லேபிள்கள்

புதன், 27 மார்ச், 2013

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?


'கொஞ்சம் அந்த சென்ட் பாக்டரியை மூடறியா?'' - நண்பர்களுக்குள் சகஜமான  'மூக்குப்பிடி' வசனம் இது. கூட்டம் நிறைந்த பஸ் பயணத்தின்போதோ, கோடைக் காலத்தில் அலுவலகத்திலோ சிலர் கையை உயர்த்தினாலே, வியர்வை நாற்றம் முகம் சுளிக்கவைக்கும்.

 அக்குள் பகுதியில் நாற்றம் வீசுவதற்கு முக்கியமான காரணம் வியர்வை. உடலில் சரியான காற்றோட்டம் கிடைக்காத பகுதிகளில் அதிகமாக வியர்வை தோன்றும். அப்படிப்பட்ட பகுதிதான் அக்குள். ஆனால், உண்மையில் வியர்வை என்பது நமக்கு நன்மை செய்வதுதான். தாங்க முடியாத வெயில், கடுமையான உடற்பயிற்சி, டென்ஷன் என்று எப்போதெல்லாம் நமது உடம்பு உஷ்ணம் ஆகிறதோ... அப்போதெல்லாம், 'கூல்... கூல்' என்று சொல்லாமல் சொல்லி நமது உடம்பைக் குளிர்விக்க உதவி செய்வதுதான் வியர்வை. ஆனாலும், அக்குளில் சுரக்கும் வியர்வை சங்கடத்தையே ஏற்படுத்துகிறது.

அக்குள் தூய்மைகுறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணரான எஸ்.சுகந்தன் விரிவாகப் பேசினார்.
''வயது வந்த அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்னைதான் இது. பொதுவாக, வியர்வைக்கு - அது எங்கிருந்து சுரந்தாலும் - இயற்கையில் மணம் கிடையாது. தோலில் உள்ள எண்ணெய்ப் பசையிலும் வியர்வையிலும் வளரும் பாக்டீரியாக்களே வியர்வைக்கு நாற்றத்தைக் கொடுக்கின்றன'' என்று விளக்கம் கொடுத்த டாக்டர் சுகந்தன் தொடர்ந்து நமது சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார்.

'அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?'
'ரோமம் மண்டிய அக்குள், அதிகப் படியான வியர்வைச் சுரப்பு, சிந்தடிக் ஆடைகளை அணிவது, நுண்கிருமித் தொற்று போன்றவை அக்குள் நாற்றத்துக்கு முக்கியக் காரணிகள். அக்குள் வாடையை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும் பெருமளவு குறைப்பதற்குச் சிறந்த வழி அக்குள் முடியை நீக்கிவிடுவதுதான்.''

''அக்குள் முடிக்கும் நாற்றத்துக்கும் என்ன தொடர்பு?''
''அக்குளில் வளரும் ரோமம் வியர்வையை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்கிறது. அப்போது பாக்டீரியாக்கள் அசுர வேகத்தில் பல்கிப் பெருகும். இந்தப் பாக்டீரியாக்கள்தான் அக்குள் வாடையைப் பரப்புகின்றன. ரோமத்தை நீக்கினால், மூன்று நன்மைகள் கிடைக்கும். பார்ப்பதற்கு அருவெறுப்பு இல்லாமல் இருக்கும். அடுத்து, வியர்வை வாடை குறைந்து மற்றவர்களுக்குச் சங்கடம் அளிக்காமல் இருக்கும். இவற்றை எல்லாம்விட மூன்றாவது காரணம் முக்கியமானது. தூய்மை இல்லாத அக்குளில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டால் சுரப்பி, பெரிய கட்டியாக மாறி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

''அக்குள் ரோம நீக்கம் செய்துகொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றன? எது பெஸ்ட்?''
''லேஸர், ரேஸர், வேக்ஸ் மற்றும் க்ரீம் என்று நான்கு முக்கியமான முறைகள் இருக்கின்றன. இதில் லேஸர் சிகிச்சையை ஒரு முறை செய்துகொண்டால் அக்குளில் ரோமம் வளரும் பிரச்னையே இருக்காது. ஆனால் இதற்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, அக்குள் பகுதியில் வியர்வையே சுரக்காமல் இருக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகள் இப்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கில் செலவாவதோடு, நாலைந்து மாதங்கள் வரைதான் இது வேலை செய்யும்.''

''வாடையைத் தவிர்க்க டியோடரன்டுகளைப் பயன்படுத்துவது சரிதானா?''
''பயன்படுத்தலாம். பலரும் பெர்ஃப்யூம்களையும் டியோடரன்டுகளையும் ஒன்று என நினைத்துக் குழப்பிக்கொள்கிறார்கள். பெர்ஃப்யூம்கள் நறுமணத்தை மட்டுமே தரக்கூடியவை. ஆனால், தரமான டியோடரன்டுகள் வியர்வைச் சுரப்பைக் குறைக்கும் ஆற்றலும் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் திறனும்கொண்டவை. பெர்ஃப்யூம்களை ஆடைகளின்மேல் தெளிக்க வேண்டும். டியோடரன்டுகளை உடம்பின் மீது நேரடியாகப் படுமாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஆனால், அலுமினியம் கலந்த டியோடரன்டுகளைத் தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.''

''ரோமம் நீக்கப்பட்ட இடம் கருமையாய் இருப்பதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?''
''கழுத்து, அக்குள் மற்றும் தொடைகளின் மேல் பகுதி ஆகியவை சற்றே கருமையாக இருப்பது இயற்கைதான். இந்த இடங்களில் பூஞ்சைக் காளான் தொற்று அடிக்கடி ஏற்படுவது சகஜம். அப்படி ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், தொற்று நீங்கிய பிறகும் கறுப்பு நிறம் அந்த இடங்களில் தங்கிப்போய்விடும். கூடுதல் எடை உடையவர்களுக்குக் கறுமை நிறம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதை மாற்ற வேறு வழி இல்லை. முன்பே சுதாகரிப்பாக இருந்துகொள்ள வேண்டியதுதான்!''
 முடி மற்றும் தோல் பராமரிப்பு அழகியல் நிபுணரான  எம்.ஹஸீனா சையத் அக்குள் பராமரிப்புக்கு சில டிப்ஸ்களைச் சொன்னார்.
''ஈரத்தை உறிஞ்சக்கூடிய பருத்தி இழைகளால் ஆன ஆடைகளை அணியலாம்.
இரவு உறங்கச் செல்லும் முன் அக்குளை நன்கு கழுவிச் சுத்தமாக ஈரம் போகத் துடைப்பது முக்கியம்.
உணவுக்கும் வியர்வை வாடைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. உதாரணமாக வெங்காயம், பூண்டு மற்றும் மசாலாக்கள் நிரம்பிய உணவு வகைகளை அதிகமாக வியர்க்கும் காலத்தில் தவிர்க்கலாம்.
தினசரி இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். காக்கைக் குளியல் உதவாது. அக்குளுக்கு அதிகக் கவனம் கொடுத்துக் கழுவி சுத்தமான துண்டுகொண்டு நன்கு துடைக்க வேண்டும். குளித்த பிறகு அக்குளை ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு டியோடரன்டுகள், பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை போட்டுக்கொள்ளலாம்.
சிலர் ஒரு நாள் அணிந்த ஆடைகளை மடித்து பீரோவில் வைத்துவிட்டுச் சில நாட்கள் கழித்து அவற்றையே துவைக்காமல் சுழற்சி முறையில் மறுபடியும் அணிவார்கள். அந்த ஆடைகளில் ஏற்கெனவே படிந்துவிட்ட வியர்வையும் வியர்வை நாற்றமும் நிச்சயம் இருக்கும். ஆண்களாக இருந்தால் அதிகமாக வியர்வை சுரக்கும் காலங்களில் கை வைத்த பனியனை அணிவது நல்லது. இதனால் நேரடியாகச் சட்டையில் வியர்வைக் கறைபடுவதைத் தவிர்க்கலாம்.'



--
*more articles click*
www.sahabudeen.com



கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts