லேபிள்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2018

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி


   அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை! தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே! ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப சுலபமான விஷயமில்லைதான்.
கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம்தான். சொல்லப்போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான். ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்! பத்து மாதங்கள் பட்ட கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப் பறந்துவிடுமே!
கருத்தரித்த நாளில் இருந்து, பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் இந்த இணைப்பின் நோக்கம்.
உங்கள் சார்பாக நாங்கள் கேள்விகளை தொடுக்க, பத்து மாத பராமரிப்பு பற்றி விளக்கங்களும் டிப்ஸ்களும் தந்தார்கள் மகப்பேறு மருத்துவத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்ற டாக்டர் ஞானசெளந்தரி மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் ஆகியோர். வாருங்கள்.. தாய்மைப்பேறின் மகத்துவத்தை அறிவோம்!
கருத்தரித்திருப்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?
மாதவிலக்கு தள்ளிப் போவது கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி. பிறகு, மருத்துவரை அணுகி சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அது கர்ப்பம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். முன்புபோல 40, 45 நாட்களெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விலக்காக வேண்டிய நாளிலிருந்து இரண்டாவது நாளே சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறியுள்ளது.
எந்த வயதில் கருத்தரித்தால் தாய்க்கும் சேய்க்கும் நலம்?
இருபத்தோரு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான் கருவுறுதலுக்கான சரியான காலகட்டம். அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும். கருவுறுதலுக்குக் கைகொடுக் கும் வகையில், மாதாமாதம் ஆரோக்கியமான சினைமுட்டை சீறிவருவதும் இந்த வயதில்தான். முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு கருத்தரித்தல் என்பது தாய்க்கும் அசெளகரியம். குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மாதவிலக்குக்குப் பிறகு எந்தெந்த நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் கருதங்கும்?
மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது நாள்தான் அந்த சுபயோகத் திருநாள். அப்பொழுதுதான் சினைப் பையிலிருந்து சினை முட்டை வெடித்து வெளியே வரும். மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் இந்த சினை முட்டை ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும். அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவில் சேரும் உயிரணு, சினை முட்டையோடு சேர்ந்து கருவாகும்.
இதில் ஆச்சரியமான விஷயம்.. சினைமுட்டை வெடிக்கும் அந்த நாளில் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும் இன்றுதான் 'அந்த' நாள் என்பதை கண்டுபிடிக்கலாம்.
ஆணும் பெண்ணும் உடலால் இணையும் உறவுதான் கருத்தரித்தலின் முதல் நிலை.. ஓ.கே. அதன்பிறகு என்ன நடக்கிறது?
உடல் உறவின்போது பெண்ணின் வஜினாவை அடையும் ஆணின் விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கும். அவை அனைத்தும் பெண்ணின் சினை முட்டையைத் தொட்டுவிட வேண்டும் என்று முட்டி மோதினாலும், கடைசியில் வெற்றி வாய்ப்பு ஒரே ஒரு உயிரணுவுக்குத்தான். உடனே, மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிவிடும். இப்போது வெற்றி பெற்ற உயிரணுவும், சினை முட்டையில் இருக்கும் உட்கருவும் கைகோர்க்க, பெண் கர்ப்பிணி ஆகிறாள்.
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது எப்போது, எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
பெண்குழந்தை பெற்றாள் என்பதற்காகவே மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர்களுக்கு இந்த பதில் அதிர்ச்சியைத் தரும். ஆமாம், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே கணவன்தான். சினைமுட்டையின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான் அதை தீர்மானிக் கிறது.. அதுவும்கூட உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே!
கர்ப்பம் என்றதும் உடனே தலை காட்டும் மசக்கை எதனால் ஏற்படுகிறது?
புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவாகிறதே. துபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே! இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதைத்தான் மசக்கை என்கிறோம். கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும்.
எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம்.. என்று அதுவரை 'கமகமக்குதே' என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.
அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும். வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும். இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது.
டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். 'எதற்கும் அடங்க மாட்டேன்' என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும். இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.
அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும் என்கிறார்களே.. உண்மையா?
கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ.. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல். துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தை களாகவும் இருக்கலாம்! 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்!
முத்துப்பிள்ளை கர்ப்பமா? அப்படியென்றால்?
கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிருக்காமல் குட்டிக் குட்டி உருண்டை களாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் 'முத்துப் பிள்ளை' கர்ப்பம். இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம்.
'ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்' என்கிறார்களே.. அது என்ன? எதனால் ஏற்படுகிறது?
முதலில் ஒரேயொரு முழு 'செல்'லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்!
ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும். ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் 'ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்' என்கிறார்கள்.
ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் 'கரு'வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.
அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்? முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது. கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.
மசக்கைக்கு பின் வேறு ஏதாவது உடல்ரீதியாக பிரச்னை வருமா?
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.
சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
ஆண் குழந்தை என்றால் சீக்கிரமே பிறந்துவிடும் என்கிறார்களே, உண்மையா?
'பத்து மாத பந்தம்' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் கருப்பை ஒரு கருவைச் சுமப்பது, மொத்தம் ஒன்பது மாதம் ஒரு வாரம்தான் (இதுகூட கரு உருவாவதற்கு முன்பு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கணக்குதான்). இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த வித்தியாசமும் கிடையாது. எந்தப் பாகுபாடும் இல்லாமல் இயற்கை இரு வகையான குழந்தைகளையும் சமமான நாட்கள்தான் தாயின் வயிற்றில் இருக்கச் செய்கிறது.
'ட்ரைமெஸ்டர்' என்கிறார்களே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்..
பத்து மாதம் என்று பொதுவாக சொன்னாலும் கர்ப்ப காலம் மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ட்ரைமெஸ்டர் (Trimester) என்கிறோம்.
முதல் மூன்று மாதங்கள் வரை 'முதல் ட்ரைமெஸ்டர்'.
நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை 'இரண்டாவது ட்ரைமெஸ்டர்'..
ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை 'மூன்றாவது ட்ரைமெஸ்டர்!'
முதல் ட்ரைமெஸ்டரில் மசக்கையும், அதனால் உண்டாகும் சோர்வும்தான் முக்கியமான விஷயம். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில்
மசக்கை நின்றுவிடும். வெகு சிலருக்குத்தான் அது மேலும் தொடரும். முதல்
ட்ரைமெஸ்டரில் டாக்டரிடம் செக்கப் செய்துகொண்டால், பொய் கர்ப்பம், முத்துப்பிள்ளை கர்ப்பம் போன்றவற்றை தடுத்துவிடலாம்.
முதல் ட்ரைமெஸ்டரில் கரு, கருப்பையில் அழுத்தமாக தங்கியிருக்காது என்பதால் அதிர்வுகள் கொஞ்சம் அதிகரித்தாலும் கரு கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த காலகட்டத்தில் வெகுதூரம் பயணம் செய்வது என்பது கூடவே கூடாது.
சரி- இந்த ட்ரைமெஸ்டர் காலங்களில் கருவின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
முதல் மாதத்திலேயே கருவுக்கு நரம்பு மண்டலம் உருவாகத் தொடங்கி விடும். நாற்பது நாட்களுக்குள் முதுகுத் தண்டு, இதயம் ஆகியவை ஓரளவு உருவாகி, கருவுக்கான ரத்த ஓட்டமும் ஆரம்பித்துவிடுகிறது. கருவின் ரத்த ஓட்டத்தை தாயோடு இணைக்கும் ரத்தக் குழாயின் மற்றொரு பெயர்தான் தொப்புள்கொடி.
இரண்டாவது மாதத்தில் கருவின் இதயம் மெதுவாகத் துடிக்கவே துவங்கிவிடும். கை, கால்களும் காதுகளும் வடிவம் பெறுவது இப்போதுதான்.
மூன்றாவது மாதம், முகத்தின் அங்கங்கள் முறையாக வளர ஆரம்பிக்கும்.
இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடக்கத்தில் அதாவது, நான்காவது மாதத்தில் வயிறு சற்றே மேடிடத் தொடங்கும். வயிற்றின் தசைகளும் தோலும், கருவின் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி விரிவடையும். (பிரசவத்துக்கு பிறகு, விரிவடைந்த தோல் மறுபடியும் சுருங்கிவிடும். இப்படி எலாஸ்டிக் போல சுருங்கி விரிவதால்தான் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் களுக்கு அடிவயிற்றில் வரிவரியாக கோடுகள் விழுகின்றன. கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து விட்டமின் ஈ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒன்றை அடிவயிறு முழுக்கத் தடவி, அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு குளித்தால், வயிற்றில் வரிகள் விழாது. சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து தடவினாலும் நல்ல பலன் இருக்கும்.
சில பெண்களுக்கு மார்பகம்கூட பெரிதாகி பிறகு சிறிதாகும். அதனால் மார்பகங்களிலும் இதேபோன்று வரிகள் விழலாம். அதற்கும் மேற்கூறிய ஆயில் மஸாஜ் பலனளிக்கும்)
தொல்லைகள் அற்ற கர்ப்ப காலம் என்றால் அது இரண்டாவது ட்ரைமெஸ்டர்தான். மசக்கை நீங்கி, நன்றாக சாப்பிட முடியும். உற்சாகமாக சுழல வைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நன்றாக சுரப்பதால் இந்த ட்ரைமெஸ்டரில் பெண்களின் முகம் பளீரென்று புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்!
குழந்தை ஆண், பெண் என்பதை தீர்மானிக்கும் பிரத்யேக உறுப்புகள் வளர ஆரம்பிப்பது இந்த நான்காம் மாதத்தில்தான்!
ஐந்தாவது மாதத்தில், கிட்டத்தட்ட அரை குழந்தையாகிவிட்ட கரு, அசைந்து தன்னைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் சுகமாக நீச்சலடிக்க ஆரம்பிக்கும்.
ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருவின் அதாவது குழந்தையின் உருவ, உள் உறுப்புகள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். புருவமுடி வளர்ச்சி முதற்கொண்டு முகம் முழுமையாக உருப்பெறும்.
ஆறாவது மாதத்தில் அந்த குழந்தைக்கு மட்டுமேயான தனித்தன்மையாக கை விரல்களில் ரேகைகள் அமையும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்கத்தில் அதாவது, ஏழாம் மாதத்தில் வயிறு பெருத்து விடுவதால் சுலபமாக உட்கார்ந்து எழுந்துகொள்ள முடியாது. மூச்சு வாங்கும். படுத்து எழுவது சிரமமாகத் தோன்றும். இடுப்பு, முதுகில் அவ்வப்போது வலிப்பது போல் இருக்கும். நேரத்துக்கு சாப்பிட்டு, வாக்கிங் போய்வருவது நல்லது.
எட்டாவது மாதத்தில் லேசான அசதி இருக்கும்தான். ஆனால், கை கால் வலி, தலை சுற்றல், கண் இருட்டிக்கொண்டு வருவது மாதிரி பிரச்னைகள் இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும். ரத்தப்போக்கு இருந்தாலோ, நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போலிருந்தாலோ, வலி அதிகம் இருந்தாலோ உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.
மூன்றாவது ட்ரைமெஸ்டருக்கு முன்பே, அதாவது ஏழாவது மாதத்துக்கு முன்பே கருவிலிருக்கும் குழந்தை வெளியேறினால் அது 'அபார்ஷன்'. ஏழு மாதத்துக்குப் பிறகு, தவிர்க்க முடியாத நிலையில் வெளியேறினால் அந்தக் குழந்தையை இன்குபேட்டர் மாதிரி இயந்திரங்களில் வைத்து காப்பாற்றலாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் வர வாய்ப்பு அதிகம்.
குழந்தை வெளியே வர ஏதுவாக ஒன்பதாவது மாதத்தில், தலைப் பாகம் கீழே இருக்கும்படி பொசிஷன் மாறுகிறது!
குழந்தையின் அசைவுகள் பற்றி..?
ஐந்தாவது மாதத்திலேயே குழந்தையின் அசைவை நன்றாக உணரமுடியும். அப்போதிருந்து ஏழாவது மாதம் வரை பனிக்குட நீரில் விஸ்தாரமாக நீச்சலடிக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதால் பின்னாளில் இடநெருக்கடி ரணமாக சும்மா கை, கால்களை மட்டும் அசைக்கும். இதனால், ஐந்தாவது மாதத்தில் குழந்தை உதைத்ததற்கும் இப்போது உதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சிலர் இதனை புரிந்து கொள்ளாமல், 'குழந்தை அசைவு அவ்வளவாக இல்லை' என்று கவலையோடு வருவார்கள். அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க இந்தப் புகார்கள் அதிகரிக்கும்!
ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின் துடிப்பு குறைவாக இருக்கும்.
கடைசி மாதத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்சம் ஐந்து முறை துடித்தாலே போதும். அதுவும் இல்லை என்று தோன்றினால், சிறிதுநேரம் இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.. அப்போதும் குறைவாக இருந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது. ஒருவேளை குழந்தையை தொப்புள் கொடி சுத்தியிருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?
கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும் பொருந்தும். கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய. செக்ஸ் வைத்துக் கொள்வதால்கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே.
அதேபோல், ஒன்பதாவது மாதத்திலும் தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள். இன்பெக்ஷன்' ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இந்த அட்வைஸ்!
அப்படியானால் மற்ற ஐந்து மாதங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?
எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம். கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது. அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது.
கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்கப்படுத்தால் கருவை நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளும் என்கிறார்களே.. உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?
மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல. மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும். இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் 'பி.பி' இறங்கும். அதனால்
தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும், சேய்க்கும் நலம்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?
குழந்தைக்கு நிறம் தரும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை. சிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. மசக்கை சமயத்தில் அது இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும். அதனால்தான் மாறுதலான மணம் மற்றும் சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது. அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது? அதனால்தான் குழந்தையின் கலர் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் பரம்பரையாக வரும் மரபணுக்கள்தான்!
சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான். சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே.. கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக அவசியம். தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும்.
தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். மட்டன், சிக்கன், மீன் வகைகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.
சாப்பாட்டில் மட்டுமல்ல குடிநீர் விஷயத் திலும் கவனம் தேவை. சுத்த மான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம். சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப் படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும்.
இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால் உடல்எடைஅதிகரித்தால்..?
அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும், நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களை விட கர்ப்ப காலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி பல்வேறு பிரச்னைகளைத் தரும். பிரசவத்திலும் சிக்கல் வரும்.
சில பெண்களுக்கு, எட்டாம், ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து, கை கால்கள் வீங்கிவிடும். இவர்கள் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தாலும் உடல் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.
கர்ப்பம் உறுதியானதுமே டாக்டர்கள் பட்டை பட்டையாக இரும்புச் சத்து மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து தொடர்ந்து சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும் என்ற ஒரு பேச்சு பரவலாக இருக்கிறதே?
கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதை நம்பாதீர்கள். ரத்த விருத்திக்காகக் கொடுக் கப்படுவதுதான் இரும்புச் சத்து மாத்திரைகள். கர்ப்பிணிகள் அதிலும் குறிப்பாக இந்திய கர்ப்பிணிகள் ரத்தசோகை நோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஃபோலிக் (folic) ஆசிட் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் ரத்தசோகை நோயை இரும்புச் சத்து மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடுவதன் மூலமே சரிப்படுத்தி விட முடியும்.
சரிவிகித உணவுகளைத் தவறாமல் சாப்பிடுபவர்களாக இருந்தாலும், மேற்கொண்டு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை, மருந்துகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
சிலருக்கு கருப்பையில் புண் வருகிறதே.. ஏன்?
அதற்காகத்தான் கர்ப்பமான ஆறு முதல் எட்டாம் மாதத்திற்குள் டி.டி எனப்படும் 'டெட்டனஸ் டாக்ஸாய்டு' தடுப்பூசியை இரண்டு முறை கட்டாயம் போடச் சொல் கிறோம். பிரசவ சமயத்தில் தாய்க்கும், சேய்க்கும் கிருமித் தொற்று ஏற்படாமல் தடுக்க வும் இந்தத் தடுப்பூசி உதவும்.
இரண்டு தடுப்பூசியும் முடிந்தபின் அல்ட்ரா ஸ்கேனிங் செய்வது நல்லது. பிரசவ நேரத்தில் வரும் எத்தனையோ பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கு ஸ்கேனிங் மிக அவசியம். வயிற்றில் குழந்தை சரியான நிலையில் தான் இருக்கிறதா என்று சந்தேகமின்றித் தெரிந்துகொள்ளவும் இது பயன்படும்.
கருவுறுதலுக்கு முன் விசேஷ பராமரிப்பு எதுவும் தேவையா?
கருத்தரிக்கும் பெண்ணின் உடல் நிலை சாதாரணமாக இருக்கும்பட்சத்தில், கருவுறுதலுக்கு முன் பிரத்யேகப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு, இதயநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள்.
உள்ளவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் முன்பே, முழு உடல் பரிசோதனை செய்து, மருந்துகள் எடுத்துக் கொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்ற நிலையில் வைத்துக்கொண்ட பிறகே கருவுறுதல் நல்லது. இதனால் கர்ப்பகாலம் மற்றும் பேறுகாலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். அவற்றைப் பற்றிகொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம்.
சர்க்கரை நோய்:
சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கர்ப்ப காலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக தேவைதான். மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் களும்கூட இன்சுலின் பயன்படுத்தினால் நல்லது.
ஏன் மாத்திரை வேண்டாம் என்றால்.. அதனால் குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாத்திரையில் இருக்கும் வீரியம் தாயிடமிருந்து குழந்தைக்கும் போகும்.ஆனால், இன்சுலின் அப்படி குழந்தைக்குப் போகாது. வளர்ந்த பிறகு அதாவது டீன் ஏஜ் கால கட்டத்தில் சர்க்கரை நோய்க்கு ஆளானவர்களாக இருந்தால் ஊசி, மாத்திரை இரண்டையும் தவிர்த்துவிட்டு உணவு, உடற்பயிற்சி மூலமே சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
ஏற்கெனவே குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் ஐந்தாம் மாதத்தில் 'குளுகோஸ் டாலரன்ஸ் பரிசோதனை' செய்து சர்க்கரையின் அளவைத் தெரிந்து அதற்கேற்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அடுத்ததாக உயர் ரத்த அழுத்தம். ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் (பி.பி)
இருப்பவர் களுக்கு அதன் பாதிப்பு ஏழாவது மாதத்திலிருந்துதான் தெரியத் தொடங்கும். கால் வீக்கம் முக்கியமான அறிகுறி. அடிக்கடி தலைசுற்றி படபடப்பு வரும். சாதாரணகர்ப்பிணிகளைவிட இவர்களுக்கு அடிக்கடி ரத்த
 இதய நோய்
சிறுவயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் கருத்தரிப்பதற்கு முன்போ அல்லது கர்ப்பம் உறுதியான உடனேயோ டாக்டரிடம் தனக்கு இதய நோய் இருப்பதையும், அதற்காக சாப்பிடும் மருந்துகளையும் பற்றி தெளிவாக சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் கூடுதல் கவனத்தோடு அந்தத் தாயையும், அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் எந்த ஆபத்தும் இன்றி காப்பாற்ற முடியும்.
இப்போதெல்லாம் இதய நோய் உள்ளவர்கள்தான் என்றில்லை.. பொதுவாக கர்ப்பிணிகள் அனைவரையுமே ஈ.ஸி.ஜி, கார்டியாக் எக்கோ போன்ற இதயம் தொடர்பான பிரச்னை களைத் துல்லியமாக அறிவிக்கும் சோதனை களைச் செய்யச் சொல்கிறோம். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை, வருமுன் காக்கும் நல்ல விஷயமாகத்தான் இது இருக்கிறது.
வலிப்பு
வலிப்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால். சிறுவயதிலிருந்தோ அல்லது மணமான பிறகோ வலிப்பு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை எடுத்து முதலில் வலிப்பை குணப்படுத்திவிட்டு, பிறகு கர்ப்பம் தரிக்கலாம் என்றுதான் பெரும்பாலும் நினைக் கின்றனர்.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரு முறை வலிப்பு வந்துவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் அது திரும்ப வரலாம். முழுக்க அதனை குணப்படுத்தி விட்டோம் என்று சொல்ல முடியாது. அதனால் வலிப்புக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டேதான் கர்ப்பம் ஆக வேண்டி இருக்கும்! குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று வலிப்புக்கான மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தக்கூடாது. அது தாயின்உயிருக்கே உலை வைத்துவிடலாம்.
இவர்களுக்குப் பிரசவ சமயத்தில் டாக்டரின் அதீத கவனிப்பு தேவை. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 'பிரசவ வலி வரட்டும்.. பிறகு, மருத்துவ மனைக்கு போகலாம்' என்று காத்திருக்காமல் பிரசவ தேதி இதுவாகத்தான் இருக்கும் என்று டாக்டர் குறிப்பிடும் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னமே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது.
வலிப்பு நோய் உள்ளவர் கள் கருவுற்றதும் மருத்துவரிடம் வரும்போதே, தனக்கு அந்நோய் உள்ளது என்று கூறிவிடுவது நலம். அப்படி சொல்லாமல் விடும் பட்சத்தில், பிரசவ சமயத்தில் வலிப்பு வந்தால் அது பிரசவகால வலிப்பா, இல்லை எப்போதும் வரும் வலிப்பா எனத் தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் குழப்பம் ஏற்படும்.
ஆஸ்துமா:
இந்த பாதிப்பு உள்ளவர் களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். திருவிழா போன்ற நெரிசல் மிகுந்த இடங்களிலும், தூசி நிறைந்த இடங்களிலும் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதையும்மீறி ஏதேனும் பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனை யுடன் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக டி.பி. எனப்படும் காசநோய்.
இந்த நோயை வந்த வேகத்திலேயே விரட்டும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறிவிட்டது. ஆனாலும் டி.பி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான மருந்து சாப்பிடும் சமயத்தில் கருத்தரிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் டி.பிக்கான மருந்துகளின் வீரியம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்!
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? இதுபற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகிறதே..
பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் காய்ச்சல், தலைவலி என்று எந்த தொல்லை வந்தாலும் அதற்கான மருந்துகளை சாப்பிட மறுக்கிறார்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில்! தானாக மருந்துக் கடைகளில் கேட்டு எதையாவது வாங்கி விழுங்குவதுதான் தவறே தவிர, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை. சொல்லப் போனால், அப்போது மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் விடுவதுதான் தவறு. தொந்தரவுகள் முற்றிவிடும். கர்ப்பகாலத்தில் என்ன பிரச்னை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள். காய்ச்சலை சரிப்படுத்த கர்ப்பிணி சாப்பிடும் மருந்தால் கருவுக்கு பாதிப்பு வராது. ஆனால், மருந்து சாப்பிடாமல் காய்ச்சலை வளரவிடும்போதுதான் அந்தக் காய்ச்சல் கிருமிகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்த நாளில் பிரசவம் நடைபெறும் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், மிகச்சரியாக இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதை கர்ப்பிணியே உணர்ந்து கொள்வது எப்போது?
பிரசவம் எப்போது நடக்கும் என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது. கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு தோராயமாகத்தான் பிரசவ தேதி கணிக்கப்படுகிறது.
ஆனாலும், பிரசவத்துக்கான அறிகுறியாக இயற்கையே மூன்று விதமாக எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது. பிரசவ வலி, ஷோ, பனிக் குடம் உடைவது ஆகியவைதான் அந்த மூன்று அறிகுறிகள்.
பிரசவ வலி என்பது மாதவிலக்கு சமயத்தில் வருவதுபோல் இருக்கும். இடுப்பின் மேலிருந்து கீழாக வலி எடுக்க ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு வலிக்கும்.ஹார்மோன் சுரப்பு விகித மாறுபாடுதான் இதற்குக் காரணம்.
கருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து தலை நன்றாக இறங்கியதும் ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபடும். உடனே வலி ஏற்பட்டு பிறகு கருப்பையின் கழுத்து மெள்ள விரிவடையும். பிறகு, கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து மெள்ள மெள்ள தலை, நெஞ்சு என்று கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும்.
கருப்பை அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் இல்லை. பத்து நிமிடம், இருபதுநிமிடம் என்று விட்டு விட்டுத்தான் பிரசவவலி வரும். அப்படி வருவதுதான் தாய்க்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. வலி வராத அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வலி ஏற்பட்டவுடன் இந்த ரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறது!
சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறுவதுதான் 'ஷோ' என்று சொல்லப்படுகிறது. கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித் ததும் அங்கே இந்த திரவம் சுரக்கும்.
கருவிலிருக்கும் குழந்தை, கருப்பை வழியாக இறங்கத் தொடங்கியதுமே குழந்தையைச் சுற்றியிருக்கும் பலூன் போன்ற பனிக்குடத் தின் ஒரு பகுதியும் இறங்கும். சில சமயம் அந்த பலூன் பாகம் உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் நீர், பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதை புரிந்துகொள்ளாமல் சில பெண்கள் தங்களுக்கு அதிகப்படியான சிறுநீர் வெளியேறுகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.
வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனிக்குடம் உடைந்ததுமே மருத்துவ மனைக்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மொத்த பனிக்குட நீரும் வழிந்துவிடும். இது பிரசவத்தை சிக்கலாக்கி விடும்.
இந்தப் பனிக்குட நீர், இளநீர் மாதிரி இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். மாறாக, மஞ்சள் அல்லது பழுப்பு வண்ணத்தில் இருந்தால் உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வாரிசை வரவேற்க ஒரு தாய் உடலளவில் தயாராவது போல, மனதளவிலும் தயாராவது முக்கியம். அதிலும் பிரசவம் என்னும் அற்புதமான நிகழ்வை எதிர்கொள்ள சந்தோஷமும் ஆவலுமாகக் காத்திருத்தல் அவசியம். பிரசவத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மனதைக் குழப்பிக்கொள்ளாமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருத்தல், நல்ல படங்களை பார்த்தல், இனிய இசை கேட்டல் போன்றவை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும். அழுமூஞ்சி சீரியல் களை இந்த சமயத்திலாவது பார்க்காமல் தவிர்க்கலாமே!
புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வு தான் என்பதை கூடியவரை நினைவில் வைத்துக்கொண்டால் பிரசவ நேர பயத்தையும் டென்ஷனையும் தவிர்க்கலாம்.
கர்ப்ப காலம் முடிந்து, பேறுகாலம் வந்துவிட்டது என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும். பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, 45 நொடி மட்டுமே வலி இருக்கும். பிறகு சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலி வரும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து, பிரசவம் எளிதாக, சுகமாக நடைபெற உதவும்.
பிரசவ வலி ஆரம்பித்ததும் கருப்பையின் வாய் திறந்து குழந்தை வெளியே வர குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், வலியை அதிகப்படுத்த ஆக்ஸிடோஸின் டிரிப் தரப்படும். அப்புறமும் வலி அதிகமாகவில்லை என்றால் டாக்டரே பனிக்குடத்தை உடைத்துவிட்டு பிரசவம் பார்ப்பார்.
கருப்பை வாய் திறந்து குழந்தையின் தலை தெரிந்தவுடன் குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் வேலைகள் ஆரம்பமாகும். அந்த நேரத்தில், குழந்தை வெளியே வர இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பில் சிக்கல் இருப்பின் வஜினாவை லேசாகக் கத்தரித்து துளை விரிவாக்கப்படும். 'எபிசியோட்டமி என்று சொல்லப்படும் இந்த காரியத்தை பெரும்பாலும் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்குத்தான் செய்வார்கள்.
குழந்தையின் தலை தெரிய ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும். கர்ப்பிணி எந்த அளவுக்கு முக்கி முக்கிக் குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறாரோ அந்த அளவுக்கு குழந்தை சீக்கிரமாகவும் சுலபமாக வும் வெளியே வரும்.
சவுக்கால் அடித்ததுபோலவும், உலகிலுள்ள அத்தனை வலிகளையும் ஒருசேர போட்டு அழுத்தியது போலவும் பிரசவ வலி கஷ்டப்படுத்தினாலும், அத்தனையும் தான்பெற்ற குழந்தையை முதன்முதலாக பார்க்கும் அந்த மந்திர நிமிடத்தில் மாயமாக மறைந்துவிடும்.
ஆர். ஹெச். டைப் என்கிறார்களே.. அப்படியென்றால் என்ன?
ரத்தத்தில் A, B, O, AB என நான்கு முக்கியமான வகைகள் உண்டு. இதுதவிர, ரத்தத்தில் Rh பாசிட்டிவ், Rh நெகட்டிவ் என்ற இருபிரிவுகளும் உண்டு. தில் Rh நெகட்டிவ் உள்ள தாய் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். அம்மா Rh நெகட்டிவ்வாக இருந்து, அப்பா Rh பாசிட்டிவ்வாக இருந்து குழந்தை Rh பாசிட்டிவ்வாக உருவாகி டுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பிரசவ நேரத்தில் அம்மாவின் ரத்தத்தில் அவருடைய ரத்தத்துடன் தொடர்பில்லாத 'ஆன்டிபாடி' உருவாகிறது. அதாவது குழந்தை கருப்பையில் விட்டுச் செல்கிற பாசிட்டிவ் ரத்தத்தால் இது உருவாகிறது.
முதல் பிரசவத்தின்போதுதான் குழந்தை இப்படி ஒரு 'ஆன்டிபாடி'யை விட்டுச் செல்வதால் அப்போது குழந்தைக்கோ அம்மாவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அந்த தாய் மீண்டும் கருவுறும்போது இரண்டாவது குழந்தைக்குத்தான் மிகப் பெரிய பாதிப்புகளை அது உண்டாக்குகிறது.
இதைத் தவிர்க்க, முதல் குழந்தை பிறந்ததுமே குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்து அதன் வகையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் ரத்தம் பாசிட்டிவ் வகையாக இருக்கிற பட்சத்தில் இதற்கென்றே இருக்கிற விசேஷ ஊசியை 24 மணி நேரத்துக் குள் அந்த தாய்க்குப் போட்டால் இந்த ஆன்டிபாடி உருவாகி இரண்டாவது குழந்தைக்கு எதிரியாகாமல் தடுக்க முடியும்.
முதல் டிரைமெஸ்டரில் ரத்தப் பரிசோதனை செய்யும்போதே அம்மாவின் ரத்த வகையைத் தெரிந்து கொண்டால் இந்த விஷயத் தில் கவனத்துடன் இருக்க முடியும்.
Rh பாசிட்டிவ் அம்மாக்களுக்கு இந்தப் பிரச்னையெல்லாம் இல்லை. அதேபோல், தாய் Rh நெகட்டிவ்வாக இருப்பினும் குழந்தையும் Rh நெகட்டிவ்வாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை.
இரண்டாம் முறை அம்மாவாக போகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
முதல் பிரசவத்தில் அந்த அனுபவம் புதிது என்பதால் எப்படியிருக்குமோ என்ற பயம்தான் பிரதானமாக இருக்கும். அடுத்ததில் அந்த பயம் தெளிந்திருக்கும் என்பதால் அவ்வளவு டென்ஷன் இருக்காது.
முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு (பெல்விஸ் சிறியதாக இருந்தால் வேறு வழியேஇல்லை. இரண்டாவது குழந்தை யையும் அறுவைசிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும்).
முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், 'ப்ரீ ப்ரெக்னென்சி கவுன்சிலிங்' செய்து கொள்வது நல்லது. அப்படி செய்யும்போது, முன்னெச் சரிக்கையாக தாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழி முறைகள் விளக்கப்படும். பாதுகாப்பான பிரசவத்துக்கு அது உதவும்.
இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் முதல் குழந்தை. தனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், எங்கே தன் தாயின் கவனமும் பாசமும் மொத்த மாய் அந்தக் குழந்தைக்கே போய்விடுமோ என்ற ஏக்கம் முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடங்கும்.
அந்த சமயத்தில் தாயுடன் தந்தையும் அந்தக் குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்ட வேண்டும். `நீதாண்டா செல்லம் வீட்டுக்கு மூத்த கன்னுக் குட்டி. வரப்போற பாப்பாவை நீதான் பத்திரமா பாத்துக்கணும்.
அது உன்னை அண்ணா/அக்கானு கூப்பிடுமே.. அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே' என்ற ரீதியில் பேசி, மனதளவில் தயார் செய்ய வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய், `பாப்பாக்கு என்ன பேர் வைக்கலாம்.. சொல்லு கண்ணு' என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை ஜோராக உங்களைவிட ஆர்வமாக தனது உடன்பிறப்பை வரவேற்கத் தயாராக இருக்கும்.
9 மாதங்கள் வரை குறிப்பிடத் தகுந்த உடல் மாற்றங்களோ, பிரச்னைகளோ இல்லாதவரை, வழக்கமான தடுப்பூசி, ஸ்கேனிங் போன்றவை தொடரலாம். பிரசவத்துக்கு முந்தின நாள் வரை அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்த்த தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு!
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.
ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.
வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.
முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.
ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.
அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.
இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.
மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.
அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.
ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.
சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.
மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.
தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்
 கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்ப ப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.
காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.
பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்து விடும்.முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை. சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)
உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம். ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும். வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்
* கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
 * குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.
 * மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.
 * எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.
 * அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
 * கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
 * அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
 * சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.
 * மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.
 * கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
 * தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 * மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.
 * அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
 * இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்


 வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்   அனுராதா ராமன் 
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, 'கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்' நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.
இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு இடமில்லை என்கிறது தற்போது ஆளும் பாஜக. ஆனால் முகலாயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருத மொழியை முன்னிறுத்தினார்கள் என்கிறது உங்களுடைய புத்தகமான 'கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்'. இந்த இரு வேறு கருத்துகளும் எப்படி ஒத்துப்போகும்?
இரண்டு கருத்துகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு முக்கியக் கேள்விகளை முன்வைக்கிறேன்.
முதலாவதாக, இந்த இரண்டில் எந்தப் பார்வைக்கு அழுத்தமான வரலாற்று ஆதாரம் உள்ளது? இரண்டாவதாக, இந்திய வரலாற்றிலிருந்து முகலாயர்களை பாஜக அழிக்க நினைப்பதற்கான அரசியல் காரணங்கள் என்ன?
வரலாற்று உண்மைகளை நேர்மையாக வெளிக்கொணருவதே என் புத்தகத்தின் நோக்கம். இந்திய வரலாற்றில் பெரும் பங்கு வகித்தவர்கள் முகலாயர்கள். அதேபோல, அவர்களுடைய சாம்ராஜ்ஜியத்தில் சம்ஸ்கிருத மொழிக்குத் தனி முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இத்தகைய உண்மைகள் பாஜகவுக்கு அசவுகரியமாக இருக்கலாம். ஆனால் வரலாற்றாசிரியர் என்ற முறையில் எத்தகைய சமரசமும் இன்றியே இதை நான் சொல்கிறேன். இந்தியாவின் கடந்த காலத்தை மிகவும் பலவீனமான முறையில் மாற்றி எழுத முயல்கிறது பாஜக என்பதையும் என் புத்தகம் நிரூபிக்கும்.
இதில் நகைமுரண் என்னவென்றால், ஒருபுறம், இந்த அரசு சம்ஸ்கிருதத்தைத் தூக்கிநிறுத்தப் பாடுபடுகிறது. மறுபுறம் முகலாயர்களை வெறுக்கிறது.
சம்ஸ்கிருதத்தின் ஒரு அங்கத்தை மட்டுமே தூக்கிப்பிடிக்கிறது பாஜக. இதிகாசங்கள், பண்டைய கவிதைகள் மட்டுமின்றி சம்ஸ்கிருத இலக்கியங்கள் எத்தனையோ உள்ளன. பாஜகவினர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய காளிதாசனை மட்டும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதே சம்ஸ்கிருத மொழியில் முகலாயர்களைப் பற்றி 16-ம் மற்றும் 17-ம் நூற்றாண்டில் சமணர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும்படி மாணவர்களிடம் சொல்வார்களா?
உங்களைப் பொருத்தவரை சம்ஸ்கிருதம் மற்றும் பாரசீகத்தை வளர்த்தெடுத்த முகலாய மன்னர்கள் யார்?
அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் உள்ளிட்டவர்களின் ஆட்சியில் சம்ஸ்கிருதம் ராஜ சபையில் கவுரவிக்கப்பட்டது. அதற்காகக் கொடுங்கோல் ஆட்சியாளராகக் கருதப்படும் அவுரங்கசீப் சம்ஸ்கிருதத்தை வெறுத்தார் என நினைத்துக்கொள்ளக்கூடாது. வரலாற்று நாயகர்களில் அநியாயத்துக்குத் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்தான்.
அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருதம் முக்கியத்துவம் இழந்தது உண்மைதான். ஆனால் அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்திக்கு வழிவிட்டு மெதுவாகச் சம்ஸ்கிருதம் விடைபெற்றுச் செல்லத் துவங்கிய காலம் 17-ம் நூற்றாண்டு. ஷாஜஹானின் ஆட்சிக் காலத்திலேயே இந்தி இலக்கியவாதிகள் முன்னிறுத்தப்பட்டு சம்ஸ்கிருதம் மெல்ல நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருதம் முற்றிலுமாகக் காணாமல்போனது ஒரு தற்செயல் நிகழ்வே.
இரண்டாவதாக, 1640,1650-களில் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை சம்ஸ்கிருத மொழியில் பதிந்தவர் மன்னர் தாரா ஷிகவ். அவரை வீழ்த்திய பின்னரே அரியணை ஏறினார் அவுரங்கசீப். ஆட்சி மாற்றத்தை நிறுவ சம்ஸ்கிருத மொழியினால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரத் தொடர்புகளை அவர் துண்டித்தார். ஆக, சம்ஸ்கிருத மொழியை முகலாயர்கள் கைவிடக் காரணம் அரசியலே அன்றி மதமோ, கலாச்சாரமோ அல்ல.
இச்சூழலில், மற்றொரு வரலாற்று உண்மையையும் வெளிப்படுத்திவிடுகிறேன். திறந்த மனப்பான்மையும் சகிப்புத்தன்மையும் கொண்ட மதச்சார்பற்ற இஸ்லாமிய மன்னர் அக்பர் என்னும் பிம்பமும் கட்டுக்கதையே. உதாரணத்துக்கு, ஒரு முறை சமண ஞானிகளைத் தனது தர்பாரில் சந்தித்தபோது, ஓர்இறைக் கொள்கை இல்லாவிடில் அவர்களை அரசவையிலிருந்து வெளியேற்றுவேன் என எச்சரித்தாராம் அக்பர்.
மேட்டுக்குடி முகலாயர்கள், இந்து பிராமணர்கள், சமணர்கள் இடையில் எத்தகைய கலாச்சாரப் பகிர்வு அன்று இருந்தது?
அன்று, முகலாயர்களுக்கும் பிராமணர்களுக்கும் பொதுவான மொழி இந்தியாக இருந்தது. ஒரு சம்ஸ்கிருத நூலை பாரசீகத்தில் மொழிபெயர்க்க வேண்டுமானால் முதலில் பிராமணர்கள் அதை வாசிப்பார்கள். வாய்மொழியாக இந்தியில் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். அதைக் கேட்டுப் பாரசீகத்தில் முகலாயர்கள் எழுதிக்கொள்வார்கள்.
அதேபோல, சமணர்களும் பிராமணர்களும் முகலாயர்களுக்கு ஜோதிடம் கூறும் வழக்கம் இருந்தது. முகலாய ராஜ வம்சத்துக்கு பிராமணர்கள் சம்ஸ்கிருதத்தில் ஜாதகம் எழுதுவார்கள். மன்னர் ஜஹாங்கிருக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் ஜாதக தோஷம் நிவர்த்தி அடைய சமணர்கள் பூஜை நடத்தியுள்ளனர். என் புத்தகத்தில் இதுகுறித்தெல்லாம் விரிவாக எழுதியுள்ளேன்.
வரலாற்றைத் திரிக்க இரு நோக்கங்கள் அவர்களுக்கு இருப்பதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று, முகலாய வரலாற்றை அழிப்பது. மற்றொன்று, மதக் கலவரங்கள் நிறைந்தது இந்திய வரலாறு எனப் பதிவுசெய்வது. அப்படியானால், நீங்கள் சொல்ல வருவது என்ன, முகலாயர்களின் காலத்தில் மதக் கலவரங்களே நடைபெறவில்லை என்பதுதான் உங்கள் வாதமா?
அப்படிச் சொல்லவில்லை. முகலாயர்கள் ஆண்ட இந்தியாவில் வன்முறைக்குப் பஞ்சமில்லை. வன்முறையும், கலவரமும் நிறைந்ததுதான் மனித வரலாறு என்பதில் எனக்கும் மாற்றுக் கருதில்லை. அக்பர் ஆண்டபோதும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மதமா என்பதே என் கேள்வி.
அரசியல் எதிரிகள் பலருடன் மூர்க்கமாகப் போரிட்டவர்கள் முகலாயர்கள். அவர்கள் சண்டையிட்டது யாருடன் எனத் தேடிப்பார்த்தால் அதில் ராஜபுத்திரர், இஸ்லாமியர், இந்துக்கள் இப்படிப் பலரை அடையாளம் காண முடியும். ஆக, இது ஆட்சிக்கான போரே தவிர மதம் மற்றும் கலாச்சாரம்சார் போர் அல்ல. ஆனால் பண்டைய இந்தியாவில் மதத்துக்குப் பெரிய இடமில்லை என்று சொன்னால் பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இதையே ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களுக்கு மேலும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். மதச் சகிப்புத்தன்மையை மேற்கத்தியர்கள் கற்றுக்கொண்டதே முகலாயர்களிடமிருந்துதான் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அதாவது முகலாயர் ஆட்சியின்போது இந்தியா வந்த ஐரோப்பியர்கள் கண்கூடாக அவர்களுடைய மதச் சகிப்புத்தன்மை கண்டு பூரித்துப்போய்த் தாங்களும் பின்பற்ற முயன்றார்கள்.
பாஜக அரசு குற்றம்சாட்டுவதைப் போல வரலாற்றை விளக்கும் முறையில் மார்க்சியர்களிடமும் சிக்கல் உள்ளதா?
என்னைப் பொருத்தவரை மார்க்சிய வரலாற்றுப் பார்வை குறுகலானதுதான். வரலாறு என்றாலே வர்க்கம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்தான் என அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் கடந்த காலத்தை விளக்க நவீன வரலாற்றாசிரியர்களிடம் பல அணுகுமுறைகள் உள்ளன.
வரலாற்றில் முகலாயர்களுக்குப் பங்குள்ளது என்பதை ஒரு இந்து தேசியவாதிகளால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. இத்தகைய புரிதலை எப்படி மாற்றப்போகிறீர்கள்?
உலகெங்கிலும் இப்படித்தான், வரலாற்று உண்மைகளைச் சொல்லும்போதெல்லாம் அதைப் பலரால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை. இந்தியாவில் இது அதிகம். அதே நேரத்தில் மதரீதியாக வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் இந்தியாவில் நடந்துவருவதைப் பலரும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வரலாற்று ஆய்வுகள் கைகொடுக்கும்.
வரலாற்றைத் திரித்து எழுதினால் என்னவாகும்?
வரலாற்றைத் திரிப்பதும், சுருக்குவதும் அபாயகரமானது. முதலாவதாகச் சகிப்புத்தன்மை அற்றுப்போகும். ஏற்கனவே இந்தச் சிக்கலை 21-ம் நூற்றாண்டு அனுபவித்துவருகிறது. அடுத்து,கடந்த காலத்தைக் கொச்சைப்படுத்துகிறோம். இந்தியாவுக்கு அற்புதமான வரலாறு உள்ளது. ஈடு இணையற்ற இலக்கியச் செழுமை உள்ளது. ஆனால் குறுகலான பார்வை நம் ஞானக் கண்ணை மறைத்துவிடும்.
ஆங்கிலேயரின் காலத்தில்தான் (1757 முதல் 1947 வரை) முகலாயர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே முதன்முதலில் பிளவு ஏற்படுத்தப்பட்டது என்பது உங்களுடைய வாதம். தற்போது மோடி அரசாங்கம் அதே உத்தியைப் பிரயோகிக்கிறது.
மிகவும் அபாயகரமான போக்கு இது. என்னைக் கேட்டால் இந்தியாவின் மகிமையே அதன் பன்முகத்தன்மைதான். அத்தகைய செழுமைவாய்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் பலர் முயற்சிக்கத் தவறுவதால்தான் பாஜக வரலாற்றை மாற்றி எழுதத் துணிகிறது.
தமிழில்: ம. சுசித்ரா நன்றி: தி இந்து (ஆங்கிலம்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 7 டிசம்பர், 2018

கருங்கோழி மருத்துவ குணம்!


அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம்.
மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.
இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன என்றும், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையம், இதில் உள்ள கொழுப்பு தரமானது. எல்லா நாட்டுக்கோழிகளையும் போலவே இதன் ஒயிட் மீட் ஆரோக்கியமானது. இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது எனக் குறிப்பிட்டு உள்ளது.
மத்தியப்பிரதேஷத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.
கடக்நாத் கோழியின் முட்டைகளும் கறுப்பு நிறத்தில் உள்ளன. எல்லா நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
"இந்தக் கோழிகள் அதிக மருத்துவகுணம் வாய்ந்தவை. ஆண்மையைப் பெருக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.
இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்பபடுகிறது
ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளதுகொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்.
இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளதுசீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 5 டிசம்பர், 2018

அற்புதம் செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்!


  மனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் தன்மைகொண்ட நுண்ணூட்டச்சத்துகளை ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறோம்.
ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தடுக்க முடியாது. ஏனெனில், நாம் சுவாசிப்பதாலும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தினாலும், நமது நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாட்டினாலும் இயல்பாகவே ஆக்ஸிடன்ட்கள் உருவாகின்றன. இவற்றைச் சரி செய்யாவிட்டால், இளமையில் முதுமை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். பீட்டாகரோட்டின், லைக்கோபீன், வைட்டமின் ஏ, சி, இ இவற்றுடன் துத்தநாகம், செலினியம் போன்ற தாதுஉப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.
பீட்டாகரோட்டின்
புரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட், மக்காச்சோளம், மாம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை, பீச், தக்காளி போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.
வைட்டமின் சி
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
வைட்டமின் இ
பப்பாளி, பூசணிக்காய், சூரியகாந்தி விதை, பசலைக்கீரை, அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் இ உள்ளது.
துத்தநாகம், செலினியம்
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், வாதுமை போன்ற நட்ஸ்களில் துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளன.
பூண்டு, வெங்காயம், இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு, கிராம்பு, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, சிறுதானியங்கள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்றவற்றிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 3 டிசம்பர், 2018

ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......


- பேரா.இஸ்மாயில் ஹஸனீ
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள்  அறிவிக்கிறார்கள்
 என் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் முஜாஹிர்களை தவிர  முஜாஹிர்கள் என்பவர் யார் எனில் அவர் இரவில் ஒரு பாவச்செயலைசெய்கிறார்
  பின்காலையில் எழுந்து மறுநாள் தன் முந்தின நாள் இரவில் செய்த காரியத்தை பகிரங்கப்படுத்துகிறார். இரவில் அவர் செய்ததை அல்லாஹ் மறைத்துவைத்திருந்தான் ஆனால் அவனோ அந்த திறையைக் கிழிந்த்துவிட்டான்
 என் நண்பர் ஒருவரோடு வீதியில் நடந்துகொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு ஒரு கூட்டத்தினர் அமர்ந்துஉரையாடிக்கொண்டிருந்தனர்.  அவர்களை நெருங்க நெருங்க அவர்களின் சம்பாஷணையில் சில வார்த்தைகள் என் காதில்விழ ஆரம்பித்தது.  அதில் ஒருவர் தம் இளமைக்காலத்து சுயபுராணத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.
 தன் பாலிய வயதில்" விலைமாது " என்றால் யார்? என்று அறிய நாடி தான் அதில் பெற்ற அனுபவங்களை தன் சக நண்பர்களோடுபகிர்ந்துகொள்கிறார் அதை கேட்டு சுற்றி இருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்".  திடுக்குற்று விழித்தேன்.
 இதோடு கலைந்தது போனது என் கனவு, உயிரற்று போனது என் உறக்கமும்.
 இது நான் கண்ட சமீபத்திய கனவு, ஏன் இப்படி ஒரு கனவு ? என்று என் மூளையில் மின்மினிகள் வட்டமிட என் சிந்தைக்கு விருந்தாய், அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்த்து இந்த நபிமொழி.
 இறைவன் தனக்கென 99 பெயர்களை வகுத்து வைத்துள்ளான். அந்த பெயர்களின் வெளிப்பாடக இவ்வுலகில் தன் இயக்கங்களை நிகழ்த்துகிறான். அப்படி அவனுக்குள்ள விசேஷ பெயர்களில் முக்கியமானவைகளில் ஒன்று " சத்தார்" என்பதாகும்.  சத்தார் என்பதன் பொருள் " மறைப்பவன்" என்பதாகும்.
  இன்று நாம் நல்ல தந்தையாக/ தாயாக, மகனாக/மகளாக, கணவனாக/ மனைவியாக, முதலாளியாக/ தொழிலாளியாக வலம்  வந்து கொண்டிருக்கிறோம்.
 கொஞ்சம்  யோசித்து பாருங்கள் நம் உண்மை நிலைகள் அடுத்தவர்களுக்கு தெரிய ஆரம்பித்தால், நம் மானம் மரியாதைகள் என்னவாகும், அல்லது நாம் வாழ்க்கையின் நிமிடங்கள் தான் சந்தோஷமாக கரையுமா?
 வாழ்வில்  அடுத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக நாம் மறைத்த பல விஷயங்களை நாம் நம் மனதில் சுமைகளாக தூக்கிக்கொண்டு திரிகிறோம். இந்த விஷயத்தின் இறைவன் தன் படைப்புகள் மீது காட்டிய அற்புதமான கருணையின் விளைவு. அவர்கள் தாங்கள் செய்த தவறுகளோடு மானம் மரியாதை இழக்காமல் வாழ்கிறார்கள்.
 நான் மேலே சுட்டிக்காட்டிய கனவைப்போன்று, இன்று நம் வாழ்வில் நடந்துகொண்டுள்ள நிஜங்கள் எத்தனை. தவறை செய்துவிட்டு அதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சபைகளில் வெளிப்படுத்துகிறோம், இன்னும் ஒரு படி மேலே போய் அதை தன் பெருமையின் அடையாளமாகவும் பயன்படுத்தவும் விரும்புகிறோம். தன் தவறுகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற நிலைக்கூட நாம் மறந்துவிடுகிறோம்.
 மனித மரியாதைகள் (Human values) மறுக்கப்படுகின்ற இந்த காலத்தில், மனிதனே தன் மரியாதைகளை இழப்பதை பெருமையாக நிலைக்கிற காலையில். நபி பெருமானின் வார்த்தைகள் எத்துணை ஆக்கப்பூர்வமானவை என்று இன்று புரியமுடிகிறது.
 இந்த வார்த்தைகள் தான் மனிதனின் (Stand) நிலைப்பாட்டை, அவன் எங்கிருக்கிறான் என்பதை அவனுக்கே அடையாளப்படுத்துகின்றன. சுயத்தை இழந்து போலியான மரியாதைகளில் தன்னை துழைத்துவிட்ட மனித சமுதாயம். மீண்டும் தன் சுயதேடுதலில் இருங்குவதற்கு இதைவிட அழமான அறிவுரைகள் எங்கு கிடைக்கும். 
 இது இஸ்லாமியர்களுக்கு என்று சொல்வதைவிட பொதுவாக மனித சமூதாயத்திற்கான ஒரு அறைகூவல். இன்று இந்த ஹதீஸை உரைகல்லாக்கி நம் வாழ்க்கையை அதில் தீட்டிப்பார்தால், கிடைக்கிற விடைகளோ எத்தனை  எத்தனை..
 பொதுவாக நம்மை படைத்தவன் இறைவன் வகுத்த நீதி "அறைகளில் நடப்பதை வீதிக்கொண்டு வருவதை அவன் விரும்புவதில்லை ". ஏனெனில், அழகு என்பதற்கு அளவுகோலே ஆடையோடு இருப்பது தான்.
 ஆடை அவிப்புகள் ஒரு காலமும் அழகாக ஆகிவிடாது, அது ஆபாசம் மட்டுமே. சிந்தனையில் கூட வன்புணர்ச்சியால் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு வேண்டுமானால் அது அழகாக தெரியலாம்.
" விதிவிலக்குகள் வழிகாட்டிகளாக ஆகா" என்பது ஒரு விதி.
இறைவன் வகுத்த நியதிகளில் எவை மறைவாக உள்ளதோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட்வேண்டியவையே. உதாரணத்திற்கு ஒன்று " நோன்பு காலங்களில் நோன்பு பிடிக்க முடியாதவர் என்று ஒரு பேணுதல் உள்ள மருத்துவரால்  வழிகாட்டப்படுகிற ஒருவர் நோன்பை விட மார்க்க சட்டங்கள் அனுமதி அளிக்கிறது.
 ஆனால், காலம் நோன்புடையதாக இருப்பதால் அவர்கள் அதன் கண்ணியத்தை பேணி மற்ற நோன்பாளிகள் வெளியில் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இவரும் இருக்கவேண்டும். தன் உணவு உண்ண வேண்டிய நிர்பந்த நிலை ஏற்பட்டால் தான் உண்ணுவதை பிறர் பார்க்காத வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும் .
  என்ன ஒரு சிறந்த வழிகாட்டுதலை செய்து தந்திருக்கிறார்கள் நபியவர்கள். இதே அடிப்படையில் தான் இஸ்லாமிய அடையாளங்களை பொது இடங்களில் வெளிப்படுத்தினால் கேவலமாக இருக்கும். என்று மறைத்தாலும், மறைக்க வேண்டிய வைகளை வெளிப்படுதினாலும் அவர் இந்த வகையிலே கணிக்கப்படுவார்.
இன்றை காலை நம் வாழ்வில் கூட எத்தணையோ நிகழ்வுகள், பாவமான காரியங்களை செய்துவிட்டு இறைவன் அவற்றை மறைத்திருக்க நாமாக அவற்றை பகிரங்கப்படுத்தி நம் பாவமன்னிப்பிற்கு நாமே தடைபோட்டுக்கொள்கிறோம்.
 இது போன்ற நிகழ்வுகள் இனி நம் வாழ்வில் நிகழாமல் இருப்பதற்கு கவனமாக இருப்போமாக. ஆமீன்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

தண்ணீரைத் தூய்மைசெய்யும் தேற்றாங்கொட்டையைப் பற்றி தெரியுமா?

கலங்கல் நீரினைத் தூய்மைப் படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங் கொட்டைக்கு உண்டு என்பதே ஆ...

Popular Posts