லேபிள்கள்

புதன், 27 நவம்பர், 2013

வியாதிகளை விழுங்காதீர்கள்!

வியாதிகளை விழுங்காதீர்கள்!

''போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன? சாப்பாடும் வயிற்றுக்குள் போகிறது. மாத்திரையும் வயிற்றுக்குள் போகிறது. இதில் முன் பின் என்ன வேண்டி இருக்கிறது?' 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என தங்களுக்குத் தாங்களே வியாக்கியானம் பேசும் அசால்ட் ஆறுமுகங்களின் கனிவான கவனத்திற்கு இந்தக் கட்டுரை. 

மருந்து மாத்திரைகள் முறையாக எடுத்துக்கொள்வது எப்படி என்ற கேள்விகளுக்கு கோவை அரசு பொதுமருத்துவமனைப் பேராசிரியர்    த.ரவிக்குமார் பதில் அளிக்கிறார். ''உடனடியாக வேலை செய்யவேண்டிய மருந்துகளை மட்டும், சாப்பிடும் முன் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அமிலத் தன்மை உள்ள மாத்திரைகள் வெறும் வயிற்றில் எளிதில் உறிஞ்சப் படும் (அது வயிற்றுப் புண் ஆற்றும் மருந்தாகவோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் மருந்தாகவோ இருக்கலாம்). எந்த மாத்திரைச் சாப்பிட்டால் வயிறு எரியுமோ அல்லது வயிற்றில் புண் ஏற்படுமோ, அந்த மாத்திரைகளை உணவுக்குப் பின் சாப்பிடச் சொல்வார்கள். சாதாரணமாக மருந்துகள் வயிற்றில் இருந்து உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்குச் சென்று ரத்தத்தில் கலந்து வேலை செய்ய மணிக்கணக்கில் ஆகும். மிக விரைவாக வேலை செய்யவேண்டிய உயிர் காக்கும் மருந்துகளை (மாரடைப்புக்குத் தரப்படும் சார்பிட்ரேட் போன்றவை) நாக்கின் அடியில் வைத்தால், எச்சில் வழியாக நேராக ரத்தத்தில் கலந்து, சில நொடிகளில் உயிரைக் காக்கும். வலி நிவாரணி, வாந்தி தடுப்பு மருந்துகளும் இதுபோல கிடைக்கின்றன.

அதுபோலவே ஆஸ்துமா போன்ற நோய்களுக்கான மருந்தை வாய் மூலம் உறிஞ்சுவதன் மூலம், மருந்து நேரடியாக நுரையீரலுக்கு உள்ளேயே சென்று ஊசியைவிடவும் மிக விரைவாக வேலை செய்யும். எந்த மருந்தையும் டீ, காபி, அல்லது காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்களுடன் சாப்பிடக் கூடாது. அவை மருந்துகளுடன் வினைபுரியக்கூடியவை. டீ, இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.

டாக்டர் மருந்து எழுதித் தரும்போது மருந்துகளை உட்கொள்ளவேண்டிய நேரத்தையும் கேட்டுக் கொள்ளவேண்டும். மருந்துக் கடை விற்பனையாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட டாக்டரிடம் கேட்பதே சரியானது.

குழந்தைகளுக்கான சில மருந்துகளைத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொடுக்கச் சொல்வார்கள். அதுபோன்று தண்ணீர் கலக்கிய மருந்துகளை அதிகபட்சம் 5 நாட்கள் வரையே கொடுக்கலாம். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கு அவ்வப்போது தேவைப்படும்போது மட்டும் கொடுக்கச் சொன்னால், மருத்துவர் சொன்னபடி அவ்வப்போது மட்டும் கொடுக்க வேண்டும். அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்துகளை ஒன்றாகக் கொடுக்க வேண்டாம். மது, புகையிலை, பான் போன்றவை மருந்துகளின் வீரியத்தைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யும். எனவே மருந்து சாப்பிடும்போது, அவை வேண்டவே வேண்டாம்'' என விளக்கமாகச் சொன்னவர் வயதுவாரியானவர்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் விளக்கினார்.

''குழந்தைகளுக்கு, பெரியவர்களின் மாத்திரைகளை உடைத்துத் தர வேண்டாம். ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள் எப்போதும் கைவசம் இருக்கவேண்டும். மருந்துகளை நேரடி வெயில் படாத ஈரம் இல்லாத குளிர்ச்சியான இடத்தில் வையுங்கள்.

மாத்திரையின் ஆயுள் (காலாவதி தேதி) பார்த்து உறுதிசெய்த பிறகே சாப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட மருந்தை மூன்று மாதங்களுக்கு டாக்டர் அறிவுறுத்தி இருந்தால், ஒரே நாளில் மூன்று மாதங்களுக்கும் தேவையான மருந்தை வாங்கி ஸ்டாக் வைக்காமல், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை என வாங்குவது நல்லது. மாத்திரையின் ஆயுள் தேதி தெரியாத அல்லது, பெயர் சரியாகத் தெரியாத மாத்திரைகளை எந்தக் காரணம் கொண்டும் வாங்க வேண்டாம். மற்றவர்களுக்குக் கொடுத்த மருந்தை சாப்பிட வேண்டாம்.

மருத்துவர் குறிப்பிட்ட காலத்துக்குக் குறைவாகவோ, அதிகமாகவோ... முக்கியமாக ஆன்டியாட்டிக்  மற்றும் வலி நிவாரண மருந்துகளைச் சாப்பிட வேண்டாம். மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால், மருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்.'' என்றார் பேராசிரியர் த.ரவிக்குமார்.

மாத்திரைகளை விழுங்கி வியாதிகளைத் தீர்க்கும் நிலை மாறி, மாத்திரைகளை விழுங்குவதனாலேயே வியாதிகளைத் தேடிக்கொள்வது, எத்தகைய வேதனை?!


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 25 நவம்பர், 2013

கவனம் : பால் வாங்கும் முன் !

கவனம் : பால் வாங்கும் முன் !

பால் என்றாலே தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உபயோகிக்ககும் ஒரு உணவுப் பொருள் பால்.
பெரியவர்களுக்கென்று மாட்டுப்பால் ஆட்டுப்பால் ஒட்டகப்பால் இப்படி இருக்கின்றது எல்லா நாட்களிலும் பால் ஒரு அதீத தேவையான உணவுப் பொருளாக இருக்கின்றது குழந்தைகளுக்கு மிக முக்கியமாக தாய்பால் உண்டு ஆனால் தாய்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு தாய்பாலாக இருப்பது கடைகளில் விற்கப்படும் "பாக்கெட் பால்", "பவுடர்பால்" மற்றும் வெளியிலிருந்து வாங்கப்படும் பசும்பால்.
அயல் தேசங்களில் 100-க்கு 90-சதவிகிதம் தாய்மார்கள் தாய்பால் புகட்டுவதற்கு பதிலாக மாட்டுப்பால் அல்லது பவுடர்பால் வகைகளை குழந்தைகளுக்கு புகட்டி வருகின்றனர். நம் பாரதத்தில்கூட தற்போது வெளி மாநிலங்களில் தாய்ப்பால் புகட்டுவது முற்றிலும் குறைந்து காணப்படுகின்றது நம் தமிழ்நாட்டில்கூட இதுமாதிரி தாய்மார்கள் உருவெடுக்கின்றனர் என்பதை கேள்விப்படும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.
  முன்பெல்லாம் தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் தாய்பால் புகட்டி வந்தார்கள் தற்காலத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்பால் முறையாக சுரப்பதில் சிக்கல் இருக்கின்றது பல தாய்மார்களுக்கு தாய்;பால் முறையாக சுரந்தாலும் தன் அழகு இழந்துவிடுமே என்றதொரு பயத்தினால் குழந்தைகளுக்கு பசும்பால்களையும் பவுடர் பால்களையும் புகட்டி வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் தாய்பால் புகட்டாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறைந்து இருக்கும் இன்னும் பிற நோய்கள் வர சாதகமாக இருக்கும் அடிக்கடி மருத்துவரை அனுகவேண்டி இருக்கும் இதையெல்லாம் யார் சிந்திப்பது ? தாய்மார்களே நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.
அதே போல் பெரியவர்களுக்கு இருக்கவே இருக்கு பசும்பால் ஆம் பசும்பாலிலும் ஏகப்பட்ட புரதச்சத்துக்கள் இருக்கின்றது. பசும்பாலிலிருந்து தயிர் மோர் வெண்ணெய் நெய் போன்ற உணவு வகைகளும் பெறப்படுகின்றது. சுத்தமான மாட்டுப்பாலை அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு தேவையில்லாத சில தீய பக்க விளைவுகள் வராது.
கடந்த காலத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுக்கொரு கரவை மாடு வைத்து வளர்த்து அதை பராமரித்து தனக்கு தேவையான பாலை பெற்று வந்தார்கள் நாளடைவில் அதுவே தேவைக்கு அதிகமாக கிடைக்கவே வெளியில் விற்கவும் செய்தார்கள் நாளடைவில் பல விஞ்ஞான நவீன வளர்சியினால் வீட்டுக்கொரு மாடு என்ற நிலை போய் மிக்ஸி கிரைன்டர் பிரிஜ் பின்பு டிவி போன்ற நவீன சாதனங்களால் மக்களின் வாழ்க்கை தரமும் தடம் மாறி கிடக்கின்றது.
இன்றைய மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கின்றது ?
எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதை பணம் கொடுத்து பெறவேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர் அப்படி பெறப்படுகின்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் சுத்தமாக கிடைக்குதா என்று பார்த்தால் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து புருவத்தை மேலும் கீழும் அசைப்பதோடு சரி.
உதாரணத்திற்கு நாம் அன்றாடம் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தும் பசும்பாலில் ஏகப்பட்ட கலப்படம் நிறைந்துள்ளது என்று பல ஆய்வறிக்கைகள் எடுத்துரைக்கின்றன. இப்படி கலப்படமுள்ள பாலை அருந்துவதினால் நமக்கே தெரியாத எத்தனையோ நோய்கள் வர ஏதுவாகின்றது.
சைக்கிள்களில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் பாலில் தண்ணீர் கலந்து விற்பது வாடிக்கையானது என்றாலும் தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையுமே தவிர வேறு தீமை ஏதும் இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்ற ரசாயணம் சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஆய்வு செய்தால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்திலும் மூன்று சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் வீடு வீடாக சென்றும் ஆங்காங்கே ஒரு நிறுத்தத்தை உண்டு செய்தும் பால் விநியோகம் செய்து வருகின்றனர் இரண்டு கரவை மாடுகள் வைத்திருக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 150 லிட்டர் பாலை விநியோம் செய்கின்றார். பொதுமக்களாகிய நாம்தான் சிந்திக்கவேண்டும்.
அன்பின் தாய்மார்களே உங்கள் அன்பு குழந்தைகள் நோயின்றி சீராக வாழவேண்டுமா ? காற்றுகூட எட்டிப் பார்க்க முடியாத தாய்ப்பாலை புகட்டுங்கள் வெளியில் விற்க்கப்படும் பால்களை புகட்டினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் கலந்த எதிர்காலம் சீர்குழைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அன்பின் பொதுமக்களே வெளியில் பால் வாங்கும்போது கவனமாக இருங்கள் இது சுத்தமான பால்தானா என்று கேட்டு வாங்குங்கள். ஆக மொத்தத்தில் உங்களுடைய விழிப்புணர்வு ஊரை திருத்திவிடும்.
சோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகளை உருவாக்கும் நவீனமே உன்னால் அதே சோதனைக் குழாயகள் மூலம் தாய்பாலை உருவாக்க முடியுமா ?
தாய்மார்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் ஒரு கார் இருக்குது என்று வைத்துக்கொள்வோம் அந்த காருக்கு பெட்ரோல் ஊற்றினால்தான் ஓடும் என்றால் அதுக்கு டீசலை ஊற்றுவீர்களா ? அதுபோல்தான் உங்கள் குழந்தையும்.
விற்பனைக்கு உட்படுத்தபடும் பாலுக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதா ?
விற்பனைக்கு எடுத்துச் செல்லும் பாலுக்கு வழியில் பாதுகாப்பு இருக்குதா ?
இப்படி ஒவ்வொரு கோணத்திலும் மக்கள் விழிப்புணர்வோடு சிந்துத்து செயல்பட்டால் சுத்தமான பால் கிடைக்கும் என்பதில் ஒரு இம்மிகூட சந்தேகம் கிடையாது.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A.
ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
Source:http://nijampage.blogspot.in/2013/02/blog-post_6.html



--
*more articles click*
www.sahabudeen.com


சனி, 23 நவம்பர், 2013

பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்

பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்

அ. முஹம்மது கான் பாகவி

முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்துபோனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

 

ஆனால், இன்று -நாடு பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகள் மட்டுமே திட்டமிட்டுப் பெற்றுக்கொள்கின்றனர். சிலருக்கு ஒன்றே ஒன்று போதும் என்ற எண்ணம்.

 

பொருளாதார நெருக்கடி பற்றிய அச்சம், குழந்தை வளர்ப்பிலே முளைத்துள்ள அவநம்பிக்கை, வாழ்க்கையை அனுபவிக்க அதிகக் குழந்தைகள் தடையாகிவிடுவர் என்ற தவறான எண்ணம், பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள துணிவின்மை, எல்லாவற்றையும்விட உலகமயமாக்கல் பெற்றெடுத்த நுகர்வுக் கலாசாரம் முதலான பிற்போக்கு அம்சங்களே ஒற்றைக் குழந்தை நாகரிகத்திற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

 

வாரிசுகள் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாகச் சுருங்கிவிட்டதால் பெற்றோரின் மொத்தப் பாசமும் ஒன்றிரண்டு குழந்தைகள்மீது மழையாகப் பொழிகிறது. பெற்றோரின அன்பு மழையில் குழந்தைகள் குளித்து, திக்குமுக்காடுகின்றனர். செல்லமோ செல்லம். கண்டிப்பு தேவைதான்; சிறிது பாசமும் காட்டுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் உபதேசித்த நிலை மாறி, பாசம் காட்ட வேண்டியதுதான்; கொஞ்சம் கண்டிப்பும் தேவை என்று உபதேசிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

 

இளைய தலைமுறை பெற்றோர்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள்; பிள்ளைகள் கேட்பதையெல்லாம் தகுதிக்கு மீறி வாங்கிக்கொடுக்கிறார்கள். ஏன்? எதற்கு? என்று கேட்பதுகூட இல்லை. அல்லது அப்படி கேட்கத் தயங்குகிறார்கள். எங்கே மகன், அல்லது மகள் நம்மை மதிக்கமாட்டார்களோ! நம்மீது கோபப்பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

 

பிள்ளைகள் எங்கே போகிறார்கள்; யாருடன் பழகுகிறார்கள்; வீட்டில் சாப்பிடவோ நேரத்திற்கு உறங்கவோ வருவதில்லையே, ஏன்; ஒழுங்காகப் படிக்கிறார்களா? என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்; அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் சண்டைபோட்டு வாங்கும் பாக்கெட் மணியை என்ன செய்கிறார்கள்... என்றெல்லாம் விசாரிப்பதை, இளைய தாய் அல்லது தந்தை அநாகரிகமாகக் கருதுகின்றனர்; பிள்ளைகள் இந்த விசாரணையை அவமானமாகப் பார்க்கின்றனர்; தங்கள் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்று எண்ணுகின்றனர்.

 

இன்றைய பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுவதும் கொந்தளிப்பதும் பெற்றோர்களின் இந்தக் கண்டுகொள்ளாமைக்கு ஒரு காரணம். இன்றைய புதிய தலைமுறைக்கு அறிவுரை என்றாலே நஞ்சு. ஏன் மதிப்பெண் குறைந்து போய்விட்டது என்று கேட்டுவிட்டால், தற்கொலை முயற்சி, தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. ஆசிரியர் திட்டிவிட்டால் பழிவாங்கும் வெறி. நினைத்ததை அனுபவிக்க முடியாவிட்டால், பார்ப்பவர்மீதெல்லாம் எரிச்சல். தவறான உறவுகள், நடத்தைகளைக்கூட யாரும் கண்டித்துவிடக் கூடாது என்ற இறுமாப்பு.

 

முடிவு, பொறுப்பற்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. நிதானமோ விவேகமோ இல்லாத, வேகம், சுயநலம், கட்டுப்பாடற்ற போக்கு ஆகிய விரும்பத் தகாத குணங்கள் கொண்ட ஒரு படை வளர்ந்துவிட்டது. மூத்தவர்கள் இவர்களின் நிலை கண்டு அஞ்சிக்கொண்டிருக்க, இவர்களின் வாரிசுகன் எப்படியிருப்பார்களோ என்ற கலக்கம் சீர்திருத்தவாதிகளை வாட்டிக்கொண்டிருக்கிறது.

 

செலவினங்கள்


தேவைக்காகச் செலவு செய்வது ஒரு ரகம்; தகுதியை உயர்த்திக் காட்ட, நண்பர்களைத் திருப்திப்படுத்த செய்யப்படும் ஆடம்பர வீண்செலவு இன்னொரு ரகம். இன்றைய பிள்ளைகளின் செலவினங்கள் இரண்டாம் ரகம்.

அலைபேசி, அவசரத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. அலைபேசியில் சாதாரணமானது முதல் சிறப்பம்சங்கள் நிறைந்த உயர்தரமானதுவரை தொகைக்கேற்ப பல ரகங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. அதற்காக 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பிளாக்பெர்ரிதான் வேண்டும் என்று பிள்ளைகள் அடம்பிடிக்கலாமா?

அலைபேசியில், பேசப்பேச விநாடிக்கு விநாடி பணம் செலவாவதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அரட்டையடிப்பதற்கெல்லாம் அலைபேசியைப் பயன்படுத்திவிட்டு, மாதந்தோறும் ரூ.800க்கும் 1000க்கும் ரீசார்ஜ் செய்யப் பெற்றோரிடம் பணம் கேட்பது என்ன நியாயம்? தவறான பயன்பாடுகள் வேறு.

வீட்டில் அறுசுவை உணவு காத்திருந்தாலும், உணவகங்களில் சாப்பிடுவதை விரும்பும் பிள்ளைகளை என்ன சொல்ல? அரும்பாடுபட்டுச் சமைத்து வைத்துவிட்டுப் பிள்ளையை எதிர்பார்த்திருக்கும் தாய்க்கு இவன் சொல்லும் பதில், நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டேன். ஏன்? என்று கேட்கக்கூடாது. கேட்டுவிட்டால் வீட்டில் ஒரே களேபரம்.

ஹோட்டல் உணவு பணத்திற்கு மட்டுமல்ல; உடல் நலத்திற்கும் கேடு. அங்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய், பொடிகள், தரமற்ற பொருட்கள் எல்லாம் சேர்ந்து இளமையிலேயே முதுமையை உண்டாக்கிவிடும். இது தேவைதானா?

மேற்கத்திய உணவு வகைகளெல்லாம் நம் நாட்டு சுகாதார உணவுகளுக்கு முன்னால் நிற்காது. அந்த உணவுகளால் காசுதான் கரையுமே தவிர வயிறும் நிறையாது; ஊட்டமும் கிடைக்காது. போதாக்குறைக்கு, வயிற்றுக்குக் கேடுவேறு.

பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லாத புதுப்பழக்கம்; மேற்கத்திய காலாசாரத்திற்குத் தவறான வழியில் பிறந்த சவலைக் குழந்தை. இன்று பிள்ளைகள் தங்களின் பிறந்தநாளை வெகு விமரிசையாகக் குடும்பத்துடன் கொண்டாடுவது மட்டுமன்றி, நண்பர்களின் பிறந்த நாளுக்காகச் சக்திக்கு மீறி பரிசுப் பொருட்களை அன்பளிக்கின்றனர்.

பரிசுப் பொருளாவது உபயோகமானதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. உயர்ரக மது பாட்டில்கள், கேமராக்கள், ஆபாச புத்தகங்கள் என மனிதனைக் கெடுக்கும் நச்சுப் பொருட்கள். பொதுவாக பிறந்தநாள், புத்தாண்டு தினம், காதலர் தினம் போன்ற களியாட்டங்களில் நண்பர்கள் ஒன்றுகூடிவிட்டாலே குடியும் கும்மாளமும்தான். இந்த அநியாயத்திற்கும் பெற்றோர் மறுக்காமல் பணம் தர வேண்டுமாம்!

POCKET MONEY


'கைச்செலவுக்கு' (Pocket Money) என்ற பெயரில் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தரும் பணம்தான் எல்லாத் தவறுகளுக்கும் பெரும்பாலும் காரணமாகிறது. பெற்றோரின் வருவாய்க்குச் சம்பந்தமில்லாத தொகையைப் பிள்ளைகள் கேட்பதும் அதைப் பெற்றோர்கள் வழங்குவதற்காகக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் ஒரு பகுதியைச் செல்லமாக ஒதுக்குவதும் இப்போது நாகரிகமாகிவிட்டது.

ஏதோ மாத ஊதியம் வழங்குவதைப் போன்று ஐயாயிரம், பத்தாயிரம் என்று பாக்கெட் மணி தரக்கூடிய பெற்றோர்கள், பிள்ளைகளைத் தாங்களே படுகுழியில் தள்ளுகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்போது நீங்கள் காட்டும் செல்லம், நாளை உங்கள் செல்வங்களை மீளாத் துயரத்தில் சிக்கவைத்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

இவ்வாறு தகுதிக்கு மிஞ்சி செலவழித்துப் பழகிவிடும் பிள்ளைகள், ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லி பணம் பறிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பணம் கேட்க முடியாத நிலை ஏற்படும்போது, சொந்த வீட்டிலேயே திருட ஆரம்பித்துவிடுகிறார்கள். தெரிந்தும் இதைக் கண்டிக்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள். நூறு, இருநூறு என்று ஆரம்பிக்கும் இத்திருட்டு ஆயிரக்கணக்கை எட்டிவிடுவதுண்டு.

பெற்றோரின் அனுமதியும் இசைவும் இன்றி வீட்டில் ஒரு ரூபாய் எடுத்தாலும் அது திருட்டுதான்; ஆயிரம் எடுத்தாலும் திருட்டுதான். சொந்த வீட்டில் குறைந்த தொகையில் தொடங்கும் திருட்டு உறவினர் வீடு, நண்பர்கள் வீடு, மாணவர் விடுதி என எல்லா இடங்களிலும் தொடர வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் முளையிலேயே இப்பழக்கத்தைக் கிள்ளி எறிய வேண்டும்.

தீர்வுகள்

பிள்ளைகள் புரிந்துகொள்ளாமலும் விவரமில்லாமலும் நடந்துகொள்வதற்கு ஒருவகையில் பெற்றோர்களே காரணம். சிறுவயதிலிருந்தே குழுந்தைகளுக்குச் சில ஒழுக்க நடைமுறைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

இதனால்தான், நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருவருக்கு இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்:

உன் பிள்ளைக்கு ஒழுக்கம் கற்பிப்பாயாக! அவனுக்கு என்ன ஒழுக்கம் சொல்லிக்கொடுத்தாய்; என்ன கல்வி கொடுத்தாய் என உன்னிடம் (மறுமையில்) விசாரிக்கப்படும். அவ்வாறே, உன் பிள்ளை உன்னிடம் எப்படி நடந்துகொண்டான்; உனக்கு என்ன நன்மை செய்தான் என்று அவனிடம் விசாரிக்கப்படும். (பைஹகீ)

முதலில் பணத்தின் அருமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். தந்தை பிள்ளையிடம் நட்போடு பழகி, ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கத் தான் படும் பாட்டைச் சொல்லிக் காட்ட வேண்டும்; அப்பணம் வீணடிக்கப்படும்போது தனக்கு ஏற்படும் வலியைப் புரிய வைக்க வேண்டும். நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்; குழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுதான் முதல் தவறே. திட்டாமல், சபிக்காமல், பக்குவமாக, நளினமாக எடுத்துச்சொல்லும்போது எந்தப் பிள்ளையும் புரிந்துகொள்வான்.

பணத்தைத் தேவைக்குமேல் செலவழிப்பது -அதாவது விரயம் செய்வது- எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்கிக் கூற வேண்டும். அவ்வாறே, சிக்கனத்தின் சிறப்பையும் சேமிப்பின் அவசியத்தையும் உள்ளத்தில் பதிக்க வேண்டும்.

நல்லடியார்களின் நற்பண்பு குறித்துத் தெரிவிக்கும்போது பின்வருமாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்யமாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள்; அதற்கு இடைப்பட்ட (நடு)நிலையாகவே அ(வர்களின் செலவான)து இருக்கும். (25:67)

மற்றொரு வசனம் இவ்வாறு கூறுகின்றது:

உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை (இறைவன்) நேசிப்பதில்லை. (7:31) 
நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். (17:27) 
சேமிப்பின் அவசியம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த வீட்டாரிடம் பேரீச்சம்பழம் (சேமித்து) வைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பட்டினி கிடக்கமாட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பணம் கையாளும் முறை


அடுத்து நிதியைக் கையாளும் முறையையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு செய்து அழித்துவிடுவது பெரிதன்று; வேண்டிய தேவைகளுக்கு மட்டுமே செலவழிப்பதும் வேண்டாதவற்றைத் தவிர்த்துவிடுவதும்தான் பெரிய சாதனை ஆகும்.

பெருமைக்காகச் செலவழிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. நண்பர்களும் உறவினர்களும் ஆச்சரியப்படும் அளவுக்குச் செலவு செய்வதால் யாருக்கு என்ன நன்மை? வீண் பிதற்றலுக்குத்தான் இது உதவுமே தவிர, உருப்படியான எந்தப் பயனும் இதனால் விளையப்போவதில்லை. அதே நண்பர்களும் உறவினர்களும் முன்னால் போகவிட்டுப் பின்னால் என்ன விமர்சனம் செய்வார்கள், தெரியுமா? தலைக்கனம் பிடித்தவன்; ஊதாரி; உருப்படாதவன் என்றுதான் உங்களை அவர்கள் எடைபோடுவார்கள்.

நபிமொழி ஒன்றைப் பாருங்கள்:

உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள்; அதில் விரயமோ பெருமையோ (பகட்டோ) கலந்துவிடாமல் இருக்கும்வரை. (இப்னுமாஜா)  
இருவரின் உணவு மூவருக்குப் போதும்; மூவரின் உணவு நால்வருக்குப் போதும் (மனம் இருந்தால்). (புகாரீ)

இந்தியாவில் நுகர்பொருள் செலவின புள்ளி விவரக் கணக்கு (2007-08) ஒன்று கூறுவதைப் பாருங்கள்:

இந்தியர் ஒருவர் செலவழிக்கும் 100 ரூபாயில் 22 ரூபாய் மட்டுமே அத்தியாவசிய செலவாகும்; 48 ரூபாய் பகட்டுச் செலவுகள் ஆகும். கல்விக்கு ரூ. 2.60; மருத்துவம் ரூ. 5.70 செலவிடப்படுகிறதாம்; பகட்டுச் செலவுகளில் ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும் ரூ. 10.50 செலவு செய்கின்றனராம்!

நுகர்வுக் கலாசாரம், மேலைநாடுகளைப் பின்பற்றி அநியாயத்திற்குப் பிள்ளைகளை அலைக்கழித்துவருகிறது. ஊடகங்களில் செய்யப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து இளைய தலைமுறை சொக்கிப்போகிறது; ஏமாந்துபோகிறது. விளைவு பெற்றோரின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது.

விளம்பரத்தில் எதைக் காட்டினாலும் அதை உண்மை என்று நம்பும் பேதமைதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடே. அவர்கள் கோடிகோடியாய் சம்பாதிப்பதற்காகச் சாமானிய மக்களை விளம்பரத்தால் கிறங்கவைக்கிறார்கள். விளம்பரங்கள் போலியானவை என்பதைப் புரியாத மக்கள் பணத்தை விரயம் செய்கிறார்கள்.

ஆக, பணத்தின் அருமை, அதைச் சம்பாதிப்பதில் சிந்தும் வியர்வை, அதைக் கையாளும் முறை, சிக்கனத்தின் தேவை, சேமிப்பின் அவசியம், விரயத்தின் விளைவு, பகட்டின் படுதோல்வி போன்ற எதார்த்தங்களைச் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்; செய்முறைப் பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.

ஏன், பையன் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவனின் வரவு-செலவு கணக்கைப் பெற்றோரிடம் அவன் ஒப்படைப்பதே அவனது எதிர்காலத்திற்கு நல்லது.

தயவு செய்து இதையெல்லாம் தாழ்வு என்று கருதாதீர்கள். பிள்ளைகளே! நிச்சயம் இதுதான் உயர்வுக்கு வழிவகுக்கும்.


--
*more articles click*
www.sahabudeen.com


வியாழன், 21 நவம்பர், 2013

குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்?

குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்?
தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. குழந்தைகளை நல்ல மனநிலையோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்கவேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச்சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள். 'ஐந்தில் வளையாதது' என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மனநிலை, நல்ல பழக்கவழக்கங்கள் எனக் கற்றுக்கொடுக்காவிட்டால், வளர்ந்த பிறகு திருத்துவது ரொம்பவே சிரமம். 
போட்டிகளும் ஆபத்துகளும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது முதல், பள்ளிக்குச் செல்லும் வரை அதாவது மூன்று வயது வரை உற்சாகமாக வளரக்கூடிய விஷயங்களை இதயபூர்வத்தோடு விவரிக்கிறது இந்த இணைப்பு.
 

குழந்தையைத் தூக்கும் முறை:
பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.
  குளிப்பாட்டும் முறை:  
பிறந்த குழந்தைகளைத் தாயே பயமின்றிக் குளிப்பாட்டலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக எண்ணெயை உடலில் தடவி வருடிவிடுங்கள். நாம் தரையில் அமர்ந்தபடி, குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோலத் தூக்கிப் பிடிக்க வேண்டும். குழந்தையின் உடலை பேபி சோப் போட்டுக் குளிப்பாட்டி, பிறகு தலை முகத்தைக் கழுவுங்கள். தலைக்குக் குளிப்பாட்டும்போது, ஒரு கையை அகல விரித்து, குழந்தையின் நெற்றிப் பகுதியைப் பிடித்தபடி, தண்ணீர் ஊற்ற வேண்டும். வாயால் மூக்குச் சளியை எடுக்கிறேன் என்ற பெயரில் வாயால் ஊதுவது, அழுத்துவது கூடவே கூடாது. குளிப்பாட்டிய உடன் தலை, காது, மூக்கு, கழுத்துப் பகுதியை ஈரம் போகத் துவட்டுங்கள்.
 
வாரம் ஒரு முறை மிகவும் மிதமான வெந்நீரில், சிறிது யூகலிப்டஸ் இலையைப் போட்டுக் குளிப்பாட்டினால், குழந்தை ஆரோக்கியமாக வளரும். நிம்மதியாகத் தூங்கும்.
தாய்ப்பால் ஊட்டும் முறை:
குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால்தான் கொடுக்கவேண்டும்.
  குழந்தையின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தாய்ப்பால் மிகச் சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க, பால் அதிகம் சுரக்கும். தாய்ப்பால் சரியாகப் புகட்டுகிறோமா? குழந்தை சரியாகப் பால் குடிக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையின் வாய்ப் பகுதி அகலமாக விரிந்திருக்கிறதா என்று கவனியுங்கள். குழந்தையின் முகவாய் தாயின் மார்பைத் தொடுவதுபோல் இருக்கவேண்டும். மார்புக் காம்பின் கரியப் பகுதி குழந்தையின் வாயின் மேற்பகுதியில், கீழ்ப்பகுதியைவிட அதிகமாகக் காணப்படவேண்டும். அதாவது கவ்விய நிலையில் இருந்தால் குழந்தை ஆழமாக உறிஞ்சும்.  தாய்க்கும் மார்பு காம்பில் வலி ஏற்படாது. இது, தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான ஒரு அற்புதப் பிணைப்பை உருவாக்கும்.
தூங்கவைக்கும் முறை:
குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொடுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம்.
  தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.  தாயின் அரவணைப்பு தொடர்ந்து இருப்பதுபோல் அது உணரும்.  வெயில் காலத்தில் கட்டிலில் படுக்க வைப்பதைவிட, குழந்தைகளைத் தரையில் ஒரு பாயை விரித்து, அதில் பருத்திப் புடவையை மெத்தைபோல் நன்றாக மடித்துப் படுக்கவையுங்கள். உஷ்ணம் குழந்தையைத் தாக்காமல் குளிர்ச்சியாக உணரும். குழந்தையின் அருகில் கனமான பொருட்கள் எதையும் வைக்காதீர்கள். காற்றாடிக்கு நேராகப்படுக்க வைக்காதீர்கள். இதனால் குழந்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக நேரிடும். காற்றாடியின் வேகத்தைக் குறைத்து, ஓரமான இடமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரே இடத்தில் படுக்கவைத்தாலும், உடலில் சீக்கிரமே உஷ்ணம் ஏறிவிடும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, குழந்தையை இடம் மாற்றிப் படுக்கவைக்க வேண்டும்.

குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சளி, இருமல், காய்ச்சல் இவற்றால் அடிக்கடி சோர்ந்துவிடுவது உண்டு. உணவு வயிற்றுக்கு ஒப்புக்கொள்ளாமல்போவது, செரிமானப் பிரச்னை, வயிற்றில் பூச்சி போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் வைத்துக்கொள்வார்கள். அதனால், கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்னையை ஏற்படுத்திவிடும். சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்தால், உடலில் இருக்கும் கழிவுகளும் கிருமிகளும் வெளியேற்றப்படும்.  வயிற்றுப்போக்கும் சரியாகும்.
அதிகக் குளிர்ச்சி, தொற்றுநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பல்வேறு நோய்களுக்குத் தண்ணீரே முக்கியக் காரணம். அதனால், தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்து, வடிகட்டிக் கொடுப்பது அவசியம். தொற்று நோய்களால் மூக்கு ஒழுகுதல், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை நீடித்தால், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட தேவையற்ற பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுப்புறத்தைச் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால்கூட சளி ஏற்படலாம். சிறுநீர் கழித்ததும், உடனுக்குடன் கவனித்து, மாற்றவேண்டியது அவசியம்.
 
டயபரை அடிக்கடி மாற்றாமல் போகும்போதும், இறுக்கமாக அணிவிக்கும்போதும் குழந்தைகளுக்குச் சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்.
  டயபரைக் குழந்தைக்குப் போடும்போதே, அதன் கால் இடுக்குப் பகுதியில் பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிவிட்டுப் போடுங்கள்.  இதனால், குழந்தைக்கு அரிப்பு, அலர்ஜி ஏற்படாமல் இருக்கும்.
 நோய் தடுக்கும் மருந்துகள்...
˜ குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலேயே மருந்துகள், தடுப்பு ஊசிகளைப் போட்டுவிடுகிறார்கள். அவை என்ன தடுப்பு ஊசி, என்ன மருந்து என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
˜ குழந்தை பிறந்ததும், காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போடவேண்டும். 
˜ ஒன்றரை மாதத்தில், டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பு ஊசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்.
˜  மூன்றரை மாதத்தில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
˜ நான்கரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து.
˜  ஐந்தரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்.
˜  ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பு ஊசிகள்...
˜   ஒன்றே கால் வயதில் தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பு ஊசி
˜   ஒன்றரை வயதில் டிபிடி
˜   நாலரை வயதில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து. 
இப்படி அந்தந்தக் காலக்கட்டத்தில் கட் டாயம் நோய் தடுப்பு ஊசி, மருந்துகளைப் போடுவதன் மூலம், வருங்காலத்தில் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வது நிச்சயம்.
 

குழந்தைக்கு நம்பகமான சூழலும், தாயின் அரவணைப்பும் மிகவும் அவசியம். பாசமும், பாதுகாப்பும் இருப்பதைக் குழந்தைக்கு உறுதிப்படுத்தினால்தான் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். தொடுதல், கொஞ்சுதல், பேசுதல் போன்ற செயல்களின் மூலம், குழந்தை நம் முகம் பார்த்து வாயைக் குவித்து வார்த்தைகளை வெளிப்படுத்த முயற்சிக்கும்.  சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
வளர்ப்பவர்களைப் பார்த்தே குழந்தையின் பழக்கவழக்கங்களும் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல். ஒரு நாளில் தாய், குழந்தையுடன் செலவிடும் நேரம் குழந்தையின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் செயல்களைப் பாராட்டுவதும், சிறு தவறு செய்தால் 'ஸாரி' கேட்பதும், எடுத்த பொருட்களை அதற்கான இடத்தில் வைக்கப் பழக்குவதும் பெற்றோரின் கடமை.
  விட்டுக் கொடுத்துப் போகும் குணம்தான் சமூகத்தில் குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.   
எதைப் பார்த்தாலும், ஆசை எழும்பும் வயது.
  அதற்காக, கேட்டதை எல்லாம் வாங்கித் தருவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்களின் குடும்பச் சூழல், வசதி, தேவையைப் புரிந்துகொண்டு,  அதற்கேற்ப வாழும் சூழலை உருவாக்குங்கள். பிஞ்சிலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் வாழும் சூழல், பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். குழந்தையின் மனதில் தேவை இல்லாத ஆசைகள் இருக்காது.  மனக்குழப்பமும் ஏற்படாமல், தெளிவாய் சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.   

நடப்பது, ஓடுவது, விளையாடுவது, எதையாவது எடுத்து வீசுவது என சுட்டிகள் துறுதுறுவென இருப்பார்கள். இதைத் தொல்லையாக நினைக்காமல் பெற்றோரும் கூடவே குழந்தையை உற்சாகப்படுத்தவேண்டும்.  இது பெற்றோருக்கும் ஓர் உடற்பயிற்சிதான். 
பிஞ்சு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பெரியவர்கள் குரலை உயர்த்திப் பேசுவதோ, கத்துவதோ கூடாது. சுற்றி இருக்கும் விஷயத்தைக் கிரகிக்கத்தொடங்கும்போது, சத்தமான பேச்சுகூட குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்தலாம்.
 
சாப்பிட அடம்பிடித்தாலோ, அழுகையை நிறுத்துவதற்காகவோ குழந்தையிடம் 'பூச்சாண்டி வர்றான் பாரு' என்று பயம் காட்டிப் பணியவைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு. பின்னாளில் உணவையே வெறுக்கும் அளவுக்குச் சாப்பாட்டின் மீதான பிடிப்பு போய்விடலாம். அன்போடு, நெறிக் கதைகளைச் சொல்லி உணவை ஊட்டுவதே சிறந்தது.
சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுவது, சுழற்றி விளையாடுவது என்று விபரீதமாகக் கொஞ்சுவார்கள். இதனால், குழந்தை சிரிப்பதைப் பார்த்து, ரசிப்பதாக நினைத்துக்கொண்டு திரும்பத் திரும்பச் செய்வார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம்.
  குழந்தைகளுக்கு மனதளவில் இனம் புரியாத பய உணர்வு ஏற்படும். 'இதைச் செய்யாதே' எனத் தடை போடுவதே குழந்தையின் பயத்தை அதிகரிக்க செய்யும். அதே எச்சரிக்கையை, 'ஜாக்கிரதையாகப் பண்ணும்மா...' என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும். நல்ல பண்புகளும் வளரும்.
குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததும், வீட்டையே சுற்றிச்சுற்றி வலம் வரத்தொடங்கும். அடிக்கடித் தடுக்கி விழும்.
  குழந்தைகள் நடக்கக்கூடிய இடங்களில் கூர்மையான டேபிள், ஸ்டூல் போன்ற எந்தப் பொருட்களையும் வைக்காதீர்கள்.  தண்ணீர், எண்ணெய் போன்றவை கொட்டிவிட்டாலும், உடனடியாகக் கவனிக்கவேண்டும். குழந்தையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம். 
அன்பு, பாசம், அரவணைப்பு எனச் சகல சந்தோஷ சூழலில் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கை, தைரியத்துடன் அறிவாளியாகவும் வளர்வார்கள்.
 

குழந்தைக்குத் தேவையான உணவு உடலில் சேர்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையின் எடையைக் கவனிக்க வேண்டும். குழந்தை பிறக்கும்போது 2.75 கிலோ இருந்தால், நான்கே மாதத்தில் அதன் எடை 5 கிலோ இருக்க வேண்டும். எடை ஓரளவு இரட்டிப்பானால்தான், குழந்தை சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்று அர்த்தம். 

உடை
பிஞ்சுக் குழந்தைகளின் உடை பஞ்சுபோல் மிருதுவாக இருக்கவேண்டும். டிசைன், கலர், அழகு என்பதை மட்டும் பார்க்காமல், உடலை வதைக்காத பருத்தி ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
  ஒரு மாதக் குழந்தைக்கும் இப்போது பாவாடை, சட்டை வந்துவிட்டது. இவற்றைப் போட்டுப் அழகுபார்ப்பது, குழந்தைக்கு இம்சையை ஏற்படுத்தலாம்.  உடைகளால் ஏற்படும் அசௌகரியங்களைக் குழந்தையால் வெளியில் சொல்ல முடியாது.
வெயில் காலத்தில் பருத்தியால் ஆன உடைகளே குழந்தைகளின் உடலுக்குப் பாதுகாப்பு. மிகவும் இறுக்கமான ஆடைகள் அணிவிப்பதை முடிந்தமட்டும் தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதால், எளிதில் கழற்றி மாற்றக்கூடிய உடைகளை வாங்குங்கள்.
 
கடைகளிலேயே குழந்தைகளுக்கு உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்கும் நிலை இருப்பதால், புதுத் துணிகளை வாங்கியவுடன், நன்றாக அலசிக் காயவைத்த பிறகே அணிவது நல்லது.
 
ஜிகினா, ஜம்கி உடைகளில் பட்டன்கள், ஊக்கு, கொக்கிகள் இருந்தால் அது குழந்தையின் உடலை உறுத்தலாம்.
  குழந்தைகள் கையில் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அதனால், வெல்க்ரோ, எலாஸ்டிக், லேஸ் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.  மழைக் காலத்திலும், ஸ்வெட்டர் குல்லா போன்றவற்றை உடுத்தும்போது, ஜிப் இல்லாததாகப் பார்த்து, கழுத்துவழியாக மாட்டுவதுபோல் வாங்கலாம்.

குழந்தை 3 மாதத்துக்குள் முகம் பார்த்து சிரிக்கும். நீங்கள் 'ம்...' என்று சொன்னால், குழந்தையும் 'ம்' என்று சொல்லும். காதில் வாங்கும் சத்தத்தை உணர்ந்து, திரும்பவும் அதைச் சொல்லிப்பார்க்கும். அதனால், மென்மையான ஒலி எழுப்பிக் குழந்தையை உற்சாகப்படுத்தலாம். 
4-வது மாதம், கவிழ்ந்துகொண்டு, தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க குழந்தை முயற்சிக்கும். குழந்தையை நிற்கவைக்க, இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்து குழந்தையை நிற்கவைக்கலாம்.
5 - 6 மாதங்களில் குழந்தை உட்க£ர முயற்சிக்கும். தலையையும் நெஞ்சையும் உயர்த்தும். எதையாவது பிடித்துக்கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். தரையில் அழுத்தமாக முன்னங்கையை ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.
6 மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்க தொடங்கும். அப்போது, வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும். தண்ணீர், பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம்பிக்கும். துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும். பற்கள் முளைப்பதன் அறிகுறி தென்பட்டாலே, குழந்தை வலியால் அடிக்கடி அழத் தொடங்கும். குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணி மருந்தைக் கொடுக்கலாம். பற்கள் முளைக்கும்போது ஈறுகளில் அரிப்பு, வலி, எரிச்சல் இருக்கும். பால் குடிப்பதைக்கூட குழந்தை மறுக்கும். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் தூக்கம் இல்லாமல், புரண்டு புரண்டு படுக்கும். நடு ராத்திரியில் எழுந்து அழத் தொடங்கும்.
7-வது மாதம் - எந்த உறுதுணையும் இல்லாமலே குழந்தை உட்காரப் பழகிக்கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நின்று, தானே நேராக நிற்கப் பழகும்.
8 - 9 மாதங்களில், நன்றாகவே உட்காரும். கால்களில் மொத்த எடையையும் தாங்கிக்கொள்ளப் பழகும். எதைக் கொடுத்தாலும், அதைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகச் சேர்க்கவும், அடுக்கவும் கற்றுக்கொள்ளும். பத்தாம் மாதம், நன்றாகத் தவழ்ந்துபோய் எல்லாப் பொருட்களையும் எடுக்க ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்துக்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக்கொள்ளும்.
11 - 12 மாதம் - உட்கார்ந்த நிலையில் திரும்பவும், நன்றாக முழங்கால்களை ஊன்றித் தவழவும் முடியும். நேராக நிற்கும். தரையில் எதையாவது எழுதுகிற மாதிரி செய்யும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும், நேராக நிற்கப் பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக்கொள்ளும்.
2 - 3 வயதில்,
  அம்மா அப்பா பேசுவதை உன்னிப்பாகக் கேட்டு, அதற்குப் பதில் சொல்லத் தொடங்கும். பெற்றோர் அதிகம் பேசுவதால் மட்டுமே, குழந்தை நல்ல பேச்சுத் திறனுடன் பிரகாசமாக ஜொலிக்கும். இந்த வயதில் குழந்தையுடனான உரையாடல் இல்லாமல் போனால், குழந்தை பேசுவதும் தாமதமாகிவிடும்.  குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், 'ஸ்பீச் தெரப்பிஸ்ட்'டிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

கிடைப்பதை எல்லாம் வாயில் வைக்கும் பழக்கம், விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம்தான். ஒருவிதப் பயத்தினாலும் சில குழந்தைகள் விரலைச் சூப்பலாம். ஆனால், அதுவே தானாகச் சரியாகிவிடும். 'விரல் சூப்பினால் வாய் பெரிதாகிவிடும் கண்ணா... கிருமிகள் வயித்துக்குள்ள போய் ஃபைட் பண்ணும்' என்று மென்மையாக ஒரு கதை போல் சொன்னால், நிச்சயம் குழந்தைகள் அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவார்கள். 
குழந்தைகளுக்கான மென்மையான பிரஷினால் பல் தேய்த்து, வாய் கொப்பளித்த பின்னரே வயிற்றுக்கான ஆகாரத்தைத் தரப் பழக்குங்கள். பல் துலக்காமல் சாப்பிடும்போது, வாயில் உள்ள கிருமிகள் வயிற்றுக்குள் போய் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.
 
இரண்டு வயது குழந்தைகள் 10 மணி நேரம் நன்றாக உறங்குவார்கள். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்க மாட்டார்கள். அதற்கு வீட்டுச் சூழல், அறையின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணம் இருக்கும். குழந்தை குறைவான நேரமே தூங்கினாலும், சுறுசுறுப்பாக இருந்தால், அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியது இல்லை.
சில குழந்தைகள் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளியேறும். எப்போதாவது இப்படி நிகழ்ந்தால் ஆபத்து இல்லை. ஆனால், தொடர்ச்சியாகப் பச்சை நிறத்தில் இருந்தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. ஒரு வயதான பிறகு சிறுநீர், மலம் கழிப்பது எப்படி என்பதைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள்.
   
ஓடிப் பிடித்து விளையாடுவது, விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தந்து ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்யும் ஓவியம், பெயிண்டிங் கற்றுத் தருவது, இசையைக் கேட்கச் செய்வது, களிமண் அல்லது சப்பாத்தி மாவைப் பிசைந்து பலவிதமான உருவங்கள் செய்யச் சொல்வது, பேப்பர்களை மடக்கி விமானம், கப்பல், பூக்கள் செய்யக் கற்றுக்கொடுப்பது எனக் குழந்தைகளுக்கான உற்சாக வழிகளைத் திறந்துவிடுங்கள். குழந்தைகளுக்குப் பயனாக இருக்கும்பட்சத்தில்மட்டும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்காரவையுங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகள் அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவைக்கும் பேச்சுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் பழகியக் குழந்தைக்கு பேச்சில் பிரச்னை இருக்காது. ஏதாவது ஒரு சுவை மட்டுமே பழக்கப்பட்ட குழந்தைக்குப் பேச்சு தெளிவாக இருக்காது. கோர்வையாக வார்த்தைகளைப் பேசத் தாமதம் ஆகலாம். ஆகவே, அனைத்து சுவைகளையும் சுவைக்கப் பழக்குங்கள்.
   
குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியுமோ... அந்த அளவு மட்டுமே உணவு கொடுங்கள். சாப்பிட்டு முடித்த உடன், 'வெரிகுட்' சொல்லுங்கள். 'சமத்து' எனக் கொஞ்சுங்கள். குழந்தைத் தானாக முன்வந்து சாப்பிடும்போது, உணவு சிந்தினாலோ, கொட்டினாலோ, திட்டாதீர்கள். சிந்தாமல் சிதறாமல் சாப்பிடக் கற்றுக்கொடுங்கள். துவைத்த துணிகளை மடித்து, குழந்தைகளை பீரோவில் அடுக்கச் சொல்லுங்கள். சுவாரஸ்ய அனுபவமாக நினைத்து குழந்தைகள் அந்த வேலையை உற்சாகமாகச் செய்வார்கள். வேலை, விளையாட்டு, உணவு என அனைத்தின் வழியாகவும் பழக்கங்களை உருவாக்கலாம்.
 
சமைக்கும்போது, 'இது தக்காளி, இது வெண்டைக்காய்... இதை நான் நறுக்கப்போறேன்' என்று காய்கறிகளைக் காட்டி, வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். குழந்தை சுயமாகச் சிந்திக்கவும், அனைத்து செயல்களைத் திறமையாகச் செய்யவும் இது வாய்ப்பாக அமையும். 'செய்யாதே' எனத் தடுப்பதற்கு முன் எதைச் செய்யலாம் என்பதைக் கற்றுக்கொடுங்கள். ஒரு பாராட்டும் முத்தமும் குழந்தையின் பிரகாசமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
 

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்குக் கட்டாய உணவு தாய்ப்பால் மட்டுமே.  முதல் 6 மாதங்கள் தாயிடம் இருந்து பால் குடிப்பதால், வைட்டமின் சி கிடைத்துவிடும். அதன் பிறகு தாய்ப்பாலுடன், காய்கறிகள், பழங்கள், சீரான திட உணவைக் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.
˜ கஞ்சிகளைக் கொடுக்கலாம். தானியங்களை நன்றாக அரைத்து, சலித்து, அந்த மாவில் கஞ்சியாக நீர்க்கக் காய்ச்சிக் கொடுக்கவேண்டும். 
˜   வாழைப்பழம், சப்போட்டா இவற்றை நன்றாக மசித்துத் தரலாம். நன்றாக வேகவைக்கப்பட்ட முட்டையின் மஞ்சள் கருவை மசித்துத் தரலாம்.
˜   குழைய வடித்த சாதத்தில் பருப்பை மசித்து, நெய் சேர்த்துத் தரலாம்.  இதனுடன் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளையும் லேசாக வேகவைத்து மசித்துச் சேர்க்கலாம். 
˜  இரண்டு ஸ்பூன் கேழ்வரகை முந்தைய நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்துக்கொள்ளுங்கள். சிறிது தண்ணீரை அடுப்பில் வைத்து, அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலை விட்டுக் கைவிடாமல் 2 நிமிடம் கிளறவும். இதில் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்.

வளரும் குழந்தைக்குப் பால் போஷாக்கான உணவு. ஆனால், பாலை நன்றாகக் காய்ச்சித்தான் தர வேண்டும். அதேபோல் முட்டையை வேகவைத்து அதைக் குளிரவைத்துத் தர வேண்டும்.
தண்ணீரையும் நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி குழந்தைக்குக் கொடுக்கலாம்.
 
குழந்தைக்கு 7 முதல் 8 மாதங்கள் நிறைவடைந்ததும், தயிர் சாதம் கொடுக்கலாம். சிலர் சளி பிடிக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். தயிர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் புண் வராமல் தடுக்கும். அதிக அளவு பழச்சாறுகள்,
  காய்கறிகளில் சூப் செய்து தரலாம். அந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைக் குழந்தைக்கு ஏற்றபடி செய்து தரலாம். 

9 முதல் 10-வது மாதத்தில் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா போன்ற வெரைட்டியான பழங்கள், வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் மசித்துக் கொடுக்கலாம். பழச்சாறாகவும் கொடுக்கலாம்.
எந்தப் பழத்தில் சாறு தயாரித்துக் கொடுத்தாலும், அதை வடிகட்டிய பிறகே தரவேண்டும்.
  கொட்டைகள் சரியாக அரைபடாமல் இருந்தால், குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கும் அபாயம் இருக்கிறது.  பழங்களைத் தரும்போது அதை நன்றாகக் கழுவி மசித்த பிறகே தர வேண்டும். இட்லி, உப்புமா, சப்பாத்தி, தயிர், வேகவைத்த முட்டை, முள் நீக்கப்பட்ட மீன் தரலாம்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கான காலகட்டம் 7 மாதம் முதல் ஒன்றரை வயது வரை.
  இதில் புரதசத்து மிகவும் அத்தியாவசியம். வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ், கொழுப்பு என நிறைய சத்துக்கள் தேவைப்படும்.
6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு மற்ற உணவுகள் தேவைப்பட்டாலும், சத்து, புரதம் மற்றும் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து போன்றவைகளுக்குத் தாய்ப்பாலே சிறந்த மூலப்பொருள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை நோய்களில் இருந்து தாய்ப்பால் பாதுகாப்பு அளிக்கிறது. 6 மாதத்தில் இருந்து ஒரு வயது வரை மற்ற உணவுகளுக்கு முன்பாக தாய்ப்பால் தரவேண்டும். குழந்தையின் உணவில், வைட்டமின் மற்றும் தாதுக்கள் கிடைக்க, தோல் நீக்கி, வேகவைத்து, மசிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்கள், எண்ணெய், மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் இருக்க வேண்டும். இரண்டாவது வயதில், தாய்ப்பாலை உணவுக்குப் பிறகும் மற்ற நேரங்களிலும் தரவேண்டும்.
 
 1 வயது முதல் மூன்று வயது வரை
ஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக் கூடாது.
  ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது. ஒரே மாதிரியாகச் செய்யாமல், விதவிதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது. கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.
எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடன் திணிக்கக் கூடாது.
இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கி. கலோரி, 1.2 கிராம் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிறப் பழங்களைக் கொடுக்கலாம்.
 
கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.
இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.
குழந்தைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுப்பது, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஃபாஸ்ட் புட் உணவுகளைக் கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். கடைகளில் விற்கப்படும், இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களைக் கொடுக்கவே கூடாது.
 
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம்.
சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.


˜  அம்மைத் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் புண் ஆகாமல் இருக்க, வேப்பிலையுடன், பசு மஞ்சளை சேர்த்து அரைத்துத் தடவினால், விரைவில் தழும்பு ஆறிவிடும்.
˜  சுக்கு, சித்தரத்தை, ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றைப் பாலில் போட்டு வேகவிட்டு, நிழலில் உலர்த்தவும். பச்சிளம் குழந்தைக்குத் தலைக் குளிப்பாட்டும்போது பாலில் வேகவைத்த சாமான்கள், கட்டிப் பெருங்காயம், இவற்றை சந்தனக் கல்லில் ஒருமுறை இழைத்து தாய்ப்பால் சேர்த்துப் புகட்டலாம். சுக்கு, பெருங்காயம் வாயுவைக் கலைக்கும். சித்தரத்தை சளி வராமல் தடுக்கும். ஜாதிக்காய் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மாசிக்காய் வயிறு பிரச்னை இல்லாமல் செய்யும். 
 சளி
˜  குழந்தை பிறந்து ஐந்தாவது நாள் வெற்றிலைச் சாறு, தாய்ப்பால், ஒரு கடுகு அளவு கோரோஜின் கலந்து புகட்டினால், சளி வெளியேறிவிடும்.
˜  கற்பூர வல்லி இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
˜  ஆறு மாதம் முடிந்த குழந்தைகளுக்கு நொச்சி இலை, நுணா இலை, ஆடாதோடா இலை இந்த மூன்றையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
˜  கண்டங்கத்திரி இலையை நீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். தூதுவளை இலையை நீர் விட்டுக் கொதிக்கவைத்து, தேன் கலந்து வடிகட்டிக் கொடுத்தால், சளி கரையும்.
 வயிறு
˜  பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தைக்கு, ஒரு சொட்டு விளக்கெண்ணெயில் சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்றாகக் குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவுங்கள்.  குழந்தையின் வயிற்றில் தங்கியிருக்கும் கறுப்பு மலம் வெளியேறிவிடும்.
˜  ஏழாம் நாள் தாய்ப்பாலுடன் ஒரு சொட்டு துளசிச்சாறு கலந்து புகட்டினால், சளி கரையும்.
˜  கொய்யா இலையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால், பேதி நின்றுவிடும்.
˜  வயிற்றுவலியால் அழும் குழந்தைக்கு நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் தடவலாம். 
˜ வசம்பை உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் ஏற்றிய விளக்கில் சுட்டு வைத்துக்கொள்ளவும். குழந்தை வயிற்று வலியால் அழும்போது, சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்துத் தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் சிறிது தேன் கலந்து, குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.

˜ குழந்தைக்கு வயிறு மந்தமாக இருந்தால், வெற்றிலை, ஓமம், பூண்டு, உப்புக்கல் சேர்த்து அரைத்து வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்துப் புகட்டினா,ல் வயிறு மந்தம் சரியாகிவிடும்.
˜ வயிற்றில் பூச்சி இருந்து குழந்தை அழுதால், வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து சுடுநீர் விட்டு அரைத்து, வடிகட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி இருக்காது. 
செல்லக்குழந்தையிடம் நீங்கள் காட்டும் அக்கறையான கவனிப்பே... ஆரோக்கியம் காத்திடும்.
  வாழ்த்துகள்!
- தொகுப்பு: ரேவதி, உமாஷக்தி
தகவல்:
  குழந்தைகள் மனநல மருத்துவர் சாந்தி நம்பி, குழந்தைகள் மருத்துவர் ஸ்ரீனிவாசன், சித்த மருத்துவர் கண்ணன், தலைமை ஊட்டச்சத்து ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.


--
*more articles click*
www.sahabudeen.com


உயில் எழுதுவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குடும்பத்திற்கு உணவளித்து வந்த முக்கிய நபர் அல்லது பாதுகாவலர் இறந்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சண்டை சொத்து சம்பந்தமானதா...

Popular Posts