லேபிள்கள்

வியாழன், 17 ஜூலை, 2014

ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ ஸ்கிப்பிங் பயிற்சியோ சரியான உடற்பயிற்சி முறைகள்.

இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்

ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளறுகள் நீங்குகின்றன.

உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் , இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

கை, கால், தொடைப்பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச் சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன் முது கெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.

ஆரோக்கியம், அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது


--
*more articles click*
www.sahabudeen.com


செவ்வாய், 15 ஜூலை, 2014

சுகப்பிரசவம் சுலபமே!

சுகப்பிரசவம் சுலபமே!
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில்

எத்தனை தாய்களால் முடிகிறது? 
இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும்  வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத்,  திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்...

1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு...
திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ,  பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய்,  ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

2 உணவை விரும்பு!
கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

3 எதைச் சாப்பிடலாம்?
முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

 4  குனி, வளை, நிமிர்!
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

5  சபாஷ் சரியான எடை!
கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும்.

அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.

6    படுக்கையும் உறக்கமும்!
கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.

7  ஒரே மருத்துவர்!
பொதுவாக முதல்  28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே  ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.

8 தவறாத மருந்துகள்!
தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.  

9 கூடாது... கூடாது... கூடவே கூடாது!
வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

 10  அகமே சுகம்!
தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்' என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு  நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம்.  தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.


--
*more articles click*
www.sahabudeen.com


ஞாயிறு, 13 ஜூலை, 2014

உடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி! வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்!

உடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி! வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்!





முல்லை, ஜாதி, இருவாச்சி... மல்லிகையின் வரிசையைச் சேர்ந்த இந்தப் பூக்களின் வாசம், அழகு ஆகியவை நம் மனதை மயக்கும். அதுமட்டுமல்ல... உடலுக்குக் குளிர்ச்சியையும் குதூகலத்தையும் ஒருங்கே அள்ளித் தரும் அற்புத மலர்கள் இவை. நம் தேகத்துக்குப் புத்துணர்ச்சி யூட்டி, பொலிவைத் தரும் வல்லமையும் இவற்றுக்கு உண்டு.

இந்தப் பூக்களின் அழகுப் பலன்களை ஆராய்வோமா?
வெயிலால் ஏற்படும் வியர்வை நாற்றம், வியர்க்குரு ஆகியவற்றை விரட்டியடித்து, உடலைக் குளிர்ச்சியாகவும், கூந்தலை பளபளப்பாகவும் வைக்கும் முல்லைத் தைலம் மற்றும் குளியல் பவுடர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோமா?

தைலம் தயாரிக்க...
செம்பருத்தி இலை - 5, முல்லை மொட்டு - 10... இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் தேங்காய் எண்ணெ யைக் காய்ச்சி, அரைத்த விழுதை அதில் சேர்த்து மீண்டும் காய்ச்சுங் கள். 'சடசட'வென்ற ஓசை அடங்கியதும் இறக்குங்கள். இந்த எண்ணெயை வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, குளியல் பவுடரால் அலசுங்கள்.

குளியல் பவுடர் தயாரிக்க...
உலர்ந்த முல்லைப் பூ, வெந்தயம், புங்கங்காய் - தலா 100 கிராம், கடலைப்பருப்பு - கால் கிலோ... இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்தால், குளியல் பவுடர் தயார். முல்லைத் தைலம் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த பவுடரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நீங்கும். கூந்தல் சூப்பர் சுத்தமாகிவிடும். தோலும் பளபளப்புடன் வாசனையாக இருக்கும்.

வியர்க்குரு, பருக்களால் முகம் பொலிவிழந்து இருக்கிறதா?
ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு - தலா 10 பூக்கள்.... இவற்றுடன் 2 டீஸ்பூன் பாலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதைக் கொண்டு பருக்களை மூடுங்கள். முகத்திலும் பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் பொலிவும் கூடும்.

முகம் 'ப்ளீச்' செய்ததுபோல் பிரகாசமாக ஜொலிக்க...
ஏடு இல்லாத தயிர் - 2 டீஸ்பூன், செம்மரத்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த ஜாதிப் பூ - அரை கப்... இந்த மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி, 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் கண்ணாடி போல் மின்னும்.
உடலுக்கு குளிர்ச்சி, மலர்ச்சி தந்து... அயற்சி போக்கும் ஜாதிப் பூ தைலம்!


கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சவும். ஒரு கப் உலர்ந்த ஜாதி மல்லிப்பூவை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி, காய்ச்சிய எண்ணெயில் போடுங்கள். மறுநாள் மூட்டையை நன்றாகப் பிழிந்து எடுத்து விடுங்கள். இந்த எண்ணெயைத் தலை முதல் பாதம் வரை தேய்த்து சீயக்காய் போட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படிக் குளித்து வந்தால்... உடம்பும் மனசும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கும்.

நகங்கள் கறுத்து, உடைந்து, நிறம் மாறியிருந்தால்...
முல்லை, ஜாதி, இருவாச்சி மலர்களை சம அளவு எடுத்து அரைத்து வடிகட்டுங்கள். இந்த எசென்ஸை ஒரு பாட்டிலில் வைத்து, அவ்வப்போது பஞ்சினால் தோய்த்து நகங்களில் பூசுங்கள். உடைந்த நகம் வளரும். நகம் சிப்பியைப் போல் பளபளக்கும்.

தலையில் பேன், பொடுகு தொல்லை தீர...
தலா ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய், விளக்கெண்ணெயுடன் இருவாச்சி மல்லியின் வேரைப் பொடித்து சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை வெந்நீரில் குழைத்து தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசுங்கள். பேன், பொடுகு ஓடிவிடும்.

வாசனையான ஹென்னா!
மருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, டீ டிகாஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறு... இவற்றுடன் மொட்டு முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்த ஹென்னாவை தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து, பூக்களால் கூந்தல் வாசம் வீசும்.

இலையே கிருமிநாசினி!
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:

ஜாதி மல்லி குளிர்ச்சியைத் தரும். இருவாச்சி கண் நோய்க்கு மிகவும் நல்லது. முல்லை மணம் வீசும். இந்த மலர்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் எடுக்கப்படுகின்றன.
முல்லை செடியின் இலை துவர்ப்பாக இருக்கும். இந்த இலையை வாயில் போட்டு மெல்வதால் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து கிருமிநாசினியாக செயல்படும்.

இந்தப் பூக்களை தலையில் சூடிக் கொள்வதால் சூடு குறைந்து, நல்ல மனநிலை ஏற்படும்.

ஜாதி மல்லி மரத்தின் கட்டையைத் தண்ணீர் விட்டுக் இழைத்து, அதை நாக்கில் தடவுவது... விஷத் தாவரங்களின் நஞ்சைக் கூட முறிக்கும்.

தொடைப் பகுதி குண்டாக இருப்பவர்களுக்கு நடக்கும்போது கால்கள் உரசுவதால் புண்ணாகிவிடும். முல்லை (அ) இருவாச்சி மலரை அரைத்து அந்த இடங்களில் பூசினால் குணமாகும்.

முல்லைப்பூவின் சாறு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.

காட்டுமல்லி இலையை அரைத்து, வெண்குஷ்டத்தின் மேல் பூசினால்... தோலின் நிறம் மாறும்.

தொண்டைப் புண் இருந்தால் முல்லைப்பூவின் இலையை நெய்யில் வறுத்து, அரைத்து, தொண்டைப் பகுதியில் பத்து போடுங்கள். வலியும் வீக்கமும் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.



--
*more articles click*
www.sahabudeen.com


வெள்ளி, 11 ஜூலை, 2014

சகலகலா டாக்டர் நெல்லிக்காய்!

சகலகலா டாக்டர் நெல்லிக்காய்!


'அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது' என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்' என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. 

''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை

அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு.
''நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்...'' என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...

1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்' என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா' சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது.  ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.

10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
  என்ன ஒரு கோப்பை நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாமா


--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 9 ஜூலை, 2014

புன்முறுவலின் மகத்துவம்

புன்முறுவலின் மகத்துவம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான 'அஷ்ஷைக் நபீலுல் அவலி' தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:
நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.
அதற்கவர் அளித்த பதில்: "நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்; பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன்; உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை; ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர்; அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார். இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது. நான் மிகப் பெரிய செல்வந்தன்; ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை; ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?
ஒரு நாள் அவரிடம் சென்று, "நான் உன்னுடன் சற்று உட்கார வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே! அதெப்படி உன்னால் முடிகிறது?"
அதற்கவர் சொன்னது: "நான் ஒரு முஸ்லிம். 'அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்; வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்".
அதற்கு நான் அவரிடம், "அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா?" எனக் கேட்டேன்.
அதற்கவர், "ஆம்" என்று பதிலளித்தார்.
நான், "அதெப்படி?" என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.
அதற்கவர், "நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: 'இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும்; நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான்; அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது; அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை'. எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது; துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம்; இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும்; ஈடேற்றமாகும்; இன்பமாகும்" என அவர் பதிலளித்தார். இது தான் என்னை இஸ்லாத்தில் நுழைய வைத்தது."
'அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்'
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்
இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?
சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே! எனக்கு எழுத முடியாதே! என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.
புன்முறுவல் பூப்பதற்கு மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம்; ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும்இ நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே! இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். 'முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்'. எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.
எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?
'உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).
'நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை' என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).
'நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை' என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; 'உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதிஇ இப்னு ஹிப்பான்).
தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 7 ஜூலை, 2014

மரணத்திற்குப் பின் மனிதன்!

மரணத்திற்குப் பின் மனிதன்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனது அருளும் சாந்தியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள்,  குடும்பத்தினர்கள் அஅனைவர் மீதும் உண்டாவதாக!
மரணத்திற்புப் பின் மனிதன் மீண்டும் எழுப்பப்படுவது தொடர்பாக அல்-குர்ஆன் நெடுகிலும் பேசப்படுகிறது. அனைத்துக் கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக் கொண்டாலும் மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மரணத்திற்குப் பின் மனிதனின் நிலைப் பற்றி தெளிவான ஒரு கொள்கையை உலகிற்கு முன் வைக்கிறது. அது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களையும் அளிக்கின்றது. மனிதன் இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய  நாளை அல்-குர்ஆன் இறுதித் தீர்ப்பு நாள் என்று அறிமுகப்படுத்துகின்றது. அந'நாளில் படைப்பினங்களை எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை தொடர்ந்து வரக்கூடிய அல்-குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.
'அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் (நபியே நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிள்ள முகடுகளின் மீது அவை வீழ்ந்து கிடக்க(க் கண்டு) இதனை எவ்வாறு இது இறந்த பின், அல்லாஹ் உயிர்ப்பிப்பான்? என்று கூறினார். ஆகவே அல்லாஹ், அவரை நு{று ஆண்டுகள் வரை மரணித்திருக்கச் செய்து, பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரிடம்) 'நீர் எவ்வளவு காலம் இருந்தீர்?' எனக் கேட்டான்;
அதற்கவர், 'ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில பாகம் இருந்தேன்' எனக் கூறினார். (அதற்கு அல்லாஹ்), 'அன்று! நீர் நூறு வருடங்கள் (இந்நிலையில்) இருந்தீர்' என்று கூறினார். ஆகவே உம்முடைய உணவையும், உம்முடைய பாணத்தையும் நீர் நோக்குவீராக! அவை எவ்வித மாறுதலும் அடையவில்லை! இன்னும் உம்முடைய கழுதையின் பால் நோக்குவீராக! மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்குவதற்காகவும் (மரணிக்கச் செய்து உம்மை உயிர்கொடுத்து எழுப்பினோம்). இன்னும், (அக்கழுதையின்) எலும்புகளின் பால், எவ்வாறு அவைகளைச் சேர்த்து பின்னர் அதன் மாமிசத்தை அணிவிக்கின்றோம்' என்று நீர் நோக்குவீராக! பின்னர் அவருக்குத் தெளிவான போது அவர், 'நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்று நான் அறிகிறேன்' என்று கூறினார். (2:259)
இச்செய்தியுனூடாக பல விடயங்கள் புலப்படுகின்றன. அவரின் தூக்கம் நூறு வருடத்தை எட்டியிருந்தும் அவரது உடல் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருந்தது! அவருடன் இருந்த உணவு எந்த மாறுதலுக்கும் உள்ளாகாமல் இருந்தது. எனினும் அவர் பிரயானம் செய்த கழுதை இறந்து அதன் உடல் உக்கிப் போய் இருந்தது. நீண்ட நாட்கள் அவர் துயில் கொண்டதற்கு இதுவே அவர் முன் ஆதாரமாக இருந்தது.
அல்லாஹ் இவைகளைப் பாதுகாப்பதற்கு காற்றை உபயோகித்த விதம் மிக அற்புதமானது. இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ் தனக்கு மரணத்திற்குப் பின் எழுப்புவது மிக இலகுவான காரியம் என்பதை உலகிற்கு தெளிவுபடுத்துகிறான். இன்னும் இப்றாஹீம் (அலை) தொடர்பான ஒரு செய்தியில் அவருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை நீக்கும் விதமாக இச்செய்தி அமைந்துள்ளது.
' இன்னும் இப்றாஹீம், 'என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய்? என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக!' எனக் கூறிய போது, அவன் 'நீர் நம்பவில்iயா?' எனக் கேட்டான். அ(தற்க)வர், ஏன் இல்லை! (நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்), 'என்னுடைய இதயம் அமைதியடைவதற்காக' என அவர் கூறினார். (அதற்கு அல்லாஹ்), பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, பின்னர் அவைகளை நீர் துண்டாக்கி அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விடுவீராக! பின்னர், அவைகளை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் வேகமாய் வந்து சேரும்! மேலும் நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீர் அறிந்துக் கொள்வீராக' எனக் கூறினான். (2:260)
கைகளின் விரல் நுனிகளைக் கூட பழைய நிலையிலே படைப்பதற்கு நாம் ஆற்றலுடையோர் என அல்லாஹ் கூறுகின்றான்.
"அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்." (75:4)
மனிதனின் உடல் அடக்கப்பட்டதன் பின்னால் அது மண்ணில் கலந்து உக்கிப்போய் விடுகிற ஒரு நிலையில் அவனை மறுபடி எவ்வாறு எழுப்புவது என்று மறுமை வாழ்வுக்க எதிராக அன்று வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, உக்கிப் போன மனிதனின் உடலை மாத்திரம் அல்ல! விரல்களின் நுனிகளையும் ஆரம்பத்திலிருந்தது போன்று நாம் படைக்க ஆற்றலுடையவன் என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தை அருளி அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.
மறுமை நாளில் ஒருவனின் அந்தரங்க நிலைப் பற்றித் தீர்ப்பளிக்கப்படும் என விபரிக்கின்ற குர்ஆன், மனிதனின் விரல் நுனிகளைப் பற்றி விஷேசமாகக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு விஞ்ஞான உண்மையையும் உலகுக்குத் தெளிவுபடுத்துகிறது. இன்றைய உலகில் 600 கோடி மக்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரினதும் கைரேகைகள் வித்தியாசமானவை என்பது அன்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான உண்மையாகும்.
எனினும் இவ்விஞ்ஞான உண்மையை அல்குர்ஆன் பதினான்க நூற்றாண்டுகளுக்கு முன் எந்த விஞ்ஞான முன்னேற்றமும் இல்லாத ஒரு காலத்தில் தெளிவுபடுத்தியது என்றால் நிச்சயமாக இப்புனித குர்ஆன் சாதாரண ஒரு மனினதனின் வார்த்தைகளாக இருக்கமுடியாது! மாறாக, இவ்வுலகையும்,  இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்த, அனைத்தைப் பற்றியும் ஞானமுள்ள வல்ல அல்லாஹ்வின் கூற்றாக மாத்திரமே இது இருக்க முடியும். இவ்வளவு மாற்றங்களுடன் மனிதனைப்படைத்த இறைவனுக்கு மறுபடியும் அவனை எழுப்புவது என்பது மிக இலகுவான காரியம்.
அல்லாஹ் அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில் வாலிபர்களுடன் தொடர்புபட்ட ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றான். அதுவும் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
அநியாயக்கார ஒரு ஆட்சியாளரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்த அவர்கள் அந்த ஆட்சியளனின் அநியாயங்களில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக ஊரைவிட்டுத் தூரமாக உள்ள ஒரு குகையினுள் தஞ்சம் புகுந்தனர். தங்களது களைப்பைப் போக்கிக்கொள்ள தூக்கத்தில் வீழ்ந்த அவர்கள் நீண்ட காலம் தூங்கினர்.
"இன்னும் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) "நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்டார்; "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) "நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்)". (18:19)
இந்நிகழ்ச்சியினூடாகவும் அல்லாஹ்வின் ஆற்றல் விளக்கப்பட்டுள்ளது. பூமியில் ஒருவர் நீண்ட காலம் தூங்கும் போது அவரது உடலை மண் சாப்பிடுவது இயல்பு! ஆனால் இங்கு அவர்கள் பல நூறு வருடங்கள் தூங்கியும் அவர்களது உடல் அவ்வாறே பாதுகாக்கப்படுகிறது! இது அல்லாஹ்வுடைய ஆற்றலை தெளிவுபடுத்துகிறது.
மனிதன் மரணித்த பின் மறுபடி எழுப்பப்படுவதற்கு அல்லாஹ் அல்குர்ஆனின் மூலம் தெளிவுப்படுத்தும் அழகான உதாரணமாவது: காய்ந்து, வரண்டு இறந்து போன ஒரு பூமி, இந்த பூமி மறுபடி செழித்து வளருமா? என்று நினைக்கின்ற அளவுக்கு ஒரு மோசமான நிலையை அடைந்து விட்டதன் பின்னர் மழையைப் பொழிவிக்கச்செய்து அதை உயிர்ப்பிப்பதற்குச் சமமானதாகும் என கூறுகிறான். உக்கிப் போன மனித உடலை, இறந்துப் போன பூமியை உயிர்ப்பிப்பதைப் போன்று உயிர்ப்பிப்பதாகக் கூறுகிறான்.
"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்):
மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது." (22:5)
மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கேள்வியெழுப்புகிறான்:
"திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?" (76:1)
மனிதன் என்ற பெயர் சொல்லப்படுவதற்குகூட முடியாத ஒரு நிலையில் மனிதன் இருக்கவில்லையா? என அவன் வினா எழுப்புகிறான். இவ்வனைத்தும் அவனது ஆற்றலை படம்பிடித்துக் காட்டுகின்றன. இவை அனைத்தும் மனிதனை இறுதி நாளில் எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை உணர்த்துகின்றன.
மனிதன் இவ்வுலகில் படைக்கப்பட்டதற்குரிய முக்கிய நோக்கத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்..
'நான் மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை' (51:56)
இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதற்காக மனிதனைப் படைத்தான். மற்றுமொரு இடத்தில் குறிப்பிடும் போது,
"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்." (67:2)
மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? அல்லது நரகமா? என்பதைத் தீர்மானிக்கும். எனவே மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்று கூறுவது இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த நோக்கமும், அடிப்படையுமி;லை என்றாகிவிடும். இது முட்டாள்தனமான ஒரு வாதமாகும்.
ஏனெனில் மனிதன் செய்யக்கூடிய அற்பக்காரியங்களுக்கும் நோக்கமொன்றிருக்கும் போது, இவ்விசாலமான வானம், பூமி, வேறு வேறு பிரமாண்டமான படைப்புகள், இவற்றின் இயக்கம், உயர்ந்த படைப்பாக மனிதன் படைக்கப்பட்டு அவனது வாழ்க்கை இவ்வுலகத்தோடு முடிகிறது என்றால் இப்பிரமாண்டமான படைப்புகள் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மனிதனுக்கு ஒரு வாழ்க்கை வழங்கப்பட்டதன் நோக்கமென்ன?
நம்மைப் படைத்தவன் கேட்கிறான்:
"நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்.)" (23:115)
இன்னுமோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
"மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை; இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்." (44:38-40)
"மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?" (38:27-28)
"எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும். வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா." (45:21-22)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துகின்றது.
மனித உள்ளத்தில இவ்வுக வாழ்க்கை மாத்திரம் தான் வாழ்க்கை; இதற்குப் பிறக ஒரு வாழ்க்கை இல்லை; நான் விசாரிக்கப்படவும் மாட்டேன் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து விடுமானால் மனித சமுதாயத்தில் ஏற்படும் ஆபத்தான நிலை இன்னதென்று சொல்லமுடியாது! மேற்கத்திய உலகில் இந்நம்பிக்கை ஆழமாகப் பதந்துவிட்டதனால் ஏற்பட்டிருக்கும் சமூகச் சீரழிவுகளைக் கண்கூடாகக் காண்கிறோம்.
எப்படிக் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றனவே தவிர குறைவதில்லை! இதன் மூலம் தெரியவரும் உண்மை யாதெனில் சட்டங்கள் போடுவதன் மூலம் மாத்திரம் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது! இதற்கு தற்கால சமூக அமைப்பும் சான்றாக உள்ளது! இஸ்லாம் முன்வைக்கும் நெறிமுறைகளின் மூலம், மறுமை சார்ந்த நம்பிக்கை மூலம் எந்த ஒரு சக்திக்கும் உருவாக்க முடியாத உயரிய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். வரலாற்றில் இப்படியான உயரிய சமுதாயங்கள் உருவாகின.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட அச்சமுதாயத்தில் அனைத்துத் தீமைகளும் தலைவிரித்தாடின. அத்தீமைகளில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக அவர் முன்வைத்த கொள்கை, 'அல்லாஹ் ஒருவனை மாத்திரம் ஏக இறைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; மரணத்திற்குப் பிறகு உள்ள நிரந்தர வாழ்க்கையின் பக்கம் உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்குள் உக வரலாற்றில் இன்றும் இயலாதவாறு முழு உலகத்திற்கும் முன்மாதிரியான ஒரு சமுதாயம் உருவானது. இதற்குரிய முக்கிய காரணம், மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையை அவ்வுள்ளங்களில் ஆழமாக பதித்ததாகும். இஸ்லாம் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்திலும் முழு மனித சமுதாயத்தினுடைய நலனும் அடங்கியுள்ளது.
அல்லாஹ் தனது திருமறையில்:
"எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்." (99:7-8)
நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை இறை வேதத்திலிருந்தும், இறுதி நபியின் வழிகாட்டலிலிருந்தும் அறிய முற்படுவோமாக!
ஆக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
பிரசுரம் வெளியீடு: ஜூபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், சவூதி அரேபியா


--
*more articles click*
www.sahabudeen.com


புதிதாக குழந்தைபெற்ற தாய்மார்களின் தூக்கமில்லா இரவுகளுக்கான சில தீர்வுகள்.

உங்கள் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை இருக்கும் போது சரியான நேரத்தில் தூங்குவது சாத்தியமில...

Popular Posts