லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

குழந்தை நல குறிப்புகள்!




நோய்த்தடுப்பு:-

தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றால் அவ்வீட்டில் ஒரு 'மினி மெடிக்கல் ஷாப்' உருவாகிவிடுகிறது என்றே கூறலாம். காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.
 

குழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக கவனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது. குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிகஅவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.
 

காசநோய் மற்றும் போலியோ:-

குழந்தை பிறந்த இருவாரங்களுக்குள் காசநோய் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும். போலியோ சொட்டு மருந்தை பிறந்ததும் ஒருமுறை, ஆறு, பத்து மற்றும் பதினான்காவது வார இறுதியில் ஒவ்வொரு முறை, ஒன்றரை வயதில் ஒருமுறை, நான்கரை வயதில் ஒருமுறை என்றாக முறையே இந்தத் தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும். பெரியம்மை நோய்க்கு அடுத்ததாக உலகிலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தேர்ந்தெடுத்திருப்பது போலியோவைத்தான்.
 

முத்தடுப்பு ஊசி:-
 

டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ் ஆகிய மூன்று கடுமையான நோய்களைத் தடுக்கிறது. இதையும் ஐந்து முறை அளிக்கவேண்டும். 6, 10, 14 ஆவது வாரங்களின் இறுதியில் ஒவ்வொரு முறையும், 18 மாதம் முடியும்போது ஒரு முறையும் ஐந்து வயதை நிறைவு செய்யும்போது ஒருமுறையுமாக அளிக்கவேண்டும்.
 

ஹெபடிடிஸ் 'பி':-

எய்ட்ஸைவிட அதிகம் பேர் இறப்பது ஹெபடிடிஸ் 'பி' எனப்படும் மஞ்சள் காமாலை நோய்ப் பிரிவில்தானாம். நல்லவேளையாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள். குழந்தைக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் இந்தத் தடுப்பு மருந்தை அளிக்கலாம். முதல் டோஸ் அளிக்கப்பட்ட அடுத்த மாதத்தில் இரண்டாவது டோஸும், முதல் டோஸ் அளித்த ஆறாவது மாதம் மூன்றாம் டோஸையும் கொடுக்க வேண்டும். ஹெபடிடிஸ் 'ஏ' விற்கும் இப்போது தடுப்பு மருந்து வந்துவிட்டது. ஒரு வயதில் ஒருமுறையும், பிறகு ஒன்றரை வயதில் அடுத்த முறையும் இதற்கான தடுப்பு மருந்து அளிக்கலாம்.
 

தட்டம்மை மற்றும் எம்.எம்.ஆர்:-

குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆனபிறகு தட்டம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்தையும், ஒன்றேகால் வயதானபிறகு எம்.எம்.ஆர். எனும் தடுப்பு மருந்தையும் அளிக்கவேண்டும். இரு வருடங்களுக்குப் பிறகு டைபாய்டுக்கான தடுப்பு மருந்தையும் பத்து மற்றும் பதினாறு வருடங்களின் முடிவில் டி.டி. (டெடனஸ்) நோய்க்கெதிரான தடுப்பு மருந்தையும் அளிக்கலாம்.
 

முன்னெச்சரிக்கை:-

தடுப்பு மருந்தை அளிப்பதற்கு முன் உங்கள் பரம்பரையில் யாருக்காவது வலிப்புநோய் வந்திருந்தால் அதை டாக்டரிடம் மறக்காமல் கூறுங்கள். அதேபோல் வயிற்றுப்போக்கு, அதிக ஜுரம் போன்றவை குழந்தைக்கு அப்போது இருந்தால் அதையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அப்போது ஒருவேளை டாக்டர் இந்தத் தடுப்பு மருந்தை அளிப்பதை தள்ளிப்போடலாம். காரணம், சிலவகை தடுப்பு மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் உண்டு.
 

குழந்தைகளின் சின்னச் சின்ன உடல் அசௌகரியங்களுக்கு வீட்டிலேயே சில நிவாரணிகள்.
 

தலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்:-

நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெயின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைச் சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி உருண்டைகளை வைக்கலாம்.
 

காய்ச்சல்:-

க்ரோசின், ப்ரூஃபென் போன்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும்.
 

தசைப்பிடிப்புகளும் சுளுக்கும்:-

விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெயைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).
 

விஷப்பூச்சிக்கடி:-

டாக்டரிடம் குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் கடிவாய்ப் பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியமான முதலுதவி.
 

கீழே விழுந்து அடி:-

பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. (மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று அப்புவது வேண்டாம்.)
 

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts