லேபிள்கள்

சனி, 6 பிப்ரவரி, 2021

தலாக், இத்தாகாரணங்களும் நியாயங்களும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
'விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது போலவே இவர்களுக் கான உரிமைகளும் இருக்கின்றன. ஆயினும், ஆண்களுக்கு அவர்களை விட ஒருபடி உயர்வுண்டு! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.' (2:228)
இந்த வசனம் பல அம்சங்கள் பற்றி பேசுகின்றது.
1. விவாகரத்து.
2. விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் இத்தா – காத்திருக்கும் – காலம்.
3. விவாகரத்து செய்யப்பட்ட பெண் தமது வயிற்றில் சிசு இருந்தால் அதை மறைக்கக் கூடாது.
4. குறித்த இத்தா காலத்திற்குள் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு உண்டு.
5. தலாக் விடப்பட்ட பெண்ணை பழிவாங்குவதற்காக மீண்டும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனைவியுடன் சேர்ந்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்தும் எண்ணத்துடனேயே மீண்டும் இணைய வேண்டும்.
6. ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன.
7. குடும்ப வாழ்வில் ஆண்களுக்குப் பெண்களை விட ஒருபடி அந்தஸ்து உண்டு!
இவ்வாறான பல அம்சங்களை இந்த வசனம் பேசுகின்றது. இவை பற்றிய சுருக்கமான சில விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.
இஸ்லாம் விவாகரத்தை அனுமதித் துள்ளதுடன் அதை ஓரளவு இலகு படுத்தியும் உள்ளது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக பலராலும் பார்க்கப்படுகின்றது. தலாக்.. தலாக்.. தலாக்.. என்று கூறி பெண்களை ஒதுக்கிவிட இஸ்லாம் அனுமதியளித்துள்ளது. இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.
இஸ்லாம் நியாயமான காரணங்களி னால்தான் 'தலாக்' – விவாகரத்தை அனுமதித்துள்ளது. திருமணம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கும் அனுமதி அளிப்பதுதான் நியாயமானது என்பதை நடுநிலையாக நின்று நிதானித்து சிந்தித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக் கும் தாமாக முன்வந்து தமது கணவர்களிட மிருந்து விவாகரத்தைப் பெறுவதற்கான அனுமதியையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.
திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றது என்று கூறி விருப்பமில்லாத வளுடன், ஒத்து வாழ முடியாத சூழ்நிலையிலும் நரக வாழ்க்கை வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. 'கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன்' என்று கல்லுடனும், புல்லுடனும் மல்லுக் கட்டி வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பெண்களையும் இஸ்லாம் கட்டிப் போடவில்லை.
மனைவி நடத்தை சரியில்லாதவளாக இருந்தால் மட்டுமே விவாகரத்து செய்யலாம் என சில சட்டங்கள் சொல்கின்றன. எனவே, ஒரு மனைவியைக் கணவனுக்குப் பிடிக்காவிட்டால் அவள் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டி அவளை விகாகரத்து செய்ய முற்படுகின்றான். சாதாரணமாக அவனுக்கு விவாகரத்து செய்யும் உரிமையைக் கொடுத்தால் அவனும் இந்தத் தவறைச் செய்ய வேண்டியிருக்காது. அவளும் வீண் கலங்கத்தைச் சுமக்க வேண்டியிருக்காது. விவாகரத்துப் பெற்ற பின் தனக்கென புதிய வாழ்வை அவள் அமைத்துக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.
விவாகரத்து செய்ய முடியாத சூழ்நிலைகளால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. விவாகரத்து அனுமதிக்கப்பட்டால் அவர்கள் முறையாகப் பிரிந்து தமக்கென புது வாழ்வை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இத்தகைய கொடூரக் கொலைகளைக் குறைக்கலாம்.
மனைவியைப் பிடிக்காத சிலர் விவாகரத்து செய்ய முடியாத காரணத்தினால் தினமும் அவளை நோவிப்பதுடன் அவளுக்கு இல்லற சுகத்தைக் கொடுக்கவும் மறுக்கின்றனர். இதே வேளை, தமக்கென சின்ன வீடுகளை (வைப்பாட்டிகளை) ஏற்பாடு செய்து கொள்கின்றனர்,
இதனால் அவனும் கெடுகின்றான்É அவனால் இன்னுமொரு பெண்ணும் தவறான வழியில் செல்கின்றாள். சில போது இவனால் ஒதுக்கப்பட்ட மனைவியும் வேலி தாண்டும் வெள்ளாடாக மாறும் நிலைக்குள்ளாகின்றாள். விவாகரத்தை அனுமதித்து அவர்கள் தமக்கென ஒரு வழியை அமைத்துக் கொள்வது இலகுபடுத்தப்பட்டால் இது போன்ற பாவங்களையும் குறைக்கலாம். கணவன்-மனைவி இருவருமே நிம்மதியற்ற வாழ்வில் இருந்து விடுபடவும் இது வழிவகுக்கும்.
விவாகரத்துக்களால் பல பாதிப்புக்கள் இருந்தாலும் விவாகரத்தை இஸ்லாம் அனுமதித்ததற்கு அதைவிட அதிக நன்மைகளும், நியாயங்களும் காரணங்களாக உள்ளதை இக்கோணத்தில் சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாம் விவாகரத்தை அனுமதித் தாலும் அதை ஊக்கப்படுத்தவில்லை. முடிந்தவரை அதைத் தவிர்க்கவே விரும்புகின்றது. இல்லற வாழ்வில் உள்ள நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதையே இஸ்லாம் விரும்புகின்றது; ஊக்குவிக்கின்றது.
விவாகரத்துக்களைக் குறைக்குமுகமாக வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் போதே மார்க்கமுடைய, ஒழுக்கமுடையவர் களைத் தெரிவு செய்ய இஸ்லாம் வழிகாட்டுகின்றது. திருமணத்திற்கு முன்னரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணிக்கின்றது. திருமணத்தின் பின்னர் வாழ்க்கைத் துணையிடம் ஏதேனும் குறையைக் கண்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் உள்ள நலவுகளைப் பார்த்து திருப்தியடையக் கற்றுக் கொடுக்கின்றது. அவர்களை நீங்கள் வெறுத்த போதிலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று பணிக்கின்றது.
'அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.'
(4:19)
இவ்வாறு இன்பமயமான இல்லற வாழ்க்கைக்குப் பல வழிகளை இஸ்லாம் போதிக்கின்றது. இதன் பின்னரும் பிரச்சினைகள் இருந்தால் ஐந்தாம் கட்ட நடைமுறையாகவே இஸ்லாம் தலாக்கைக் கூறுகின்றது.
மனைவியிடம் தவறான போக்கைக் கண்டால்:
1. நல்ல முறையில் எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும்.
2. அதற்கும் கட்டுப்படாவிட்டால் படுக்கை யிலிருந்து ஓரமாக்கி உளவியல் ரீதியில் திருத்த முற்பட வேண்டும்.
3. அதற்கும் சரிப்பட்டு வராதவிடத்து காயம் ஏற்படாவண்ணம் இலேசாக அடித்துத் திருத்த முற்பட வேண்டும்.
4. அதற்கும் சரிப்பட்டு வராவிட்டால் கணவன்-மனைவி இருவரினதும் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் முறையிட்டு சரி செய்ய முற்பட வேண்டும்.
இந்தக் கட்டத்திற்கு வந்த பின்னரும் மாற்றம் இல்லையென்றால் விவாகரத்தை நாடுவதை இஸ்லாம் ஐந்தாவது வழிமுறையாகக் கூறுகின்றது.
'பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதி யுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான்.'
'இன்னும் அவ்விருவருக்குமிடையில் பிளவை நீங்கள் அஞ்சினால், அவனது குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும் (சமாதானம் செய்ய) அனுப்புங்கள். இவ்விருவரும் (அவர்களுக்குள்) நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்குமிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்த வனாகவும் மிக நுட்பமானவனாகவும் இருக்கின்றான்.'
(4:34-35)
விவாகரத்தும் இத்தாவும்:
இவ்வளவு படிமுறைகளைக் கடந்து இறுதிக்கட்டமாக 'தலாக்' அனுமதிக்கப்பட்ட போதும் ஒரே தடவையில் 'தலாக்.. தலாக்.. தலாக்..' என மூன்று முறை கூறி திருமண பந்தத்தை முறித்து விட முடியாது. கணவன் மனைவியைத் தலாக் கூறினால் மனைவி மூன்று மாதத் தீட்டுக்கள் ஏற்படும் வரை அல்லது மூன்று மாதத்தீட்டு ஏற்பட்டு சுத்தமாகும் வரை கணவனுக்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் கால எல்லைக்குள் அவளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் கணவனே கொடுக்க வேண்டும். இந்தக் கால கட்டத்திற்குள் அவர்கள் இருவரும் விரும்பினால் சேர்ந்து கொள்ள முடியும். கால கட்டம் முடிந்து விட்டால் விரும்பினால் அவர்கள் புதிய திருமணத்தின் மூலம் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு இரு முறை கணவன்-மனைவி இருவரும் தலாக் மூலம் பிரியவும் மீண்டும் மீட்டிக் கொள்வதன் மூலம் அல்லது புதிய திருமணத்தின் மூலம் இணையவும் முடியும்.
இத்தாவின் சட்டங்கள்:
இந்த வசனத்தில் பொதுவாக விவாகரத்து செய்யப்பட்;ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன.
1. கர்ப்பிணிகள்:
'மாதவிடாய் குறித்து நம்பிக்கையிழந்த உங்கள் பெண்களின் (இத்தா) விடயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்கும் உரிய 'இத்தா' காலம் மூன்று மாதங் களாகும். இன்னும், கர்ப்பிணிகளுக்குரிய (இத்தா) காலக்கெடு, அவர்கள் தமது சுமையைப் பிரசவிக்கும் வரையிலாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுகின்றாரோ, அவரது காரியத்தை அவருக்கு அவன் எளிதாக்குவான்.'
(65:4)
கர்ப்பிணிப் பெண்கள் தலாக் விடப்பட்டால் அல்லது அவனது கணவன் மரணித்துவிட்டால் பிள்ளையைப் பெறும் வரை அவள் இத்தா – காத்திருக்க வேண்டும். அதுவரை அவள் மறு மணம் செய்ய முடியாது. தலாக் விடப்பட்டு ஒரு நாளில் குழந்தை கிடைத்தாலும் அவளது இத்தா காலம் முடிந்து விடும் அல்லது ஏழு எட்டு மாதங்கள் குழந்தையைப் பெற காலம் இருந்தாலும் அதுவரை அவள் காத்திருக்க வேண்டும்.
2. மாதத்தீட்டு இல்லாத பெண்கள்:
மாதத்தீட்டு வராத பெண்களாக இருந்தால் அவர்கள் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும். சந்திரக் கணக்குப் பிரகாரம் இம்மாதங்கள் தீர்மாணிக்கப்படும். மேலே குறிப்பிட்;ட வசனம் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.
3. திருமணம் முடித்து உடலுறவு கொள்ளப்படும் முன்னர் தலாக் விடப்பட்ட பெண்:
'நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை யாளர்களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்துவிட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய 'இத்தா' (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்.' (33:49)
திருமணம் முடித்ததும் ஏதேனும் பிரச்சினையில் தலாக்விட நேர்ந்தால் அந்தப் பெண்களும் விவாகரத்து விடப்பட்ட பெண்கள் என்ற வட்டத்திற்குள் வந்தாலும் அவர்கள் இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெறுகின்றனர். அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.
திருமணம் முடித்து உடலுறவு கொள்ள முன் தலாக் விட்ட கணவன் அவளை மீட்டிக் கொள்வதில் அதிக உரிமையுடையவன் என்ற அந்தஸ்தையும் இழந்துவிடுவான்.
அடுத்து பெண்களைப் பழிவாங்க நினைத்து தலாக் விடப்பட்ட பெண்ணை மீட்டிக் கொள்ளக் கூடாது என்றும் இந்த வசனம் கூறுகின்றது. அவர்களுடன் நல்ல முறையில் வாழும் எண்ணம் இருந்தால் மட்டுமே மீட்டிக் கொள்ள வேண்டும். மாற்றமாக அல்லாஹ்வின் வசனத்தைப் பயன்படுத்தி அவளை மீட்டிவிட்டு அல்லாஹ்வின் சட்டத்திற்கு விரோதமாக பெண்களுடன் கொடூரமாக நடந்து கொள்வது அல்லாஹ்வின் சட்டங்களுடன் விளையாடு வதாகவே கருதப்படும். ஆண்களின் பழிவாங்கும் இந்த வக்கிரப் புத்தியைப் பின்வரும் வசனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
'நீங்கள் (உங்கள்) மனைவியர்களை (மீளக்கூடிய) விவாகரத்து செய்து, அவர்களின் (இத்தா) காலக்கெடுவின் எல்லையை அவர்கள் நெருங்கிவிட்டால், அவர்களை உரிய விதத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லது நல்லமுறையில் அவர்களை விட்டு விடுங்கள். (மாறாக) வரம்பு மீறி அவர்களைத் துன்புறுத்துவதற்காக அவர்களை உங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு யார் செய்கிறாரோ நிச்சயமாக அவர் தனக்கே அநியாயம் செய்து கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைவு கூருங்கள். அதன் மூலம் உங்களுக்கு அவன் உபதேசிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்ளூ நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.' (2:231)
ஏன் இந்தக் காலம்:
தலாக் விடப்பட்ட பெண்கள் அல்லது கணவன் இறந்த விதவைப் பெண்கள் இவ்வளவு காலம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். இத்தா என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்றும் விமர்சிக்கின்றனர். இத்தா காலம் முடிந்த பின்னர் பெண்கள் மறுமணம் செய்வதை இஸ்லாம் விரும்புகின்றது. விதவைகள் மறுமணம் செய்வதைத் தடுப்பவர்கள்தான் இத்தா என்பது கொடுமை என்று கொக்கரிக்கின்றனர்.
தலாக் விடப்பட்ட பெண்கள் இத்தா இருக்கும் போது கணவன்-மனைவி இருவரும் தத்தமது தவறுகளை உணர்ந்து அல்லது தமது துணைகளின் தேவையைப் புரிந்து அவர்கள் மீண்டும் இணைந்து வாழ இந்த இத்தா வழிவகுக்கின்றது.
குழந்தை இருக்கின்றதா? இல்லையா? (கருவுற்றுள்ளாளா) என்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்தாலே போதும்தானே? அதற்காக இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா என்றும் கேட்கின்றனர்.
பரிசோனை மூலம் குழந்தை உண்டா? இல்லையா? என்பதை ஊர்ஜிதம் செய்யலாம் என்பது உண்மையே! எனினும்,
இத்தா என்பது குழந்தை உண்டா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமல்ல,
அத்துடன், ஏற்கனவே கூறியது போல் இத்தா என்பது இணைந்து வாழ்வதற்கான கால அவகாசமாகவும் உள்ளது.
அத்துடன் இஸ்லாத்தின் பார்வையில் அது ஒரு இபாதத், இறை வழிபாடு! குழந்;தை பெறும் தன்மையை இழந்தவர்கள் (?) கூட இந்த அடிப்படையில் இத்தா இருந்தாக வேண்டும்.
இந்தப் பரிசோதனைகள் சில போது பொய்த்துப் போவதுண்டு! பணம் கொடுத்தால் தேவையான அடிப்படையில் மருத்துவ சான்றிதழ்கள் பெற முடியும். மூன்று மாதம், நான்கு மாதம் என்பது வயிற்றில் குழந்தை உண்டா? இல்லையா? என்பதை ஓரளவு கண்ணால் கண்டு யூகிக்கக் கூடிய காலகட்டமாகும். இதில் குளறுபடிகள் வருவதற்கான வாய்ப்பு குறைவாகும். இப்படி பல காரணங்களைக் கூறலாம். இருப்பினும், அண்மைய விஞ்ஞான ஆய்வுகள் இந்த காத்திருக்கும் காலத்தின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளது. இதனால் விஞ்ஞானி ஒருவர் இஸ்லாத்திலும் இணைந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
கருவியல் ஆராய்ச்சியாளரான 'ராபர்ட் கில்ஹாம்' ஒரு யூத விஞ்ஞானியாவார். இவர் நீண்ட காலமாக ஓர் ஆய்வைச் செய்து வந்தார். கைவிரல் இரேகைப் பதிவு ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே னுNயு இரேகைப் பதிவு தம்பதியினரை அடையாளம் காட்டிவிடும். ஒரு குழந்தைக்குப் பலர் உரிமை கோரினால் னுNயு ஆய்வின் மூலம் அது யாருடைய குழந்தை என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் னுNயு இரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும் என்பதே இவர் ஆய்வில் கண்டறிந்த அதிசய உண்மையாகும்.
கணவனால் தலாக் விடப்பட்ட பெண் அல்லது கணவன் மரணித்த பெண் மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்னர் மறுமணம் செய்து குழந்தையைப் பெற்றால் அதன் மூலம் பிறக்கும் குழந்தையின் னுNயு இரேகையில் குழப்பம் ஏற்படும். இதனால் குழந்தை யாருடையது என்பதை அறிவதில் சிக்கல்கள் தோன்றும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது விவாகரத்து விடப்பட்ட பெண் மூன்று மாதங்கள் இத்தா இருப்பதன் மூலம் முன்னைய கணவனின் பாலின இரேகை அழிந்துவிடும். இந்த உண்மையைக் கண்டறிந்த யூத விஞ்ஞானி இஸ்லாத்தில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அடிப்படையில் இஸ்லாம் கூறும் இந்த 'இத்தா' -காத்திருக்கும்- காலம் என்பது ஆன்மீக ரீதியானது, உணர்வுபூர்வமானது மட்டுமன்றி அறிவு பூர்வமானதும் கூட என்பதை அறியலாம்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 3 பிப்ரவரி, 2021

புனித பூமி பலஸ்தீனும் முதல்கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம்.
01. அருள் வளம் பொருந்திய பூமி:
பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது.
"அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்." (21:71)
இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது.
"எனது சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான இப்பூமியில் நுழையுங்கள். நீங்கள் புறமுதுகிட்டு ஓடாதீர்கள். அவ்வாறெனில், நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் மூஸா கூறினார்.)" (5:21)
இந்த வசனமும் பலஸ்தீன பூமி புனித பூமியென்று கூறுகின்றது.
02. மிஃராஜின் பூமி:
நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப்பெரும் அற்புத நிகழ்வே இஸ்ராவும் மிஃராஜுமாகும். நபி(ச) அவர்கள் ஓர் இரவில் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அற்புதமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது "இஸ்ராஃ" என்று கூறப்படும். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களையும் தாண்டி விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இது "மிஃராஜ்" என்று கூறப்படும். அவர்களது இஸ்ராஃ, மிஃராஜுக்குரிய புனித பூமியாக பலஸ்தீனும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அமைந்துள்ளது.
"(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன்ளூ பார்ப்பவன்." (17:1)
இந்த வசனத்திலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைச் சூழவுள்ள பகுதி அருள்வளம் பொழியப்பட்ட பூமியென்று கூறப்பட்டுள்ளது. சூழவுள்ள பகுதி பரகத் செய்யப்பட்டது என்றால் மஸ்ஜிதுல் அக்ஸா அதைவிட அதிகம் அருள் வளம் பொழியப்;பட்டது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
03. இரண்டாவது மஸ்ஜித்:
அபூதர்(வ) அவர்கள் கூறுகின்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்; பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அடுத்து எது? எனக் கேட்ட போது (ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்." (புஹாரி: 3425)
இந்த ஹதீஸின் அடிப்படையில் உலகில் அமைக்கப்பட்ட இரண்டாவது புனித மஸ்ஜிதாக பைதுல் முகத்தஸ் மஸ்ஜித் குறிப்பிடப் படுகின்றது.
04. மூன்றாவது புனித பூமி:
சிறப்பு என்ற அடிப்படையில் நோக்கினால் மஸ்ஜிதுல் அக்ஸா மூன்றாவது தரத்தில் அமைந்திருப்பதை ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன.
1.   முதல் அந்தஸ்த்தில் இருப்பது மஸ்ஜிதுல் ஹராம்.
2.   இரண்டாவது அந்தஸ்த்தில் இருப்பது மஸ்ஜிதுந் நபவி.
3.   மூன்றாவது அந்தஸ்த்தில் இருப்பது மஸ்ஜிதுல் அக்ஸாவாகும்.
05. முதலாவது கிப்லா:
முஸ்லிம்கள் மதீனாவுக்குச் சென்றதிலிருந்து சுமார் 16 அல்லது 17 மாதங்களாக மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே தொழுது வந்தனர். அதன் பின்னர்தான் இன்று நாம் முன்னோக்கித் தொழும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியை நோக்கித் தொழுமாறு ஏவப்பட்டனர்.
பராஃ இப்னு ஆஸிப்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். "நபி(ச) அவர்கள் 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கித் தொழுதார்கள்….." (புஹாரி: 399)
இந்த வகையில் மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகத் திகழ்கின்றது.
06. இறைத் தூதர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித்கள்:
இன்று பூமியில் இருக்கும் மஸ்ஜித்களில் இறைத்தூதர்களால் கட்டப்பட்ட நான்கே நான்கு மஸ்ஜித்கள் மட்டுமே உள்ளன.
1.   மஸ்ஜிதுல் ஹராம்.
2.   மஸ்ஜிதுன் நபவி.
3.   பைதுல் முகத்தஸ்.
4.   மஸ்ஜிதுல் குபா
இவற்றில் மஸ்ஜிதுன் நபவி, குபா மஸ்ஜித் என்பன நபி(ச) அவர்களால் கட்டப்பட்டன. அந்த வகையில் இந்த மஸ்ஜித் சிறப்புப் பெறுகின்றது.
07. நன்மை நாடி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மஸ்ஜித்:
"மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜித்களைத் தவிர (அதிக நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளக் கூடாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்."
அறிவிப்பவர்: அபூஹுரரா(வ)
ஆதாரம்: புஹாரி: 1189
நன்மையை நாடிப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட மஸ்ஜித்களில் ஒன்றாக மஸ்ஜிதுல் அக்ஸா திகழ்வதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது. ஏனைய பொதுவான மஸ்ஜித்களில் தொழுவதை விட மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுவது அதிக நன்மை பயக்கக் கூடியது என்பதையும் அறியலாம்.
08. முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மஸ்ஜித்:
நபி(ச) அவர்களது காலத்தில் இந்த மஸ்ஜித் அமைந்திருந்த பிரதேசம் முஸ்லிம்கள் வசமிருக்கவில்லை. இந்தப் பகுதி முஸ்லிம் களால் வெற்றிகொள்ளப்படும் என நபி(ச) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
"தபூக் போரின் போது நபி(ச) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு,
1.   எனது மரணம்
2.   பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்."
அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக்(வ) ஆதாரம்: புஹாரி- 3176
நபி(ச) அவர்களது இந்த முன்னறிவிப்பு உமர்(வ) அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது. இந்த முன்னறிவிப்பு நபி(ச) அவர்களது தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய ஒன்று என்பதையும் உறுதி செய்கின்றது.
09. தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதி:
தஜ்ஜாலின் பித்னா குறித்து நபியவர்கள் அதிகமதிகம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவ்வாறு எச்சரிக்கப்படும் போது பல செய்திகளையும் கூறிவிட்டு,
"நான்கு மஸ்ஜித்கள் (இருக்கும் பகுதி) தவிர மற்றைய பகுதியெல்லாம் அவனது அதிகாரம் வியாபித்திருக்கும். அந்த நான்கு மஸ்ஜித்களாவன, மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸுல், மஸ்ஜிதுல் அக்ஸா, தூர் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்."
அறிவிப்பவர்: ஜுனாதா இப்னு அபூ உமையா(ரஹ்),
ஆதாரம்: அஹ்மத்: 24083-23683
(ஷுஅய்ப் அல் அர்னாஊத் இந்த அறிவிப்பை ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள்.)
எனவே, தஜ்ஜாலின் பித்னாவிலிருந்து பாதுகாப்புப் பெற விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு இடமாகவும் இது திகழ்கின்றது.
10. மீண்டும் முஸ்லிம்கள் கையில் வரும் மஸ்ஜித்:
உலக முடிவின் போது நிச்சயமாக மஸ்ஜிதுல் அக்ஸாவும், பலஸ்தீன் புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி(ச) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த இறுதி முன்னறிவிப்பு நடக்கும் முன்னர் மஸ்ஜிதுல் அக்ஸா கைமாறலாம். அந்த இறுதி முன்னறிவிப்பு பற்றியே இங்கே நாம் கூறுகின்றோம்.
பலஸ்தீன பூமியில் வைத்துத்தான் ஈஸா நபியால் தஜ்ஜால் அழிக்கப்படுவான். தஜ்ஜாலுடன் சேர்ந்து சத்தியத்திற்கு எதிராகப் போராடிய யூதர்கள் முஸ்லிம் போராளிகளால் தோற்கடிக்கப்படுவார்கள். இது குறித்து நபி(ச) அவர்கள் கூறும் போது,
"முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் செய்து யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் மறைந்திருந்து அந்தக் கல்லும் மரமும் முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து அவனைக் கொன்றுவிடு எனக் கூறும் நாள் வரும் வரை உலகம் அழியாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ), ஆதாரம்: முஸ்லலிம்: 2922-82)
அந்த மகத்தான நாள் வரும் வரை யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலும் முறுகலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் முஸ்லிம்கள் சந்திக்கும் இழப்புக்கள் ஷஹாதத் எனும் வீர மரணமாகவே அமையும். அந்த நல்ல நாள் வரும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் சில போது முஸ்லிம்களும் சில போது அவர்களும் வெற்றியையும் தோல்வியையும் சந்திக்கலாம். ஆனால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 29 ஜனவரி, 2021

குழந்தைகளைநெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு


குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு
"உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்" என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.
நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.
மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.
இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.
சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.
1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.
நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!
எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.
2. சதா தண்டிக்காதீர்கள்:
சில பெற்றோர் எப்போதுமே பிள்ளைகளை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். சதாவும் தண்டித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு நடந்து கொண்டால் எமது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு எழாது. தவறில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் உண்டாகும். வெளியிடத்தில் கூட தவறு செய்து அடிவாங்குவது அவர்களுக்குப் பெரிய பாதிப்பாகத் தெரியாது. நாம் வாங்காத அடியா, கேட்காத ஏச்சா என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் வாழ்நாளிலேயே திருந்தமாட்டார்கள். எனவே, எப்போதாவது ஏதாவது பெரிய தவறுகளுக்காக மட்டும் தண்டியுங்கள். சின்னச் சின்னப் பிழைகளைத் திருத்துங்கள். அப்போது அடியென்றால் பயப்படுவார்கள். ஏச்சு என்றால் கூச்சப்படுவார்கள்.
3. வன்முறை வேண்டாம்:
குழந்தைகளைக் கண்டிக்கும் போது காயம் ஏற்படாவண்ணம் இலேசாகத் தண்டிக்க வேண்டும். கல் மனதுடன் நடந்து கொள்ளக் கூடாது. என் பெற்றோர் தண்டித்தாலும் என்னுடன் பாசத்துடன்தான் இருக்கின்றனர் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். கடுமையான தாக்குதல்களால் குழந்தைகள் குடும்பத்தின் எதிரிகளாக மாறுவர். தகாத உறவுகளை ஏற்படுத்தி தம்மைத் தண்டித்த பெற்றோர்களை இழிவுபடுத்துவர்.
4. தண்டித்தல் என்பது இறுதி முடிவாக இருக்கட்டும்:
எடுத்ததற்கெல்லாம் அடிக்காமல் புத்தி சொல்லுங்கள். சிலபோது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துங்கள். சிலபோது அவர்களது தவறுகளால் நீங்கள் வருத்தப்படுவதை நடைமுறையில் காட்டுங்கள். பிள்ளை தானாக மனம் இறங்கி நான் செய்த தவறால் பெற்றோர்கள் வருந்துகின்றார்கள் என்று தன்னை மாற்றிக் கொள்ளலாம். இவையெல்லாம் பலனளிக்காத போது இலேசாக அடியுங்கள். எடுத்ததும் கடுமையாகத் தாக்கி விடாதீர்கள்.
5. தண்டிப்பதிலும் நீதி நியாயம் வேண்டும்:
தவறுக்கு ஏற்ற தண்டனையே வழங்க வேண்டும். தண்டனை முறையில் கூட பிள்ளை படிப்பினை பெற வேண்டும். மகன் தவறுதலாக ஒரு கோப்பையை உடைத்துவிட்டான். இதற்காக தந்தை அடிக்கிறார். அதே மகன் ஒரு ஹறாத்தைச் செய்துவிட்டான். இப்போது கோப்பைக்காக அடித்ததை விட குறைவாக அடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஹறாத்தைச் செய்வதை விட கோப்பையை உடைத்ததைத்தான் எனது தந்தை பாரதூரமாகக் கருதுகின்றார் என்ற எண்ணத்தையும் குழந்தையின் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றோம். இது எவ்வளவு பெரிய தவறு என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே, தண்டனை நீதியானதாக, நியாயமானதாக, தவறின் அளவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
6. தண்டனையை சேமிக்காதீர்கள்:
சில பெற்றோர் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பார்கள். நாலைந்து தவறுகளை ஒன்றாக சேர்த்து எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக அடிப்பார்கள். இது குழந்தைகளுக்கு அதிக வேதனையைக் கொடுக்கும். எல்லாத் தவறுக்குமாகக் கிடைக்கும் அடியெனப் பார்க்காமல் ஒரு தவறுக்கு இப்படி அடிக்கிறார்களே என பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவர். எனவே தவறுக்கு அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் தவறு நடந்தவுடன் அடித்து அதை அந்த இடத்திலேயே மறந்துவிட்டு சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.
7. நிரபராதிகளைத் தண்டிக்காதீர்கள்:
குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்புவதற்காகப் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களை மாட்டி விடுவார்கள். ஒரு தவறு நடந்து பின்னர் தான் தப்ப வேண்டும் என்பதற்காக அடுத்தவரை மாட்டிவிடுவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றத்தைக் குறித்த நபர் செய்தது உறுதியாகாத வரை தண்டிக்கக் கூடாது. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டால் குழந்தைகளின் உள்ளம் நொறுங்கிப் போகும். குறித்த நபர் தவறு செய்தது உறுதியாகாத சந்தர்ப்பங்களில் பொதுவாகப் புத்தி சொல்வதோடு விட்டுவிட வேண்டும். நிரபராதியைத் தண்டித்துவிட்டால் குழந்தையென்று பார்க்காமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.
8. மறதி, தவறுதல், நிர்ப்பந்த நிலை என்பவற்றை மன்னியுங்கள்:
தவறுதலாக அல்லது மறதியாக இடம்பெறும் தவறுகள் அல்லது நிர்ப்பந்த நிலையில் நிகழும் குற்றங்களுக்கு மன்னிப்பு அளியுங்கள். அல்லாஹ் இத்தகைய நிலைகளை மன்னித்துள்ளான். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் புத்தி சொல்வதுடன் விட்டுவிடுங்கள்.
9. உற்சாகத்திற்கு தண்டனையா?
சில பெற்றோர் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் போது எரிச்சல்பட்டு பேசாம ஒரு இடத்தில இரு என்று கண்டிப்பார்கள். குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தவறு என்று தண்டிக்கக் கூடாது. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஒழுங்குபடுத்துங்கள்.
10. பிரச்சினைகளைக் கவனிக்காமல் தண்டிக்காதீர்கள்:
ஒரு பாடத்தில் குழந்தை குறைந்த புள்ளி எடுத்துள்ளது அல்லது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறவில்லை போன்ற சந்தர்ப்பத்தில் குழந்தையை வையாதீர்கள். குழந்தையின் பின்னடைவுக்கு குழந்தை மட்டும் காரணமாக இருக்காது. ஆசிரியரின் குறை இருக்கலாம். பாடம் முறையாக நடக்காதிருந்திருக்கலாம். மற்றவர்கள் விட்ட குறைக்கு குழந்தைகள் தண்டிக்கப்படலாமா? எனவே, குழந்தையின் குறையில் அடுத்தவருக்கும் பங்கு இருக்கும் போது அல்லது குழந்தையிடம் மானசீகப் பிரச்சினைகள் இருக்கும் போது குழந்தையைத் தண்டிக்காமல், ஏசாமல் நீங்கள் பிரச்சினையை இணங்கான முயற்சியுங்கள். பின்னர் குழந்தையை நெறிப்படுத்துங்கள்.
11. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டிக்காதீர்கள்:
குழந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டு இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கூறினால் தண்டிப்பதை விட்டுவிடுங்கள். அதே போன்று அல்லாஹ்வுக்காக அடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டால் அடிப்பதை நிறுத்திவிடுங்கள். தண்டிப்பது என்பது இனி இது போன்ற தவறைச் செய்யக் கூடாது என்று உணர்த்துவதற்காகத்தான். பிள்ளையே இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய பின் தண்டனை தேவையில்லையல்லவா?
இது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு தண்டிப்பின் உண்மையான பயனை அடைந்து கொள்ள முயல்வோமாக!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 26 ஜனவரி, 2021

பெண்ணே பெண்ணே! பொறாமைவேண்டாம்! கண்ணே!

பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.
தனது சகோதரிக்கு அழகிய கணவன் கிடைத்திருக்கிறான் என்று பொறாமை கொள்ளும் பெண்கள் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர். கணவனால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருப்பர். இவர்கள் தங்களது மருமகள்களைப் பார்க்கின்றனர். தமது மகன்கள் அவர்களை அடிப்பதில்லை, தமது மருமகள் தாம் அனுபவித்த கஷடங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போது சில மாமிகளுக்குப் பொறாமை ஏற்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா?
'நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா
'அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?' (4:54)
அல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா? அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்?
நீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா?
உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்காதது உங்கள் தோழிக்கோ உறவுக்காரப் பெண்ணுக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
'இவர்களுக்குப் பின் வருவோர், 'எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்' எனக் கூறுவார்கள்.' (59:10)
இவ்வாறு துஆச் செய்து மனதில் குரோத எண்ணம் தலைகாட்டுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.
உங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள். பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும், மகிமையையும் குறைக்கும் வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள். மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடையலாமா? பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா? எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி, புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங்களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
01. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்
'இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!' (113:5)
என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.
02. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்
'எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்' (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.
03. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்
'எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ' (65:3)
என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
04. பொறாமைக்காரர்கள் என்ன செய்வார்களோ என்று வீணே எண்ணி, எண்ணி கவலை கொள்ளாதீர்கள். அவள் சூனியம் செய்வாளோ, வசியம் செய்வாளோ, எதையாவது மந்திரித்துத் தந்து விடுவாளோ, என் மீது உள்ள பொறாமையில் எனது மாப்பிள்ளையை வளைத்தப் பொட்டு விடுவாளோ, எனக்கும் என் கணவருக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என சும்மா போட்டு மனதை அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக செயற்படுங்கள்.
05. உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்
'நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' (2:153)
என்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள். பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts