``பார்வை என்பது கண்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அதைப் பெரிதாக நினைக்காமல் பலரும் பார்வையில் பிரச்னைகள் இருந்து, கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகும் தோற்றத்தின் மீது கொண்ட அக்கறையால் கண்ணாடியைத் தவிர்க்கிறார்கள்.
40 ப்ளஸ்ஸில் உள்ள பலரையும் கவனித்துப் பாருங்கள். செல்போனிலோ, புத்தகத்திலோ உள்ள எழுத்துகளைப் படிக்கும்போது கண்களைச் சுருக்கியோ அல்லது அவற்றைத் தள்ளிவைத்துப் பிடித்தபடியோ வாசிப்பதைப் பார்க்கலாம். கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பது சாமர்த்தியமான முடிவல்ல, உங்களுக்கு நீங்களே சங்கடங்களை அதிகப்படுத்திக்கொள்கிற விஷயம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.
சிறப்பு மருத்துவர் வசுமதி
கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் வந்தால் அதைத் தவிர்க்கக் கூடாது என்று வலியுறுத்துகிற டாக்டர், கண்ணாடிக்கு பதில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது சிறந்த முடிவாக இருக்கும் என்பதையும் சொல்கிறார். கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் அவர் விளக்குகிறார்.
``கண்களில் ஏதோ பிரச்னை காரணமாக கண்ணாடி போட வேண்டிய நிலை வரலாம். இப்போதெல்லாம் கண்ணாடிக்கு பதிலாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதையே பலரும் விரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். உங்களில் பலருக்கும் கான்டாக்ட் லென்ஸ் எப்படி இருக்கும் என்று தெரிந்திருக்கும். கருவிழியின் வடிவத்திலேயே ட்ரான்ஸ்பரன்ட்டாக இருக்கும் லென்ஸை அதற்கான பிரத்யேக திரவத்தை உபயோகித்து சுத்தப்படுத்திய பிறகு விரலால் கண்களுக்குள் சுலபமாகப் பொருத்திக் கொள்ளலாம்.
ஒரு காலத்தில் சினிமா நடிகர் நடிகைகளும், மாடல்களும் அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் உபயோகித்து வந்தார்கள். இப்போது சாமானிய மக்களுக்கான பயன்பாடாக அது மாறி இருக்கிறது. முன்பெல்லாம் ஹார்டு லென்ஸாக வந்துகொண்டிருந்தது, பிறகு செமி சாஃப்ட் லென்ஸாக வந்தது. இப்போது சாஃப்ட் லென்ஸ் கிடைக்கிறது. கான்டாக்ட் லென்ஸில் யூனிஃபோக்கல் மற்றும் மல்டி ஃபோக்கல் என இரண்டு வகை உள்ளது. இதில் யூனிஃபோக்கல் வகை லென்ஸ் குறிப்பிட்ட ஒரு பார்வையை, அதாவது தூரத்துப் பார்வையை மட்டும்தான் சரி செய்யும். அதுவே மல்டி ஃபோக்கல் லென்ஸானது தூரப்பார்வை, கிட்டப்பார்வை, நடுப்பார்வை என எல்லாவற்றையுமே சரிசெய்யும். 40 வயதுக்கு மேலானவர்கள் இதைப் பயன் படுத்தலாம்.
கண்ணாடி அணிவதில் உள்ள சிரமங்கள் இதில் இருக்காது கண்ணாடி அணிவதால் தன் தோற்றம் மாறிப் போகுமோ என்ற கவலை இருப்பவர்கள் கான்டாக்ட் லென்ஸை தேர்வு செய்யலாம். கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கும்போது பார்வையின் தரமும் நன்றாக இருக்கும். சிலர் வெறும் அழகுக்காக மட்டும் கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பதுண்டு. அப்படி உபயோகிக்கும்போது அதைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பதை மறந்துவிட்டு அப்படியே தூங்கி விட்டாலோ அல்லது லென்ஸ் போடுவதற்கு முன்பே கண்களுக்கு மஸ்காரா உள்ளிட்ட மேக்கப் சாதனங்களை உபயோகித்தாலோ அது கண்களில் இன்பெக்ஷனை ஏற்படுத்தலாம். கான்டாக்ட் லென்ஸில் புரதச்சத்து சேர்ந்து, இன்ஃபெக்ஷனாகி லென்ஸ் போட்டாலே கண்களில் எரிச்சல், கண்களைக் கசக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். லென்ஸை கழற்றிய பிறகும் கண்களில் அரிப்பும் எரிச்சலும் இருப்பதாக உணர்வார்கள். இதை Giant Papillary Conjuntivitis - GPC என்று சொல்வோம். எனவே கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதை முறையாக அதற்கான திரவம் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமாக லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. லென்ஸ் வைப்பதற்கென கொடுக்கப்படும் பெட்டிக்குள் அதை ஃப்ரெஷ்ஷான திரவத்தில் ஊறவைக்க வேண்டும்.
வெளியே செல்லும்போது லென்ஸை சுத்தப்படுத்தும் திரவத்தை எடுத்து வர மறந்து விட்டதால் சிலர் எச்சிலைத் தொட்டு சுத்தப்படுத்தி அப்படியே பயன்படுத்துவதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் மிகவும் தவறானது. கான்டாக்ட் லென்ஸ் என்பது கருவிழியின் மேல் பொருத்தப்படுவது. எனவே அதை முறையாகப் பராமரிக்காவிட்டால் இன்ஃபெக்ஷன் ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி பார்வையையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடியலாம். முறையாக பயன்படுத்துவோருக்கு கான்டாக்ட் லென்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம். சிலபேருக்கு 'ஆஸ்டிக்மேட்டிசம்' (Astigmatism) எனப்படும் சிலிண்டர் பவர் இருக்கும். அந்தப் பிரச்னைக்கெனவே பிரத்யேக கான்டாக்ட் லென்ஸ் இருக்கிறது. சாதாரண லென்ஸைவிட சற்றே விலை அதிகம் என்றாலும் இந்த லென்ஸ் மிகுந்த பலனைத் தரக்கூடியது.''
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக