லேபிள்கள்

திங்கள், 9 செப்டம்பர், 2019

வெங்காயம் - உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்!


உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை' என்னும் வாழ்க்கையின் நிலையில்லா தத்துவத்தை உணர்த்தும் வெங்காயம், நம்மை உரிமையுடன் அழ வைக்கும் அன்பன். கூடுதல் கரிசனத்துடன், நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தைத் தரும் வெங்காயம், இயற்கையின் பிரமிப்பும்கூட!
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வெங்காயம் காணப்படுகின்றன. ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் ஆகிய பல்வேறு பெயர்களைக்கொண்ட வெங்காயத்துக்கு சிறுநீர்ப்பெருக்கி, காமம்பெருக்கி, கோழையகற்றி போன்ற செய்கைகள் இருக்கின்றன. இது சிரங்கு, மூலம், வாய்ப்புண், தாகம், கழிச்சல் போன்ற குறிகுணங்களை நீக்கும் என்பதை, 'வெப்பமூலங் கிரந்தி வீறுரத்த பித்தமுடன்…' எனத் தொடங்கும் அகத்தியரின் சித்த மருத்துவப் பாடல் சுட்டிக் காட்டுகிறது.

நெடுங்காலத்துக்கு முன்பே இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் விளைவிக்கப்பட்ட நறுமணமூட்டி இது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய கல்லறைகளில், வெங்காயம் சார்ந்த சான்றுகள் கிடைத்திருக்கின்றன. குரான், விவிலியம், இந்து புராணங்களில் வெங்காயம் பற்றி எண்ணற்ற குறிப்புகள் காணப்படுகின்றன. மெசபடோமியா நாகரிகத்தில், `சர்வரோக நிவாரணி'யாகச் செயல்பட்டது வெங்காயம். எகிப்திய, ரோமானிய, கிரேக்க, சீன இலக்கியங்களில் வெங்காயத்தின் மேன்மை குறித்துப் பேசப்பட்டுள்ளன.

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற சத்துகளைத் தனது உடலில் வெங்காயம் நிறையவே சேமித்துவைத்துள்ளது. வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்குக் காரணம், நிறைய கந்தகச் சத்தை தன்னகத்தே வைத்திருப்பதே.

வெங்காயத்தில் உள்ள `குயிர்செடின்' (Quercetin) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள், காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை எதுவும் நம் உடலைத் தாக்காமல் பாதுகாக்கக்கூடியது. வெங்காயத்தில் உள்ள ஆந்தோசயனின்களும் வெங்காயத்தின் மருத்துவ மதிப்பைக் கூட்டுகின்றன. வெங்காயத்தைப் புற்றுநோய் பரவாமல் தடுத்து நிறுத்தும் ஓர் எல்லை வீரன் என்கின்றன ஆய்வுகள். ரத்தக்குழாய்களில் கொழுப்புத் திட்டுகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க, சமையலில் வெங்காயத்தை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் செயல்திறனை அதிகரித்து நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.

இந்தோனேசியா மற்றும் சீனாவில் வெங்காயத்தை நறுக்கி நூடுல்ஸ் மற்றும் அரிசி உணவுகளின்மீது தூவிச் சாப்பிடும் வழக்கம் அதிகம். `லக்ஸா' எனப்படும் நூடுல்ஸ் சூப்பில், வெங்காயத் தைத் தூவுவதால்தான் சுவை கூடுவதாக வாதிடுவோர் பலர் உண்டு.
சிறுதானிய உப்புமாவில், நொதிக்கவைத்த வெங்காயப் பசையைக் கலந்து பரிமாறும் `கஸ்கஸ்' என்னும் உணவு, துனீஷியா நாட்டில் பிரபலம். வெங்காயம் பற்றிப் பேசும்போது, `ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப்' பற்றி குறிப்பிடாவிட்டால், பிரான்ஸ் நாட்டினர் மல்லுக்கட்டத் தொடங்கிவிடுவார்கள். பீட்சா போல தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளின்மீது வெங்காயப் பசையைத் தடவித் தரும் உணவும் மேற்கத்திய நாடுகளில் அதிகம்.

வெங்காயத்தை வெட்டிச் சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யப்படும் 'வெங்காய வடகங்கள்', கீரைக் கடைசல் மற்றும் புளிக்காரக்குழம்பையும் அமிர்தமாக்கும். முந்தைய நாள் ஊறவைத்த சாதத்தின் நீர் அமுதத்தை, வயிற்றுக்குள் இனிமையாகக் குழைத்து அனுப்பிவைக்கும் கருவி வெங்காயம்.

ஆண்மையை அதிகரிக்க பாதாம், பிஸ்தா வைத் தேடிப்போகிறவர்கள் வெங்காயத்தைச் சாப்பிட்டாலே போதும்; அந்த அளவுக்கு இதில் வீரிய சக்தி உள்ளது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `நறுமணத் தோட்டம்' (The perfumed garden) என்னும் அரேபிய நூலில் வெங்காயத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் வீரியம் அதிகரிக்கும் என்னும் குறிப்பு காணப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு பாரம்பர்யத்தில் திருமணமான தம்பதியருக்கு `வெங்காய சூப்' கொடுக்கும்முறை இன்றைக்கும் தொடர்கிறது.

உடல்சூட்டைத் தணிக்க, வெங்காயத் துண்டுகளை நெய்விட்டு வதக்கிச் சுவைக்க லாம். கீரை மசியலுக்குக் கைகொடுக்கும் வெங்காயம், மூலநோய்க் குறிகுணங்களைக் கட்டுப்படுத்த உதவும். குளிர்க்காய்ச்சல் இருக்கும்போது, மூன்று மிளகை வெங்காயத் துடன் சேர்த்துச் சாப்பிட்டால், சீக்கிரமாகக் காய்ச்சல் அடங்கும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு ஏற்படும்போது, வெங்காயத்தை ஒன்றிரண்டாக இடித்து குடிநீரிட்டுப் பருகலாம். புகையிலையால் ஏற்படும் நஞ்சை முறிக்க வெங்காயம் பயன்படும் என்கிறது சித்த மருத்துவம். உணவு ரகங்களில் சேர்க்கப்படும் வெங்காயத்தின் இலைகள் (தாள்), வயிற்றுப்புண்ணைத் தடுப்பதற்கான சிறந்த பொருளாகும். வெங்காயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலியைத் தவிர்க்கலாம்.

வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்தி னால் வாய்வுப் பெருக்கத்தை உண்டாக்கும்; கவனம் தேவை. இரண்டு நிமிடங்கள் மிதமான வெந்நீரில் வெங்காயத்தை ஊறவைத்து வெட்டினால், கண் எரிச்சல் ஏற்படுவதை ஓரளவு தவிர்க்கலாம்.
வெங்காய விதைகள், கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு சமஅளவு சேர்த்துத் தயாரிக்கப்படும் வங்காள மசாலா வகை, உடலுக்கு வலிமை கொடுக்கும். வெங்காய விதைகளுக்கும் வீரியத்தை அதிகரிக்கும் செய்கை உண்டு. ஆட்டிறைச்சியில் அதிக அளவில் வெங்காயம், சில வகையான தாவர இலைகள் மற்றும் வேர்கள், நறுமணமூட்டிகள், வெண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் உணவு ரகத்தைக் கண்டு பிரமிப்படைந்ததாக, ஐரோப்பிய பயணி ஒருவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பேரரசர் அக்பர் சார்ந்த 'ஐன்-இ-அக்பரி' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு வகைகள் பெரும்பாலானவற்றில் வெங்காயம் இடம்பிடித்துள்ளது.

வெங்காயம்… உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்!
-
டாக்டர் வி.விக்ரம்குமார்
டேஸ்டி ஆனியன்

மிஸ்ஸி ரொட்டி (Missi-roti): கோதுமை மாவுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, பொடித்த வெந்தயம் சேர்த்துச் செய்யப்படும் `மிஸ்ஸி ரொட்டி'யின் ருசி சிறப்பானது.

சமுசாக் (Samusak): இறைச்சியுடன் பாதாம், பிஸ்தா, வெங்காயம், சீரகம் சேர்த்துச் சமைத்து கோதுமை ரொட்டிகளுக்கு இடையே வைத்து, நெய்யில் பொரித்து எடுக்கும் `சமோசா' போன்ற சிற்றுண்டி ரகம் இது. ராஜ விருந்தினர்களை உபசரிக்க, முகமது பின் துக்ளக்கின் விருந்து பட்டியலில் `சமுசாக்' நீங்கா இடம்பிடித்திருந்தது.

சர்கி (Sarki): வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்து சுடச்சுட தயாரிக்கப்படும் இந்த சூப் வகை, 11-ம் நூற்றாண்டு 'போஹ்ரி' முஸ்லிம்களின் சிறப்புத் தயாரிப்பு.

சாஃப்ரிஜிட் (Sofregit): இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், நறுக்கிய மூன்று தக்காளி, இரண்டு சின்ன வெங்காயம், மூன்று பூண்டுப் பற்கள், இரண்டு மிளகு, ஒரு கப் காளான், சிறிது சீரகம் மற்றும் கொத்தமல்லித்தழைகள் என அனைத்தையும், கடாயில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். இந்த உணவை எவ்வளவு பொறுமையாகச் சமைக்கிறோமோ, அவ்வளவு சுவை கூடும். வெங்காயம், பூண்டு போன்றவற்றின் சாரங்கள் உள்ளே இறங்கி உணவை மெருகேற்றும். தக்காளி சாஸ் போன்று காணப்படும் இந்த உணவு வகை, ஸ்பெயின் நாட்டினரின் ஃபேவரைட்!

யுகாடன் (Yucatan) - `வெங்காய ஊறுகாய்': ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி தேவையான அளவு நீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். நீரை வடித்ததும், நன்றாக உலரவிட வேண்டும். பொடித்த மிளகு (ஐந்து), ஒரு டீஸ்பூன் சீரகம், அரைத்த மூன்று பூண்டுப் பற்கள், கொத்தமல்லி இலைகள், அரை டீஸ்பூன் உப்பு, அரை கப் வினிகரை ஒன்றாகச் சேர்த்து வெங்காயத்தின்மீது ஊற்றி 24 மணி நேரம் காத்திருந்தால் சுவைமிக்க வெங்காய ஊறுகாய் தயார். மெக்ஸிகோ நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தொடு உணவு ரகமாக இது இருக்கிறது.

வெங்காயம் - மாதுளை டிப் (Dip): வெண்ணெய் (அவகாடோ) பழத்துடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாகப் பிசைய வேண்டும். ஒரு கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு பூண்டுப் பற்கள், சிறிது புதினா இலைகள் மற்றும் மிளகாய், மூன்று டீஸ்பூன் மாதுளைச்சாறு போன்றவற்றை ஒன்றாக அரைத்து வெண்ணெய்ப் பழத்துடன் கலக்கவும். கடைசியாகத் துருவிய வெங்காயம் மற்றும் மாதுளை முத்துகளைத் தூவியதும் உடனடியாக ருசித்துவிட ஆசை ஏற்படும். சட்னி வகையாக இதைப் பயன்படுத்தலாம்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சட்ட பிரிவுகள்


1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,
நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217

3,
நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404

4,
அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,
எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,
சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)

7,
வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,
இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,
இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,
ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,
காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,
கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,
தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,
அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16.
புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,
பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18,
பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,
முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,
அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21,
குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,
தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,
பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295

24,
மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,
ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419

26,
ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,
சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,
கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,
முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495

30, IPC-499
ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட
இதில்
IPC
என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC
என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.
http://pettagum.blogspot.com/2019/01/blog-post_15.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஹிஜாமா” என்பது நபிவழிமுறையா?


கேள்வி : ஹிஜாமா என்பது நபிவழிமுறையா அல்லது நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்றா?
பதில் : ஹிஜாமா தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் இருவகையான கருத்துகள் நிலவுகின்றன;
முதலாவது கருத்து : ஹிஜாமா என்பது ஆகுமாக்கப்பட்ட உபாியான சுன்னாவாகும்.
"ஹிஜாமா செய்வது ஒவ்வொருவரின் மீதும் விரும்பத்தக்கதாகும்." (அல்பதாவா அல்ஹின்திய்யா : 5/355)
இப்னு முப்லிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : "ஹிஜாமாவைப் பொருத்தவரை அதனை செய்வது தொடர்பாகவும், அதன் சிறப்பு பற்றியும், அதனுடைய காலம் பற்றியும் அதிகமான பிரபல்யமான செய்திகள் உள்ளன. அவைகளில் ஒன்று நபியவர்களின் கூற்றாகவும் செயலாகவும் இருந்தது தான் 17, 19, 21 ஆம் தினங்களில் செய்வது." (அல்ஆதாப் அஷ்ஷரஇய்யா : 3/87)
இக்கருத்துக்கு ஆதாரமாக ஹிஜாமா மற்றும் அதனால் நோய்நிவாரணம் உள்ளது போன்ற பொதுவாக வந்துள்ள ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
இரண்டாவது கருத்து : ஹிஜாமா என்பது இஸ்லாமிய ஷரீஆ முறையிலான பித்தியேகமான நன்மை தரக்கூடிய சிகிச்சையல்ல. மாறாக அது ஆகுமாக்கப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்று மாத்திரமே.
அல்காஸானீ அல்ஹனபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : "ஹிஜாமா என்பது விரும்பத்தக்க விடயமாகும்" (பதாஇஉஸ் ஸனாஇஃ : 4/190)
அல்கத்தாபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : "ஹிஜாமா என்பது ஆகுமான விடயமாகும். அத்துடன் அதிலே பயன்கள் இருப்பதுடன் உடலுக்குரிய நல்லவிடயங்களும் அடங்கியுள்ளன." (மஆலிமுஸ் ஸுனன் : 4/103 , ஷரஹு இப்னு பத்தால் : 9/404 , அந்நிஹாயா பீ கரீபில் ஹதீஸி : 2/5)
இவ்விரண்டாவது கருத்திலிருந்து பின்வரும் விடயங்களை ஆதாரமாக எடுக்கலாம்;
  1. ஹிஜாமா என்பது இஸ்லாத்திற்கு முன்பு அரபிகள் அறிந்திருந்த ஒரு கிசிச்சை முறைகளில் ஒன்று மாத்திரமில்லாமல் வரலாற்று புத்தகங்களில் அறியப்பட்டதுபோன்று பிர்அவ்னுடைய காலம் போன்று அதற்கு முன்னைய சமூகங்களிலும் இச்சிகிச்சை முறை அறியப்பட்டிருந்தது. எனவே, இதற்கு இஸ்லாத்தில் என்று சிறப்பம்சம் கிடையாது. ஆகவே, ஹிஜாமா என்பது விரும்பத்தக்க ஒன்றாக இருப்பதுடன், மருத்துவத்திற்கான தேவை ஏற்படும்போது இதனை செய்யலாம்.
  2. வழமையான விடயங்கள், வாழ்க்கையின் பொதுவான செயற்பாடுகளாக கருதப்படக்கூடிய விடயங்களை பண்பாடுகளின் சிறப்புக்களுடன் தொடர்புபடுத்தாமல் வழமையான விடயம் என்ற வட்டத்தில் இருக்கின்றவரை அவைகள் அடிப்படையிலேயே ஆகுமானதாகும். எனவே, அவைகள் தொடர்ந்தும் ஆகுமானது என்ற வட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கும்.
  3. ஹிஜாமா செய்வதினால் பிரத்தியேகமான நன்மை கிடைக்கும் என்றோ, அல்லது அதனை செய்யாமல் விட்டுவிட்டால் தண்டனையோ, இழிவோ ஏற்படும் என்று நபியவர்களைத் தொட்டும் ஒருவிடயங்களும் வரவில்லை.
  4. ஹிஜாமாவினால் வணக்கவழிபாடு என்பதற்கோ அல்லது அதன் மூலம் அல்லாஹுத்தஆலாவை நெருங்குவதற்கு என்றோ எந்த நிலைப்பாடுகளும் கிடையாது. மாறாக அது மனிதர்களின் வழமையான வாழ்க்கை விடயங்களைப்போன்ற ஒரு விடயமாகவே உள்ளது.
எனவே இதன் மூலம் விளங்குவது என்னவென்றால்; இரண்டாவது கருத்தே மிகவும் ஏற்றமான கருத்தாகும். ஏனெனில், ஹிஜாமா என்பது மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆதலால் அதன்பால் தேவையுடையவன் வணக்கவழிபாடு என்ற அடிப்படையில் இல்லாமல் மருத்துவம், சிகிச்சை என்ற அடிப்படையில் அதனை செய்வான்.
அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : "ஹிஜாமா என்பது சுன்னாவல்ல அது ஒரு மருந்துவ கிசிச்சையாகும். எனவே, அதன்பால் மனிதர்கள் தேவையுடையவர்களாக இருந்தால் ஹிஜாமா செய்வார்கள். அதன்பால் தேவையில்லை என்று கருதக்கூடியவர்கள் ஹிஜாமா செய்யமாட்டார்கள்." (மஜ்மூஉ பதாவா வ-ரஸாஇலில் உஸைமீன் : 23/96)
மேலும், ஹிஜாமாவின்பால் தேவையுடைய நோயாளிக்கு ஹிஜாமா சுன்னா என்று கூறுவதில் எந்தவித தடையும் கிடையாது. ஏனெனில் அவன் இரண்டு விடயங்களை ஒன்று சேர்ப்பவனாக இருப்பான்;
  • ஒன்று : மருத்துவம்
  • மற்றையது : ஹிஜாமாவின் மூலம் நோய்நிவாரணம் உள்ளது என அல்லாஹ்வின் தூதர் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், அவன் ஹிஜாமாவை பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்தான்.
இமாம் அந்நப்ராவீ அல்மாலிகீ (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : "ஹிஜாமாவின்பால் தேவை ஏற்படுகின்ற போது ஹிஜாமா செய்துகொள்வது விரும்பத்தக்கதாகும்." (அல்பவாகிஹ் அத்தவானீ : 2/338) , (அல்-அதவீ பீ ஹாஷியதிஹி : 2/493)
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜாமாவின்பால் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் ஹிஜாமா செய்தார்கள் என்று ஹதீஸ்களில் கண்டுகொள்ளமுடியாது. மாறாக, நபியவர்கள் தனக்கு ஏற்பட்ட தலைவலி மற்றும் இதுபோன்ற வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டால் ஹிஜாமா செய்பவர்களாக இருந்துள்ளார்கள். எனவே, ஹிஜாமா என்பது அதன்பால் தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் செய்யப்படும் ஒன்றாக இருப்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!

அரபியில் : https://islamqa.info/ar/answers/269871
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் – சவுதி அரேபியா.

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்


மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும்.
ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் ஒரு மாதத்துக்குத்தான் இருந்து கொண்டிருக்கும். ஆகவே இந்த வெற்றி உண்மையான வெற்றி கிடையாது.
மனிதனுக்கு ஒரு வெற்றி இருக்கிறது. அவ்வெற்றிதான் உண்மையானதும் நிலையானதுமாகும். அந்த வெற்றி எதுவென்பதை அல்லாஹ் சொல்லும் போது,
"
எவர் நகரிலிருந்து தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டாரோ அவரே நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்"
(
ஆலுஇம்ரான்: 185)
என்று கூறியிருக்கிறான்.
அல்லாஹ் எனக்கு இந்த வெற்றியை தராமல் நரகத்தை மறுமையில் தந்தால் என்னுடைய நிலை எப்படி இருக்குமென்பதை நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் எம்மையெல்லாம் நரகிலிருந்து பாதுகாப்பானாக.
இங்கே சொல்லப்படுகின்ற விடயங்களை நாம் உணர்பு பூர்வமாக சிந்திக்க வேண்டும். சில கட்டங்களில் வழிகேடர்களது சில தவறான வழிகாட்டல்களினால் அல்லாஹ்வுக்கு இணை வைப்பர்களாக சில மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை மக்களின் பக்கம் அவைகளை திருப்பி விட்டால் அது எந்த சந்தேகமுமின்றி இணைவைப்பாக மாறிவிடுகின்றது. அந்தடிப்படையில் ஒரு மனிதன் தன்னை நரகத்துக்கு இட்டு செல்லக்கூடிய காரியங்களை செய்து விட்டு மறுமையில் நரகில் நுழைந்தால் அவனுடைய நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு சொல்லப்பட இருக்கின்ற எனக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்று உணர்பு ரீதியாக சிந்திக்க வேண்டும்.
அந்தடிப்படையில் அல்லாஹ் நரகத்தைப் பற்றி,
"
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் உங்களால் செய்யவே முடியாது. எனவே தீய மனிதர்களும், கற்களும் எரிபொருட்களாக இருக்கின்ற அந்த நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்" (2:24)
என்று எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறான். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், சாதாரணமாக சமைக்கும் போது நெருப்பை எறிய வைப்பதற்காக எத்தனையோ விறகு கட்டைகளை வைத்து எறிக்கிறோம். சாதாரண நெருப்புக்கே மிக வேகமாக எறியக்கூடியதான் விறகு. நாம் பயன்படுத்துகின்ற நெருப்பை விடவும் 69 மடங்கு பலமானதுதான் நரக நெருப்பு. அந்த நரக நெருப்பில் மனிதன் ஒரு தடவை மாத்திரம்தான் விறகாக பயன்படுத்தப்படமாட்டான்.
இந்த உலகில் ஏதாவது ஒன்றை எறிப்பதற்கு ஒரு விறகை ஒரு தடவை மாத்திரம்தான் பயன் படுத்த முடியும். ஆனால் 69 மடங்கு பலமான அந்த நெருப்பிற்கு விறகாக காணப்படுகின்ற மனிதன் ஒரு தடவை மாத்திரம் எறிக்கப்படமாட்டான். அல்லாஹ் மனிதனை நரக நெருப்பில் போட்டு எறித்து விட்டு மீண்டும் பழைய தோற்றத்திற்கு நல்ல தோல்களையெல்லாம் வழங்கி விட்டு மீண்டும் நரக நெருப்பில் போட்டு வேதனை செய்வான். எரிந்து சாம்பலாகி கறியானதற்கு பின் மீண்டும் புதிய தோலை வழங்கி நரகில் போட்டு வேதனை செய்வான். இப்படி மாறி மாறி தொடர்ந்து கொண்டே இருக்கும். அல்லாஹ் இந்த பயங்கரமான நிலையைப் பற்றி சொல்லும் போது,
"நிச்சயமாக எவர்கள் எமது வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நாம் நரகில் நுழைவிப்போம். வேதனையை அவர்கள் சுவைப்பதற்காக அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றுவோம்" (4:56)
என்று முடிவே இல்லாத வேதனையையின் வர்ணணையை சொல்லிக் காட்டுகிறான்.
மனிதன் உலகில் பெரும்பாவம் செய்தவனாக இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த வேதனையை எல்லாம் அனுபவித்து விட்டு அல்லாஹ் எப்போது நாடுகிறானோ அப்போது அந்நரகை விட்டும் அம்மனிதனை அல்லாஹ் விடுவித்து விடுவான்.
ஆனால் அல்லாஹ்வுக்கு இணைவைத்த மனிதனாக இருந்தால் அவனுக்கு முடிவே இல்லாத வேதனையாக இவ்வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும். 60 வயது 70 வயது என மனித வாழ்வு வரையரை செய்யப்பட்ட அழியக்கூடிய இந்த உலகில் சுயகெளரவத்துக்காக மனிதன் அல்லாஹ்வுக்கு பகிரங்கமாகவே இணைவைக்கின்றானே! அவனுக்கு முடிவே இல்லாத வேதனையைப் பற்றி பயம் கிடையாதா? அவ்வேதனையையின் விபரீதத்தைப் பற்றி சிந்திக்க கூடாதா?
இப்படி பயங்கரமான முறையில் நரகில் வேதனை செய்யப்படுகின்ற அம்மனிதன் தொடர்ச்சியான அந்த வேதனையை தாங்க முடியாததனால் நரகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் மாலிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து,
"மாலிகே உமதிரட்சகன் எங்களுக்கு (மரணத்தைக்) கொண்டு தீர்ப்பளிக்கட்டும் என்று சப்தமிடுவார்கள்; நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில் மரணிக்காது) தங்கியிருக்க வேண்டியவர்களே என்று கூறுவார்.
நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். எனினும் உங்களில் அதிகமானவர்கள் அவ்வுண்மையை வெறுக்கின்றவர்களாக இருந்தீர்கள்" (43:78,79)
என்று நரகவாதிகளது கதறளையும் அவர்கள் நரகில் நுழைந்ததற்கான காரணத்தினையும் அல்லாஹ் சுருக்கமாக சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ் அல்குர்ஆனில் இன்னுமொரு வசனத்தில் நரகவாதிகள் கிடைத்திருக்கின்ற வேதனை தாங்க முடியாமல்,
"நரகத்தில் உள்ளோர் நரகத்தின் காவலர்களிடம் ஒரு நாளைக்கேனும் வேதனையை எங்களை விட்டும் இலகுபடுத்துமாறு உங்களது இரட்சகனிடம் வேண்டுங்கள் எனக் கேட்பார்கள்.
(
அதற்கு அக்காவலாளிகள்) உங்களது தூதர்கள் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வரவில்லையா? எனக் கேட்பார்கள். இவர்கள் ஆம் என்று சொல்வார்கள். (அதற்கு அந்த காவலாளிகளான) அவர்கள் (நாங்கள் அல்லாஹ்விடம் கேட்கமாட்டோம்) நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்" (40:49,50) என்று நரகவாதிகளது வேதனை ஒரு நாளுமே குறைக்கப்படாது என ஆணித்தரமாக எச்சரித்துக் காட்டியிருக்கிறான்.
எனவே அந்த நரகவாதிகள் தங்கள் வேதனையிலிருந்து தப்ப வேண்டுமென்பதற்காக முதலாவது காவலாளிகளிடம் மன்றாடி விட்டு அது எந்த பலனையும் அளிக்காததனால் நரகத்திலிருந்து வெளியேற முயற்சி செய்வார்கள். இந்த சந்தர்ப்பத்தில் என்ன நடக்குமென்பதை அல்லாஹ் கூறும் போது,
"மேலும் பாவம் செய்தார்களே அத்தகையோர் தங்குமிடம் நரக நெருப்பாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் மீண்டும் அதிலேயே மீட்டப்படுவார்கள். மேலும் நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களே அந்த (நரக) நெருப்பின் வேதனையை சுவைத்துப் பாருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும்" (32:20)
என்று நரகவாதிகள் நரகிலிருந்து தப்பவே முடியாதென எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறான்.
சாதாரண நெருப்பை விடவும் 69 மடங்கு கடுமையான அந்த நெருப்பில் எரிந்து வேதனையை தாங்கவே முடியாமல் இருக்கும் போது அந்நரகவாசிக்கு பசி, தாகம் ஏற்படும். இந்த நேரத்தில் இவர்களது தாகத்தை இல்லாமலாக்க அல்லாஹ் எந்த சூடு சூட்டினுடைய கடைசி எல்லையில் இருக்குமோ அந்தளவுக்கு சூடாக்கப்பட்ட நீரைத்தான் பருகக் கொடுப்பான்.
சாதாரணமாக இந்த உலகில் தேநீர் அருந்துகின்ற போது சாதாரண ,இலேசான சூட்டையே குடிக்கமாட்டோம். காரணம் அந்த சூடு எம்முடைய நாக்கை எறித்து விடுமென பயப்படுகின்றோமே முடிவுற சூடாக்கப்பட்ட அந்த நீரைக் குடிக்கும் போது நரகவாதியினுடைய குடல் சூட்டின் விபரீதத்தினால் சிதைந்து விடுமென்ற செய்தியை அல்குர்ஆனில் படிக்க முடிகின்றது. அப்படியானால் எப்படி எம்மால் அந்த நீரைக்குடிக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
நரகவாதிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அந்நீரை குடிக்கவே வைப்பான் என்பதில் எந்த சந்தேகமுமே கிடையாது.
அது மட்டுமல்லாமல் நரகவாதிகளுக்கு பசி வருகின்ற போது அவர்களுக்கு முற்கள் நிறைந்த ஸக்கூம் என்று சொல்லப்படக்கூடிய மரத்திலிருந்து உணவு வழங்கப்படுவதுடன் நரகவாதிகளது சீழ் கடுமையாக சூடாக்கப்பட்டு அவைகள் தான் உணவாகவும் வழங்கப்படுமென அல்லாஹ் எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறான். (பார்க்க 56:51-55 வரையுள்ள வசனங்களை)
இப்படி நரகவாதிகளது தண்டனைகளை அல்லாஹ் எமக்கு சொல்லிக் காட்டிருப்பதன் மூலம் மனிதன் சத்தியத்தை படித்து சத்தியத்தில் முழுமையாக நுழைய வேண்டுமென அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இது மட்டுமல்லாமல் அதிகமான வசனங்களில் நரகவாதிகள் படுகின்ற வேதனைகளை அவதானிக்க முடிகின்றது. சிந்தனையுள்ள மக்களுக்கு இவைகள் பிரயோசனம் தரும் என்று நினைத்தவனாக இத்துடன் இத்தகவல்களை சுருக்கிக் கொள்கிறேன்.
இறுதியாக அல்லாஹ் கூறக்கூடிய சில வசனங்களை முன்வைத்து விட்டு என்னுடைய ஆக்கத்தை முடிக்கலாமென நினைக்கிறேன்.
"நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை சபித்துவிட்டான். கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்தும் வைத்திருக்கின்றான்.
அவர்கள் என்றென்றும் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள் (அவர்களைக்) காப்பவரையும் (அவர்களுக்கு) உதவி செய்பவரையும் அவர்கள் (அங்கு) காணமாட்டார்கள்.
அவர்களுடைய முகங்கள் ( நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில் 'நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே' என்று கூறுவார்கள்.
மேலும் 'எங்கள் இரட்சகனே நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம் ஆகவே, அவர்கள் எங்களை வழிதவறச் செய்து விட்டார்கள்' ஆகவே 'எங்கள் இரட்சகனே நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக. இன்னும், பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக' (என்றும் கூறுவார்கள்) (33:64-68)
இந்த வசனம் 5 வசனங்களாக மாத்திரம் இருந்தாலும் அதிகமான விடயங்களை சொல்லித் தருகின்றன.
இந்த உலகில் சில வழிகேடர்கள் அவர்களும் வழிகெட்டு வேண்டுமென்று எம்மையும் வழிகெடுக்க முனைந்து அல்லாஹ்வுக்கு இணைவைக்கக்கூடிய காரியங்களை சத்தியத்தை சொல்வது போன்று சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
நாம் இந்த உலகில் வேண்டுமானால் அவ்வழிகேடர்களை நேசர்களாக ஆக்கி அவர்களை பின்பற்றலாம். ஆனால் மறுமையில், நீங்கள் அவர்கள் மீது நேசம் வைத்ததன் காரணமாக கைசேதப்படுவீர்கள். மறுமையில் நீங்கள் அவர்களை அல்லாஹ்விடத்தில் காட்டிக் கொடுத்தாலும் அதுவும் உமக்கு எந்த பிரயோசனத்தையும் தரமாட்டாது.
எனவே எல்லாம் வல்ல இறைவன் எம் ஒவ்வொருவரையும் நேர்வழியில் வாழ்ந்து நேர்வழியில் மரணிக்க அருள்புரிவானாக.
தொகுப்பு…
பர்ஹான் அஹமட் ஸலபி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வேக வைத்த முட்டையில்உள்ள பக்க விளைவுகள்.

முட்டை புரத சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஒரு முழுமையான உணவாகும் . இது நமக்கு வைட்டமின்கள் ந...

Popular Posts