லேபிள்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 – 40)


31) சூரது லுக்மான்
அத்தியாயம் 31
வசனங்கள் 34
லுக்மானுல் ஹகீம் அவர்கள் தனது மகனுக்கு செய்த பொன் எழுத்துக்களில் பதிய வேண்டிய உபதேசங்களை இவ்வத்தியாயத்தின் 12 வது வசனம் தொடக்கம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; 'என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,' என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)
32) சூரதுஸ் ஸஜதா -சிரம் பணிதல்
அத்தியாயம் 32
வசனங்கள் 30
இவ்வத்தியாயத்தின் 15வது வசனத்தில் இறை வசனங்கள் நினைவூட்டப்பட்டால் சிரம் தாழ்தி சுஜுது செய்யும் நல்லடியார்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மேலும் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (32:15)
33) சூரதுல் அஹ்ஸாப் – கூட்டுப் படை
அத்தியாயம் 33
வசனங்கள் 73
மதீனாவை நோக்கி எதிரிகள் கூட்டாக படையெடுத்த அந்த வரலாற்றை அல்லாஹ் இவ்வத்தியாயத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, 'இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்' என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. (அதிகரிக்கவே செய்தது) (33:22)
34) சூரது ஸபா – ஸபா நகரம்
அத்தியாயம் 34
வசனங்கள் 54
யமன் நாட்டின் லபா எனும் ஊர் மக்களுக்கு செய்த அருற்கொடைகளை பற்றியும் அம்மக்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாததனால் அவர்கள் மீது இறை தண்டனை அனுப்பப்பட்டதை இவ்வத்தியாயத்தின் 15 முதல் 21 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
மேலும் அவர்கள் மறுமையை பொய்யாக்கினர்.
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன 'உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்' (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது). (34:15)
35) சூரது பாதிர் – படைப்பவன்
அத்தியாயம் 35
வசனங்கள் 45
அல்லாஹ் தான் இரட்சகன் என்பதனை பறை சாற்றும் படைக்கும் அதிகாரம் தனக்கே உரியது என்பதனை இவ்வத்தியாயத்தின் முதல் வசனத்தில் சுட்டிக்காட்டுகின்றான்.
அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (35:01)
36) சூரது யாஸீன்
அத்தியாயம் 36
வசனங்கள் 83
அல்லாஹ்வின் வல்லமைகள் மற்றும் அவனது வசனங்களை பற்றியும் பேசும் இந்த அத்தியாயத்தின் 70வது வசனம் அல்குர்ஆன் உயிரோடு இருப்பவர்களுக்கே அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக கூறுகின்றான். ஆனால் நமது சமுதாயத்தில் ஒரு சிலர் இன்னும் இந்த அத்தியாயத்தை மரணித்தவர்களுக்கு ஓதிக்கொண்டு இருக்கின்றமை கவலைக்குறியது.
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல. இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. (36:69,70)
37) சூரதுஸ் ஸாப்பாத் – அணிவகுத்து நிற்போர்
அத்தியாயம் 37
வசனங்கள் 182
அணிவகுத்து நிற்க்கக் கூடிய, மறுமையில் விரட்டும் மலக்குமார்கள் மீதும், வேதத்தை ஓதுவோர் மீதும் சத்தியம் செய்து வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனே என இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏகத்துவ கொள்கையை குறிப்பிடுகின்றான்.
"அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
'அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?' (37: 86,87)
38) சூரது ஸாத்
அத்தியாயம் 38
வசனங்கள் 88
இப்லீஸ் நபி ஆதம் அவர்களுக்கு சிரம்பணிய மறுத்து அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்த சம்பவத்தை இந்த அத்தியாயத்தின் கடைசியில் குறிப்பிடுகின்றான். தனக்கு மறுமை நாள் வரை அவகாசம் தருமாறு கேட்ட இப்லீஸ் மனிதர்கள் அனைவரையும் வழிகெடுப்பதாக சத்தியம் செய்தான்.
'இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக' என்று அவன் கேட்டான். (38:79)
அப்பொழுது 'உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்' என்று (இப்லீஸ்) கூறினான். (38:82)
39) சூரதுஸ் ஸுமர் – கூட்டங்கள்
அத்தியாயம் 39
வசனங்கள் 75
நாளை மறுமையில் கூட்டங்கூட்டமாக நரகத்திற்கும், சுவர்கத்திற்கும் மக்கள் கொண்டு வரப்படுவது தொடர்பாக இந்த அத்தியாயத்தின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் எடுத்தியம்புகின்றான்.
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி 'உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?' என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) 'ஆம் (வந்தார்கள்)' என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. (39:71)
40) சூரதுல் காஃபிர் – மன்னிப்பவன்
அத்தியாயம் 40
வசனங்கள் 85
முஃமின் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்து எமது தவ்பாவை (பாவமன்னிப்பு கேட்பதை) அங்கிகரிப்பதாக மேலும் முன் சென்ற சமுதாயங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளையும் எமக்கு படிப்பினைக்காக குறிப்பிடுகின்றான். மேலும் பிரார்தனையின் முக்கியத்துவத்தை பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றான்.
உங்கள் இறைவன் கூறுகிறான்; 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (40:60)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 25 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 – 30)


21) சூரதுல் அன்பியா – நபிமார்கள்
112 வசனங்களைக் கொண்ட அல்குர்ஆனின் 21-வது அத்தியாயமாகும். அல்லாஹ் பல நபிமார்களின் வரலாற்றை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85)
யூனுஸ், ஸகரிய்யா, இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் என பல நபிமார்களை குறிப்பிடுகின்றான்.
22) சூரதுல் ஹஜ் – ஹஜ் கிரியை
22-வது அத்தியாயம் 78 வசனங்ளைக் கொண்டது. நபி இப்ராஹீம் அவர்களுக்கு புனித ஆலயத்தை சுத்தம் செய்துவிட்டு பின்வருமாறு கட்டளை இடுமாறு ஏவுகின்றான்.
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்). (22:27)
23) சூரதுல் முஃமினூன் – நம்பிக்கையாளர்கள்
118 வசனங்களை கொண்டுள்ள 23-வது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நம்பிக்கையாளர்களின் பண்புகளை பட்டியலிடுகின்றான். தொழுகை, வீணான பேச்சுக்களை தவிர்த்தல், ஜக்காத், கற்பை பாதுகாத்தல், அமானிதங்களை பேனுதல், இருதியாக மீண்டும் தொழுகையை ஞாபகப்படுத்துகின்றான்.
இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசை பின்வருமாறு சொல்லுகின்றான்.
"இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.  இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்". (23:10,11)
24) சூரதுன் நூர் – வெளிச்சம்
64 வசனங்களை கொண்ட 24 அத்தியாயம் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இட்டுக் கட்டு சம்பவத்தை குறிப்பிட்டு ஆயிஷா தூய்மையானவர்கள் என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முகமாக 11-26 வசனம் வரை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் இருந்து வஹியின் மூலம் அறிவித்து நயவஞ்கர்களின் முகத்திரையை கிழித்தான்.
25) சூரதுல் புர்கான்- பிரித்தறிவிக்கும் வேதம்
அத்தியாயம் 25 – வசனங்கள் 77
அர்ரஹ்மானின் அடிமைகளின் பண்புகளை இவ்வத்தியாயத்தின் 64 வது வசனம் தொடக்கம் 76 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
உலகத்தாரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தை, அசத்தியத்தை) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (25:01)
26) சூரதுஸ் ஷுஅரா – கவிஞர்கள்
அத்தியாயம்: 26 – வசனங்கள்: 227
நபி மூஸா (அலை), இப்றாஹீம் (அலை) ஆகியோரின் வரலாற்றை குறிப்பிடும் இந்த அத்தியாயத்தின் இறுதியில் "இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்". என 224 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
27) சூரதுன் நம்ல் – எறும்பு
அத்தியாயம் 27 – வசனங்கள் 93
ஸுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய அருற்கொடைகளை வழங்கியிருந்தான். உலகில் உள்ள ஜீவராசிகளை வசப்படுத்திக் கொடுத்து அவை பேசும் மொழியையும் கற்றுக் கொடுத்தான். ஓர் எறும்பு பேசிய சம்பவத்தை இவ்வத்தியாயத்தின் 18-வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
"எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) 'எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)' என்று கூறிற்று".
28) சூரதுல் கஸஸ் – வரலாறு
அத்தியாயம் 28 – வசனங்கள் 88
அல்குர்ஆனின் பல இடங்களில் நபி மூஸா (அலை), அவர்களது சமுதாயத்தை பற்றிய வரலாற்றை அல்லாஹ் எமக்கு அதிகமதிகம் ஞாபகப்படுத்துவதன் மூலம் அந்த சமுதாயத்தை போன்று நாமும் நன்றி கெட்டவர்களாக மாறிவிடக் கூடாது என்பதனை சுட்டிக் காட்டுகின்றான்.
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். (28:03)
29) சூரதுல் அன்கபூத் – சிலந்தி
அத்தியாயம் 29 – வசனங்கள் 69
அல்லாஹ் அல்லாதோரை அழைத்து தமது வணக்கங்களை திருப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு உதாரணமாக சிலந்தியின் வீட்டை (வலையை) குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் (29:41)
30) சூரதுர் ரூம் – ரோம் தேசம்
அத்தியாயம் 30 – வசனங்கள் 60
உலக வல்லரசாக இருந்த ரோம் தேசம் தோல்வியுருவது தொடர்பாகவும் இறை நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் முன்னறிவிப்பு இவ்வத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம் பெருகின்றது. இச்செய்தி முஸ்லிம்களுக்கு மகிழ்சியளித்தது.
"ரோம் தோல்வியடைந்து விட்டது.  அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்". (30:2,3)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 23 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 – 20)


11) சூரதுல் ஹுத் – ஹுத் நபி
அல்குர்ஆனின் 11-வது அத்தியாயம் நபி ஹுத் அவர்களின் சமுதாயமாகிய ஆத் கூட்டத்தை பற்றி இவ்வத்தியாயத்தின் 50 – 60 வது வசனம் வரை குறிப்பிட்டு அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்காது பெருமையடித்ததால் அவர்கள் எப்படி அழிந்து நாசமானார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
12) சூரது யூசுப் – யூசுப் நபி
12-வது அத்தியாயம் யூசுப் நபியின் வாழ்கை வரலாறு மிக அழகான வரலாறு என்று அல்லாஹ் சிறப்பித்துச் சொல்கின்றான். 111 வசனங்களை கொண்ட இவ்வத்தியாயதின் ஆரம்பம் தொடக்கம் பால்கினற்றில் இருந்து அரச சிம்மானம் வரை யூசுப் நபி தமது வாழ்கையில் சந்தித்த நிலைகளை எடுத்துக்காட்டுகின்றான்.
13) சூரதுர் ரஃத் – இடி
அல்குர்ஆனின் 13-வது அத்தியாயம் இடி அல்லாஹ்வை துதி செய்வதாக இவ்வத்தியாயத்தின் 13-வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
14) சூரது இப்ராஹீம் – இப்றாஹீம் நபி
அல்குர்ஆனின் 14-வது அத்தியாயம் தியாகச் செம்மல், ஏகத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அல்லாஹ்வின் நண்பன் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பெயரில் இறக்கப்பட்டுள்ளது. 35-வது வசனம் தொடக்கம் 41வது வசனம் வரை இப்றாஹீம் நபி செய்த பிரார்த்தனைகளை அல்லாஹ் எமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.
(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!' (14:40)
15) சூரதுல் ஹிஜ்ர் – கற்பாறைகள் நிறைந்த பகுதி
அல்குர்ஆனின் 15-வது அத்தியாயம் நபி ஸாலிஹ் (அலை) யின் ஸமூது கூட்டம் வாழ்ந்த "ஹிஜ்ர்" பகுதி கற்பாறைகள் நிறைந்த இப்பகுதி மதீனாவிற்கும், தபூகிற்கும் இடையில் அமைந்துள்ளது. தற்காலத்தில் மதாயின் ஸாலிஹ், அல் உலா என அழைக்கப்படும். இந்த சமூகம் அவர்களுக்கு அனுப்பட்ட நபியை பொய்பித்தமை பற்றி இவ்வத்தியாயத்தின் 80-84 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
16) சூரதுன் நஹ்ல் – தேனீ
அல்குர்ஆனின் 16-வது அத்தியாயத்தின் 68,69 ஆகிய வசனங்களில் தேனி பற்றி குறிப்பிடும் போது…அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்கும்) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
17) சூரதுல் இஸ்ரா – இரவுப் பயணம்
அல்குர்ஆனின் 17-வது அத்தியாயம் இதற்கு பனீ இஸ்ராயீல் (நபி யஃகூப் அவர்களின் சந்ததிகள்) என்று ஒரு பெயரும் உள்ளது. அல்லாஹ் நபியவர்களை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்ற பின்னர் ஏழு வானங்களை தாண்டி மிஃராஜ் பயணம் இடம் பெற்ற சம்பவத்தை இவ்வத்தியாயத்தின் முதலாவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
18) சூரதுல் கஹ்ப் – குகை
அல்குர்ஆனின் 18-வது அத்தியாயம் குகைவாசிகள் தொடர்பாக அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 9 -26 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
அந்த இளைஞர்கள் குகையினுள் புகுந்த போது "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை ( பலனுள்ளதாக) சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள். (18:10)
19) சூரது மர்யம் – நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம்
98 வசனங்களைக் கொண்ட இவ்வத்தியாயம் அல்குர்ஆனின் 19-வது அத்தியாயமாகும். நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம் அம்மையாரைப் பற்றி கிரிஸ்தவ உலகம் கொண்டுள்ள பிழையான கொள்கையில் இருந்து தெளிவுபெருவதற்காக நபி ஈஸா மற்றும் அவர்களது தயார் தொடர்பாக அல்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது..(19:16)

20) சூரது தாஹா – இவ்வத்தியாயத்தின் ஆரம்ப எழுத்துக்களை கொண்டு இப்பெயர் வைக்கப்பட்டது
மூஸா நபியின் வரலாற்றை எடுத்துக்காட்டும் 20-வது அத்தியாயம் 135 வசனங்களைக் கொண்டது. அல்லாஹ்வோடு பேசியதை குறிப்பிடுகின்றான்
'நிச்சயமாக நான் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:14)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 21 ஜனவரி, 2019

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ

 

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ
சென்ற முதலாவது துஆக்கள் அறிமுகத்தில் தூங்கும் முன் சொல்ல வேண்டிய பல துஆகளை உங்களுக்கு நினைவுப் படுத்தி இருந்தேன். இம் முறை தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்பியவுடன் ஓதும் துஆவும், மேலும் காலை தூக்கத்தில் இருந்து எழுந்த உடன் ஓதும் துஆவையும் தருகிறேன், பாடமாக்கி வாழ்க்கையில் நடை முறைப்படுத்தி இறை அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்தவுடன் பிரார்த்தனை
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்:
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَأوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ، أَنْتَ قَيِّمُ السَّمَأوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ، أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ،وَمُحَمَّدٌ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَبِكَ آمَنْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
(அல்லாஹும்ம! லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீஹின்ன. வ லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வ மன்ஃபீஹின்ன வ லக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்க ஹக்குன். வ வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வஸ்ஸாஅத்து ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்ஸகித்து. வ அலைக்க தவக்கல்த்து. வபிக்க ஆமன்த்து. வ இலைக்க அனப்த்து. வ பிக்க காஸகித்து. வ இலைக்க ஹாக்ககித்து. ஃபஃபக்ஃபிர்லீ மா கத்தகித்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. 'லா இலாஹ இல்லா அன்த்த' அல்லது 'லா இலாஹ ஃகைருக்க.)
பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றி உள்ளவர்களின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களை நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும், நீ உண்மையானவன். உன் வாக்கு உண்மையானது. உன்னுடைய கூற்று உண்மை. உன்னுடைய தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமைநாள் உண்மை நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையானவர்கள். முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மையானவர்கள். இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன். உன்னிடம் நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே (என்னை மறுமையில்) முதலில் எழுப்புகிறவன். நீயே (என்னை இம்மையில்) இறுதியில் அனுப்பியவன். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை' அல்லது 'உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
 புகாரி: 6317



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 19 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 – 10)


1) சூரதுல் பாதிஹா – தோற்றுவாய்
அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் மனித சமுதாயத்ததிற்கு நேர்வழிகாட்டும் வேதத்தின் நுழைவாயில் என்று பொருள். சூரதுல் ஹம்து என்றும் இன்னும் பல பெயர்கள் இவ்வத்தியாயத்திற்கு உள்ளன. 7 வசனஙகளை கொண்ட இந்த அத்தியாயத்தின் சாரம்சம் எம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனிடமே நேர்வழி காட்டுமாறு பிரார்த்திப்பதேயாகும்.
2) அல் பகரா – பசு மாடு
அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் உலக வரலாற்றில் அல்லாஹ்வின் கட்டளைகளை அதிகம் கேளி செய்த இஸ்ரவேலர்களோடு தொடர்பான ஒரு செய்தியில் பாசு மாட்டை பற்றி குறிப்பிடுகின்றான். 67 வது வசனம் தொடக்கம் 73 வது வசனம் வரை… "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும்…"
3) ஆலு இம்ரான் -இம்ரானின் சந்ததியினர்
அல்குர்ஆனின் 3வது அத்தியாயம் மர்யம் (அலை) அவர்களின் தந்தையின் பெயர் இம்ரான் ஆகும். அவரது குடும்பம் உலகத்தாரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் என்று அல்லாஹ் நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நல்லரங்கள் செய்வதில் முந்திக் கொண்டார்கள். 33-60 வசனம் வரை அவர்களது வரலாற்றை எடுத்து இயம்புகின்றான்
4) சூரதுன் நிஸா – பெண்கள்
அல்குர்ஆனின் 4-வது அத்தியாயம் பெண்களை சந்தையில் போட்டு விற்று அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பேசக் கூடிய 176 வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்து பெண்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான்.
5) சூரதுல் மாயிதா – உணவு மரவை
அல்குர்ஆனின் 5-வது அத்தியாயம் நபி ஈஸா (அலை) அவர்களிடம் "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா? என்று கேட்டதை இந்த அத்தியாயத்தின் 112-115 வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
6) சூரதுல் அன்ஆம் – கால் நடைகள்
அல்குர்ஆனின் 6-வது அத்தியாயம் இணைவைப்பவர்கள் தங்களது விளைச்சலில், கால்நடைகளில் அல்லாஹ்வுக்கு ஒரு பகுதியையும் அவர்களது கடவுள்களுக்கு ஒரு பகுதியையும் பிரித்து அல்லாஹ்வை தமது கடவுள்களோடு ஒப்பாக்கினர். அல்லாஹ் 136- 139 வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.
7) சூரதுல் அஃராப் – சிகரங்கள்
அல்குர்ஆனின் 7-வது அத்தியாயம். சுவர்க்க வாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையாடளை அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 46-வது வசனம் தொடக்கம் 51 வரை குறிப்பிடுகின்றான். நரகத்தின் சிகரங்களில் இருந்து சுவர்க்க வாசிகளை அழைத்து உதவிகேட்பர் என்கிறான்.
8) சூரதுல் அன்ஃபால் – போரில் கிடைத்த வெற்றிப்பொருள்
அல்குர்ஆனின் 8-வது அத்தியாயத்தின் 1-வது வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்….
போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
9) சூரதுத் தவ்பா – பாவமன்னிப்பு
அல்குர்ஆனின் 9-வது அத்தியாயம் யுத்தகளத்திற்கு செல்லாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் தொடர்பாக அல்லாஹ் 118 வசனத்தில் இப்படிக் குறிப்பிடுகன்றான்…' அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும்..
10) சூரது யூனுஸ் – யூனுஸ் நபி
அல்குர்ஆனின் 10 வது அத்தியாயத்தின் 98 வது வசனத்தில் யூனுஸ் நபியின் சமுதாயம் கடைசி நேரத்தில் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அனைவருமாக சேர்ந்த அல்லாஹ்விடம் இறைஞ்சி மன்றாடிய காரணத்தால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை மன்னித்து அவர்களுக்கு அனுப்ப இருந்த வேதனையை உயர்த்திவிட்டதாக குறிப்பிடுகின்றான்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts