லேபிள்கள்

வியாழன், 19 ஜூலை, 2018

(மழை வேண்டித் தொழுகை)

 (மழை வேண்டித் தொழுகை)

ஸலாதுல் இஸ்திஸ்கா
(மழை வேண்டித் தொழுகை)

வரட்சியின் போது அல்லாஹ்விடம் மழையை வேண்டுவதற்காகத் தொழப்படும் தொழுகையே மழைவேண்டித் தொழுகை என அழைக்கப்படும். வரட்சியின் போது மக்கள், உயிரினங்கள், பயிர்-பச்சைகள் நீரின்றி வாடும் போது மழை வேண்டித் தொழுவது சுன்னா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால், தொழும் முறை, அதனுடன் தொடர்புபட்ட மற்றும் பல விடயங்களில் அபிப்பிராய பேதங்கள் திகழ்கின்றன.
மழை இன்மையால் பூமி வரண்டு மக்கள் சிரமப்பட்டால் மழைவேண்டித் தொழுவது முஸ்தஹப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் இமாமுடன் மக்கள் முஸல்லாஹ் தொழுமிடத்துக்குச் செல்வார்கள். அவர் மக்களுக்கு இரண்டு ரக்அத்துக்கள் தொழுவிப்பார். குத்பாவும் இடம்பெறும்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத்(வ) அறிவித்தார்: 'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கத் திடலுக்குச் சென்றார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். தம் மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.


மற்றோர் அறிவிப்பில் தம் ஆடையின் வலப்புறத்தை இடது தோளின் மீது போட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.'
(புஹாரி 1027, முஸ்லிம் 894)

இந்த ஹதீஸின் அடிப்படையில் மழை வேண்டித் தொழுவதற்காகத் திடலுக்குச் செல்வது சுன்னத்தாகும். இதில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் மட்டும் மாற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மழை வேண்டித் தொழுவதற்காக திடலுக்குச் செல்லவும் தேவையில்லை, தொழவும் தேவையில்லை என்று கருதுகின்றார்கள். நபி(ச) அவர்கள் மழை வேண்டித் தொழும் திடலுக்குச் செல்லாமலும் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்துள்ளதாக வந்துள்ள ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றார்கள்.
நபி(ச) அவர்கள் மஸ்ஜிதில் வைத்து வெறும் பிரார்த்தனை மூலமாக மழை வேண்டியுள்ளார்கள் என்பது மழை வேண்டித் தொழுதுள்ளதையும் அதற்காகத் திடலுக்குச் சென்றுள்ளதையும் மறுப்பதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனவே, இது குறித்த இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு மிகவும் பலவீனமானதாகும்.
1. தொழுகைக்கு முன்னரோ பின்னரோ குத்பா உரை நிகழ்த்துதல்:
மழை வேண்டித் தொழுகைக்கு குத்பா உண்டு என்பதில் ஏகோபித்த கருத்து நிலவுகின்றது. இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) மற்றும் அனேக அறிஞர்கள் தொழுகைக்குப் பின்னர் குத்பா நடைபெற வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர்.
'நபி(ச) அவர்கள் மழை வேண்டித் தொழுவதற்காக முஸல்லாவுக்கு வந்தார்கள். கிப்லாவை முன்னோக்கும் போது தமது மேலாடையை மாற்றிப் போட்டார்கள். குத்பாவுக்கு முன்னர் தொழுகையை ஆரம்பித்தார்கள். பின்னர் கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்தார்கள்.'
(அஹ்மத்: 441)

இந்த அறிவிப்பில் முதலில் தொழுகையும் பின்னர் குத்பாவும் இடம்பெற வேண்டும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மழை வேண்டித் தொழும் தொழுகை பற்றி வரும் அறிவிப்புக்களில் 'பெருநாள் தொழுகை போல இரண்டு ரக்அத்துக்கள் தொழுவிப்பார்கள்' என்று இடம்பெற்றுள்ளது. (இப்னு குஸைமா 1405, அபூதாவூத் 1165, இப்னு மாஜா 1266)
இங்கு பெருநாள் தொழுகை போன்று தொழுதார்கள் என்றால் மேலதிக தக்பீர் கூறித் தொழுதார்கள் என்பது அர்த்தம் அல்ல. பெருநாள் தொழுகை போன்று முதலில் தொழுகையும் இரண்டாவது குத்பாவும் செய்தார்கள். தொழுகையில் கிராஅத்தை சப்தமிட்டு ஓதினார்கள் என்பதே அர்த்தமாகும். இந்த அடிப்படையில் முதலில் தொழுகை, இரண்டாவது குத்பா என்ற அடிப்படையிலும் குத்பா நிகழ்த்தலாம்.
இமாம் மாலிக் (ரஹ்) போன்ற அறிஞர்கள் முதலில் குத்பாவும் பின்னர் தொழுகையும் நடைபெற வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர். அதற்கு பின்வரும் அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
'அப்துல்லாஹ் இப்னு யஸீது(வ) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1024)
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகைக் காட்டிக் கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1025)
இரண்டு விதமாகவும் அறிவிப்புக்கள் உள்ளதால் குத்பாவை தொழுகைக்கு முன்னரும் வைத்துக் கொள்ளலாம் அல்லது பின்னரும் வைத்துக் கொள்ளலாம் என்பது இமாம் ஷவ்காணி(ரஹ்) போன்றோரின் கருத்தாகும். இதுவே ஏற்றமானதாகவும் தெரிகின்றது. குத்பா என்பது எமது பாவங்களை உணர்த்தும் விதமாகவும் தவ்பாவை நினைவுறுத்தும் வண்ணமும் அமைந்திருப்பது ஏற்றமானதாகும்.
இமாம் பிரார்த்தனை செய்தல்:
இமாம் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனையின் போது கைகளை வெகுவாக உயர்த்திக் கேட்பதும் உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருப்பதும், இமாம் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திப்பதும் சுன்னாவாகும். மஃமூம்களும் கரங்களை உயர்த்திப் பிரார்த்தனையில் பங்கு கொள்வார்கள். இமாம் தமது மேலாடையை மாற்றிப் போடுவதும் சுன்னாவாகும்.
ளூ கிப்லாவை முன்னோக்குதல்:
பொதுவாக குத்பாவோ அல்லது ஏனைய சந்தர்ப்பங்களிலோ துஆ செய்யும் போது இமாம் கிப்லாவை முன்னோக்குவதில்லை. ஆனால், மழை வேண்டித் தொழுகையின் போது இமாம் பிரார்த்திக்கையில் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்க வேண்டும்.

'அப்துல்லாஹ் இப்னு யஸீது(வ) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1024)
இந்த ஹதீஸ் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.
ளூ கைகளை வெகுவாக உயர்த்துதல்:
பிரார்த்தனையின் போது கைகளை உயர்த்துவது ஏற்றமானதாகும். மிம்பரில் குத்பாவின் போது இமாம் பிரார்த்தனை செய்ய நேரிட்டால் கரங்களை உயர்த்தக் கூடாது. ஆனால், மழை வேண்டித் தொழும் போது கைகளை முடிந்தவரை உயர்த்த வேண்டும்.

அனஸ்(வ) அறிவித்தார்: 'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவார்கள். ' (புஹாரி: 1031)
சாதாரண பிரார்த்தனைகளின் போது கையை உயர்த்தக் கூடாது என இந்த ஹதீஸை வைத்துப் புரிந்து கொள்ளக் கூடாது. மழை வேண்டித் தொழும் போது பிரார்த்தனையில் கையை உயர்த்துவது போல் வேறு பிரார்த்தனைகளின் போது உயர்த்த மாட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ளூ உள்ளங்கைகள் பூமியைப் பார்த்து இருத்தல்:
பொதுவாக துஆவின் போது உள்ளங்கைகள் வானை நோக்கி இருக்கும் விதத்தில்தான் பிரார்த்திக்க வேண்டும். மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது உள்ளங் கைகள் பூமியைப் பார்த்திருக்கும் விதத்தில் உயர்த்துவது சுன்னாவாகும்.

'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தமது புறங்கையை வானை நோக்கி நீட்டினார்கள்..'
அறிவிப்பவர்: அனஸ்(வ)
ஆதாரம்: முஸ்லிம் 895-07

இந்த ஹதீஸின் அடிப்படையில் மழை வேண்டித் தொழுகையில் பிரார்த்திக்கும் போது கையை வெகுவாக உயர்த்த வேண்டும். கையின் புறங்கை வானத்தையும் உள்ளங்கை பூமியையும் பார்த்திருக்கும் விதத்தில் வைத்திருக்க வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts