லேபிள்கள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஆல் இஸ் வெல்!

என்றென்றும் புன்னகை நிம்மதியான மனமே சந்தோஷத்தின் நிரந்தர முகவரி!
சந்தோஷம்தான் இந்த வாழ்வின் தேடல். 'சந்தோஷம் என்றால் என்ன?' என்று குழந்தையிடம் கேட்டால், 'மிஸ் ஹோம்வொர்க்கே கொடுக்கலைன்னா சந்தோஷம்' என்று சொல்லும். கல்லூரி மாணவர்களிடம் கேட்டால், 'எக்ஸாம், டெஸ்ட் எதுவும் இல்லைன்னா அதுதான் சந்தோஷம்' என்பார்கள். இல்லத்தரசியிடம் கேட்டால், 'வீடு கட்டணும், கார் வாங்கணும்' என்று பட்டியலை அடுக்குவார். இப்படி ஒவ்வொரு தரப்பினருக்கும் வெவ்வேறு விஷயங்கள் சந்தோஷம் தருவதாக இருக்கும். ஆனால், உண்மையில் இவையெல்லாம்தான் சந்தோஷமா என்றால், இல்லை.

இன்றைக்கு 99.99 சதவிகிதம் பேருக்கு உண்மையான சந்தோஷம் எதுவென்றே தெரியவில்லை. எதை எதையோ சந்தோஷம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் 'மெட்டீரியலிஸ்டிக் ஹேப்பினஸ்' என்ற மாயையிலேயே உள்ளோம். அதாவது, பொருள் சார்ந்த சந்தோஷம். சொந்த வீடு, வாகனம், பணம், பதவி என்று எல்லாம் கிடைக்கப்பெறலாம். அவை எல்லாம் தருவது ஒருவித பெருமை, பரவசமே அன்றி சந்தோஷம் அல்ல. பணத்தால் ஒரு போதும் வாங்க முடியாதது, சந்தோஷம். உண்மையில், சந்தோஷம் = மன நிம்மதி.

இந்த உண்மையான சந்தோஷத்தை, மன நிம்மதியைப் பெறுவது எப்படி..?

உன்னதமான உறவுகள், வாழ்க்கை முழுக்க சந்தோஷத்தைப் பரிசளிக்கும். உறவுகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதைவிட, கிடைத்த உறவுகளை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள், வாழ்க்கைத் துணை என, அவர்களுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அன்பினால் மட்டுமே கட்டமைத்த பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சில படிகள் சறுக்கினாலும், தோள் கொடுக்க இந்த உறவுகள் இருக்கும்போது, மனதுக்கு சேதம் ஏற்படாது; சந்தோஷமும் குறையாது.

'பிளஷர் ஆஃப் கிவ்விங்' என்பார்கள். கொடுப்பவர்கள் மனதுக்கு சந்தோஷம் வளர்பிறைதான். ஒருவர் தனக்காக ஒரு பொருளை வாங்கிக்கொள்வதைவிட, தேவையிருக்கும் ஒருவருக்கு அந்தப் பொருளை வாங்கிக் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு இணை இல்லை என்பது, அதை உணர்ந்தவர்களுக்குப் புரியும். முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். அது மற்றவர்களுக்கு மட்டும் உங்களைப் பிடிக்கச் செய்யாது; உங்களையே உங்களுக்கு மிகவும் பிடிக்கச் செய்யும். அதற்காக ஆயிரக்கணக்கில் டொனேஷன் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்கள் தெருவில் குப்பை அள்ளும் துப்புரவுத் தொழிலாளியிடம், 'குழந்தைக்கு பிஸ்கட் வாங்கிக்கோங்க' என்று 10 ரூபாய் கொடுத்துப் பாருங்கள்... அவர் கேட்காமல் நீங்கள் செய்த உதவியில் நன்றி மின்னும் அந்தக் கண்கள், மிகப் பெரிய சந்தோஷத்தை உங்களுக்குப் பரிசளிக்கும்.
 
வெறுப்புகளைச் சுமக்காதீர்கள். அன்றைய வெறுப்புகளை அன்றே கரைத்துவிடுங்கள். மற்றவர்கள் மீதான வெறுப்புகளை மனதில் சேகரித்துக்கொண்டே போனால், மனபாரம்தான் மிச்சம். அதுவே அவர்களை மன்னித்துப் பாருங்கள்... மனம் மிக லேசாகும். எதிர்ப்புகளைக் கழித்து, மனிதர்களைச் சம்பாதியுங்கள். பாசிட்டிவ் எமோஷன்ஸ் அதிகமாகும். அதில் சந்தோஷம் முதல் இடத்தில் இருக்கும்.

உடற்பயிற்சியும் மனப் பயிற்சியும் சந்தோஷத்துக்கான சாவிகள். பதற்றம், மனச் சோர்வு, மன அழுத்தம் இவற்றை எல்லாம் அகற்றும் அருமருந்து இந்தப் பயிற்சிகள். சந்தோஷம் மனதில் தங்க வேண்டுமானால், அதற்குரிய இடத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் டென்ஷனை முதலில் வெளியே விரட்ட வேண்டும்தானே? அதற்கு இந்தப் பயிற்சிகள் கைகொடுக்கும்.
இரவில் நிம்மதியாக, நன்றாக உறங்குங்கள். அலுவல் பணி, குடும்பம், குழந்தைகள், தொலைக்காட்சி, மொபைல், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என, உங்கள் தூக்கத்தைத் தின்ன, காரணிகள் இங்கே வரிசை கட்டி நிற்கலாம். சந்தோஷம் வேண்டும் என்று நினைத்தால், இவற்றுக்கு எல்லாம் ஸ்ட்ரிக்டாக எல்லை நிர்ணயுங்கள். தினமும் குறைந்தது எட்டு மணி நேர உறக்கத்தைச் சொந்தமாக்குங்கள். உங்கள் உறக்கத்தில் இரண்டு மணி நேரம் குறையும்போது, அந்தச் சோர்வு அந்நாள் முழுக்க உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும். 'நல்லா தூங்கினேன்' என்று முழு திருப்தியுடன் படுக்கையில் இருந்து எழும் நாளில் அனுபவிக்கும் புத்துணர்வே, அந்நாளின் பணிகளை சுறுசுறுப்பாக முடிக்க வைத்து, ஒருவித நிம்மதியை, சந்தோஷத்தைத் தரும்.

நம் முன்னோர், சொத்து, சுகம், குடும்பம், பிள்ளைகள் என அனைத்தையும் விட்டுட்டு, காசி, ராமேஸ்வரம் என்று சென்றார்களே ஏன்..? உண்மையில் அது ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல; ஆன்மாவை அறியும் பயணம். மன நிம்மதிக்கான தேடலை அடையும் நொடியில், அவர்கள் தங்களின் உண்மையான சந்தோஷத்தை கண்டடைந்தார்கள். வெளி நாட்டினர் பலர், கன்றிப் போன சருமத்துடன், முதுகில் பை மூட்டையுடன், நாடோடி களாக நாடு நாடாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். உண்மையில் உலகமெல்லாம் சுற்றிப் பார்க்கும் அளவுக்கு அவர் கள் பணக்காரர்களாக இருக்க மாட்டார்கள். பொரு ளாதாரத் தேவை நிறைந்தவுடன், ஆன்மாவின் தேடலைத் தொடங்கிவிட்டவர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால், தங்களின் பயணத் துக்காகவே சம்பாதித்து, அதற்கான பணம் கிடைத்தவுடன் டிக்கெட் போட்டு விடுவார்கள். எனவே, சந்தோஷம் என்பதை வீட்டுக்குள் மட்டும் சிறைப்பிடித்து சுவாசிக்க நினைக்காதீர்கள். உலகின் பரந்து விரிந்த மூலைகளிலும் தேடுங்கள்.

பணம் சந்தோஷம் தரும், உண்மைதான். ஆனால், பணம் ஒன்றுதான் சந்தோஷம் என்று எண்ணி, அதற்காக உறவுகள், ஆரோக் கியம், குணம் என்று அனைத்தையும் சீக்காக்கிக் கொண்டால், சந்தோஷம் என்பது வாழ்க்கையில் கானல் நீர்தான்... சந்தேகமில்லை! வீடு, வாகனம், பணம், பதவி உயர்வு போன்றவை வாழ்வின் இலக்குகள் மட்டுமே, சந்தோஷமோ நிம்மதியோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், பணம் அதிகரிக்க அதிகரிக்க, நிம்மதி விலகும் என்பதும் கண்கூடு. மெத்தையை வாங்கியவர்களால், தூக்கத்தை வாங்க முடியாமல் போகும் கதை இதுதான்.

நிம்மதியான மனமே சந்தோஷத்தின் நிரந்தர முகவரி!
ரிலாக்ஸ்...
மன நிம்மதி பெறலாம் வாருங்கள்..!
பணத்தைவிட, தனி மனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நல்லொழுக்கம், நல்வழியில் அழைத்துச் சென்று மன நிம்மதியைக் கொடுக்கும். அதனால் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதோடு, நினைத்ததை எளிதில் சாத்தியப்படுத்தும் வல்லமையும் கிடைக்கும்.
அடுத்தவர் பிரச்னைகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதைத் தவிருங்கள். முடிந்தால் உதவுங்கள், இல்லையென்றால் ஒதுங்குவதே நல்லது.

பெற்றோர்களின் சண்டை, சந்தேகம், டென்ஷன் எதிரொலிக்கும் சுவர்கள் உடைய வீடுகளில் வாழும் குழந்தைகளைவிட, நிம்மதியான இல்லறத்தில் வளரும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். நீங்களும் நிம்மதியாக இருந்து, உங்கள் குழந்தைகளுக்கும் அந்த நிம்மதியைப் பரிசளியுங்கள்.
வாழ்க்கைப் பந்தயத்தில் ஜெயிக்க, படுக்கையில் விழுந்த பின்னும் மனதையும் மூளையையும் ஓடவிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அனைத்தையும் மறந்துவிட்டு, தூக்கத்தை மட்டும் தழுவுங்கள்.
பெரியோர்கள், நூல்கள், மதங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை வழிகாட்டலுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்தவர்களைத் தாழ்த்திப் பேசுவது, காயப்படுத்துவது போன்ற செயல்களால் நமக்குக் கிடைப்பது என்ன? எதிராளியை அவமானப்படுத்திவிட்ட பெருமிதமா? உண்மையில், அது குரூரம். குரோதம். இவையெல்லாம் குடிகொண்டிருக்கும் நெஞ்சத்துக்கு, மன நிம்மதி சாத்தியமில்லை.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts