லேபிள்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

நமக்கு நாமே நலம் காப்போம்!

நமக்கு நாமே நலம் காப்போம்!
எளிய 30 வழிகள்

ரோக்கியம் என்பது சிவந்த நிறத்திலோ, கட்டுடலிலோ இல்லை. சில ஆரோக்கியமான பழக்கவழங்கங்களைத் தவறாமல் கடைப்பிடித்தாலே போதும், உடலினை உறுதி செய்து, நோயின்றி வாழலாம்; 'நாங்கள் ஆரோக்கியமான குடும்பம்' என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உங்களை நீங்களே தயார்ப்படுத்திக்கொள்ள உதவும் எளிய வழிகள் இங்கே...

குண்டான உடல்வாகு ஆரோக்கியம் அல்ல! 
'குழந்தைகள் கொழுகொழுவென இருப்பது ஆரோக்கியம்' என்ற பரவலான கருத்து இருக்கிறது. உண்மையில் கொழுகொழு குழந்தைகள் பலர் ஆரோக்கியமாக இ்ருப்பது இல்லை என்பதே உண்மை. இரும்பு, வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு இந்திய குழந்தைகளிடம் அதிக அளவில் காணப்படுகிறது. பேரீச்சை, காய்ந்த திராட்சை, அத்திப்பழம், மாதுளை, நெல்லி, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு, முருங்கை மற்றும் கீரைகளை அவசியம் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்; நன்கு விளையாட விட வேண்டும்.அளவுடன் பால்
குழந்தைகள், பதின் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதினர் பால், தயிர் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். ஆனால், 40 வயதுக்கு மேற்பட்டோர்
  பால் (ஆடை நீக்கப்பட்டது), தயிர்  ஆகியவற்றை அளவுடன் சாப்பிட வேண்டும்.  ஏனெனில், பால் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். பித்தப்பையில் கற்கள் மற்றும் அசிடிட்டி உள்ளவர்கள் பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

இருமுறை தலைக்குளியல்
வாரத்துக்கு இருமுறையாவது தலைக்குக் குளிப்பது அவசியம். இதனால், சளி, இருமல் போன்ற தொல்லைகள் குறையும். மேலும், உடலின் வெப்பநிலை (BMT-Basal Metabolic Temperature) சமநிலையாகும். வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய்க் குளியல் எடுப்பதைக் கட்டாயமாக்கலாம். தலைக்குக் குளிக்கும்போது மிதமான நீரில் குளிக்கலாம். குளிர்ந்த மற்றும் வெந்நீரில் குளித்தால், சருமம் வறட்சியாகலாம். ஆஸ்துமா, சைனஸ் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் குளியல் முறையைப் பின்பற்றலாம். மூக்கின் மூலம் சுவாசிக்கும் இன்ஹேலரை, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

சாப்பிட்ட பின் வெந்நீர்
உடல்பருமானானவர்களும் உணவில் நல்லெண்ணெய், பாதாம், தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம். இவை நல்ல கொழுப்பு என்பதால்,
  உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் ஒரு கிளாஸ் வெந்நீர் குடிப்பது நல்லது.  இது செரிமானத்தை சீராக்கும், அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைத்துவிடும் என்பதால், சாப்பாட்டுக்குப் பின் வெந்நீர் அவசியம் தேவை.

ஒரு கப் கிரீன் டீ
தினமும் ஒரு முறை சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ அருந்துவது நல்லது. அசிடிட்டி உருவாகும் என்பதால், வெறும் வயிற்றில் அருந்தாமல், உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம். கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ஒவ்வொரு செல்லையும் புத்துயிர் பெறச்செய்து முதுமையைத் தாமதப்படுத்தும். மேலும், இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

வெந்தயக் குடிநீர்
சர்க்கரை நோயும், வாயு
  தொடர்பான பிரச்னையும் பெரும்பாலானோருக்கு உள்ளன. இரண்டாலும் பலவித உடல்நலப் பிரச்னைகள் வருகின்றன. உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முட்டைகோஸ் ஆகியவற்றை வாயுத் தொல்லை இருப்பவர்கள் தவிர்க்கலாம். வெந்நீரில் வெந்தயத்தைப் போட்டு தினமும் வெந்தயக் குடிநீர் குடித்துவந்தால், வாயுத் தொல்லைகள் நீங்கும்; பசி தூண்டப்படும்; அசிடிட்டி பிரச்னை சரியாகும். சர்க்கரை நோயாளிகள், முதல் நாள் இரவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை அருந்துவது நல்ல பலனைத் தரும்.

'ஜில்' உணவுகள் வேண்டாம்
குளிர்ச்சியான உணவு மற்றும் பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது. தங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் வெயில் நேரத்தில் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரத்துக்கு மேல் இவற்றை அருந்தினால், உடலின் வெப்பநிலை மாறி முதியவர்களுக்குப் பக்கவாதம்கூட ஏற்படலாம். மாத்திரைகளை குளிச்சியான நீரில் விழுங்கவே கூடாது. மாலை மற்றும் இரவு வேளைகளில் வெதுவெதுப்பான உணவு மற்றும் பானங்களை அருந்துவதே சரி. இதயப் பிரச்னை உள்ளோர், மிகவும் குளிர்ச்சியான மற்றும் சூடான நீரைத் தவிர்ப்பதே நல்லது. மிதமான சூட்டில் பருகலாம்.

முக்கால் வயிறு சாப்பாடு
பரோட்டா, அசைவ உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகள் செரிக்கத் தாமதமாகும். இதன் விளைவாக, நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், செரிமானக் கோளாறுகள் வரலாம். சாப்பிட்ட உடன் படுக்காமல், உணவுக்குப் பின் ஒன்றரை மணி நேரம் கழித்துப் படுக்கலாம். முழு வயிற்றுக்கும் சாப்பிடாமல் முக்கால் வயிறு சாப்பிடலாம். இரவு உணவை 7-8 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.

ஐந்து வேளை உணவு
சர்க்கரை நோயாளி, அசிடிட்டி உள்ளவர்கள் உணவை ஐந்தாறு வேளையாகப் பிரித்து உண்ணலாம். வயிறு காலியாக இருந்து மீண்டும் உணவு செரிக்கத் தொடங்கினால், சர்க்கரையின் அளவில் ஏற்றம் இறக்கம் ஏற்படும். சமநிலையாக இருக்க ஐந்து வேளையாகப் பிரித்து உண்ணுவது சரி.

தூக்கத்தைக் கெடுக்கும் கலர் திரை
இரவு தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே மொபைல், டி.வி., ஐபேட், வீடியோ கேம்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இந்த டிஜிட்டல் திரைகளில் உள்ள சின்னச் சின்ன பிக்ஸல்கள் மூளையில் பதிந்து, அதை பிஸியாக்கிவிடும். ஓய்வைப் பறித்து, தூக்கமின்மை, மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். உடல் கடிகாரத்தை (சர்காடியன் கிளாக்) குழப்பி, ஆரோக்கியத்தைப் பாதிக்கும். புத்தக வாசிப்பு, மெல்லிய இசை கேட்டல், நறுமணங்களை சுவாசித்தல் போன்றவை மனதை அமைதிப்படுத்தி நல்ல ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

நோயின் வாசல் மலச்சிக்கல்
நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது மலச்சிக்கல். நீர் அருந்துவது மட்டும் மலச்சிக்கலை சரிசெய்யாது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். தினமும் உணவில், முடிந்தவரை கீரைகள், அவரை, பீன்ஸ், முருங்கை, பீர்க்கங்காய், பழங்களில் கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கிர்ணி போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இருமுறை பல் துலக்குங்கள்
காலையிலும் இரவிலும் பல் துலக்குவது நல்லது. இனிப்புகள் சாப்பிட்ட பின், வாய் கொப்புளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை பேக்டு சோடா, எலுமிச்சைச் சாறு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பல் துலக்குவது நல்லது. இது, கிருமிகள் மற்றும் துர்நாற்றத்தை அழிக்கும். உணவில் ஆரஞ்சு, திராட்சை, நெல்லி, கொய்யா ஆகியவை பற்களை உறுதியாக்கும்.

இறுக்கமான உடைகளைத் தவிர்க்கலாம்
இறுக்கமான ஜீன்ஸ், காற்றுப் புகாத உடைகள் அணிவதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படலாம். வெப்ப நிலை அதிகமாகி, குழந்தைப்பேறு பிரச்னை வரலாம். பருவகாலத்துக்கு ஏற்ற உடைகள் அணியலாம். பொதுவாக, நம் தட்பவெப்ப நிலைக்குப் பருத்தி ஆடைகள் சிறந்தவை.

செக்ஸ்
உடலுறவுக்கு முன்னோ பின்னோ, சிறுநீர், மலம் கழித்துவிடுவது சரி. பாலுடன் பாதாம், பேரீச்சை, முந்திரி, தேன் கலந்து குடிக்க, பாலுணர்வுக்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் கிடைக்கலாம்.

ஐந்து நாட்களுக்கு உடற்பயிற்சி
அரை மணி நேரம் வீதம், வாரத்துக்கு ஐந்து நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவுவதுடன், எல்லாவித ஆரோக்கியப் பிரச்னைகளையும் தடுக்கும். கடினமான பயிற்சிகள்கூட வேண்டாம். நடை, நீச்சல், நடனம், மெது ஓட்டம் போன்றவற்றில் எது முடியுமோ, அதைத் தேர்ந்தெடுத்து அவசியமாகப் பழகுவது நல்லது.

நற்பழக்கங்கள் தரும் நிரந்தர ஆரோக்கியம்!
காலை மற்றும் மதியம் அதிகமாக நீர் அருந்த வேண்டும். மாலை மற்றும் இரவில் குறைவாக நீர் அருந்த வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது உடலைச் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், நச்சுக்கள், வயிற்றுப்பூச்சிகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சாதாரண சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு உடனே மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். ஒரு நாள் கழித்தும் நீடித்தால், மருத்துவரிடம் செல்லலாம்.
மடமடவென நீர் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி, மெதுவாகக் குடித்து, அவை உமிழ்நீருடன் கலந்து நீர் அருந்தும் பழக்கத்துக்கு மாறலாம். காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்தும் பழக்கம் நல்லது.
வியர்வை வந்த உடனே முகம் கழுவுதல், குளித்தல் நல்லது அல்ல. அதுபோல, வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே வேகமாக நீர் குடிப்பதும் நல்லது அல்ல. ஏனெனில், சிலருக்கு தலைவலி, சளித்தொல்லை ஏற்படக்கூடும்.

மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிட எந்தத் தயக்கமும் தேவை இல்லை. இது உயிரைக் குடிக்கும் பழக்கம் என்பதால், இப்போதே முடிவெடுப்பது நல்லது. மது மற்றும் புகைப் பழக்கத்தை நிறுத்தியவர்கள் தினமும் காய்ந்த திராட்சையை 20 கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவர,  உடலில் உள்ள நச்சுக்கள் குறையும். நிக்கோட்டினின் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படும். நச்சுக்கள் கலந்த ரத்தத்தை ஓரளவுக்குத் தூய்மைப்படுத்தும்.
அவசரமாக, உணவை மென்று விழுங்காமல், அரையும் குறையுமாக விழுங்கினால், சர்க்கரை நோயாளிகளுக்கு, உணவுக்குழாய் அடைத்துக்கொண்டு கூடுதல் தொல்லைகளைத் தரும்.
உணவில் உப்பைக் குறைத்துக்கொள்வது நல்லது. தூள் உப்பைவிட, கல் உப்பில் தேவையான சத்துக்கள் இருக்கும்.

எந்தக் காரணத்துக்காகவும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. அந்த நாளுக்கான சக்தியைத் தருவது காலை உணவுதான்.
பால், மாதுளை, முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், பேரீச்சை ஆகியவை தூக்கத்தைத் தரும்.
இயர்போன்களை 20 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு காதில் இயர்போன் வைத்து, மறுகாதில் இயர்போன் வைக்காமல் பேசலாம். செல்போனை ஒரே காதில்வைத்து நீண்ட நேரம் பேசக் கூடாது. வலது, இடது என மாற்றி மாற்றிப் பேசலாம்.

பேட்டரி குறைவாக இருக்கும்போது செல்போன் பேசினால், அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மூளை, கண்களைப் பாதிக்கலாம். எனவே, இயன்றவரை அதைத் தவிர்ப்பது நலம்.
உணவு, மருந்து சாப்பிட்ட உடனே படுப்பது தவறு. நிற்பது, உட்காருவது, நின்ற நிலையில் வேலை செய்வது செரிமானத்துக்கு நல்லது.
பல் தேய்த்த உடனே சூடான அல்லது சில்லென்ற உணவு அல்லது டிரிங்கைக் குடிக்கக் கூடாது. பல் கூச்சம் ஏற்படலாம்.
தினமும் ஐந்தாறு முறை காபி அல்லது டீ குடிப்பது தவறு. ஒருமுறை குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts