லேபிள்கள்

புதன், 27 நவம்பர், 2013

வியாதிகளை விழுங்காதீர்கள்!

வியாதிகளை விழுங்காதீர்கள்!

''போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன? சாப்பாடும் வயிற்றுக்குள் போகிறது. மாத்திரையும் வயிற்றுக்குள் போகிறது. இதில் முன் பின் என்ன வேண்டி இருக்கிறது?' 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என தங்களுக்குத் தாங்களே வியாக்கியானம் பேசும் அசால்ட் ஆறுமுகங்களின் கனிவான கவனத்திற்கு இந்தக் கட்டுரை. 

மருந்து மாத்திரைகள் முறையாக எடுத்துக்கொள்வது எப்படி என்ற கேள்விகளுக்கு கோவை அரசு பொதுமருத்துவமனைப் பேராசிரியர்    த.ரவிக்குமார் பதில் அளிக்கிறார். ''உடனடியாக வேலை செய்யவேண்டிய மருந்துகளை மட்டும், சாப்பிடும் முன் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அமிலத் தன்மை உள்ள மாத்திரைகள் வெறும் வயிற்றில் எளிதில் உறிஞ்சப் படும் (அது வயிற்றுப் புண் ஆற்றும் மருந்தாகவோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் மருந்தாகவோ இருக்கலாம்). எந்த மாத்திரைச் சாப்பிட்டால் வயிறு எரியுமோ அல்லது வயிற்றில் புண் ஏற்படுமோ, அந்த மாத்திரைகளை உணவுக்குப் பின் சாப்பிடச் சொல்வார்கள். சாதாரணமாக மருந்துகள் வயிற்றில் இருந்து உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்குச் சென்று ரத்தத்தில் கலந்து வேலை செய்ய மணிக்கணக்கில் ஆகும். மிக விரைவாக வேலை செய்யவேண்டிய உயிர் காக்கும் மருந்துகளை (மாரடைப்புக்குத் தரப்படும் சார்பிட்ரேட் போன்றவை) நாக்கின் அடியில் வைத்தால், எச்சில் வழியாக நேராக ரத்தத்தில் கலந்து, சில நொடிகளில் உயிரைக் காக்கும். வலி நிவாரணி, வாந்தி தடுப்பு மருந்துகளும் இதுபோல கிடைக்கின்றன.

அதுபோலவே ஆஸ்துமா போன்ற நோய்களுக்கான மருந்தை வாய் மூலம் உறிஞ்சுவதன் மூலம், மருந்து நேரடியாக நுரையீரலுக்கு உள்ளேயே சென்று ஊசியைவிடவும் மிக விரைவாக வேலை செய்யும். எந்த மருந்தையும் டீ, காபி, அல்லது காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்களுடன் சாப்பிடக் கூடாது. அவை மருந்துகளுடன் வினைபுரியக்கூடியவை. டீ, இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.

டாக்டர் மருந்து எழுதித் தரும்போது மருந்துகளை உட்கொள்ளவேண்டிய நேரத்தையும் கேட்டுக் கொள்ளவேண்டும். மருந்துக் கடை விற்பனையாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட டாக்டரிடம் கேட்பதே சரியானது.

குழந்தைகளுக்கான சில மருந்துகளைத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொடுக்கச் சொல்வார்கள். அதுபோன்று தண்ணீர் கலக்கிய மருந்துகளை அதிகபட்சம் 5 நாட்கள் வரையே கொடுக்கலாம். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கு அவ்வப்போது தேவைப்படும்போது மட்டும் கொடுக்கச் சொன்னால், மருத்துவர் சொன்னபடி அவ்வப்போது மட்டும் கொடுக்க வேண்டும். அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்துகளை ஒன்றாகக் கொடுக்க வேண்டாம். மது, புகையிலை, பான் போன்றவை மருந்துகளின் வீரியத்தைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யும். எனவே மருந்து சாப்பிடும்போது, அவை வேண்டவே வேண்டாம்'' என விளக்கமாகச் சொன்னவர் வயதுவாரியானவர்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் விளக்கினார்.

''குழந்தைகளுக்கு, பெரியவர்களின் மாத்திரைகளை உடைத்துத் தர வேண்டாம். ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள் எப்போதும் கைவசம் இருக்கவேண்டும். மருந்துகளை நேரடி வெயில் படாத ஈரம் இல்லாத குளிர்ச்சியான இடத்தில் வையுங்கள்.

மாத்திரையின் ஆயுள் (காலாவதி தேதி) பார்த்து உறுதிசெய்த பிறகே சாப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட மருந்தை மூன்று மாதங்களுக்கு டாக்டர் அறிவுறுத்தி இருந்தால், ஒரே நாளில் மூன்று மாதங்களுக்கும் தேவையான மருந்தை வாங்கி ஸ்டாக் வைக்காமல், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை என வாங்குவது நல்லது. மாத்திரையின் ஆயுள் தேதி தெரியாத அல்லது, பெயர் சரியாகத் தெரியாத மாத்திரைகளை எந்தக் காரணம் கொண்டும் வாங்க வேண்டாம். மற்றவர்களுக்குக் கொடுத்த மருந்தை சாப்பிட வேண்டாம்.

மருத்துவர் குறிப்பிட்ட காலத்துக்குக் குறைவாகவோ, அதிகமாகவோ... முக்கியமாக ஆன்டியாட்டிக்  மற்றும் வலி நிவாரண மருந்துகளைச் சாப்பிட வேண்டாம். மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால், மருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்.'' என்றார் பேராசிரியர் த.ரவிக்குமார்.

மாத்திரைகளை விழுங்கி வியாதிகளைத் தீர்க்கும் நிலை மாறி, மாத்திரைகளை விழுங்குவதனாலேயே வியாதிகளைத் தேடிக்கொள்வது, எத்தகைய வேதனை?!


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts