லேபிள்கள்

புதன், 5 பிப்ரவரி, 2014

பேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழிகள் எவை?

பேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழிகள் எவை?

எவரைப் பார்த்தாலும் தலைக்கு மேல் வேலை என்கிறார்கள். தங்களது சொந்த வேலைகளையும் வேறு யாராவது செய்து கொடுத்தால்தான் அவர்களுக்கு மனதில் திருப்தி. ஆள் இல்லாவிட்டால் எதாவது மெசீன் அல்லது மருந்து தங்களுக்கு கைகொடுக்குமா எனப் பேயாய் அலைகிறார்கள்.
'எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உணவைக் குறைத்து உடலுக்கான வேலையை அதிகரியுங்கள்' என்று மருத்துவர் சொன்னால் மறு காதுவழி அச்செய்தியை வெளியே போக விட்டுவிடுவார்கள்.

'
எடையைக் குறைக்க என்ன மருந்து இருக்கு' என்ற கேள்விதான் வரும். சுய முயற்சிக்கு மனமும் இல்லை. நேரமும் இல்லை இத்தகையவர்களுக்கு.

அதே போலத்தான் பேன் பிரச்சனையும். 'பேன் பார்க்க நேரமில்லை' என்பார்கள். ஈர் கோலி என்றால் என்னவென்று கேட்கின்ற காலமாகிவிட்டது.
'பேன் மருந்து எத்தனை தடவை இவளுக்கு வைத்துவிட்டேன். காசைக் கொட்டினதுதான் மிச்சம் பேன் தொலையக் காணோம்' என்று சொன்னாள் ஒரு அம்மா. சொல்வது எங்கோ ஒரு அம்மா மாத்திரம் அல்ல. ஒட்டுமொத்தமாக எல்லா அம்மாக்களும்தான் இப்படித்தான் கவலைப்படுகிறார்கள்.

விட்டுத் தொலையாத தொல்லை

மருந்து வைத்தும் இவர்களது பேன் தொல்லை நீங்காததற்குக் காரணம் என்ன?

மீண்டும் மீண்டும் தொற்றுவதுதான்!

எங்கிருந்து தொற்றுகிறது? எவ்வாறு தொற்றுகிறது?

முற்றாக ஒழியாதது ஏன்?

பேன்களுக்குப் பறக்கத் தெரியாது. ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பாய்ந்து செல்லவும் தெரியாது. ஊர்ந்து செல்லத்தான் முடியும். எனவே பாடசாலையில் ஒரு பிள்ளையிலிருந்து மற்றப் பிள்ளைக்குத் தொற்றுகிறது எனில் அவர்களது தலைகள் ஒன்றுடன் மற்றொன்று நெருக்கி வர வேண்டும்.

அவ்வாறெனில் பாடசாலைகளில் அவர்கள் ஒருவரது தலையுடன் மற்றவர் தலையைத் தேய்க்கிறார்களா, முத்தம் இடுகிறார்களா. தன்தலையைப் பிராண்டியபின் மற்றவர் தலையை கைகளால் தீண்டுவதாலும் தொற்றலாம்.
பாடசாலைகளை விட வீட்டில்தான் மிக நெருங்கிய உறவுகளுக்குச் சாத்தியங்கள் அதிகம். சகோதரங்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சிக் குலவும். ஒரே கட்டிலில் தலைகள் உரசப் படுத்திருக்கக் கூடும். அதன் காரணமாக வீட்டில் ஒருவருக்கு பேன் இருந்தால் மற்றவருக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான் இடநெருக்கடி உள்ள சூழலில் அவை வேகமாகப் பரவுகின்றன.

ஆனால் பேன்கள் ஒருவரது தலையிலிருந்துதான் மற்றவருக்குத் தொற்ற வேண்டும் என்றில்லை. பேன் உள்ளவரது தலையோடு தொடர்பு பெறும் நபரிலிருந்து மட்டுமின்றி எந்தப் பொருளிலிருந்தும் மற்றொருவருக்குத் தொற்றலாம்.

எனவே பேன் உள்ளவரது தலையுடன் தொடர்புறும் தலையணை, பெற்சீட், டவல், தொப்பி, கொண்டை கிளிப், சீப்பு போன்றவற்றால் மற்றவர்களுக்குத் தொற்றும். அதே போல ஷோபா, மெத்தை, போன்றவற்றாலும் தொற்றலாம்.

அடியோடு அழிக்க

அத்தகைய துணிமணிகளை சுடுநீரில் தோய்ப்பது அவசியம். தளபாடங்கள், மற்றும் தரைவிரிப்புகளை  வக்யூம் கிளினரினால் சுத்தப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் பொம்மைகளிலும் அவை சில நாட்களுக்கு மறைந்திருக்கலாம். சில பொம்மைகள் சுடுநீரில் கழுவக் கூடியவை. ஆனால் சில கழுவ முடியாதவை. அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வாயை இறுக்கமாக மூடிக் கட்டி சில வாரங்களுக்கு வைத்தால் பேன் ஈர் யாவும் அழிந்து விடும்.

பேன்களைக் கண்டறிய

பேன் புளுத்தால் தலையில் இருப்பதைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. ஆனால் ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதற்கு சற்றுப் பொறுமை தேவை.

நல்ல வெளிச்சமுள்ள இடத்தில் வைத்து குழந்தையின் தலையைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியாக நிதானமாகத் தேடுங்கள். குடுகுடு வென ஓடும் பேன்களைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை.

ஆனால் பேனின் முட்டைகளான ஈர்களைக் கண்டறிவதில்தான் பிரச்சனை ஏற்படும். அவை ஈரா அல்லது பொடுகுத் துகளா என்ற சந்தேகம் ஏற்படுவது சகசம். பொடுகுத் துகள்கள் போலல்லாது ஈர்கள் தலைமுடியுடன் இறுக்கமாக ஒட்டியிருக்கும். இலகுவில் எடுக்க முடியாது.

உயிருள்ள முட்டைகள் பொதுவாக தலைமுடியின் அடிப்பாகத்தில் காணப்படும். அவை மெல்லிய மஞ்சள் அல்லது பிரவுண் நிறத்தில் இருக்கலாம். பொரித்த முட்டைகள் பொதுவாக தடிப்பமின்றியும் வெண்நிறமாகவும் தோன்றும்.


பொதுவாகப் பேன்களும் முட்டைகளும் காதின் பின்புறமாகவும் பிடரிப் பகுதியிலும் அதிகம் காணப்படும்.

சிகிச்சை

தலையில் பேன் இருப்பதைக் கண்டுபிடித்தால் அதை ஒழிப்பதற்கான விசேட சம்பூக்களை அல்லது லோஷன்களைப் பயன்படுத்தித் தலையைக் கழுவ வேண்டும்.

பொதுவாக அத்தகைய சம்பூக்களை தலையில் தடவி சில நிமிடங்கள் கழித்த பின்னரே தலையை அலசிக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பேனுடன் ஈரும் மரணிக்கும். ஒவ்வொரு சம்பூவையும் உபயோகிக்கும் முறை பற்றியும் அவற்றுடன் விசேட அறிவுறுத்தல்கள் கொடுத்திருப்பார்கள் அவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும். இலங்கையில் இப்பொழுது 1% permethrin    உள்ள சம்பூக்களே பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.
அவ்வாறு கழவியதுடன் வேலை முடிந்தது என ஓய்திருக்க வேண்டாம். தலையைக் கழுவிய பின்னர் பேன்களையும் ஈர்களையும் அகற்றுவதற்கான விசேட சீப்பினால் தலைமுடியைச் சீவி உயிர் பிழைத்திருப்பவற்றை அகற்ற வேண்டும். ஒரிரு வாரகாலத்திற்கு விசேட சீப்புகளால் அவ்வாறு தினமும் தலையைச் சீவினால் மட்டுமே ஈர்களை முற்றாக அகற்ற முடியும்.

ஈர்ச் சீப்புகளால் அல்லது ஈர்கோலிகளால் சீவுவதற்கு முன்னர் தலையில் சற்று எண்ணெய் பூசுவதால் ஈர்கள் இலகுவாகக் கழன்று வரும்.
ஒருமுறை மருந்து அல்லது சம்பூ வைத்து முழுகிய பின்னர் சில நாட்களுக்கு தலையைக் கழுவக் கூடாது. இதன் மூலமாக மருந்தின் பலனைப் பூரணமாகப் பெற முடியும்.

10
நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மேற் கூறிய செயற்பாட்டை மீண்டும் ஒருமுறை செய்வதன் மூலம் எஞ்சியிருக்கும் ஈர்களையும் பேன்களையும் தொலைக்கலாம். ஏனெனில் பேன்கள் ஒரு மாதகாலம் வரை உயிர் வாழக் கூடியவை. ஆனால் ஈர்கள் 2 வாரங்கள் வரை உயிர் வாழக் கூடியவை என்பதாலேயே மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

வீட்டில் பலருக்குப் பேன் தொல்லை இருந்தால் எல்லோரும் ஒரு நாளில் அவ்வாறு செய்வது அவசியம்.

எவ்வாறெனினும் வீட்டில் உள்ளவர்கள் சீப்பு, தொப்பி, பிரஸ் போன்ற தனித்தனியாக வைத்து உபயோகிக்க வேண்டும். பொதுவாக ஒன்றையே உபயோகிப்பதை அல்லது மாற்றி மாற்றி உபயோகிப்பது கூடாது.

பின் விளைவுகள்

பேன்தொல்லையால் ஏதாவது பின் பிளைவுகள் ஏற்படுமா?

பெதுவாக பேன் உள்ளவர்களுக்கு தலையில் கடுமையான அரிப்பு இருக்கும். தலையைச் சொறிந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் தலையைச் சொறிபவர்களுக்கு எல்லாம் தலையில் பேன்தான் இருக்கிறது என முடிவு கட்டிவிடக் கூடாது.
பொடுகு, தலைச் சருமத்தில் அழற்சி போன்ற நோய்கள் இருந்தாலும் தலை அரிப்பு ஏற்படும். அரிப்பைத் தவிர வேறு ஆபத்தான நோய்களுக்குப் பேன்கள் காரணமாவதில்லை. பேன் மூலம் வேறு நோய்கள் பரவுவதுமில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com


செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

தோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு ஏடு,

இருவர் - இரு நிகழ்வுகள் என்று மிகச் சுருக்கமாய்ப் பதிவாகியுள்ள அழுத்தமான ஒரு வரலாறு இது. நிகழ்வுகள்தாம் சுருக்கமே தவிர நமக்குக் தேவையான கருத்துகள் ஏராளம். படித்துப் பயன்பெற ஒரு வாய்ப்பு.
 
மதீனாவுக்கு இஸ்லாம் பற்றிய செய்தி பரவி, முதல் அகபா உடன்படிக்கையைத் தொடர்ந்து முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவுக்கு வந்து சேர்ந்தார் அல்லவா? 

அவர் அங்கு இஸ்லாமியப் பிரச்சாரம் புரிந்து, முஸ்லிம்களுக்குக் குர்ஆன் கற்றுத்தரத் துவங்கிய ஆரம்பத் தருணங்களிலேயே இஸ்லாத்தினுள் நுழைந்த தம்பதியர் உம்மு தஹ்தா அவர் கணவர் தாபித் இப்னு தஹ்தா. கணவன், மனைவி இருவரும் தங்களின் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு குடும்ப சமேதராய் இஸ்லாத்தை ஏற்றனர்.

அதன் பிறகு, இரண்டாம் அகபா உடன்படிக்கை, மக்காவில் இதர கொடுமைகள் எல்லாம் நிகழ்வுற்று இறுதியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்தார்கள். அங்கு மளமளவென்று புத்துணர்ச்சியுடன் இஸ்லாம் விரிவடைய, மதீனத்துத் தோழர்களான அன்ஸார்களிடம் போட்டியொன்று துவங்கியது. 'மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நம் சகோதரர்கள் நம்மைவிட இஸ்லாத்தை அதிகம் அறிந்துள்ளார்கள். அப்பொழுதே நல்லறம் புரிய வாய்ப்பு அமைந்து, நன்மைகளில் நம்மைவிட வெகு அதிகம் முந்தியிருக்கிறார்கள். எப்படியும் அவர்களை எட்டிப்பிடித்துவிட வேண்டும். முடிந்தால் இன்னும் கொஞ்சம் 'தம்' பிடித்து அவர்களை விஞ்சிவிட வேண்டும்' என்ற போட்டி. எனவே இஸ்லாத்தைக் கற்க, கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் அவர்கள் நபியவர்களை அண்மினார்கள்.

கற்பது என்றதும் குர்ஆனை ஓதுவது, மனனம் செய்வது, நபிமொழிகளை ஒப்பிப்பது என்ற வகுப்பறை அடிப்படையில் அவர்களது பாடத்திட்டம் அமைந்துவிடவில்லை. வாழ்ந்தார்கள். குர்ஆனையும் நபிமொழியையும் ஒவ்வொரு எழுத்தாக எடுத்து சிந்தையிலும் செயலிலும் விதைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தோழர்கள் வரலாற்றில் சிலரது வாழ்க்கை உதாரணங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதைப்போல் இந்தத் தம்பதியர் வாழ்வும் வலுவான ஒரு சான்றாய் வரலாற்றில் பதிந்து போனது.

குர்ஆனின் 57ஆவது சூரா அல்-ஹதீத். அதில் பதினோராவது வசனம், "அல்லாஹ்வுக்கு அழகான கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு." இதை வாசித்த உம்மு தஹ்தாவின் கணவர் தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குக் கேள்வியொன்று எழுந்தது. நபியவர்களிடம் சென்று விளக்கம் கேட்டார். "அல்லாஹ்வின் தூதரே! இறைவனுக்கோ யாருடைய தேவையும் இல்லை. பின் அவன் ஏன் கடன் கேட்கிறான்?"

"அதற்குப் பகரமாய் உம்மைச் சொர்க்கத்தில் அனுமதிக்க" என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். கண்ணியமான நற்கூலி சொர்க்கம்.

"நான் அல்லாஹ்வுக்குக் கடன் அளித்தால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சொர்க்கம் என்று அவன் உத்தரவாதம் அளிக்கிறானா?" என்று ஆச்சரியமுடன் மீண்டும் கேட்டார் தாபித்.

"ஆம் அபூ தஹ்தா" என்றார்கள் நபியவர்கள்.

உடனே தாபித், "அல்லாஹ்வின் தூதரே! தங்களது கையை நீட்டுங்கள்" என்றார்.

நபியவர்கள் கையை நீட்ட, அதன்மேல் தம் கையை வைத்து, "என்னிடம் இரண்டு பழத் தோட்டங்கள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு ஏதும் சொத்து இல்லை. அனைத்தையும் அல்லாஹ்வுக்கு அளிக்கிறேன்."

"அவற்றுள் ஒன்றை அல்லாஹ்வுக்கு அளித்துவிட்டு மற்றொன்றை உன் குடும்பத்தினருக்காக வைத்துக் கொள்" என்று அறிவுறுத்தினார்கள் நபியவர்கள்.

"தாங்களே சாட்சி. இரண்டில் சிறப்பான ஒரு தோட்டத்தை அல்லாஹ்வுக்காக அளிக்கிறேன். அதில் 600 பேரீச்ச மரங்கள் உள்ளன."

"சொர்க்கத்திலுள்ள ஏராள பேரீச்ச மரங்கள் தமது குலைகளை அபூ தஹ்தாவுக்காகத் தாழ்த்திவிட்டன. அவற்றில் முத்தும் ரத்தினமும் முழுமையாக நிறைந்துள்ளன" என்று நல்லறிவிப்பு செய்தார்கள் நபியவர்கள்.

600 மரங்கள் நிறைந்துள்ள தோப்பை அப்படியே எடுத்து தானமளிப்பது இலேசுப்பட்ட காரியமல்ல. தென்னையோ, வாழையோ 600 மரங்கள் உள்ள தோப்பை அல்லாஹ்வுக்காக தானமளிப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்; நவீனப்படுத்திச் சொல்வதென்றால், ஆயிரம் கார்கள் இருந்தால் அவற்றுள் 600 கார்களை தானமளிப்பதை எண்ணிப்பாருங்கள். இந்தச் செயலின் உயர்மதிப்பு புரியும். விஷயம் அது மட்டுமன்று. அவர் தானமளித்த அந்தக் குறிப்பிட்ட தோப்பில்தான் அவர் மனைவி உம்மு தஹ்தாவும் பிள்ளைகளும் வசித்துவந்தனர்.

நேரே தோப்பிற்கு வந்தார் அபூதஹ்தா. "உம்மு தஹ்தா" அழைத்தார்.

"இதோ வந்தேன்."

"தோப்பை விட்டு வந்துவிடு. இதை உயர்ந்தவன் கண்ணியத்திற்குரியவன் அல்லாஹ்வுக்காகத் தானமளித்துவிட்டேன்."

நம் சொத்தில் பாதியை தானமளித்துவிட்டேன், இந்தத் தோப்பும் வசிப்பிடமும் இனி நமதில்லை' என்றால் ஒரு மனைவியின் பதில் எப்படி இருக்கும்? பிள்ளைகளின் நலன், எதிர்காலம் என்று எத்தனை கவலை, சிந்தனை புத்தியை ஆக்கிரமிக்கும்? ஆனால் உம்மு தஹ்தா?

"லாபகரமான வணிகம் புரிந்துவிட்டு வந்திருக்கிறீர் அபூ தஹ்தா" என்று வெகு எளிதாய்ச் சொல்லிவிட்டார்.

அப்பொழுது அவர்களின் பிள்ளைகள் அத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுவிடுவென்று சென்று பிள்ளைகளை அழைத்தார். அவர்களது ஆடைப் பைகளிலும் கைகளிலும் பொறுக்கி வைத்திருந்த பேரீச்சங்கனிகள் இருந்தன. அனைத்தையும் வாங்கி தோட்டத்திலேயே கொட்டினார்.

"இனி இவை நமதல்ல செல்லங்களே. வாருங்கள் போவோம்."

விளக்கம், வியாக்கியானம், சர்ச்சை, மாற்றுக் கருத்து – எதுவுமே இல்லை. தீர்ந்தது விஷயம்.

அடுத்தது உஹதுப் போர்.

முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த கடுமையான நேரம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று வதந்தி பரவி 'எல்லாம் முடிந்தது' என்று பல முஸ்லிம்கள் வெலவெலத்துப் போயிருந்தார்கள். தாபித் இப்னு தஹ்தா தம் மக்களை வேகமாய் நெருங்கினார்.

"அன்ஸாரித் தோழர்களே! அல்லாஹ்வின் தூதர் அப்படியே கொல்லப்பட்டிருந்தால்தான் என்ன? அல்லாஹ் என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனுக்கு மரணமில்லை. உங்களது மார்க்கத்திற்காகப் போரிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நீங்கள் வெற்றி அடைவீர்கள்."

மிகத் தெளிவான அந்தச் சிறு உரை, வீராவேசமான அந்தப் பேச்சு அக்குழுவிற்குப் பெரும் தெம்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஏற்படுத்தியது. பொங்கியெழுந்து எதிரிகளின் படைப்பிரிவைத் தாக்க ஆரம்பித்தார்கள். மூர்க்கமாய் நடைபெற்றது போர். இறுதியில் தாபித் இப்னு தஹ்தா உயிர்த் தியாகி ஆனார்.

இந்தச் செய்தி உம்மு தஹ்தாவை அடைந்தது. கணவனை இழப்பது ஒரு மனைவிக்கு எத்தகைய பேரிழப்பு? ஆனால் அழுகை இல்லை! ஒப்பாரி இல்லை. தம் கணவரின் தியாகத்திற்கு உரிய பரிசு என்னவாக இருக்கும் என்பதில் அவருக்கு எந்தக் கலக்கமும் இல்லை. எனவே அவரது ஆர்வமும் அக்கறையும் விசாரிப்பும் அனைத்தும் முற்றிலும் வேறாய் இருந்தன.

"அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்? அவருக்கு ஏதும் பாதிப்பு இல்லையே?"

இறுதியில் அல்லாஹ்வின் தூதரைக் கண்டதும், "தாங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் அல்லவா? அது போதும் எனக்கு. இதர துக்கம் துச்சம்" என்றார் உம்மு தஹ்தா. பொருளினும் உயிரினும் மேலானவர் நபியவர்கள் என்பது சொல்வதும் எழுதுவதும் எளிது. வாழ்ந்து காட்டுவது?

வாழ்ந்து மறைந்தார் உம்மு தஹ்தா.

ரலியல்லாஹு அன்ஹா!
http://pettagum.blogspot.in/2013/09/blog-post_7873.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 3 பிப்ரவரி, 2014

மென்மையான கைகள் வேண்டுமா…

மென்மையான கைகள் வேண்டுமா…


மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ் கள் இதோ…
கைகள் பராமரிப்பு:
முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.
*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக <உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.
* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.
அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.


--
*more articles click*
www.sahabudeen.com


ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? என்கிற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் ஒன்றாக சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது எண்ணெயுமே 'ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்' என விளம்பரப்படுத்திக் கொள்ள, மக்களின் குழப்பம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம்.இந்தக்  குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், எண்ணெய் நல்லதா, கெட்டதா, அது ஏன் அவசியம் என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் என்பது கொழுப்பு... கொழுப்பு ஏன் தேவை?

உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப்

பாதுகாப்பதற்கு...

புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள்
  என்றால் அதே அளவு கொழுப்பிலோ 9 கலோரிகள்!  கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரியாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய்,  வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள்  போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு. இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என  கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு  நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு  படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை  அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல... அறை வெப்ப
நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

பெயர்
               கொழுப்பின் அளவு (100 கிராமில்)    ஆற்றல்    மினரல்ஸ்
வெண்ணெய் நெய்
    81 கிராம்    729 கிலோ கலோரிகள்    2.5 கிராம்
பாமாயில்
                  100 கிராம்    900 கிலோ கலோரிகள்    800 ணுரீ அல்லது னீநீரீ பீட்டா கேரட்டின் (வைட்டமின் ஏ)
வனஸ்பதி
மற்றும்
இதர
சமையல்
எண்ணெய்கள்
    100 கிராம்    900 கிலோ கலோரிகள்    இல்லை

எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?

பாமாயில்

1 கிராம் பாமாயிலில், 800 µg அல்லது mcg
  பீட்டா கேரட்டின் (வைட்டமின் ஏ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட்  கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.

சூரியகாந்தி எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.

கடலை எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில்
  அளவுக்குக் கெடுதலானது அல்ல.

தவிட்டு எண்ணெய்
ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோமே... அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.

நல்லெண்ணெய்

இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை
  கொண்டது.

ஆலிவ் ஆயில்

இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

கடுகு எண்ணெய்

ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லது.
  கடுமையான வாசம் காரணமாக, நம்மூர்  மக்களுக்கு இந்த எண்ணெய் பிடிப்பதில்லை. வட இந்திய மக்கள், கடுகு எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும்
  அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும்  நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய்,  வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

உபயோகித்த
  எண்ணெயா..? உஷார்!

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால்,
  'டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்' அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால்,  கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம்.  பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக்  கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!

எப்படி உபயோகிக்க வேண்டும்?

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2
  மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால்
  எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு
மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை
  ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.
http://pettagum.blogspot.in/2013/09/blog-post_8319.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 1 பிப்ரவரி, 2014

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க…

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க…

புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலும் எப்போதும் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது கருமையான உதட்டைப் பார்த்து கவலைப்படுகிறீர்களா? அப்படியெனில் முதலில் சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான். அதிலும் இத்தகைய கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம்.
ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன. அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, இரத்தக் குழாய்கள் கடினமாகி, ஆக்ஸிஜனை எடுத்துத் செல்லும் இரத்த அணுக்களின் அளவும், இரத்த ஓட்டமும் குறைந்து, முகம் மற்றும் உதட்டிற்கு செல்லும் சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, நிறமானது மங்கிவிடுகிறது. மேலும் சிலருக்கு முகத்தில் வறட்சியுடன், சருமமானது வெளுத்து, ஆங்காங்கு ஒருவித புள்ளிகளுடன் இருக்கும். இதற்கு சிகரெட்டின் இருக்கும் நிக்கோட்டின் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சுவதை தடுத்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை இழக்கச் செய்கிறது.
எனவே இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தடுப்பதற்கு முதலில் சிகரெட் பிடிப்பதை தவிர்த்து, உதட்டின் கருமையைப் போக்கும் ஒருசில நல்ல பலனைத் தரும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதனை தவறாமல் பின்பற்றி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உங்கள் துணையிடம் நீங்கள் போய் முத்தம் கேட்பது போய், அவர்களே வந்து முத்த மழையைப் பொழிவார்கள்.

தேன்

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேனும் உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.
பாதாம் பால்/பாதாம் எண்ணெய் தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்
மாதுளை மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.
எலுமிச்சை எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்-பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.

தயிர்

பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.
வெண்ணெய் கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். எனவே வறட்சியைப் போக்குவதற்கு உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.
கிளிசரின் கிளிசரின் ஒரு லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், கிளிசரின் உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, உதட்டின் கருமையையும் போக்கும்.
சர்க்கரை உதட்டிற்கு ஸ்கரப் செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.
பீட்ரூட் பீட்ரூட் உதட்டில் உள்ள கருமையை தற்காலிகமாக மறைக்கவும், நிரந்தரமாக போக்கவும் உதவும் ஒரு பொருள். அதற்கு தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான நிறத்தை பெறும்.
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் உதட்டின் கருமையைப் போக்குவதற்கு இருக்கும் சிறந்த வழிகளுள் ஒன்று, எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரினை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை நன்கு கலந்து, ஒரு வாரத்திற்கு தொடர்ந்து தினமும் தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உதடு மென்மையாகும். மேலும் இந்த கலவையை முகத்திற்கும் பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர் உதட்டின் கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் தினமும் இரண்டு முறை, ஆப்பிள் சீடர் வினிகரை உதட்டின் மீது தேய்த்து, ஊற வைத்து கழுவினால், நல்ல தீர்வை தராவிட்டாலும், உதட்டில் உள்ள கருமையை மறைய வைக்கும்.
ரோஜாப்பூ ரோஜாப்பூவின் இதழை அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, குளிர வைத்து, பின் அதனை தினமும் உதட்டிற்கு தடவி வந்தால், இது உதட்டிற்கு லிப்-பாம் போன்று இருப்பதோடு, நல்ல தீர்வையும் தரும்


--
*more articles click*
www.sahabudeen.com


மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts