லேபிள்கள்

திங்கள், 7 ஜூலை, 2014

மரணத்திற்குப் பின் மனிதன்!

மரணத்திற்குப் பின் மனிதன்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனது அருளும் சாந்தியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள்,  குடும்பத்தினர்கள் அஅனைவர் மீதும் உண்டாவதாக!
மரணத்திற்புப் பின் மனிதன் மீண்டும் எழுப்பப்படுவது தொடர்பாக அல்-குர்ஆன் நெடுகிலும் பேசப்படுகிறது. அனைத்துக் கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக் கொண்டாலும் மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மரணத்திற்குப் பின் மனிதனின் நிலைப் பற்றி தெளிவான ஒரு கொள்கையை உலகிற்கு முன் வைக்கிறது. அது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களையும் அளிக்கின்றது. மனிதன் இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய  நாளை அல்-குர்ஆன் இறுதித் தீர்ப்பு நாள் என்று அறிமுகப்படுத்துகின்றது. அந'நாளில் படைப்பினங்களை எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை தொடர்ந்து வரக்கூடிய அல்-குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.
'அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் (நபியே நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிள்ள முகடுகளின் மீது அவை வீழ்ந்து கிடக்க(க் கண்டு) இதனை எவ்வாறு இது இறந்த பின், அல்லாஹ் உயிர்ப்பிப்பான்? என்று கூறினார். ஆகவே அல்லாஹ், அவரை நு{று ஆண்டுகள் வரை மரணித்திருக்கச் செய்து, பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரிடம்) 'நீர் எவ்வளவு காலம் இருந்தீர்?' எனக் கேட்டான்;
அதற்கவர், 'ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில பாகம் இருந்தேன்' எனக் கூறினார். (அதற்கு அல்லாஹ்), 'அன்று! நீர் நூறு வருடங்கள் (இந்நிலையில்) இருந்தீர்' என்று கூறினார். ஆகவே உம்முடைய உணவையும், உம்முடைய பாணத்தையும் நீர் நோக்குவீராக! அவை எவ்வித மாறுதலும் அடையவில்லை! இன்னும் உம்முடைய கழுதையின் பால் நோக்குவீராக! மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்குவதற்காகவும் (மரணிக்கச் செய்து உம்மை உயிர்கொடுத்து எழுப்பினோம்). இன்னும், (அக்கழுதையின்) எலும்புகளின் பால், எவ்வாறு அவைகளைச் சேர்த்து பின்னர் அதன் மாமிசத்தை அணிவிக்கின்றோம்' என்று நீர் நோக்குவீராக! பின்னர் அவருக்குத் தெளிவான போது அவர், 'நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்று நான் அறிகிறேன்' என்று கூறினார். (2:259)
இச்செய்தியுனூடாக பல விடயங்கள் புலப்படுகின்றன. அவரின் தூக்கம் நூறு வருடத்தை எட்டியிருந்தும் அவரது உடல் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருந்தது! அவருடன் இருந்த உணவு எந்த மாறுதலுக்கும் உள்ளாகாமல் இருந்தது. எனினும் அவர் பிரயானம் செய்த கழுதை இறந்து அதன் உடல் உக்கிப் போய் இருந்தது. நீண்ட நாட்கள் அவர் துயில் கொண்டதற்கு இதுவே அவர் முன் ஆதாரமாக இருந்தது.
அல்லாஹ் இவைகளைப் பாதுகாப்பதற்கு காற்றை உபயோகித்த விதம் மிக அற்புதமானது. இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ் தனக்கு மரணத்திற்குப் பின் எழுப்புவது மிக இலகுவான காரியம் என்பதை உலகிற்கு தெளிவுபடுத்துகிறான். இன்னும் இப்றாஹீம் (அலை) தொடர்பான ஒரு செய்தியில் அவருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை நீக்கும் விதமாக இச்செய்தி அமைந்துள்ளது.
' இன்னும் இப்றாஹீம், 'என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய்? என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக!' எனக் கூறிய போது, அவன் 'நீர் நம்பவில்iயா?' எனக் கேட்டான். அ(தற்க)வர், ஏன் இல்லை! (நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்), 'என்னுடைய இதயம் அமைதியடைவதற்காக' என அவர் கூறினார். (அதற்கு அல்லாஹ்), பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, பின்னர் அவைகளை நீர் துண்டாக்கி அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விடுவீராக! பின்னர், அவைகளை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் வேகமாய் வந்து சேரும்! மேலும் நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீர் அறிந்துக் கொள்வீராக' எனக் கூறினான். (2:260)
கைகளின் விரல் நுனிகளைக் கூட பழைய நிலையிலே படைப்பதற்கு நாம் ஆற்றலுடையோர் என அல்லாஹ் கூறுகின்றான்.
"அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்." (75:4)
மனிதனின் உடல் அடக்கப்பட்டதன் பின்னால் அது மண்ணில் கலந்து உக்கிப்போய் விடுகிற ஒரு நிலையில் அவனை மறுபடி எவ்வாறு எழுப்புவது என்று மறுமை வாழ்வுக்க எதிராக அன்று வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, உக்கிப் போன மனிதனின் உடலை மாத்திரம் அல்ல! விரல்களின் நுனிகளையும் ஆரம்பத்திலிருந்தது போன்று நாம் படைக்க ஆற்றலுடையவன் என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தை அருளி அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.
மறுமை நாளில் ஒருவனின் அந்தரங்க நிலைப் பற்றித் தீர்ப்பளிக்கப்படும் என விபரிக்கின்ற குர்ஆன், மனிதனின் விரல் நுனிகளைப் பற்றி விஷேசமாகக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு விஞ்ஞான உண்மையையும் உலகுக்குத் தெளிவுபடுத்துகிறது. இன்றைய உலகில் 600 கோடி மக்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரினதும் கைரேகைகள் வித்தியாசமானவை என்பது அன்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான உண்மையாகும்.
எனினும் இவ்விஞ்ஞான உண்மையை அல்குர்ஆன் பதினான்க நூற்றாண்டுகளுக்கு முன் எந்த விஞ்ஞான முன்னேற்றமும் இல்லாத ஒரு காலத்தில் தெளிவுபடுத்தியது என்றால் நிச்சயமாக இப்புனித குர்ஆன் சாதாரண ஒரு மனினதனின் வார்த்தைகளாக இருக்கமுடியாது! மாறாக, இவ்வுலகையும்,  இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்த, அனைத்தைப் பற்றியும் ஞானமுள்ள வல்ல அல்லாஹ்வின் கூற்றாக மாத்திரமே இது இருக்க முடியும். இவ்வளவு மாற்றங்களுடன் மனிதனைப்படைத்த இறைவனுக்கு மறுபடியும் அவனை எழுப்புவது என்பது மிக இலகுவான காரியம்.
அல்லாஹ் அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில் வாலிபர்களுடன் தொடர்புபட்ட ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றான். அதுவும் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
அநியாயக்கார ஒரு ஆட்சியாளரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்த அவர்கள் அந்த ஆட்சியளனின் அநியாயங்களில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக ஊரைவிட்டுத் தூரமாக உள்ள ஒரு குகையினுள் தஞ்சம் புகுந்தனர். தங்களது களைப்பைப் போக்கிக்கொள்ள தூக்கத்தில் வீழ்ந்த அவர்கள் நீண்ட காலம் தூங்கினர்.
"இன்னும் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) "நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்டார்; "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) "நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்)". (18:19)
இந்நிகழ்ச்சியினூடாகவும் அல்லாஹ்வின் ஆற்றல் விளக்கப்பட்டுள்ளது. பூமியில் ஒருவர் நீண்ட காலம் தூங்கும் போது அவரது உடலை மண் சாப்பிடுவது இயல்பு! ஆனால் இங்கு அவர்கள் பல நூறு வருடங்கள் தூங்கியும் அவர்களது உடல் அவ்வாறே பாதுகாக்கப்படுகிறது! இது அல்லாஹ்வுடைய ஆற்றலை தெளிவுபடுத்துகிறது.
மனிதன் மரணித்த பின் மறுபடி எழுப்பப்படுவதற்கு அல்லாஹ் அல்குர்ஆனின் மூலம் தெளிவுப்படுத்தும் அழகான உதாரணமாவது: காய்ந்து, வரண்டு இறந்து போன ஒரு பூமி, இந்த பூமி மறுபடி செழித்து வளருமா? என்று நினைக்கின்ற அளவுக்கு ஒரு மோசமான நிலையை அடைந்து விட்டதன் பின்னர் மழையைப் பொழிவிக்கச்செய்து அதை உயிர்ப்பிப்பதற்குச் சமமானதாகும் என கூறுகிறான். உக்கிப் போன மனித உடலை, இறந்துப் போன பூமியை உயிர்ப்பிப்பதைப் போன்று உயிர்ப்பிப்பதாகக் கூறுகிறான்.
"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்):
மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது." (22:5)
மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கேள்வியெழுப்புகிறான்:
"திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?" (76:1)
மனிதன் என்ற பெயர் சொல்லப்படுவதற்குகூட முடியாத ஒரு நிலையில் மனிதன் இருக்கவில்லையா? என அவன் வினா எழுப்புகிறான். இவ்வனைத்தும் அவனது ஆற்றலை படம்பிடித்துக் காட்டுகின்றன. இவை அனைத்தும் மனிதனை இறுதி நாளில் எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை உணர்த்துகின்றன.
மனிதன் இவ்வுலகில் படைக்கப்பட்டதற்குரிய முக்கிய நோக்கத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்..
'நான் மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை' (51:56)
இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதற்காக மனிதனைப் படைத்தான். மற்றுமொரு இடத்தில் குறிப்பிடும் போது,
"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்." (67:2)
மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? அல்லது நரகமா? என்பதைத் தீர்மானிக்கும். எனவே மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்று கூறுவது இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த நோக்கமும், அடிப்படையுமி;லை என்றாகிவிடும். இது முட்டாள்தனமான ஒரு வாதமாகும்.
ஏனெனில் மனிதன் செய்யக்கூடிய அற்பக்காரியங்களுக்கும் நோக்கமொன்றிருக்கும் போது, இவ்விசாலமான வானம், பூமி, வேறு வேறு பிரமாண்டமான படைப்புகள், இவற்றின் இயக்கம், உயர்ந்த படைப்பாக மனிதன் படைக்கப்பட்டு அவனது வாழ்க்கை இவ்வுலகத்தோடு முடிகிறது என்றால் இப்பிரமாண்டமான படைப்புகள் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மனிதனுக்கு ஒரு வாழ்க்கை வழங்கப்பட்டதன் நோக்கமென்ன?
நம்மைப் படைத்தவன் கேட்கிறான்:
"நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்.)" (23:115)
இன்னுமோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
"மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை; இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்." (44:38-40)
"மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?" (38:27-28)
"எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும். வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா." (45:21-22)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துகின்றது.
மனித உள்ளத்தில இவ்வுக வாழ்க்கை மாத்திரம் தான் வாழ்க்கை; இதற்குப் பிறக ஒரு வாழ்க்கை இல்லை; நான் விசாரிக்கப்படவும் மாட்டேன் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து விடுமானால் மனித சமுதாயத்தில் ஏற்படும் ஆபத்தான நிலை இன்னதென்று சொல்லமுடியாது! மேற்கத்திய உலகில் இந்நம்பிக்கை ஆழமாகப் பதந்துவிட்டதனால் ஏற்பட்டிருக்கும் சமூகச் சீரழிவுகளைக் கண்கூடாகக் காண்கிறோம்.
எப்படிக் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றனவே தவிர குறைவதில்லை! இதன் மூலம் தெரியவரும் உண்மை யாதெனில் சட்டங்கள் போடுவதன் மூலம் மாத்திரம் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது! இதற்கு தற்கால சமூக அமைப்பும் சான்றாக உள்ளது! இஸ்லாம் முன்வைக்கும் நெறிமுறைகளின் மூலம், மறுமை சார்ந்த நம்பிக்கை மூலம் எந்த ஒரு சக்திக்கும் உருவாக்க முடியாத உயரிய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். வரலாற்றில் இப்படியான உயரிய சமுதாயங்கள் உருவாகின.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட அச்சமுதாயத்தில் அனைத்துத் தீமைகளும் தலைவிரித்தாடின. அத்தீமைகளில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக அவர் முன்வைத்த கொள்கை, 'அல்லாஹ் ஒருவனை மாத்திரம் ஏக இறைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; மரணத்திற்குப் பிறகு உள்ள நிரந்தர வாழ்க்கையின் பக்கம் உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்குள் உக வரலாற்றில் இன்றும் இயலாதவாறு முழு உலகத்திற்கும் முன்மாதிரியான ஒரு சமுதாயம் உருவானது. இதற்குரிய முக்கிய காரணம், மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையை அவ்வுள்ளங்களில் ஆழமாக பதித்ததாகும். இஸ்லாம் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்திலும் முழு மனித சமுதாயத்தினுடைய நலனும் அடங்கியுள்ளது.
அல்லாஹ் தனது திருமறையில்:
"எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்." (99:7-8)
நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை இறை வேதத்திலிருந்தும், இறுதி நபியின் வழிகாட்டலிலிருந்தும் அறிய முற்படுவோமாக!
ஆக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
பிரசுரம் வெளியீடு: ஜூபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், சவூதி அரேபியா


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts