லேபிள்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

நமக்கு நாமே நலம் காப்போம்!

நமக்கு நாமே நலம் காப்போம்!
எளிய 30 வழிகள்

ஆரோக்கியம் என்பது சிவந்த நிறத்திலோ, கட்டுடலிலோ இல்லை. சில ஆரோக்கியமான பழக்கவழங்கங்களைத் தவறாமல் கடைப்பிடித்தாலே போதும், உடலினை உறுதி செய்து, நோயின்றி வாழலாம்; 'நாங்கள் ஆரோக்கியமான குடும்பம்' என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உங்களை நீங்களே தயார்ப்படுத்திக்கொள்ள உதவும் எளிய வழிகள் இங்கே...

குண்டான உடல்வாகு ஆரோக்கியம் அல்ல! 
'குழந்தைகள் கொழுகொழுவென இருப்பது ஆரோக்கியம்' என்ற பரவலான கருத்து இருக்கிறது. உண்மையில் கொழுகொழு குழந்தைகள் பலர் ஆரோக்கியமாக இ்ருப்பது இல்லை என்பதே உண்மை. இரும்பு, வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு இந்திய குழந்தைகளிடம் அதிக அளவில் காணப்படுகிறது. பேரீச்சை, காய்ந்த திராட்சை, அத்திப்பழம், மாதுளை, நெல்லி, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு, முருங்கை மற்றும் கீரைகளை அவசியம் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்; நன்கு விளையாட விட வேண்டும்.



அளவுடன் பால்
குழந்தைகள், பதின் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதினர் பால், தயிர் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். ஆனால், 40 வயதுக்கு மேற்பட்டோர்
  பால் (ஆடை நீக்கப்பட்டது), தயிர்  ஆகியவற்றை அளவுடன் சாப்பிட வேண்டும்.  ஏனெனில், பால் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். பித்தப்பையில் கற்கள் மற்றும் அசிடிட்டி உள்ளவர்கள் பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

இருமுறை தலைக்குளியல்
வாரத்துக்கு இருமுறையாவது தலைக்குக் குளிப்பது அவசியம். இதனால், சளி, இருமல் போன்ற தொல்லைகள் குறையும். மேலும், உடலின் வெப்பநிலை (BMT-Basal Metabolic Temperature) சமநிலையாகும். வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய்க் குளியல் எடுப்பதைக் கட்டாயமாக்கலாம். தலைக்குக் குளிக்கும்போது மிதமான நீரில் குளிக்கலாம். குளிர்ந்த மற்றும் வெந்நீரில் குளித்தால், சருமம் வறட்சியாகலாம். ஆஸ்துமா, சைனஸ் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் குளியல் முறையைப் பின்பற்றலாம். மூக்கின் மூலம் சுவாசிக்கும் இன்ஹேலரை, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

சாப்பிட்ட பின் வெந்நீர்
உடல்பருமானானவர்களும் உணவில் நல்லெண்ணெய், பாதாம், தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம். இவை நல்ல கொழுப்பு என்பதால்,
  உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் ஒரு கிளாஸ் வெந்நீர் குடிப்பது நல்லது.  இது செரிமானத்தை சீராக்கும், அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைத்துவிடும் என்பதால், சாப்பாட்டுக்குப் பின் வெந்நீர் அவசியம் தேவை.

ஒரு கப் கிரீன் டீ
தினமும் ஒரு முறை சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ அருந்துவது நல்லது. அசிடிட்டி உருவாகும் என்பதால், வெறும் வயிற்றில் அருந்தாமல், உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம். கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ஒவ்வொரு செல்லையும் புத்துயிர் பெறச்செய்து முதுமையைத் தாமதப்படுத்தும். மேலும், இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

வெந்தயக் குடிநீர்
சர்க்கரை நோயும், வாயு
  தொடர்பான பிரச்னையும் பெரும்பாலானோருக்கு உள்ளன. இரண்டாலும் பலவித உடல்நலப் பிரச்னைகள் வருகின்றன. உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முட்டைகோஸ் ஆகியவற்றை வாயுத் தொல்லை இருப்பவர்கள் தவிர்க்கலாம். வெந்நீரில் வெந்தயத்தைப் போட்டு தினமும் வெந்தயக் குடிநீர் குடித்துவந்தால், வாயுத் தொல்லைகள் நீங்கும்; பசி தூண்டப்படும்; அசிடிட்டி பிரச்னை சரியாகும். சர்க்கரை நோயாளிகள், முதல் நாள் இரவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை அருந்துவது நல்ல பலனைத் தரும்.

'ஜில்' உணவுகள் வேண்டாம்
குளிர்ச்சியான உணவு மற்றும் பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது. தங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் வெயில் நேரத்தில் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரத்துக்கு மேல் இவற்றை அருந்தினால், உடலின் வெப்பநிலை மாறி முதியவர்களுக்குப் பக்கவாதம்கூட ஏற்படலாம். மாத்திரைகளை குளிச்சியான நீரில் விழுங்கவே கூடாது. மாலை மற்றும் இரவு வேளைகளில் வெதுவெதுப்பான உணவு மற்றும் பானங்களை அருந்துவதே சரி. இதயப் பிரச்னை உள்ளோர், மிகவும் குளிர்ச்சியான மற்றும் சூடான நீரைத் தவிர்ப்பதே நல்லது. மிதமான சூட்டில் பருகலாம்.

முக்கால் வயிறு சாப்பாடு
பரோட்டா, அசைவ உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகள் செரிக்கத் தாமதமாகும். இதன் விளைவாக, நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், செரிமானக் கோளாறுகள் வரலாம். சாப்பிட்ட உடன் படுக்காமல், உணவுக்குப் பின் ஒன்றரை மணி நேரம் கழித்துப் படுக்கலாம். முழு வயிற்றுக்கும் சாப்பிடாமல் முக்கால் வயிறு சாப்பிடலாம். இரவு உணவை 7-8 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.

ஐந்து வேளை உணவு
சர்க்கரை நோயாளி, அசிடிட்டி உள்ளவர்கள் உணவை ஐந்தாறு வேளையாகப் பிரித்து உண்ணலாம். வயிறு காலியாக இருந்து மீண்டும் உணவு செரிக்கத் தொடங்கினால், சர்க்கரையின் அளவில் ஏற்றம் இறக்கம் ஏற்படும். சமநிலையாக இருக்க ஐந்து வேளையாகப் பிரித்து உண்ணுவது சரி.

தூக்கத்தைக் கெடுக்கும் கலர் திரை
இரவு தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே மொபைல், டி.வி., ஐபேட், வீடியோ கேம்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இந்த டிஜிட்டல் திரைகளில் உள்ள சின்னச் சின்ன பிக்ஸல்கள் மூளையில் பதிந்து, அதை பிஸியாக்கிவிடும். ஓய்வைப் பறித்து, தூக்கமின்மை, மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். உடல் கடிகாரத்தை (சர்காடியன் கிளாக்) குழப்பி, ஆரோக்கியத்தைப் பாதிக்கும். புத்தக வாசிப்பு, மெல்லிய இசை கேட்டல், நறுமணங்களை சுவாசித்தல் போன்றவை மனதை அமைதிப்படுத்தி நல்ல ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

நோயின் வாசல் மலச்சிக்கல்
நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது மலச்சிக்கல். நீர் அருந்துவது மட்டும் மலச்சிக்கலை சரிசெய்யாது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். தினமும் உணவில், முடிந்தவரை கீரைகள், அவரை, பீன்ஸ், முருங்கை, பீர்க்கங்காய், பழங்களில் கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கிர்ணி போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இருமுறை பல் துலக்குங்கள்
காலையிலும் இரவிலும் பல் துலக்குவது நல்லது. இனிப்புகள் சாப்பிட்ட பின், வாய் கொப்புளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை பேக்டு சோடா, எலுமிச்சைச் சாறு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பல் துலக்குவது நல்லது. இது, கிருமிகள் மற்றும் துர்நாற்றத்தை அழிக்கும். உணவில் ஆரஞ்சு, திராட்சை, நெல்லி, கொய்யா ஆகியவை பற்களை உறுதியாக்கும்.

இறுக்கமான உடைகளைத் தவிர்க்கலாம்
இறுக்கமான ஜீன்ஸ், காற்றுப் புகாத உடைகள் அணிவதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படலாம். வெப்ப நிலை அதிகமாகி, குழந்தைப்பேறு பிரச்னை வரலாம். பருவகாலத்துக்கு ஏற்ற உடைகள் அணியலாம். பொதுவாக, நம் தட்பவெப்ப நிலைக்குப் பருத்தி ஆடைகள் சிறந்தவை.

செக்ஸ்
உடலுறவுக்கு முன்னோ பின்னோ, சிறுநீர், மலம் கழித்துவிடுவது சரி. பாலுடன் பாதாம், பேரீச்சை, முந்திரி, தேன் கலந்து குடிக்க, பாலுணர்வுக்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் கிடைக்கலாம்.

ஐந்து நாட்களுக்கு உடற்பயிற்சி
அரை மணி நேரம் வீதம், வாரத்துக்கு ஐந்து நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவுவதுடன், எல்லாவித ஆரோக்கியப் பிரச்னைகளையும் தடுக்கும். கடினமான பயிற்சிகள்கூட வேண்டாம். நடை, நீச்சல், நடனம், மெது ஓட்டம் போன்றவற்றில் எது முடியுமோ, அதைத் தேர்ந்தெடுத்து அவசியமாகப் பழகுவது நல்லது.

நற்பழக்கங்கள் தரும் நிரந்தர ஆரோக்கியம்!
காலை மற்றும் மதியம் அதிகமாக நீர் அருந்த வேண்டும். மாலை மற்றும் இரவில் குறைவாக நீர் அருந்த வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது உடலைச் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், நச்சுக்கள், வயிற்றுப்பூச்சிகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சாதாரண சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு உடனே மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். ஒரு நாள் கழித்தும் நீடித்தால், மருத்துவரிடம் செல்லலாம்.
மடமடவென நீர் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி, மெதுவாகக் குடித்து, அவை உமிழ்நீருடன் கலந்து நீர் அருந்தும் பழக்கத்துக்கு மாறலாம். காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்தும் பழக்கம் நல்லது.
வியர்வை வந்த உடனே முகம் கழுவுதல், குளித்தல் நல்லது அல்ல. அதுபோல, வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே வேகமாக நீர் குடிப்பதும் நல்லது அல்ல. ஏனெனில், சிலருக்கு தலைவலி, சளித்தொல்லை ஏற்படக்கூடும்.

மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிட எந்தத் தயக்கமும் தேவை இல்லை. இது உயிரைக் குடிக்கும் பழக்கம் என்பதால், இப்போதே முடிவெடுப்பது நல்லது. மது மற்றும் புகைப் பழக்கத்தை நிறுத்தியவர்கள் தினமும் காய்ந்த திராட்சையை 20 கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவர,  உடலில் உள்ள நச்சுக்கள் குறையும். நிக்கோட்டினின் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படும். நச்சுக்கள் கலந்த ரத்தத்தை ஓரளவுக்குத் தூய்மைப்படுத்தும்.
அவசரமாக, உணவை மென்று விழுங்காமல், அரையும் குறையுமாக விழுங்கினால், சர்க்கரை நோயாளிகளுக்கு, உணவுக்குழாய் அடைத்துக்கொண்டு கூடுதல் தொல்லைகளைத் தரும்.
உணவில் உப்பைக் குறைத்துக்கொள்வது நல்லது. தூள் உப்பைவிட, கல் உப்பில் தேவையான சத்துக்கள் இருக்கும்.

எந்தக் காரணத்துக்காகவும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. அந்த நாளுக்கான சக்தியைத் தருவது காலை உணவுதான்.
பால், மாதுளை, முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், பேரீச்சை ஆகியவை தூக்கத்தைத் தரும்.
இயர்போன்களை 20 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு காதில் இயர்போன் வைத்து, மறுகாதில் இயர்போன் வைக்காமல் பேசலாம். செல்போனை ஒரே காதில்வைத்து நீண்ட நேரம் பேசக் கூடாது. வலது, இடது என மாற்றி மாற்றிப் பேசலாம்.

பேட்டரி குறைவாக இருக்கும்போது செல்போன் பேசினால், அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மூளை, கண்களைப் பாதிக்கலாம். எனவே, இயன்றவரை அதைத் தவிர்ப்பது நலம்.
உணவு, மருந்து சாப்பிட்ட உடனே படுப்பது தவறு. நிற்பது, உட்காருவது, நின்ற நிலையில் வேலை செய்வது செரிமானத்துக்கு நல்லது.
பல் தேய்த்த உடனே சூடான அல்லது சில்லென்ற உணவு அல்லது டிரிங்கைக் குடிக்கக் கூடாது. பல் கூச்சம் ஏற்படலாம்.
தினமும் ஐந்தாறு முறை காபி அல்லது டீ குடிப்பது தவறு. ஒருமுறை குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு.  அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும் எடுத்துக்கொள்வதும் தவறானது.
ஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். காலை உணவில் எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...

பருத்திப்பால்
காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு
  செய்பவர்கள்,  இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்!



பூண்டுக் கஞ்சி
பூண்டு ஒரு கை அளவு, சாரணைவேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), சுக்கு (சிறிதளவு), முருங்கை இலை (ஒரு கைப்பிடி), புழுங்கல் அரிசி (தேவையான அளவு) மற்றும் பசும்பால் அல்லது தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, வாரம் ஒரு முறை காலை வேளையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.
காலையில் டிபன் வகைகளுக்குச் சட்னி சாப்பிட்டுச் சலிப்படைந்தவர்கள், பயறு, கடலை, காராமணி, துவரை, உளுந்து, மொச்சை ஆகியவற்றை கடுகு, மிளகு, பெருங்காயம், சுக்குடன் சேர்த்து, கறியாகச் சமைத்து, இட்லி, புட்டு, தோசை, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களில் சமைத்த உணவுகளுடன் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

பழைய சோறு
இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீரூற்றி வைக்கலாம். நீரூற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றுடன் மோர் சேர்த்தும் சாப்பிடலாம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. நிசிநீர் எனப்படும் பழைய சோற்று நீர் அருந்த, நாவறட்சி நீங்கி, உடல் வெப்பம் தணியும்.

இஞ்சி - தேன்
இஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும். செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.

வெந்தய நீர்
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

வெந்தயக் களி
100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.

உளுந்தங்களி
பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

காலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்
விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.
குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.
பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம்.

வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும்.
தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.

எதைத் தவிர்க்க வேண்டும்?
காலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

வாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா? வாடகை வீடு... A to Z கைடு!

வாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா? வாடகை வீடு... A to Z கைடு!


இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை,  இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும் குடும்பத்தினரிடம் வசூலித்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் வாடகைக்கு  வீடு  பிடிப்பதென்பது குதிரைக்கொம்பான செயலாகும். சென்னையில் வாடகை வீடுகளின் வாடகைப் பணத்தை உயர்த்திய பெருமை தொழில் நுட்பத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்களையே சாரும். இது ஒரு புறம் இருக்க வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தரும் தரகர்களின் கொடுமை அதற்கு மேல். ஒரு வீடு வாடகைக்கு இவர்கள் எடுத்துக் கொடுத்தால், நம் அந்த வீட்டுக்குக் கொடுக்கும் ஒருமாத வாடகையை இவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தரகர்களின் எழுதப்படாத சட்டம்.  ஆதலால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய காரணத்தால், தற்போது வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதின் காரணத்தினாலேயே இக்கட்டுரை எழுதுகிறேன்.


வீட்டு வாடகைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள்:               
• குடித்தனக்காரர்களின் உரிமைகள்
• வீட்டுக்காரர்களின் கடமைகள்
• குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்
• நியாய வாடகை
• வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்
• காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்
• வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய  உதவும் சட்டவிதிகள்
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்.
மேற்குறிப்பிட்ட கூறுகளை விளக்கி இதன்மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரர்களின் உறவை மேம்படுத்துவோம். குறிப்பாக "வீட்டு உரிமையாளர்", "குடித்தனக்காரர்", "குடியிருப்பு பகுதி", "கட்டிடப்பகுதி" இதுபோன்ற சொற்களுக்கு சட்டவிளக்கத்தை உள்ளடக்கி புரிந்துகொள்ள வேண்டும்.
வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரருக்கு இடையிலான வாடகை ஒப்பந்தம்:
 வீட்டை வாடகை அல்லது குத்தகைக்கு விடும் வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரருடன் முறையான வாடகை ஒப்பந்தத்தை ஆவணமாக செய்துகொள்வது முறையானதாக இருக்கும். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தவிதிகளை எழுதிகொள்வதின் மூலம் இருவரும் வரையரைக்குட்பட்டு கட்டுப்பட்டு இருக்க அது உதவும்.
குடித்தனக்காரர்களின் உரிமைகள்:
குடித்தனக்காரர் வாடகை ஒப்பந்தத்தில் என்ன வாடகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைக் கொடுத்தாலே போதுமானது. மேலும் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கூறுவாறேயானால் அவர் அதை மூன்று மாதத்திற்க்கு முன்னரே தக்கக் காரணத்தோடு தெரியப்படுத்தவேண்டும். ஒப்பந்த காலகட்டத்திற்க்குள் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால் ஒப்பந்த காலம் வரை குடியிருக்க இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமையிருக்கிறது. அதேபோல் வணிகக் கட்டிடமாக இருப்பின் தொழில் செய்பவர் வாடகைதாரராக இருந்தால் அவர் இறந்த பின் அவருடைய பங்குதாரர் இருப்பின் அவர் குடியிருக்க உரிமை உள்ளது. தக்கக்காரணமின்றி குடித்தனக்காரர் அனுபவித்துவரும் அடிப்படை வசதிகள் எதனையும் தடுத்து நிறுத்தவோ அல்லது நீக்கவோ உரிமையாளர் செய்யக்கூடாது.
வீட்டுக்காரர்களின் கடமைகள்:
வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரிடம் வாங்கும் மாதவாடகைக்கு பற்றுச்சீட்டு கொடுக்கவேண்டும். மேலும் வீட்டு வரிச் சுமைகளை குடித்தனக்காரர்களின் மீது செலுத்தக்கூடாது.
வாடகை ஒப்பந்தத்தின் காலம் வரை அதற்கான வாடகை மாற்றப்படக்கூடாது காலி செய்ய கூறும் போது தக்க மூன்று மாத முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
வாடகைக் கட்டுப்பாட்டு சட்டக் கூறுகளைத்தாண்டி வேறுவிதமாக வெளியேற்றக்கூடாது.
குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்:
குடித்தனக்காரர் எந்தவித தேவைக்காக குடித்தனம் வந்தாரோ  அந்தத்தேவைக்காக மட்டுமே அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தவேண்டும்.
குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து பூட்டிவைக்கக் கூடாது. மேலும் வேறு யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது. காலிசெய்வதற்கு முன் முறையான முன் அறிவிப்பு அறிவிக்கவேண்டும்.
நியாய வாடகை:
1).இதன் கீழ் வரும் கிளைப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு கட்டிடத்தின் குடித்தனக்காரர் அல்லது வீட்டுக்காரர் அதற்கென மனுச் செய்து கொண்டால், தாம் தக்கதெனக்கருதும் ஒரு பரிசீலனையை  நடத்திய பிறகு அத்தகைய கட்டிடத்துக்கு உரிய நியாய வாடகையினைக் கட்டுப்பாட்டாளர் நிர்ணயிக்கலாம்.
2).குடியிருப்பதற்காகவுள்ள ஒரு கட்டிடத்தின் அடக்க விலையில் ஒன்பது சதவீதந்தான் அதனுடைய நியாய வாடகையாக இருக்க வேண்டும்.
3).குடியிருப்பில்லாத ஒரு கட்டிடத்திற்குரிய நியாய வாடகை, அந்தக் கட்டிடத்தின் அடக்க விலையில் பன்னிரண்டு சதவீதமாக இருக்க வேண்டும்.
குறிப்பு:
ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதனதன் தரத்துக்கும், பரப்பளவுக்கும், விலைமதிப்புக்கும், அதில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளுக்கும் ஏற்ப, அதற்குரிய நியாய வாடகையைக் கேட்கும் உரிமை குடித்தனக்காரருக்கு மட்டுமின்றி வீட்டுக்காரருக்கும் இருக்கிறது.
வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்:
குடித்தனக்காரர் அந்தக் கட்டிடத்துக்குரிய வாடகையை, வீட்டுக்காரருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய நாளுக்குப் பதினைந்து நாட்கள் சென்ற பிறகும் அல்லது அத்தகைய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டிராதபோது, ஒரு மாதத்தின் வாடகையை அடுத்த மாதக் கடைசி வரையில் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முன் வரவில்லையென்றால் அல்லது,
1). அந்தக் குடித்தனக்காரர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டுக்காரரின் எழுத்து மூலமான அனுமதியின்றி,
அ).தமக்குள்ள குத்தகை உரிமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் அல்லது அத்தகைய உரிமை தமக்கு வழங்கப்படாதிருக்கும்போது அந்தக் கட்டிடம் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்கிறார். அல்லது,
ஆ).அவ்வீடு  எத்தகைய உபயோகத்துக்காக வாடகைக்கு விடப்பட்டதோ, அதற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது,
2). அத்தகைய கட்டிடத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதனைப் பாழ்படுத்தியிருக்கிறார் அல்லது பாழ்படுத்தப்படும்படி விட்டிருக்கிறார். அல்லது
3). ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்துக்காக அமலில் உள்ள எந்தச் சட்டப்படியாவது அந்தக் குடித்தனக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது,
4).அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இருப்பவர்களுக்கும் அல்லது அந்தக் கட்டிடத்தின் வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும் தொல்லை தரக்கூடிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் பொறுப்பாகிறார். அல்லது,
5).ஒரு மலை வாசஸ்தலம் அல்லாத இடத்தில் அந்தக்கட்டிடம் இருந்தால், அதில் தக்கக் காரணமின்றி, நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் குடியிருக்கவில்லை.
6).வீட்டுக்காரருக்கு அந்தவீட்டில் உள்ள உரிமையை மறுத்தும் தமக்கு அந்தவீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு உரிமை உண்டென்று கோரும் குடித்தனக்காரரின் மறுப்பும் கோரிக்கையும் நியாயமற்றவை.
என்பதைப் பற்றிக் கட்டுப்பாட்டாளருக்குத் தெளிவு ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பை (கட்டிடத்தை) வீட்டுக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம், அப்படி இல்லையெனில் அந்த விண்ணப்பத்தைத் தள்ளிவிடலாம்.
காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்:
மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடித்தனக்காரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. காரணமின்றி வீட்டு உரிமையாளர் காலி செய்யுமாறு மிரட்டினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிரந்தர உறுத்துக்கட்டளை வழக்கை(SUIT FOR PERMANENT INJUNCTION) தாக்கல் செய்து வாடகை நீதிமன்ற ஆணையின்றி தன்னைக் காலிசெய்யவைக்க முடியாது என்று வழக்காடலாம்.
வாடகையை கொடுக்கும் மற்றும் பெறும் முறை :
  வீட்டுக்காரர் வாடகைக்குரிய ரசீதை பணம் பெறும்போது அளிக்கவேண்டும். வீட்டுக்காரர் வாடகையை காரணமின்றி பெற மறுத்தால் வாடகைதாரர் 10 நாட்கள் நேரம் கொடுத்து வங்கி கணக்கு எண் மற்றும் பெயர் கேட்டு ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வங்கியின் எண்ணை கொடுத்தால் ஒவ்வொரு மாத வாடகையையும் அந்த வங்கியில் செலுத்தவேண்டும். வங்கி எண்ணை வீட்டுக்காரர் தரமறுத்தால் மாத வாடகையை பணவிடைத்தாள் (MONEY ORDER) மூலம் செலவை கழித்துக்கொண்டு அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட தொகையை வீட்டுக்காரர் பெற மறுத்துவிட்டால் ஒவ்வொரு மாத வாடகையையும் வாடகைதாரர் வாடகை நீதிமன்றத்தில் செலுத்தி வரவேண்டும்.
வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகளை வழக்குரைஞர்களை அணுகித் தெரிந்துக்கொண்டு அவர்களுடைய உதவியுடன் வழக்கை தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ளலாம்.
சொந்த வீடு சென்ற இதழில் வெளியான 'வாடகைதாரரா நீங்கள்..?' என்னும் கட்டுரையைத் தொடர்ந்து வாசகர்கள் பலர் வாடகை வீடு குறித்து சட்டரீதியான சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். இது தொடர்பான நமது கேள்விகளுக்கு வழக்கறிஞர் விஸ்வநாதன் பதில்களை அளிக்கிறார்.
1. வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?
வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.
2 வாடகைக் கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா?
வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.
வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.
வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.
3. வாடகைதாரர்களைக் காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன?
உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை:
வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.
வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.
வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால்…
வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது… அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால்… (மலைவாசஸ் தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது).
4. வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா?
வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.
5. வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?
சென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.
6. தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது – இது போன்று உரிமையாளர்கள் தொந்தரவு தரும்போது அதற்கான இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா?
தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.
வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாராட்டாமல் இருக்க சில விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது அவசியம்!
புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிடம் போய் எதற்காக வீடு கட்டியிருக் கிறீர்கள் என்று கேளுங்கள்... சிலர், ''வசதி வந்துவிட்டது; கட்டிவிட்டேன்'' என்பார்கள். வேறு சிலர், ''சொந்தக்காரர்கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் கட்டிவிட்டேன்'' என்பார்கள். ஆனால், பெரும் பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்தவீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்த போது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான்! ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்காமல் சொந்த வீடு கட்டிக் கொண்டு தப்பிப் போனவர்கள் தான் ஏராளம்! ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றால், இன்னொரு பக்கம் வாடகைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட்டுக் காரரையே துரத்திவிட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை! இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட அவசியமில்லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது நல்லது!
இதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கியமான வற்றை பட்டியல்போட்டுச் சொன்னார் அவர்.
அக்ரிமென்ட் அவசியம்..!
''வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முதலில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம். பிற் காலத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பார்.
வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடும். அதனால், 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.
பொதுவாக, வீட்டு உரிமை யாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா? ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத் துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவு வதாக அமைந்துவிடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண்டாடிவிட முடியாது.
ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை!
பதிவுக் கட்டணம் எவ்வளவு?
அக்ரிமென்டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப்பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு சுமாராக ஒரு சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண்டுகள் வரை போட்டுக் கொள்ளலாம்.
அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும். அதனால், கூடுமான வரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையும் அதில் சேர்த்துவிடுவது நல்லது.
அட்வான்ஸ்
''வீட்டுக்கான அட்வான்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தியம்!''

வாடகை!
''வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை. புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.
அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லி வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம். அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினால் வாடகையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரருக்கு உரிமை உண்டு.
ரசீது அவசியம்!
வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதிவாங்கிக்கொண்டாலே போதுமானது. தேவைப் பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.
வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.
  
வாடகை தர மறுத்தால்..?
'வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.
வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.
இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்ப தற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.

காலி செய்ய வைக்க..!
குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்ற வற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.
அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கிய தற்கான ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை  கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.
வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டு போட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம். வீட்டை உள்வாடகைக்கு விடுவது பல நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்தும் ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் தெளிவுப் படுத்திக் கொள்வது நல்லது.

வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர் இழப்பீடு பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது.
இப்படி வீட்டை வாடகைக்கு விடுகிறவருக்கும் குடித்தனக்காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால்தான் பல சமயங்களில் மோதல் வந்துவிடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா? இனி சுமூகம்தான்!
http://pettagum.blogspot.in/2015/10/blog-post_21.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்!

டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்!

மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க  கீழ்க்கண்ட எட்டு  வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும்.

தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.

2. சித்த மருத்துவத்தில்
  டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.



3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள்
  போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.
4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில்  மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை  அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.

5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம்.
  ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.

6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப்  போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.

7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு  பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  சரிவிகித உணவுகளைச்  சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

தலைமுடி உதிர்வதைத் தடுக்க…

தலைமுடி உதிர்வதைத் தடுக்க…

முப்பது வயதைத் தாண்டியதும் முன் வழுக்கை(front Bald ) விழும் என்று சொல்வார்கள்.. காரணம் பல கூறப்பட்டாலும், வயது முதிர்வும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வயதில்தான் பொறுப்புகள் அதிகம் வந்து சேரும்.
அதிக மனச்சுமைகள் வந்து சேரும் வயது இந்த நடுத்தர வயது. அலுவலகப் பணி(Office work,), குடும்பச் சிக்கல்கள்(Family Issues) இப்படி அனைத்தும் ஒட்டுமொத்தமாக வந்து மனதை குழப்பமடையச் செய்யும் வயது..இது.  இதனால் ஏற்படும் சோர்வு(Debility), கவலை(Anxiety) போன்ற காரணங்களாலும் முடி உதிரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்..
உடல்கோளாறுகள் காரணமாகக்கூட தலைமுடி உதிரும். சரி.. இத்தகைய முடி உதிர்வைத் தடுக்க முடியாதா? என்றால் நிச்சயம் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் உங்களுடைய பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதற்கான சுமூக முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


தேவையில்லாத, மனதை பாதிக்கத்தக்க வகையில் இருக்கும் பிரச்னைகளை மனதிற்குள் செலுத்தாமல் அந்தப் பிரச்னைகளை வெளியே தூக்கி எறிய வேண்டும்.
இந்த இரண்டும் செய்தால் மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட முடி உதிர்வையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
முடி உதிர்வை தடுக்கும் இரண்டாவது(The second way to prevent loose hair) வழிதான், அதற்குரிய முறையான வைத்தியம்..
தலைமுடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்:(Methods to prevent hair shedding)
1. ஆயில் மசாஜ் (Oil Masage)

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கவும். விரல் தாங்கும் சூட்டில் எண்ணெயை தலையில் தடவி விரல்களால் மசாஜ் செய்து விடுங்கள்..
2. தலையில் எண்ணையைத் தேய்க்கும்போது மயிர்கால்களில் படும்படி தடவும். முடியானது மிகவும் மென்மையான தன்மையுடையதால் அதிகமாக போட்டு கசக்கித் தேய்க்ககூடாது. மிதமாகத் தேய்க்கவும். பிறகு டவல் ஒன்றை எடுத்து அதை வெந்நீரில் நனைத்துப் பிழிந்துகொள்ளுங்கள். ஈரமாக்கிய துண்டை தலையில் நன்றாக இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு தலைக்கு குளித்துப் பாருங்கள்.. உங்களுக்குப் புத்துணர்வு கிடைப்பதோடு தலைமுடிக்கும் புத்துணர்வு கிடைக்கும்.
3. இந்த முறையை நாள்விடாமல் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர முடி உதிர்வைக் கட்டுப்படுத்தாலம்.
முடி உதிர்வைத் தடுக்க தேங்காய்ப்பால்:(Coconut milk is used to prevent loose hair)
தேங்காய்ப்பாலின் மகத்துவத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நன்றாக முற்றிய தேங்காயை துருவி அதிலிரிருந்து பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீருடன் கலந்து இளஞ்சூடாக்கவும். சூடாக்கிய தேங்காய்பால் நீரை கைத்தாங்கும் வெப்பத்தில் இருக்கும்போது தலையில் தேய்க்கவும்..பதினைந்து நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர உங்கள் முடி உதிரும் பிரச்னை நாளடைவில் கட்டுக்குள் வரும். முடியும் உதிராது..
ஆலிவ் ஆயிலின் அற்புதம்:(The Perfect Olive Oil)
ஆலிவ் எண்ணையைத் தொடர்ந்து முறையாகப் பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு தலைமுடிப் பிரச்சனை விரைவில் தீரும்.

ஆலிவ் எண்ணையின் பயன்கள்:
1. பொடுகை நீக்குகிறது. 2. நரைமுடி தோன்றாமல் காக்கிறது. 3. கூந்தலை வலுப்பெறச் செய்கிறது. 4. முடி உதிர்வை தடுக்கிறது.
இந்த ஆலிவ் எண்ணையுடன் பாதாம் எண்ணையும் கலந்து தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை ஒழியும்.
தேங்காய்ப்பால் மட்டுமா? பசும்பால் கூட…(Cow 's milk also prevents hair shedding)
பசும்பால் முடிஉதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. புதிதாக கறந்த பசும்பாலை காய்ச்சி தலையில் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் அதை ஊற விடவும். இப்போது உங்களுக்குப் பிடித்த நல்ல ஷாம்பூவை போட்டு குளித்துவிடுங்கள்.. உங்கள் தலைமுடி பளபளவென மின்னும்.. கூடவே முடி உதிர்தலும் தடுக்கப்பட்டுவிடும். தொடர்ந்து செய்துப் பாருங்கள்.. பலன் நிச்சயம்.

நோய்த்தீர்க்கும் பந்தயத்தில் வெல்லும் வெந்தயம்:(Turmeric prevents hair shedding)
வெந்தயம் தலைப்பில் உள்ளவாறே, முக்கிய வைத்தியங்களில் பயன்படுகிறது. தலைமுடி உதிரும் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மாபெரும் மருந்து. அந்தக் காலங்களில் வெந்தயத்தை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தார்கள். அப்போது பெண்களின் தலைமுறை "கருகரு"வென இருந்தது. இப்போது கருமைநிறம் கொண்ட கூந்தல் உடையவர்கள்கூட அதை சாயம்(hair dye) பூசி வெளுத்துவிடுகிறார்கள். இயற்கையான கூந்தலே பெண்களுக்கு என்றுமே அழகுதரும்.
வெந்தயத்தை 4 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து தலைத்துக் குளித்துவர முடிஉதிரும் பிரச்னை நாளடைவில் ஒழிந்துபோகும். கூந்தலுக்கு பளபளப்புத் தன்மைத்தரக்கூடிய இந்த வெந்தயம்.
முடிஉதிரும் பிரச்னை யார் யாருக்கெல்லாம் வரும்?
இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை.. இது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். சிலருக்கு பாரம்பரியமாக வரும்.. சிலருக்கு இது அவரவர்கள் பணிபுரியும் சூழலுக்கேற்ப அமையும்.. தூசி மிகுந்த, வெப்ப மிகுந்த சூழல்களில் பணிபுரிபவர்களுக்கு இத்தகைய பிரச்னைகள் அதிகம் இருக்கும். இவ்வாறானவர்கள் தங்களின உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
வேறு சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும், மருந்து மாத்திரைகளால் கூட, பக்கவிளைவாக முடிஉதிரும் பிரச்சனை இருக்கும். இவைற்றையெல்லாம் கவனமுடன் கையாளும்போது மிக விரைவாக முடிஉதிரும் பிரச்னையை சரி செய்யலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts