுக்கு மருந்தாகும் 'அஜ்வா' வகை ஈத்தம் பழம் பற்றி நபியவர்கள் கூறியுள்ள நிபந்தனைகளைக் கீழே அவதானிப்போம்.
1- ஏழு ஈத்தம் பழங்களைச் சாப்பிட வேண்டும். (புகாரி5445)
2- '
அஜ்வா' வகை ஈத்தம் பழங்களைச் சாப்பிட வேண்டும். ( புகாரி 5445)
3-
மதீனாவிலிருந்து நஜ்த் பிரதேசத்தை நோக்கிய 'ஆலியா' என்ற பிரதேசத்தில் விளையும் 'அஜ்வா' ஈத்தம் பழத்தைச் சாப்பிட வேண்டும். (முஸ்லிம் 5462)
4- '
இரண்டு கருங்கட்குவியலுக்கிடைப்பட்ட(ஹர்ரா) மதீனாவின் எல்லைப் பகுதியில் விளையும் 'அஜ்வா' ஈத்தம் பழமாக இருக்க வேண்டும். (முஸ்லிம் 5459)
5- '
காலையில் சாப்பிட வெண்டும்' (புகாரி5445)
6- '
மென்று சாப்பிட வேண்டும்' (அமாலி – 16 – முஹாமிலி)
அஜ்வா ஈத்தம் பழம் பல நாடுகளில் காணப்பட்டாலும் 'நஞ்சுக்கு மருந்தாகும'; என்று நபியவர்கள் குறிப்பிட்டிருப்பது மேலே நாம் சுட்டிக்காட்டிய, இப்பண்புகளையுடைய அஜ்வா ஈத்தம் பழங்களையே என்பதை நாம் விளங்க வேண்டும். பொதுவாக ஈத்தம் பழங்களில் பல்வேறு ஊட்டச் சத்துக்கள் காணப்பட்டாலும் அவற்றில் மிக உயர்ந்த பண்பையுடையதே இந்த அஜ்வா ஈத்தம் பழங்களாகும் என்பதையே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.இந்த வகை அஜ்வா இன்றும் மதீனாவில் தாராளமாகக்கிடைக்கிறது. ஆனால் சற்று விலை உயர்வானது.
'அஜ்வா ஈத்தம் பழத்தை உண்டால் நஞ்சு பாதிக்காது' என்பது ஆயுள் முழுவதுமான உத்தரவாதமாக நபியவர்கள் கூறவில்லை. 'மாலை வரைக்கும் பாதிக்காது'(முஸ்லிம் – 5459), 'அன்றிரவு வரைக்கும் பாதிக்காது' (புஹரி – 5768) என்று சில நேரங்களைக் கணித்தே நபியவர்கள் கூறியுள்ளார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எனவே நபியவர்கள் அஜ்வா ஈத்தம் பழம் பற்றிக் கூறிய ஹதீஸ் நமக்குக் கற்றுத் தரும் செய்தியின் மொத்த வடிவவத்தை முதலில் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.அதே நேரம் இந்த செய்தி பற்றிய பலவீனமான ஓரறிவிப்பும் காணப்படுகின்றது அதையும் இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றோம். 'யார் இரவில் அஜ்வா ஈத்தம் பழங்களைச் சாப்பிடுகின்றாரோ காலை வரைக்கும் அவரை நஞ்சு பாதிக்காது' என்று அஹ்மதில் 1442ம் இலக்கத்தில் பலவீனமான செய்தியொன்று இடம் பெறுகின்றது.
கிறிஸ்தவர்களின் விமரிசனம்:
1-அஜ்வா பற்றிய செய்தி நம்பிக்கைக்கான சோதனையல்ல
'கர்த்தரைப் பற்றிய அற்ப நம்பிக்கையுள்ள ஒருவர் நஞ்சைக் குடித்தாலும் அது அவரைப் பாதிக்காது' என்று பைபில் கூறுவது நம்பிக்கையோடு தொடர்புடையது. 'அஜ்வா ஈத்தம் பழத்தை உண்டால் நஞ்சு பாதிக்காது' என்பது நம்பிக்கையுடன் தொடர்பானதல்ல. ஏனெனில் நபியவர்கள் இதில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் யாராயினும் அஜ்வா ஈத்தம் பழத்தை உண்டால் நஞ்சு பாதிக்காது. பொதுவாகத்தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.மாத்திரை குடித்தால் காய்ச்சல் குணமடையும் என்பதைப் போன்றதே நபியவர்களின் இந்தக் கூற்றாகும். தேன் பானியில் மருந்துள்ளது என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். இது முஸ்லிமுக்கு மாத்திரம்தான் என்று சொல்ல முடியாது மாற்றமாக யாரெல்லாம் தேனைக் குடிக்கின்றார்களோ அவர்கள் எல்லோருக்கும் அது மருந்தாகும் என்பதே அதன் அர்த்தமாகும். இது போலவே கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸையும் நாம் விளங்க வேண்டும். பைபிலில் வரும் மேற்படி செய்தியானது கர்த்தர் பற்றிய நம்பிக்கையைச் சோதிப்பதற்காக நஞ்சைக் குடிக்கச் சொல்கிறது. நிதர்சனங்களால் இதை நிரூபிக்க முடியாது. நஞ்சருந்திய கிறுஸ்துவர்கள் இறப்பது இது பொய் என நிரூபிக்கப் போதுமானது. வெறுமனே இது ஒரு நம்பிக்கை மாத்திரமே. மருத்துவ ரீதியில் இதைப் பரீட்சித்து நிரூபிக்க முடியாது. ஆனால் அஜ்வா ஈத்தம் பழம் பற்றிய ஹதீஸை மருத்துவ ரீதியில் பரீட்சித்துப் பார்க்க முடியும் எனவே இதையும், பைபிலின் செய்தியையும் ஒரே தரத்தில் வைத்து நோக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாயின், 'அஜ்வா ஈத்தம் பழத்தை உண்டால்தான் ஒருவர் முஸ்லிமாகலாம் அதை உண்ணாதவர் முஸ்லிமாயிருக்க முடியாது' என்று இந்த ஹதீஸை வைத்துச் சொல்ல முடியாது. இது அனைவருக்குமான நபியவர்களின் பொதுவான மருத்துவ வழிகாட்டல் மாத்திரமே எனலாம்.
2-நஞ்சருந்தினால் நிரந்தர நரகம்
அடுத்ததாக, இந்த ஹதீஸில் 'நஞ்சு குடித்தல்' என்ற வாசகமே சொல்லப்படவில்லை. ஆனால் 'நஞ்சு குடித்தல்' என்ற வாசகம் 'கடவுள் மீது குறைந்த பட்ச நம்பிக்கையுள்ள ஒருவர் நஞ்சைக் குடித்தாலும் அது அவரைப் பாதிக்காது' என்று தெளிவாக பைபிலில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, பைபிலுடைய இந்த வாசகத்தினடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு நாம் நஞ்சு போத்தலைக் கொடுப்பது நியாயமெனலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் நம்மிடம் நஞ்சு போத்தலைத் தருவது நியாயமாகாது ஏனென்றால் நஞ்சு குடித்தல் வாசகமே மேற்படி குறிப்பிட்ட ஹதீஸில் இடம்பெறவில்லை. இவ்வாறு நஞ்சருந்துவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது. கீழ்வரும் ஹதீஸ் இதைத் தெளிவுபடுத்துகின்றது.
صحيح البخاري 5778 – أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا»
"மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-5778)
நஞ்சருந்துபவரை இறை விசுவாசி என்கின்றது பைபில். நஞ்சருந்தித் தன்னைத்தனே மாய்த்துக் கொள்பவரை நரகவாசி என்கின்றது ஹதீஸ் எனவே பைபில் சொல்வதும், இந்த ஹதீஸ் கூறுவதும் இரு வேறு விடயங்களாகும். இவ்விரண்டையும் ஒரே பார்வையில் நோக்க முடியாது என்பதே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.
3-நஞ்சுகள் பலவிதம்
அடுத்ததாக, நஞ்சு என்றால் என்ன என்பது பற்றி நாம் அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொள்வது இங்கே அவசியமாகின்றது. நஞ்சைக் குடித்தால்தான் அதனால் பாதிப்பேற்படும் என்பது கிடையாது. வேறுவழிகளிலும் அது நம்மைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நஞ்சு என்றால் என்ன? அது எவ்வகையிலெல்லாம் உயிரினங்களைப் பாதிக்கும் போன்ற இது தொடர்பான ஆய்வுக்கு உயிரியலில் Toxicology என்பார்கள். பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களால் ஏற்படும் நஞ்சுக்கு Venom என்றழைபப்பதைப் பார்க்கிறோம். சில வகைப் பாம்புகளில் காணப்படும் விஷம் மிக ஆபத்தானதாகும். அதனால்தான் அவை தீண்டியவுடனேயே மனிதர்கள் மரணித்து விடுவதைப் பார்க்கிறோம். எனவே குடிப்பதன் மூலம்தான் நஞ்சு நம்மைப் பாதிக்கும் என்று சொல்ல முடியாது. இரசாயனவியல் மாற்றங்களால் சில பொருட்கள் நஞ்சாகும்(toxin), நிலையேற்படலாம், நாம் சாப்பிடும் உணவு நஞ்சாகும் நிலையேற்படலாம்(poison). இவ்வாறு பல வழிகளில் நஞ்சு நம்மைப் பாதிக்கக் கூடியது என்பதை விளங்க வேண்டும். 'இந்த மாத்திரையை குடித்தால் நஞ்சு பாதிக்காது' என்று சொல்லி ஒரு மருத்துவர் மருந்தை நம்மிடம் தருகிறார். உடனே நாம் நஞ்சு போத்தலை அவரிடம் கொடுத்து 'இதைக் குடித்து விட்டு இந்த மாத்திரையும் குடித்துக் காட்டுங்கள்' என்று கேட்போமா? அறிவுடையவர் இவ்வாறு செய்வார்களா? என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். மருத்துவ உலகில் இவ்வாறு பல புதிய மருந்துகள் நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். மருந்துகளைக் கண்டு பிடிப்பவர்களிடம் சென்று 'நஞ்சையும் குடித்து விட்டு உங்கள் மருந்தையும் குடித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்று யாரும் கேட்பதில்லை என்பதை நன்கு விளங்க வேண்டும். இந்த மருந்துகளனைத்தும் நிரந்தரமாகப் பயனளிக்கா விட்டாலும் சில சந்தர்ப்பங்களில் கைகொடுக்கலாம் என்பதே நிதர்சனமாகும். நிரூபித்துக்காட்டும்படி கேட்கப்பட்டால் அதைச் செய்து காட்டுவது நூரு வீதம் சாத்தியமாகாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே 'நஞ்சைக் குடித்து விட்டு அஜ்வா ஈத்தம் பழத்தைச் சாப்பிட்டுக் காட்டுங்கள்! நஞ்சு உங்களைப் பாதிக்காவிட்டால்தான் நாம் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம்' என்பது எந்த வகையிலும் ஓர் அறிவார்ந்த வாதமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4-மருந்து செயல்படாத உடல்கள்
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது ஒரு மருந்தை ஒருவர் பாவிக்க முன்பு அவருக்கு அந்த மருந்தில் நம்பிக்கையிருக்க வேண்டும். அந்த மருந்தில் நம்பிக்கையில்லாமல் நிவாரணம் கிடைக்காது. இது போலவே அவருடைய உடலும் குறிப்பிட்ட மருந்தை ஏற்கும் வகையிலிருக்க வேண்டும். இந்த அடிப்படைத்தன்மைகள் காணப்படாமல் எந்த மருந்தும் பயனளிக்காது என்பதும் அவசியம் தெரியவேண்டியவொன்றாகும்.
அஜ்வா ஈத்தம் பழம் பற்றிய இந்த ஹதீஸை செயல் உலகம் நிரூபிக்கும் வகையில் மருத்துவ ஆய்வுகள் வெளிவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. ஈத்தம் பழம், ஒரு பழம் என்ற வரையரைக்கப்பால் ஒரு நிறையுணவாகவும், அரு மருந்தாகவுமுள்ளது என்று அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 'அஜ்வா ஈத்தம் பழத்தில் விஷம் நீக்கும் மருந்திருக்கின்றது' என்பதை மருத்துவ உலகு இன்னும் நிரூபிக்கவில்லை அதே நேரம் மறுக்கவுமில்லை. நபியவர்கள் கூறியிருப்பது நூறு வீதம் உண்மையென்பதால் நூறு சதவீதம் உண்மையானவொன்றை அறிவியல் மறுக்காது என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். மருத்துவ உலகு இதை மறுத்திருந்தால் கூட ஒரு வாதத்துக்காகச் சற்று சிந்திக்கலாம். ஆனால் இன்று வரை இது நிகழவில்லை எனும் போது இந்த ஹதீஸ் நமக்கு எதைச் சொல்கின்றது என்பது பற்றி மிக ஆழமாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அஜ்வா ஈத்தம் பழங்களைப் பற்றி ஆய்வு செய்த ஒரு யூதர் இதிலுள்ள உண்மைகளையுணர்ந்து இஸ்லாத்தைத் தழுவி இது தொடர்பில் நூலொன்றையும் எழுதியிருக்கிறார்
http://mujahidsrilanki.com/2012/06/ajwa-dates-1/

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts