லேபிள்கள்

திங்கள், 13 ஜனவரி, 2014

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா? ?--
*more articles click*
www.sahabudeen.com


பகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா? ?


ஓரு கல்விமானைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

"
தயவுசெய்து பத்து நிமிடங்கள் பொறுத்திருங்கள். அவர் வந்திடுவார்" என்றார் அவரது மனைவி.
வாசலைப் பார்த்தபடி காத்திருந்தோம்.

'
மன்னிக்கவும்' என்ற குரல் சற்று நேரத்தில் எழுந்தது. இப்பொழுது அவரது குரல்.

ஆனால் நாம் விழி வைத்திருந்த வாசற்புறமிருந்து குரல் வரவில்லை. உள்ளேயிருந்து வந்தது. மிக உற்சாகமாக வந்தார். மதியத்திற்குப் பின்னான தனது வழமையான குட்டித் தூக்கத்திலிருந்ததாக சொன்னார்.

"
எனக்கு இந்தக் குட்டித்தூக்கம் மிகவும் அவசியமானது. இதனால் இரவு நெடுநேரம் வரை என்னால் மிகுந்த உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது" என்றார்.

கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. நானும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்துடன் உற்கார்ந்து கொண்டேன்.

தவறான எண்ணம்

ஆனால் பகல் தூக்கம் கூடாது என்ற நம்பிக்கை எமது சமூகத்தினருக்கு பெருமளவு இருக்கிறது. குட்டித் தூக்கத்தைக் கோழித் தூக்கம் என்றும் சொல்வார்கள்.
 • பகல் தூக்கமானது சோம்பேறித்தனத்தைக் குறிக்கும். குறிக்கோளற்ற வாழ்க்கைப் பயணத்தையும் குறிப்பதாகவும் பலரும் நம்புகிறார்கள்.
 • பகலில் குட்டித் தூக்கங்களானது குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கே ஆனது. ஆரோக்கியமானவர்களுக்கு அல்ல என்பது வேறு சிலரது எண்ணம்.

அதனால்தான் பலருக்கு இது கெட்ட பழக்கமாகத் தெரிகிறது. ஆனால் அது தவறான நம்பிக்கை. பகலில் கொள்ளும் குட்டித் தூக்கங்கள் நன்மையளிக்க வல்லது என்பதே மருத்துவ உண்மையாகும்.

பாலுட்டிகளின் தூக்க முறைகள்

மனிதன் ஒரு பாலூட்டி. அவன் பகல் முழவதும் வேலை செய்கிறான். இரவில் மட்டும் தூங்குகிறான்.

ஆனால் 85 சதவிகிதத்திற்குக்கு மேலான பாலூட்டி இனங்கள் அவ்வாறு இல்லை.இடையிடையே குறுகிய காலங்களுக்கு பகல் முழுவதும் தூங்கி விழிக்கின்றன. இதனை Polyphasic sleepers என்பார்கள்.

ஆனால் மனிதனானவன் குறைந்தளவாக உள்ள மிகுதிப் பாலூட்கள் போல Monophasic sleepers ஆக இருக்கிறான்.

ஆனால் இது மனிதனுக்கு இயற்கையாக விதிக்கபட்டதாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறும் தூக்ஙகள் கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

இயற்கை எவ்வாறு இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க வேண்டிய தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் பகலில் குட்டித் தூக்கம் போடுவது உடலுக்கு உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கிறது.

வாழ்க்கையில் உச்சங்களை எட்டிய பலர் பகலில் குட்டித் தூக்கம் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நெப்போலியன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் எடிசன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் போன்றவர்களைக் குறிப்பிடுவார்கள்.

குட்டித் தூக்கத்தின் நன்மைகள்

குட்டித் தூக்கங்களால் என்ன பயன்கள் கிடைக்கின்றன?
 • குட்டித் தூக்கத்தால் அவதானிப்பும் விழிப்புணர்வும், வினைத்திறனும், அதிகரிக்கிறன. அதனால் தவறுகளைத் தவிர்க்கவும், விபத்துகளிலிருந்து தப்பிக்கவும் முடியும். அமெரிக்காவின் நாசாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது 40 நிமிடங்கள் கொள்ளும் குட்டித் தூக்கமானது ஒருவது செயற்திறனை 34 சதவிகிதத்தால் அதிகரிக்கிறது என்கிறது. ஆனால் அதேநேரம் விழிப்புணர்வானது 34 சதவிகிதத்தால் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
 • குட்டித் தூக்கத்திற்கு பின்னர் கொஞ்ச நேரத்திற்கு மாத்திரமின்றி மேலும் பல மணிநேரங்களுக்கும் விழிப்புணர்வு சிறப்பாக இருக்கும்.
 • அதீத பகல் தூக்கமும் உடல் தளரச்சியும் காரணம் தெரியாமல் ஏற்படுபவர்களுக்கு (narcolepsy) நேரஒழுங்கு வரையறை செய்யப்பட்ட குட்டித் தூக்கங்கள் உற்சாகமாகச் செயற்படக் கைகொடுக்கும்.
 • உளவியல் ரீதியான அனுகூலங்கள் அதிகம் கிட்டும். குட்டி விடுமுறை கிட்டிய மகிழ்ச்சி ஏற்படும். சொகுசுணர்வும் கிட்டலாம். சிறிய ஓய்வும், புத்துயிர்ப்பும் பெற உதவும்.

அவதானிக்க வேண்டியவை

எந்தளவு நேரம் கொள்ள வேண்டும், எவ்வாறு கொள்ள வேண்டும், எத்தகைய இடம் உசிதமானது போன்ற பல விடயங்கள் சரியாக இருந்தால்தான் இந்தத் குட்டித் தூக்கம் விரும்பிய பலனைக் கொடுக்கும்.
 • குட்டித் தூக்கமானது 30 நிமிடங்களுக்கு மேற்படாதிருப்பது அவசியம். நீண்ட நேரம் தூங்குவதானது சோம்பல் உணர்வை விதைத்துவிடும். அத்துடன் இரவுத் தூக்கத்தையும் கெடுத்துவிடும்.
 • தூங்குவதற்கு அமைதியான, சப்தங்களற்ற, காற்றறோட்டமும் வெக்கையுமற்ற வசதியான இடம் முக்கியமானது. மங்கலான ஒளியுள்ள இடமும் விரும்பத்தக்கது.
 • குட்டித் தூக்கத்திற்கான சரியான நேரத்தைத் தேரந்தெடுங்கள். மாலையில் இரவை அண்டிய நேரம் நல்லதல்ல. இரவுத் தூக்கத்தைக் குழப்பிவிடும். அதேபோல காலையில் நேரத்தோடு தூங்க முயன்றால் உங்கள் உடலானது தூக்கத்திற்குத் தயாராக இருக்காது.
 • உங்கள் உடல்தான் உங்கள் பகல் தூக்கத்திற்கான நேரத்தைச் சரியாகக் காட்ட முடியும். வழமையாக நீங்கள் எந்த நேரத்தில் சோர்ந்து உற்சாகமிழக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து குட்டித் தூக்கத்திற்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
குட்டித் தூக்கங்களை நாம் வகைப்படுத்தவும் முடியும்.

 1.  திட்டமிட்ட முறையில் செய்யப்படும் குட்டித் தூக்கம் -- உதாரணமாக நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் எனக் கருதினால் அவ் வேளையில் தூக்கம் வருவதைத் தடுக்குமுகமாக முற்கூட்டியே குட்டித் தூக்கம் போடுவது. ஷிப்ட் முறையில் வேலை செய்வதால் தினசரி ஒரே நேரத்தில் தூங்க முடியாவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கலாம்.
 2. அவசரத் தூக்கம் -- சடுதிதியாகக் களைப்புற்று ஒருவர்தான் செய்து கொண்டிருக்கும் வேலையைத் தொடர முடியாதிருந்தால் அவ்வேளையில் சிறுதூக்கம் போடுவது. பொதுவாக நீண்ட தூரம் வாகனம் செலுத்துவோர் தூக்கம் கண்ணைச் சுழற்றுவதால் பாதையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று நேரம் தூங்குவதை இதற்கு உதாரணம் காட்டலாம். இயற்றையின் தூக்க அழைப்பை மறுத்து தொடர்ச்சியாக வாகனத்தைச் செலுத்தும் நீண்ட தூர பஸ் சாரதிகள் தம் உயிரையும் பயணிகளில் உயிரையும் காவு கொள்ளும் பரிதாபங்களுக்கு இலங்கையில் குறைவில்லை. நெருப்பு, எஜ்சின், உயரம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோருக்கு இது நிச்சயம் உதவும்.
 3. பழக்கதோசத் தூக்கம் -- முற்கூறிய பேராசிரியரின் தூக்கத்தை இதற்கு உதாரணம் காட்டலாம். பொதுவாக மதிய உணவின் பின்னர் பலரும் இவ்வாறு குட்டித் தூக்கம் போடுவதுண்டு.

அனைவருக்கும் வேண்டியதுமில்லை

இருந்தபோதும் குட்டித் தூக்கங்கள் அனைவருக்கும் அவசியம் என்பதில்லை. இரவில் போதிய தூக்கமும் பகலில் வேலை நெருக்கடியினறி ஓய்வாக இருப்பவர்களுக்கு தேவைப்படாது. அத்தகையவர்களுக்கு குட்டித் தூக்கமானது இரவுத் தூக்கத்தைக் கெடுத்துவிடும்.

தனது வீட்டில், தனது அறையில் அதுவும் தனது கட்டிலில் படுத்தால்தான்
சிலருக்கு தூக்கம் வரும். வேறு எங்கு படுத்தாலும் தூங்கவே முடியாது. அவர்களுக்கு இது தோதுப்படாது. இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் களைப்பு ஏற்பட்டாலும் பகலில் தூக்கம் வரவே வராது. அவர்களும் குட்டித் தூக்கம் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

இவற்றைத் தவிர இருதய வழுவல் நோய் (Heart failure) வரக் கூடிய சாத்தியம் உள்ளவர்களுக்கு குட்டித் தூக்கம் நல்லதல்ல என ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதற்கான சாத்தியத்தை குட்டித் தூக்கம் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/03/blog-post_8388.html

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts