லேபிள்கள்

திங்கள், 9 ஜூலை, 2018

கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!

கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!

அல்லாஹுத்தஆலா மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் என அனைத்தையும் பேணி நடக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதி அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாகவும் மற்றும் ஒரு பகுதி அடியார்களுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றன.
இவற்றுள் அல்லாஹ்வுடன் தொடர்புட்ட பகுதியைப் பொருத்தளவில் அது மீறப்படும் போது அவனின் மன்னிப்புக்குப் பாத்திமானதாகக் காணப்படுகின்றது. ஆனால், அடியார்களுடன் தொடர்புபட்ட பகுதி அவசியம் சம்பந்தப்பட்டவர்களுடன் மன்னிப்புப் பெற்றாக வேண்டியதாக உள்ளது. அதனால் தான் இவ்வகை உரிமைமீறல் தொடர்பாகக் கண்டிப்பான கட்டளைகள் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா நெடுகிலும்

பதிவாகியுள்ளன.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ ۗ

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிடுமாறும் மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் எதனை உங்களுக்கு உபதேசிக்கிறானோ அது மிக்க நல்லதாகும்." (அன்னிஸா: 58)
இப்படியிருக்க அதிகமான மனிதர்கள் பொடுபோக்காக இருக்கக்கூடிய ஒரு விடயம் தான் கடனாகும்! உண்மையில் கடனாகப் பெற்ற பணமானது குறித்ததொரு சகோதரனின் உரிமையாகும். அது விடயத்தில் பராமுகமாக நடந்து கொள்வது அவனுடைய உரிமை மீறலுக்கு நிகரானதாகும். நிச்சயமாக இது தொடர்பாக மறுமைநாளில் சம்பந்தப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்பதை கவனத்திற்கொள்க!
நபியவர்கள் கூறினார்கள்: "பிற முஸ்லிமின் இரத்தம், செல்வம், மானம் ஆகியன அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஹராமானதாகும்". (முஸ்லிம்)
மேலும், கடனானது உரிய முறையில் நிறைவேற்றப்படாத போது அது மறுமைநாளில் கடன் எடுத்தவருக்குப் பெரும் நஷ்டத்தைத் தேடித்தரும்!
நபியவர்கள் கூறினார்கள்: "எவரிடத்தில் தன்னுடைய சகோதரனுக்குரிய ஓர் அநியாயம் இருக்கின்றதோ அவர் (இப்போதே) அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்! நிச்சயமாக எந்த தீனாரும் திர்ஹமும் பயனளிக்காத நாள் வரும் முன் (இவ்வாறு செய்து கொள்ளட்டும்! அந்நாளில் அநியாயம் இழைக்கப்பட்ட) தனது சகோதரனுக்காக அவனுடைய நன்மைகளில் இருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவ்வாறு அவனிடத்தில் நன்மைகள் இல்லாத பட்சத்தில் தனது சகோதரனின் தீமைகளில் இருந்து எடுக்கப்பட்டு அவன் மீது வீசப்படும்." (புகாரி)
எனவே, நீங்கள் கடனைத் திருப்பி வழங்க சக்தியற்ற நிலையில் இருக்கும் போது அதிகமாகக் கடன் பெறுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ۚ

பொருள்: "விசுவாங்கொண்டோரே! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள்!" (அன்னிஸா: 29)
இன்னும், அல்குர்ஆனில் இடம்பெறும் மிகப் பெரிய வசனம் கடன் தொடர்பான வசனமாகும். இவ்விடயம் கூட கடனானது சாதாரணமான ஒரு விடயமல்ல என்பதை உணர்த்தி நிற்கின்றது.
மேலும், நபியவர்கள் கடனாளிகளுக்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தாமல் பின்வாங்கிய சம்பவங்களும் கூட கடனைத் திருப்பியளிக்கும் விடயத்தில் அவர்கள் எவ்வளவு கரிசனை காட்டியுள்ளார்கள் என்பதைப் புரிய வைக்கின்றது.
அல்லாஹ்வுடைய பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் சிறப்புக்கள் தொடர்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். எடுத்துக்காட்டாக
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

பொருள்: (விசுவாசங்கொண்டோரே) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்களின் இரட்சகனிடத்தில் உயிருள்ளளோராக இருக்கிறார்கள். அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (ஆலு இம்ரான்: 169)
எனவே, இத்தகைய சிறப்பைப் பெற்ற உயிர்த்தியாகிக்குக் கூட கடன் மன்னிக்கப்பட மாட்டாது என்றால் எங்களில் யாருக்குத்தான் எனது கடன் மன்னிக்கப்படும் என்று ஆதாரவு வைக்க முடியும்! இதோ இச்செய்தியை நன்கு படித்துப்பாருங்கள்!
நபியவர்களிடத்தில் ஒரு தோழர் வந்து: அல்லாஹ்வின் "தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்டால், அது என்னுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அமையுமா?" எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: "ஆம். நீ பொருமைசாலியாகவும் கூலியை எதிர்பார்க்கக்கூடியவனாகவும் பின்வாங்காமல் முன்னோக்கிச் சென்று போர் புரியக்கூடியவனாகவும் இருக்க அல்லாஹ்வுடைய பாதையில் கொலை செய்யப்பட்டால் (அக்கூலி உனக்குக் கிடைக்கும்)" என்றார்கள். பிறகு நபியவர்கள் மீண்டும் அத்தோழரை அழைத்து, "நீ எவ்வாறு வினவினாய்?" எனக் கேட்க அத்தோழரும் அவர் கேட்ட கேள்வியை மீண்டும் கூறினார். அதற்கு நபியவர்கள் முன்பு கூறிய அதே பதிலைக் கூறிவிட்டு, "கடனைத் தவிர" என்று கூறினார்கள். "இதனை நிச்சயமாக ஜிப்ரீல் இப்போது தான் எனக்குக் கூறிவிட்டுச் சென்றார்" எனப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)
மேலும், இக்கடன் விடயமானது நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய ஓர் அம்சமாக உள்ளது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபியவர்கள் தொழுகையில் பின்வருமாறு பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
اللهُمّ إنِّي أعُوْذُ بِكَ مِنَ المَأثَمِ وَالمَغْرَمِ
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் தீமை செய்யும் விடயம் மற்றும் கடன் ஆகியவற்றை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்.
அப்போது ஒரு தோழர்: அல்லாஹ்வின் தூதரே! கடனில் இருந்து அதிகமாகப் பாதுகாவல் தேடுகின்றீர்களே?! என்று வியப்புடன் வினவ, அதற்கு நபியவர்கள்: நிச்சயமாக மனிதன் கடன் பெற்றால், பேசும் போது பொய் பேசுவான். மற்றும், வாக்களிக்கும் போது அதற்கு மாறு செய்வான்" எனக் கூறினார்கள். (புகாரி)
அதே போன்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நான் நபியவர்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவனாக இருந்தேன். அவர்களிடத்தில் நான் வரும்போதெல்லாம் அதிகமாகச் செவிமடுக்கும் பிரார்த்தனையாவது:

اللهُمَّ إنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الهَمّ وَالحَزَن وَالعَجْز وَالكَسَل وَالبُخلِ وَالجُبْن وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَال

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் வருங்காலத்துடன் தொடர்புடைய கவலை, சென்ற காலத்துடன் தொடர்புடைய கவலை, இயலாமை, சோம்பேறித்தனம், உலோபித்தனம், கோலைத்தனம், கடன்சுமை மற்றும் மனிதர்களின் மிகைப்பு ஆகியவற்றை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்." (புகாரி)
அதிகமான மக்கள் கடன் வாங்கும் போது அதனைத் திருப்பியளிப்பது பற்றிச் சிந்திப்பதில்லை. மாறாக, நினைக்கின்ற போதொல்லாம் கடன் வாங்குகின்றார்கள். மீளச் செலுத்தும் வேளை வரும் போது பொய், ஏமாற்று, மோசடி போன்ற தீய நடத்தைகளைக் கையாளுகின்றார்கள். இந்நிலை மாற்றம் பெற வேண்டும். எப்போதும் நாம் எமது தேவைக்கு அவசியமான அளவு கடன் வாங்க வேண்டும். மற்றும், கடன் வாங்கும் போது அதனை நல்ல முறையில் திருப்பியளிக்கும் நோக்கத்தில் வாங்க வேண்டும். அப்போது தான் அல்லாஹ் எமக்கு அக்கடனை மீளக் கையளிக்க உதவி புரிவான்.
நபியவர்கள் கூறினார்கள்: "யார் திருப்பியளிக்கும் நோக்கில் மனிதர்களின் செல்வங்களை எடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்குப் பதிலாக அதனை நிறைவேற்றிவிடுவான். மேலும், அழித்துவிடும் நோக்கில் யார் அதனை எடுக்கின்றாரோ அல்லாஹ் அதனை அழித்துவிடுகின்றான்." (புகாரி)
மேலும், எங்களுடைய கடன்கள் அதிகரித்தால் நாங்கள் அல்லாஹ்விடத்தில் மீள வேண்டும். நிச்சயமாக அவன் அவற்றை நல்ல முறையில் நிறைவேற்ற உதவி புரியப் போதுமானவனாக உள்ளான்.
ஒரு முறை அடிமை உரிமைச் சீட்டு எழுதப்பட்ட ஓர் அடிமை அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் வந்து: "நிச்சயமாக என்டைய உரிமைச் சீட்டை நிறைவேற்றும் விடையத்தில் இயலாமைப்பட்டுள்ளேன், எனக்கு சற்று உதவி புரியுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்குக் கற்றுத்தந்த சில வார்த்தைகளை நானும் உனக்குக் கற்றுத் தரட்டுமா? எனக் கேட்டுவிட்டு, "உன்மீது ஸீர் என்ற மலையைப் போன்றளவு கடன் இருந்தாலும் அல்லாஹ் அதனை உன்னைவிட்டும் நீக்கிவிடுவான்." என்று கூறி பின்வரும் பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்தார்கள்.

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

பொருள்: அல்லாஹ்வே! உன்னுடைய ஹராத்தைவிட்டும் உன்னுடைய ஹலாலைக் கொண்டு என்னைப் போதுமாக்குவாயாக! மேலும், உன்னைத் தவிர்ந்தவற்றை விட்டும் உன்னுடைய சிறப்பைக் கொண்டு என்னைத் தேவையற்றவனாக்குவாயாக! (திர்மிதி)
மேலும், ஒரு முறை நபியவர்கள் பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்கும் போது அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டார்கள். அப்போது அவரை நோக்கி: "தொழுகையுடைய நேரமல்லாத ஒரு நேரத்தில் உங்களைப் பள்ளிவாசலில் உட்கார்;ந்திருக்கக் காண்கிறேனே!?" என ஆச்சரியத்துடன் வினவினார்கள். அதற்கவர்: "என்னைப் பீடித்த துயரமும் கடன்களுமாகும் அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார். அப்போது நபியவர்கள்: "நீ மொழிந்தால் அல்லாஹுத்தஆலா உன்னுடைய துயரத்தைப் போக்கக்கூடியதும் உன்னுடைய கடனை நிறைவேற்றி வைக்கக்கூடியதுமான ஒரு வார்த்தையை நான் உனக்குக் கற்றுத்தரட்டுமா?" என வினவினார்கள். அதற்கு அத்தோழர்: "ஆம். அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளிக்க, பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
"நீ காலைப் பொழுதையும் மாலைப் பொழுதையும் அடைந்தால்

اللهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ وَأعوْذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَل وَأعوذ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ وَأعوذ بك مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال

அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபியவர்கள் கற்றுத்தந்த இவ்வார்த்தைகளை ஓதிவந்தேன். அல்லாஹ் என்றுடைய துயரத்தைப் போக்கி என்னுடைய கடனையும் நிறைவேற்றி வைத்தான்." (அபூதாவுத்)
எனவே, நாங்கள் கடனில்லாமல் மரணத்தைத் தழுவ முயற்சி செய்வோமாக! ஏனெனில், நபியவர்கள் கூறினார்கள்: "எவருடைய உயிர் உடம்பைவிட்டும் பிரியும்போது மூன்று விடயங்களைவிட்டும் நிரபராதியாகப் பிரிகின்றதோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். (அவை) பெருமையும் மோசடியும் கடனுமாகும்." (இப்னு மாஜா)
நன்றி: salaf.co


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts