லேபிள்கள்

செவ்வாய், 17 ஜூலை, 2018

நிகழ்வுகள் ஆதாரங்களாகுமா?

நிகழ்வுகள் ஆதாரங்களாகுமா?

ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளருக்கு மறுப்பு!
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் ஆதாரத்தை கொண்டு வாருங்கள் என்று குறிப்பிடுகிறான். நாம் செய்கின்ற ஒவ்வொரு அமல்களுக்கும் நபியவர்களின் செயல்பாடுகளே ஆதாரங்களாகும்.
மேலும் குர்ஆனிலும் மற்றும் ஹதீஸிலும் கூறப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஆதாரங்களாக எடுக்க முடியுமா? என்பதை அலசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
அல்லாஹ் குர்ஆனில் பல நபிமார்களின் சரிதைகளையும், நல்லடியார்கள் மற்றும் பாவிகளுடைய சரிதைகளையும் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறான். அதே போல நபியவர்களின் ஹதீஸின் முலமும் இவைகளை நாம் காணலாம்.நபியவர்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட அத்தனை சான்றுகளையும் ஆதாரங்களாக அப்படியே எடுக்க முடியுமா என்றால் முடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவதோடு, தனக்கு முன்னால் நடந்த சம்பவங்களிலிலிருந்து எவற்றை நபியவர்கள் ஆதாரமாக வழிகாட்டுகிறார்களோ அவற்றை மட்டும் ஆதாரங்களாக நாம் எடுக்க வேண்டும். ஏனையவைகளை அந்த, அந்த காலங்களில் நடந்த ஒரு நிகழ்வாக தான் நாம் பார்க்க வேண்டும்.


இன்று தான் செய்த தவறை மறைப்பதற்காக சம்பந்தமில்லாத ஆதாரங்களை தவறாக சுட்டிக்காட்டி பேசும் நிலையை காணலாம். உதாரணமாக அபூபக்கர் (ரலி) அவர்கள் பிறரை ஏசினார்கள் என்றால் நாம் ஏன் பிறரை ஏசக் கூடாது என்று சொல்வதையும், அது போல ஸகாத் வசூலிக்க அனுப்பியவரை மக்களுக்கு மத்தியில் நபியவர்கள் தப்பாக சுட்டிக் காட்டி பேசினார்கள் என்றால் நாம் ஏன் பிறரை மானபங்கம் செய்யும் விதத்தில் பேசக் கூடாது என்று கேட்கும் அவல நிலையை காணலாம்.
குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப் பட்ட அனைத்தும் நமக்கு பினபற்றுவதற்றான ஆதாரங்கள் கிடையாது. குர்ஆனில் சொல்லப் பட்ட சில சம்பவங்களை நிகழ்வுகளாக மட்டும் பார்க்க வேணடும். அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது. உதாரணமாக சூரத்துல் காஃபில் அந்த வாலிபர்களோடு ஒரு நாயும் பின் தொடர்ந்து சென்றது, அவர்கள் தங்கிய குகையின் வாசலில் படுத்துக் கொண்டது, இந்த சம்பவத்தை அல்லாஹ் குர்ஆனில் நினைவுப் படுத்துகிறான் இந்த சம்பவம் குர்ஆனில் வருகிறது என்பதற்காக நாமும் நாய் வளர்க்கலாம் என்ற சட்டத்தை ஆதாரமாக எடுக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. ஏன் என்றால் நமக்கு நாய் வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இந்த சம்பவத்தை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர அல்லாஹ் குர்ஆனிலே சொல்லி விட்டான் என்று நாய் வளர்ப்பதற்கு ஆதாரமாக எடுக்க முடியாது.

அது போல மூஸா நபி தனது இனத்தை சார்ந்த ஒருவருக்கு சார்பாக எதிரி கூட்டத்தை சார்ந்தவரை குத்திய போது அந்த மனிதர் இறந்து விட்டார். (சுருக்கம் அல் குர்ஆன் 28:15) இந்த சம்பவத்தை ஆதாரம் காட்டி மூஸா நபியே ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார்கள் என்றால் நாம் ஏன் கொலை செய்யக் கூடாது என்று ஆதாரமாக எடுக்க முடியுமா என்றால் முடியாது. இதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டும். ஏன் என்றால் கொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அது போல அல்லாஹ் இப்றாகீம் நபியை பின்பற்றும் படி கூறுகிறான் எனவே இப்றாகீம் நபி மூன்று பொய்களை சொல்லியுள்ளார்கள். நாமும் இப்படி பொய் சொல்லலாம் என்று ஆதாரம் எடுக்க முடியுமா என்றால் முடியாது? நடந்த சம்பவத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர ஆதாரமாக எடுக்க கூடாது ஏன் என்றால் பொய் பேசுவதை பெரிய பாவமாக இஸ்லாம் கூறி நமக்கு தடை செய்துள்ளது.
அதே போல இப்றாகீம் நபி தனது மகனின் முதல் மனைவி சில குறைகளை சொல்லியதற்காக அந்த மனைவியை தலாக் விடும் படி இப்றாகீம் நபி கூறுகிறார்கள். அதற்காக ஒவ்வொரு தந்தையும் மருமகள் ஏதாவது குறையை சொன்னவுடன் மனைவியை தலாக் விடும் படி மகனிடம் சொல்ல முடியுமா என்றால் முடியாது? எடுத்த எடுப்பிலே தலாக்கிற்கு செல்வதற்கு நமக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை, பல படித்தரங்களை இஸ்லாம் சொல்லித் தருகிறது. எனவே அதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர, இப்றாகீமின் வழியை அல்லாஹ் பின் பற்ற சொல்கிறான் என்று இதை ஆதாரமாக எடுக்க முடியாது.
இப்படி பல உதாரணங்களை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். சிந்தனையுடையவர்களுக்கு இந்த உதாரணங்கள் போதுமானதாகும்.
இந்த வரிசையில் பிறரை மானபங்கப் படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது, அருவருப்பாக பேசக் கூடாது, என்று கூறும் போது, நபியவர்களே பிறரை மானபங்கப் படுத்தி பேசியுள்ளார்கள் என்றால் நாம் ஏன் பேசக் கூடாது என்று எதிர் கேள்வியை கேட்பதை காணலாம்.நபியவர்கள் அப்படி என்ன பேசினார்கள், யாரை மானபங்கப்படுத்தினார்கள் என்று கேட்கும் போது பின் வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள்.
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்த்" குலத்தாரில் ஒருவரை (பனூ சுலைம் குலத்தாரின்) "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என அழைக்கப்பட்டார். அவர் ("ஸகாத்"களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), "இது உங்களுக்குரியது, இது எனக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பிவந்து) "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக்கொண்டிருக்கும். மாடாகவோ ஆடாகவோ இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்திவிட்டு, "இறைவா! (உன் கட்டளையை) எடுத்துரைத்துவிட்டேனா?" என்று இரண்டு முறை கூறினார்கள். (முஸ்லிம் 3739)
ஸகாத் வசூலிக்க சென்று வந்த வரை நாளு பேருக்கு மத்தியில் வைத்து நபியவர்கள் இப்படி மானபங்கப்படுத்தி விட்டார்கள். எனவே நாமும் பிறரை மானபங்கப்படுத்தலாம் என்ற அடிப்படையில் இன்று பிறரை மானபங்கப்படுத்தி, சகட்டு மேனிக்கு அருவருப்பாக பேசப்படுவதை காணலாம். நபியவர்கள் வஹியோடு தொடர்பாக இருந்தார்கள். மக்களுக்கு மார்க்கத்தை சொல்லி கொடுக்கும் முகமாக இப்படி பல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மார்க்கத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள். தனது மனைவிமார்கள் பிரச்சனைப்பட்ட நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் முன் மனைவிமார்களை எச்சரித்த செய்தி மேலும் தேன் விடயத்தில் மனைவிமார்களை எச்சரித்த செய்திகள், மேலும் மனைவிமார்களோடு பிரச்சனைப் பட்டுக் கொண்டு ஒரு மாதம் வர மாட்டேன் என்று சொன்ன செய்தி, யூதர்கள் தப்பாக நபியவர்களுக்கு ஸலாம் சொல்லிய போது அதற்கு மீண்டும் தப்பாக பதில் சொன்ன ஆயிஷா அவர்களை கண்டித்த செய்தி இப்படி பல சான்றுகளை சொல்லிக் காண்டே போகலாம். இவைகள் எல்லாம் பலருக்கு முன்னால் தான் நடந்தது. நபியவர்களைப் பொருத்தவரை மார்க்கத்தை படித்து தர வந்தவர்கள் மக்களின் தவறுகளை அந்த, அந்த இடத்தில் வைத்தே திருத்திக் கொடுப்பார்கள். அதற்காக வேண்டி நாங்களும் அப்படி தான் செய்வோம் என்று தவறாக விளங்கி விடக் கூடாது. அப்படி சொல்வதற்கு நபியவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளான். நபியவர்கள் முஸ்லிம்களில் யாரையாவது ஏசினாலோ, அல்லது சபித்தாலோ அது சம்பந்தப்பட்டவருக்கு நன்மையாக மாறி விடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்று கூறினார்கள். ( முஸ்லிம் 5068)
மேலும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள். அவர்கள் இருவரும் சென்றதும், நான், "அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை" என்று கூறினேன். அதற்கு "அது எதனால்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், "அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே? ஏசினீர்களே?" என்று பதிலளித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறியவில்லையா? "இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தால், அல்லது ஏசியிருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் ஆக்கிவிடுவாயாக" என்று கூறியுள்ளேன்" என்றார்கள். ( முஸ்லிம் 5066)
நபியவர்கள் சபித்தார்கள் எனவே நாமும் பிறரை சபிக்கலாம் என்று யாரும் தப்பாக ஹதீஸை விளங்கி விடக் கூடாது. நபியவர்கள் பிறரை சபித்தாலோ அல்லது ஏசினாலோ அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அருளாகவும், அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொடுக்கும். ஆனால் நாம் பிறரை ஏசினாலோ, சபித்தாலோ அருளாகவோ, அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தையோ ஏற்படுத்தி தராது மாறாக பாவத்தை தான் அதிகப்படுத்தும்.
எனவே தவறான முறையில் ஹதீஸை விளங்கி மக்களை பிழையான வழியில் அழைத்துச் செல்லக் கூடாது. மக்களும் ஒரு தடவைக்கு பல தடவைகள் சிந்தித்து அவர்கள் சொல்வது சரிதானா? அவர்கள் போகும் வழி சரிதானா என்று சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தது இவர்களின் தவறான கொள்கைகளில் ஒன்று தான் குர்ஆன் வசனத்திற்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்க வேண்டும் என்பதாகும். அந்த விரிசையில் இவர்களின் இந்த பிழையான கொள்கையின் படி பார்த்தாலும் பின் வரக் கூடிய குர்ஆன் வசனங்களுக்கு முரணாக மேற்ச் சுட்டிக்காட்டிய. (முஸ்லிம் 3739) ஹதீஸ் அமைந்துள்ளது.
"எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)
இவர்கள் சொல்வது போல அந்த ஹதீஸை அணுகினால் மேற்ச்சென்ற இந்த குர்ஆன் வசனத்திற்கு முற்றிலும் முரணாகவே அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களின் இந்த ஹதீஸ் மறுப்பு கொள்கையின் அடிப்படையில் அந்த ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் மறுக்க வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும். ஏன் என்றால் பிறரை மானபங்கப் படுத்துவது கூடாது என்று குர்ஆன் சொல்கிறது இவர்களின் வாதப்படி மேற்ச்சென்ற ஹதீஸ் பிறரை மானபங்கப் படுத்துவற்கு அனுமதி அளிக்கிறது. என்றால்? ஹதீஸை மறுக்க வேண்டும். எனவே பிறரை மானபங்கப் படுத்த கூடாது என்ற குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட வேண்டும் . ஆனால் குர்ஆன் வசனத்தை அலச்சியப் படுத்தி அல்லாஹ் சொன்னாலும் கேட்க மாட்டோம். எங்கள் தலைவர் சொல்கிறார் அவர் சொல்வது தான் சரி என்று நாங்கள் பிறரை மானபங்கப் படுத்தும் விதமாக பேசுவோம் நடந்து கொள்வோம் என்று இவர்களின் அணுகு முறையை காணலாம்.
அடுத்து வரும் குர்ஆன் வசனங்களையும் நிதானமாக நன்றாக அவதானியுங்கள்.
"முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)
"முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49-12)
மேற்ச் சென்ற குர்ஆன் வசனங்களிலும் பிறரை பரிகாசம் செய்ய வேண்டாம், இழிவாக எண்ண வேண்டாம், பழித்துக் கொள்ள வேண்டாம், கெட்ட பட்டப் பெயர் சொல்லி அழைக்க வேண்டாம், பிறரை துருவித் துருவி ஆராய வேண்டாம். இப்படி எச்சரிக்கையாக சொல்லும் போது நாங்கள் அப்படி தான் பேசுவோம் என்றால் இவர்கள் எப்படி தவறாக வழிகாட்டப்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல பல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டினாலும் எப்படி நீங்கள் சொல்லக் கூடிய விசயங்கள் குர்ஆனிலும், ஹதீஸிலும் இருந்தாலும் நாங்கள் மத்ஹப் சொல்வதை தான் கேட்போம் என்று மத்ஹபுகார்கள் பிடிவாதம் பிடித்து சொல்வதைப் போல எத்தனை குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டினாலும் எங்கள் தலைவர் சொன்னது மட்டும் தான் சரி என்று பிடிவாதம் பிடித்து தலைவர் அந்த கருத்தை மாற்றாத வரை தொண்டர்களும் மாறமாட்டார்கள். நாம் எப்படி நல்ல பண்பாடு உடையவர்களாக வாழ வேண்டும் என்று பின் வரும் ஹதீஸ்கள் பாடம் சொல்லித் தருகின்றன.
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்:
முஆவியா(ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, 'அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை' என்று கூறிவிட்டு, 'நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள்.
 (புகாரி 6029)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்' என்றே கூறுவார்கள்.
 ( புகாரி 6031)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (புகாரி 6044)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது. என அபூ தர்(ரலி) அறிவித்தார்.(புகாரி 6045)

மேலும் யூதர்கள் நபியின் மீது தவறான முறையில் ஸலாம் கூறிய போது அதற்கு ஆயிஷா ரலி அவரக்ள அதே அளவு பதில் சொல்லியும் கூட அதையும் நபியவர்கள் அப்படி சொல்லக் கூடாது என்று கண்டிக்கிறார்கள். அதை பின் வருமாறு காணலாம்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்கள்
யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள்
 (புகாரி 6024)
எனவே மேற்ச் சென்ற முஸ்லிம் 3739 ம் ஹதீஸில் சொல்லப்பட்டதை அல்லாஹ் தனக்கு தனிப்பட்ட ரீதியில் கொடுக்கப்பட்ட அனுமதியால் பேசினார்கள் என்று பார்ப்பதோடு, மேலும் எவருக்கு பொறுப்பு கொடுத்து அவர் அதன் மூலம் மோசடி செய்கிறாரோ அவர் அதை மறுமை நாளில் சுமந்து வருவார் என்ற தகவலை நபியவர்கள் சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நபியவர்கள் அப்படி சொன்னதின் மூலம் அந்த தோழரின் மனது பாதிக்கப்பட்டிருந்தால் மேற்ச்சென்ற முஸ்லிம் 5068 ம் ஹதீஸில் சொல்லப்பட்டதை போல அது அவருக்கு நன்மையாக மாறிவிடும் என்பதை தான் நாம் புரிய வேண்டும்.
அதே போல அபூபக்கர் (ரலி) எதிரியை ஏசினார்கள் என்றால் நாம் ஏன் ஏசக் கூடாது என்ற வாதமும் ஹதீஸ்களை சரியாக அணுக தெரியாததினால் ஏற்ப்பட்ட விளைவேயாகும். ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களான இவர்களின் வாதப்படி ஒரு ஸஹாபியின் ஆதாரத்தை எடுப்பது வழிகேடாகும். நபியவர்கள் தவறான முறையில், அருவருப்பாக பேசுவதை தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸ்கள் எல்லாம் இந்த இடத்தில் மறந்து விட்டார்கள்.? இரண்டாவது அபூபக்கர் (ரலி) அவர்களை பொறுத்தவரை பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நடந்தாலும் விசேசமாக பத்ரில் கலந்து கொண்டவர்களை அல்லாஹ் மன்னித்து பொருந்திக் கொள்வான். அதை அல்லாஹ் குர்ஆனில் இப்படி எடுத்துக் காட்டுகிறான்.
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும். (8- 67,68) பத்ரு கைதிகள் விடயத்தில் நபியவர்கள் எடுத்த முடிவு தவறானது என்று அல்லாஹ் கூறிவிட்டு, அல்லாஹ்வுடைய மன்னிப்பு ஏற்கனவே முடிவாகி விட்டது, அதனால் அல்லாஹ்உங்களை மன்னித்து விட்டான் என்று கூறவதை காணலாம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு படையெடுத்து செல்வதற்கு முன் நபியவர்களின் படைகளிலிருந்து தனது குடுப்ப உறவுகளை பாதுகாப்பதற்காக ஹாதிப் பின் அபீ பல்த்தஆ (ரலி) அவர்கள் நபியவர்களின் வருகையை ஒரு அடிமை பெண் மூலமாக நபிக்கு தெரியாமல் இரகசிய கடிதம் அனுப்பிய போது இறுதியில் அவள் பிடிக்கப்பட்டு, கடிதமும் நபியவர்களிடம் கிடைத்த போது இந்த தவறை செய்த ஹாதிப் பின் அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை தலையை வெட்ட உமர் (ரலி) அவர்கள் நபியிடம் அனுமதி கேட்ட போது, உமரே! உமக்கென்ன தெரியும் பத்ரு போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் உங்களுக்கு சுவர்க்கம் உறுதியாகி விட்டது என்று கூறியிருக்கலாம் அல்லவா என்றார்கள். (ஹதீஸை விரிவாக பார்க்க புகாரி 6259)
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதுாறு பழி சுமத்திய ஆயிஷா (ரலி) அவர்களின் உறவுக்காரா் மிஸ்தா (ரலி) அவர்கள் ஏசப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட ஆயிஷா அவர்கள் அவர் பத்ரில் கலந்து கொண்டவர் அவரை ஏசாதீர்கள் என்று சம்பந்தப்பட்டவரை மன்னித்ததை காணலாம். மிஸ்தஹ்வுக்கு உதவிகள் செய்த வந்த அபூபக்கர் (ரலி) அவரகள் இனி மேல் இந்த மிஸ்தஹ்வுக்கு உதவிகள் செய்ய மாட்டேன் என்று கூறிய போது அல்லாஹ்வுடைய மன்னிப்பு உங்களுக்கு தேவையில்லையா என்று அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கிய உடனே அல்லாஹ்வின் வசனத்திற்கு கட்ப்பட்டு தனது முடிவை அபூபக்கர் அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். இவர் தான் பகிரங்கமாக தவறு செய்தார் என்பதை தெரிந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இஸ்லாம் அழகான முறையில் வழிக்காட்டுகிறது.
எனவே ஹதீஸ்களை சரியான முறையில் கையாள வேண்டும். தாம் உருவாக்கிய தவறான கொள்கைக்காக ஹதீஸ்களை தவறாக வளைக்கக் கூடாது என்பதை புரிந்து, சொல்லப்ட்ட செய்திகளை சரியாக விளங்கி வாழ்வதற்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts