லேபிள்கள்

வெள்ளி, 9 டிசம்பர், 2016

கொசுவா ? கொசு விரட்டிகளா ?

இரண்டுமே ஆபத்தானதுதான் !
மழைக்காலம் வந்துவிட்டால் கொசுவும் அதிகரிக்கும் என்பார்கள். ஆனால், இன்று வெயிலோ மழையோ, கொசுக் கடிக்கு மட்டும் பஞ்சமே இல்லை. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா என்று கொசுவால் பல நோய்கள் வரிசைகட்டுகின்றன. கொசுக்களை அழிக்க காயில், மேட், லிக்யூடேட்டர் என்று கொசு விரட்டிகள் பரிணாமம் எடுக்க எடுக்க, கொசுக்களும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடன் அட்டகாசம் பண்ணுகின்றன. இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று விருது கொடுக்கும் அளவுக்கு, அனைத்து வீடுகளிலும் இருக்கிறது கொசு அடிக்கும் பேட். கொசுக்களால் வரக்கூடிய நோய்களுக்கு இணையாக, கொசு விரட்டிகளால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதுதான் அதிர்ச்சி.

கொசுவர்த்திச் சுருள் மிக மோசமான பாதிப்புகளைத் தரும் கொசு விரட்டிகளில், முதல் இடம் பிடிப்பது கொசுவர்த்திச் சுருள்தான். கொசுவர்த்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், மிக மிக வீரியமிக்கவை. பூச்சிக்கொல்லிகளான பைரெத்ரம், டை, ஃபங்கிசைட் போன்ற பல ரசாயனங்களைப் பயன்படுத்தி
  இவை செய்யப்படுகின்றன. ஒரு கொசுவர்த்திச் சுருளிலிருந்து வெளிவரும் புகையில், 100 சிகரெட்கள் புகைக்கும்போது உண்டாகும் பாதிப்புகள் இருக்கின்றன. இதிலிருந்து வெளிவரும் கார்பன், புற்றுநோயை வரவைக்கும் காரணியாக (Carcinogenic) உள்ளது. இதனால், நுரையீரல் வீக்கம், இருமல், சளி, மூச்சுத்திணறல், தொண்டை வலி, ஆஸ்துமா, கண் எரிச்சல், குமட்டல், நெஞ்சகம் தொடர்பான பாதிப்புகள் போன்றவை வரும். தொடர்ந்து இந்தப் புகையை தினமும் சுவாசிக்கையில், மூக்கு தொடர்பான புற்றுநோய், நுரையீரல், தொண்டை மற்றும் சுவாசக் குழாய் தொடர்பான புற்றுநோய்கள் வரலாம். மேலும், கொசுவர்த்தி எரியும் போது, உணவுகளை மூடி வைக்கவில்லை எனில், இந்த ரசாயனங்கள் உணவில் படர்ந்து, வயிறு தொடர்பான பிரச்னைகளையும் உருவாக்கிவிடும்.

கொசுவை விரட்டும் திரவங்கள் கொசுவை விரட்டும் மருந்து, திரவ வடிவில் கிடைப்பதைத்தான் லிக்யூடேட்டர் என்கிறோம். இதன் நடுவில் இருப்பது கிராபைட் உருளை (Graphite rod). திரவத்தில் நனைந்திருக்கும் உருளை,  மின்சார உதவியால் சூடாகும்போது, ரசாயனங்கள் ஆவியாகிக் காற்றில் கலக்கின்றன. இந்த வாசத்தால் கொசுவின் உணர்வுப் புலன்கள் வேலை செய்யாமல் போவதால், கொசுக்கள் மனிதர்களை நெருங்குவது இல்லை. மேலும், இதில் ப்ராலெல்த்ரின் (Prallelthrin), அலெத்ரின் (Allethrin) போன்ற பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், தொடர்ந்து சுவாசிக்கும் போது, சுவாசப் பாதையில் பிரச்னை, பெருங்குடல் பாதிப்பு, அலர்ஜி, மூக்கில் நீர் வழிதல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, வீக்கம் போன்ற பிரச்னைகள் வரும். சிலருக்கு இந்தப் பிரச்னைகள் அதிகமாகி தொற்றுக்களாகவும் மாறலாம். இதுவே சிலருக்கு  சைனஸாக மாறும் ஆபத்தும் உள்ளது. இதனால் அடிக்கடி தொண்டை வலி, இருமல், சளி போன்ற தொல்லைகளும் இருந்துகொண்டே இருக்கும்.

கொசு மேட் நீல நிறத்தில் சிப் போன்ற வடிவில் கிடைக்கிறது. இதில் ஒருபக்கம் வெள்ளி சரிகை காகிதம் ஒட்டியிருக்கும். இதுவும் மின்சார உதவியோடு சூடாகி, மேட்டில் உள்ள ரசாயனங்கள் ஆவியாகி காற்றில் கலக்கின்றன. இதிலும் பைரெத்ரம், அலெத்ரின் போன்ற கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. இதனால் தொடர் தலைவலி, வீசிங், இருமல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும்.

லேட்டஸ்ட் வரவு - சீக்கிரம் எரியக்கூடிய ஃபாஸ்ட் கார்ட். மூன்றே நிமிடங்களில் எரிந்து விடும். மற்றவற்றைவிட குறைந்த ரசாயனங்கள்.  என்றாலும், பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது. இதிலிருந்து வரும் மெல்லிய புகையால் அலர்ஜி, நுரையீரல் பாதிப்புகள், காது மற்றும் நுரையீரல் தொற்று, தும்மல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

பொதுவாக அனைத்து வகை கொசு விரட்டிகளையும் தவிர்ப்பதே நல்லது. கொசுக்கள் அதிகமாக இருந்தால், படுக்கும் அறைக்குச் செல்லும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பே, கொசு விரட்டியை ஆன் செய்துவிட்டு, அறைகளின் கதவு, ஜன்னல்களை மூடிவிட வேண்டும். படுக்கச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு, அந்த அறையில் உள்ள கதவு ஜன்னல்களை திறந்துவிட்டு, அந்த புகை முழுவதும் வெளியேறிய பிறகு, படுக்கச் செல்லலாம். இதனால், கொசு விரட்டிகளால் வரும் பின்விளைவுகளை ஓரளவுக்குத் தடுக்கலாம். மற்றபடி கொசுக் கடி, கொசு பரப்பும் நோய்கள், கொசு விரட்டியால் வரும் நோய்களைக் கணக்கில்கொண்டு, நாம் கொசுவலைக்குள் செல்வதே புத்திசாலித்தனம். கொசு விரட்டிகளைவிட, கொசு பேட் பாதுகாப்பானது. அனைத்தையும்விட கொசு வலையே சிறந்தது.

புகையின் வடிவில் கொசு விரட்டிகளால் இத்தனை ஆபத்து என்றால், சருமத்தில் பூசும் கிரீம், எண்ணெய் வடிவில் கிடைக்கும் கொசு விரட்டிகளின் நிலை? விளக்குகிறார் ஆர்த்தி, சரும மருத்துவர்.

கிரீம் மற்றும் எண்ணெய் வகைகள்"குழந்தைகள் இருக்கும் வீட்டில் புகை வடிவிலான கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவே கூடாது. பிறந்த மூன்று மாதங்கள் வரை குழந்தைகளுக்கு, சரும கிரீம்கள் மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்த வேண்டாம். கொசுவலைதான் சிறந்தது. மூன்று மாதங்கள் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வெட் டிஷ்யூ (ஈர டிஷ்யூ) போன்ற கொசுகளிடமிருந்தும் காக்க பிரத்யேக 'கொசுவை விரட்டும் டிஷ்யூக்கள்' பேபி ஷாப்களில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனையுடன் கிரீம்களைப் பயன்படுத்தலாம். பெரியவர்கள், வாசனையற்ற கொசு விரட்டி கிரீம்களை பயன்படுத்தலாம்.

எந்த அலர்ஜிகளும் ஏற்படாத ஆரோக்கியமான சருமம் என்றால் மட்டுமே, கிரீம்கள் மற்றும் எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது சரி. ஆனால், அலர்ஜி சருமத்தினர் இத்தகைய கிரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது. இந்த கிரீம் மற்றும் எண்ணெய் வகைகள் சிலருக்குக் கண் எரிச்சல், தடிப்பு, சரும எரிச்சல், சின்ன சின்ன வீக்கங்கள் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும்." என்கிறார் ஆர்த்தி.

இயற்கை வாழ்வியல் நிபுணரான நாச்சாளிடம் பேசியபோது "உபாதைகளை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்த கொசு விரட்டிகளைத் தவிர்த்து, இயற்கை முறையிலேயே கொசுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மனிதனின் மேலிருந்து  வரும் வாடை, வியர்வை துர்நாற்றம், கார்பன்டை ஆக்சைடு போன்றவற்றால்தான் கொசுக்கள் நம்மை அடையாளம் காண்கின்றன.
பொதுவாக, கொசு, , புழு போன்ற பூச்சிகள், கழிவுகள் நிறைந்த இடத்தையே சுற்றித் திரியும். தூய்மையான ரத்தம் இல்லாதவர்களையும் உடலில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்திருப்பவர்களையும் கொசுக்கள் அதிகமாக கடிப்பதும் இதனால்தான். ஆதலால் உடலைத் தூய்மையாகவும், நச்சுக்கள் இல்லாத உடலாகவும் பராமரிப்பது அவசியம்." என்கிறார் நாச்சாள். 

'வலை'க்குள் வீழ்வதே புத்திசாலித்தனம்!
"மக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் பற்றிய போதிய விழிப்பு உணர்வு இல்லை. இதில் சென்னை மாநகர மக்களும் விதிவிலக்கு அல்ல. ஏனெனில் சென்னையில் நடத்திய ஆய்வில், 42 சதவிகிதத்தினர் கொசுவர்த்தி சுருள்களைப் பயன்படுத்துகின்றனர்.

28 சதவிகிதத்தினர் திரவ கொசு விரட்டிகளையும், 5 சதவிகிதத்தினருக்கும் குறைவானவர்களே கொசு வலைகளைப் பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், கொசு விரட்டிகளைப் பயன்படுத்திவிட்டு கதவு, ஜன்னல்களையும் மூடிக்கொள்ளும் பழக்கமும் உள்ளது" என்கின்றன ஆய்வுகள்.

கொசுவை விரட்ட எளிய வழிகள்:
கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம்.

பசுஞ் சாணம், நொச்சி, வேம்பு, பச்சை கற்பூரம் இவற்றை அரைத்து வரட்டியாகத் தட்டி உலர்த்தி, ஊதுவத்தி போல மாலை நேரங்களில் எரிய விடலாம்.

மாலைவேளையில் உலர் பசுஞ் சாணத்தில் நெய் விட்டு விளக்கு ஏற்றலாம். பசு சாணத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிஜன் வாயு உடலுக்கும் நல்லது.

வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டு துளசி, பேய் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் க்ராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்த்து வருவதும் நல்லது. இதனால், கொசுக்கள் வீட்டுக்குள் வருவது குறையும்.

வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை தெளிக்கலாம்.
http://pettagum.blogspot.in/2015/03/blog-post_14.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts