லேபிள்கள்

சனி, 23 ஜூன், 2012

லேசர் பிரிண்டர் வாங்கலாமா! – கணிணிக்குறிப்புக்கள்


டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள் மறைய ஆரம்பித்துவிட்டன. லேசர் பிரிண்டர்களை அனைவரும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். பலர் இங்க்ஜெட் பிரிண்டர்களுக்கு கார்ட்ரிட்ஜ் வாங்கிக் கட்டுப்படியாகாததால் லேசர் பிரிண்டர்களின் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து லேசர் பிரிண்டர்களை வாங்க முயற்சிக்கின்றனர். இவர்கள் விற்பனைச் சந்தையில் பல வகையான லேசர் பிரிண்டர்களைப் பார்த்து திகைக்கின்றனர். விற்பனையாளர்கள் கூறும் பலவிதமான தொழில் நுட்ப சங்கதிகளைப் புரியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் தங்களின் தேவைக்கு அதிகப்படியான திறன் கொண்டதை வாங்குகின்றனர். அல்லது தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு லேசர் பிரிண்டரை வாங்குகின்றனர். இந்த கட்டுரையில் எப்படிப்பட்ட லேசர் பிரிண்டர் உங்களுக்குத் தேவை என்பதைச் சுட்டிக் காட்டும் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
யாருக்கு லேசர் பிரின்டர் தேவை? தினமும் ஏராளமான பக்கங்களை அச்சடிப்பவர்களுக்கு, வேகமாக அச்சடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, படங்களை துல்லியமாக, சீராக அச்சடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக லேசர் பிரின்டர் தேவை. விலை கட்டுபடியாகுமா? 5,000 ரூபாயில் லேசர் பிரின்டரின் விலை ஆரம்பித்து 1,50,000 வரையில் முடிகிறது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரின்டரை வாங்கலாம்.
1.பிரின்டரில் Resolution என்பது முக்கியம். இதை Dots per inch (dpi) என்ற அலகில் குறிப்பிடுவார்கள். இந்த அளவு கூடுதலாக இருப்பது நல்லது. 300 dpi ரெசல்யூசன் கொண்ட லேசர் பிரின்டர்கள் சாதாரணமாகப் போதுமானது. சிறிது விலை அதிகமானாலும் பரவாயில்லை, அச்சின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 600 dpi ரெசல்யூசனுக்குச் செல்லலாம். 1200 dpi அல்லது அதற்கு மேல் ரெசல்யூசன் கொண்ட பிரின்டர்களின் அச்சடிப்புகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம்.
2.பிரின்டரின் Interface அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். பேரலல் போர்ட் அல்லது யுஎஸ்பி (USP) போர்ட் அல்லது இந்த இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற லேசர் பிரின்டர்கள் விற்பனைக்கு உள்ளன. உங்களிடம் பழைய கம்ப்யூட்டர் இருந்தால் அதில் யுஎஸ்பி போர்ட் இருக்காது. அப்படியானால் பேரலல் போர்ட் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். கம்ப்யூட்டரில் யுஎஸ்பி போர்ட் உள்ளவர்கள் யுஎஸ்பி இன்டர்பேஸ் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். காரணம், இதன் வேகம் அதிகம்.
3. எவ்வளவு காகிதங்களை பிரின்டரின் டிரேயில் வைக்க முடியும் என்பதைக் கவனியுங்கள். விலை குறைந்த சில பிரின்டர்களில் ஏறத்தாழ 100 காகிதங்களை மட்டுமே டிரேயில் வைக்க முடியும். விலை கூடிய ஒரு சில பிரின்டர்களில் ஏறத்தாழ 600 காகிதங்களை வைக்க முடியும். நிறைய காகிதங்களைப் பிரின்டரில் வைப்பதாக இருந்தால், அச்சடிக்கும் கட்டளையை கொடுத்து விட்டு வேறு வேலைகளை நீங்கள் பார்க்கலாம். இல்லையெனில் பிரின்டரின் பக்கத்திலேயே நின்று கொண்டு காகிதங்கள் தீர்ந்து போனால் புது காகிதங்களை அடுக்க வேண்டியிருக்கும்.
4.யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்தை கொடுக்காமல் விட்டால் என்னவாகும்? அதுபோல் பிரின்டரைக் கொடுத்து விட்டு அதற்கான இன்டர்பேஸ் கேபிளைத் தராவிட்டால் என்னவாகும்? பல நிறுவனங்கள் இந்த கேபிள்கள் இல்லாமல் லேசர் பிரின்டர்களை விற்கின்றன. தனியாக இந்த கேபிள்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். எனவே பிரின்டருடன் இன்டர் பேஸ் கேபிளையும் சேர்த்து தருகிறவர்களிடமே வாங்குங்கள்.
5. வாங்கப் போகும் லேசர் பிரிண்டருக்கான டோனரின் விலை குறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். டோனர் தீர்ந்தவுடன் உடனடியாக கிடைக்கிறதா என்பதையும் விசாரியுங்கள்.
6. டோனரின் விலையைப் பார்ப்பதை விட மற்றொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அந்த அம்சத்தை பலர் கண்டு கொள்ளுவதே இல்லை. ஆனால் அதுதான் முக்கியம். ஒரு பக்கத்தை அச்சடிக்க எந்த பிரின்டரில் செலவு குறைவாக வருகிறதோ அதுதான் சிறந்த பிரின்டர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
7. LCD display உள்ள லேசர் பிரின்டராக இருந்தால் நல்லது. என்ன நிலையில் இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்களை எல்சிடி மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
8. Led விளக்குகள் நிறைய இருந்தால் நல்லது. பொதுவாக Power, Paper jam, Toner low, load Paper, Paper out, Ready, Error, Manual, Data, Alarm போன்ற பல விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சிறு விளக்குகள் இருந்தால் நல்லது. எல்சிடி டிஸ்பிளே இல்லாத லேசர் பிரின்டர்களில் இந்த விளக்குகள்தான் உங்களுக்கு உதவும்.
9. Input Buffer எனப்படுகிற நினைவகம் அதிகம் இருக்க வேண்டும். 12 MB buffer உள்ள பிரின்டரின் விலை சற்று அதிகமாக இருக்கும். குறைந்தது 8 எம்பி பபர் உள்ள லேசர் பிரின்டரை வாங்குவது நல்லது.
10. காகிதங்களை வைப்பதற்கான டிரேக்கள் (Tray) எத்தனை தரப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். எல்லா பிரின்டர்களிலும் கண்டிப்பாக ஒரு டிரே இருக்கும். இன்னொரு டிரே கூடுதலாக இருப்பது நல்லது.
11. Manual மற்றும் Quick Start Guide ஆகிய உதவிப் புத்தகங்களை லேசர் பிரின்டருடன் தருகிறார்களா என்று பாருங்கள். சிக்கலான நேரங்களில் இருந்த புத்தகங்கள் கை கொடுக்கும்.
12. எடையும், அளவும் எவ்வளவு என்று பாருங்கள். இடம் குறைந்த அலுவலகம் அல்லது சிறிய மேஜையில் பிரின்டரை வைக்க விரும்புபவர்கள் நீள, அகலம் குறைந்த பிரின்டர்களை வாங்குவது நல்லது.
13. உத்தரவாத காலம் அதிகமாக இருக்க வேண்டும். 3 வருடங்கள் உத்தரவாத காலம் கொண்ட பிரின்டர்களாக இருப்பது நல்லது.
14. உங்கள் இடத்துக்கே வந்து பிரின்டரை சரி பார்ப்பார்களா அல்லது அவர்கள் இடத்துக்கு நீங்கள் பிரின்டரை தூக்கிச் செல்ல வேண்டுமா என்பதை விசாரியுங்கள்.
15. உங்கள் ஊரில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளதா என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் ஊருக்கு அருகில் எங்கு சர்வீஸ் சென்டர் உள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts