லேபிள்கள்

திங்கள், 19 டிசம்பர், 2016

சாப்பிட வேண்டிய தங்கம்!

ஃபிலோமினா நிலாதேவி, ஊட்டச்சத்து ஆலோசகர்
பழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தைத் தருபவை.  அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்தக் உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் தகதகக்கும் தங்கமாக மாற்றக்கூடியது.

கழிவுகளை வெளியேற்றும் எலுமிச்சை
வைட்டமின் சி இதில் அதிகம். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் கிருமிகளைப் பரவவிடாமல் தடுக்கும். கால்சியம் சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், மூட்டு வலி குறையும். உடலின் வெப்ப நிலையைச் சமன்படுத்தும். மூளை செல்கள் சுறுசுறுப்புடன் செயல்பட, பொட்டாஷியம் உதவும். செரிமான சக்தி மேம்படும். சளி, சளி தொடர்பான காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றுக்கு, எலுமிச்சம் பழச்சாறு மிக சிறந்த மருந்து. இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து, காலை வேளையில் குடித்தால், உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். சிறந்த மார்னிங் டிரிங்காக எலுமிச்சம் பழச்சாறு செயல்படும்.
 பழங்களின் ராஜா மாம்பழம்
'பழங்களின் அரசன்' என சொல்லப்படும் மாம்பழத்தில், வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். மாலைக்கண், கண் வறட்சி போன்ற கண் நோய்கள் வருவது  தடுக்கப்படும்.  இதில் உள்ள குளுடமின் (Glutamin) நினைவுத் திறனை அதிகரித்து, கவனச்சிதறலைத் தடுக்கும். வைட்டமின் சி அதிகம் இருப்பதால், செரிமான சக்தியைத் தூண்டிவிடும். ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் என்சைம்ஸ் நிறைந்து இருப்பதால், புற்றுநோய்கள் வராமல் காக்கும். மாம்பழத்தின் தோல் சுருங்குவதற்குள் சாப்பிட வேண்டும்.

இரும்புச்சத்தைக் கிரகிக்க ஆரஞ்ச்
எலுமிச்சம்பழத்துடன் ஒப்பிடுகையில் இதில் வைட்டமின்  சி குறைவு. ஆனால், வைட்டமின் ஏ அதிகம். காலை உணவு சாப்பிட்டதும், ஆரஞ்ச் பழச்சாற்றைக் குடித்தால், உணவில் இருக்கும் இரும்புச் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு் உடலில் சேரும். இதில் காம்ப்ளெக்ஸ் சர்க்கரை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடலாம். அதிக நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த சாய்ஸ். சளித் தொல்லை இருப்பவர்கள் ஆரஞ்ச் பழச்சாற்றைக் குடிக்கலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, சிறு சிறு உடல் உபாதைகள்கூட வராமல், உடலுக்குக் கவசமாக செயல்படும். 
சருமத்துக்குப் பப்பாளி
மாவுச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், சாப்பிட்டதும் நிறைவான உணர்வைத் தரும். இதில் இருப்பது காம்ளெக்ஸ் சுகர் என்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. வைட்டமின் ஏ மற்றும் பி, மக்னிஷியம், காப்பர் போன்றவை அதிகமாக உள்ளன. லைக்கோபீன் என்ற என்சைம் அதிகம் உள்ளதால், உடலில் ஆன்டிஆக்ஸிடன்்ட் அதிகரித்து, சில வகைப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். சருமப் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாகும். இந்தப் பழத்தை, மசித்துப் பூசிவந்தால், அழகான சருமத்தைப் பெறலாம். 

எலும்பை வலுவாக்கும் அன்னாசி
வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம். நார்ச்சத்துக்கள், பொட்டாஷியம், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை நிறைந்துஇருப்பதால், எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும். ஆன்டிஆக்சிடன்ட் உள்ளதால் இதயம் தொடர்பான நோய்கள், மூட்டுவாதம், புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படும். எலும்பு, பல் ஈறுகளை உறுதிசெய்யும். 30 வயதுக்கு மேல் வரும் கண் கோளாறுகளைக் குறைக்கும். கரோட்டீன் மிகுந்திருப்பதால், பார்வைத் திறன் அதிகரிக்கும். முடி உதிர்தல் நிற்கும்.

கண்களுக்கு கேரட்
வைட்டமின் ஏ அதிகம் என்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். பீட்டா கரோட்டீன் உள்ளதால், அனைத்து வித கண் தொடர்பான பிரச்னைகளையும் கேரட் தடுக்கும். பச்சையாக, சாலட், ஜூஸ்,பொரியல் என எல்லா விதத்திலும் காரட்டைத் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்புகள் வலுவாகும். சருமம் பளபளப்பாகும். சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.

உடல் எடையைக் கூட்டும் மஞ்சள் பூசணி
வைட்டமின் ஏ மற்றும் சி, இதில் அதிகம். கலோரிகள் மிக அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்கலாம். 6 மாதக் குழந்தைக்கு, பூசணியை வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம். இதனால், உடல் எடை கூடும். தசைகள் வலுவாகும். நார்ச்சத்துக்கள் உள்ளதால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். சருமம், கூந்தல் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வு.

வளரும் பிள்ளைகளுக்கு உருளைக் கிழங்கு
மாவுச்சத்துக்கள் மிக அதிகம் என்பதால், வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்கும். தினமும் குழந்தைகளுக்குக் கொடுத்துவர, சுறுசுறுப்புடன் செயல்படுவர். வைட்டமின் பி6 இருப்பதால், மூளைசெல்கள் மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெறும். கொழுப்பு குறைவு என்பதால், இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படும். சர்க்கரை நோயாளிகள் மாதம் இருமுறை அரிசியின் அளவைக் குறைத்துவிட்டு, இதைச் சாப்பிடலாம். உருளையின் மேல் செடி போல முளை விடுவதற்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

குழந்தைகளுக்குச் சர்க்கரை வள்ளிக் கிழங்கு
கலோரிகள் மிக அதிகம். தசைகள், மூளை வளர்ச்சி ஆகியவற்றுக்கு அதிகப்படியான ஆற்றலைத் தரும். இரும்புச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை அதிகம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரியும். மாலைக்கண் நோயைத் தடுக்கும். உடலின் எதிர்ப்பு ஆற்றல் திறனை அதிகரிக்கச் செய்யும். நார்ச்சத்துக்கள் உள்ளதால், இதயத்துக்கு நல்லது. வாங்கியவுடன் சாப்பிட்டுவிடுவதே நல்லது.  நாளாகும்போது, தோல் சுருங்கி, லேசாகக் கசப்பாக மாறிவிடும்.

கெட்டக் கொழுப்பைக் குறைக்கும் கருணைக் கிழங்கு
மாவுச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. நார்சத்துக்கள் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். பி காம்ளெக்ஸ் வைட்டமின் அதிகம் இருப்பதால், வளர்சிதை மாற்றத்தை  மேம்படுத்தும். இதில் ஃபோலிக் அமிலங்களும், வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளன. சருமத்தை சீர்செய்யும், வயதான தோற்றம் வராமல் தடுக்கும்.  சருமத்தை அழகாக, பளபளப்பாக மாற்றும். கருணையை அடிக்கடி சாப்பிட்டுவர, சருமப் பிரச்னைகள் நெருங்காது.

உடனடி எனர்ஜிக்கு வாழை
உடலுக்கு உடனடி சக்தியைத் தருவதில் வாழைக்கு நிகர் எதுவும் இல்லை. மாவுச்சத்துக்கள், வைட்டமின்களைவிட, தாதுக்கள் இதில் அதிகம்.  உடலில் உள்ள நீர்த்தன்மையை வாழை சமன்படுத்தும். பொட்டாஷியம் இருப்பதால், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வாழை சிறந்த உணவு. பாஸ்பரஸ், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வளரும் குழந்தைகளின் தசைகள் வலுவடைய, தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தினமும்  அரை வாழைப்பழம் மருத்துவர் அனுமதியோடு சாப்பிடலாம்.
 
சிறுநீரகத்துக்கு மக்காச் சோளம்
நார்ச்சத்துக்கள் மிக அதிகம். பாஸ்பரஸ், மாங்கனீஷ், மக்னிஷியம், ஜின்க், இரும்புச் சத்து, காப்பர் ஆகிய தாதுக்கள் மிக அதிகம். செலினியம் இருப்பதால் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். இதயச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும். வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts