லேபிள்கள்

வெள்ளி, 3 ஜனவரி, 2014

உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!

உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!

அல்லாஹ் கூறுகின்றான்:
"(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) "தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்' (23:51)
'அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (2;60)
ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற மறந்துவிட்டால்!
உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை ("பிஸ்மில்லாஹி" என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால்
'பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ'
எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.
பொருள்: இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)
பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால் அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது!
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'பிஸ்மில்லாஹ்' கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்."  அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)- ஆதாரம்: முஸ்லிம.;
நின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது!
'நின்றுக் கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்' அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.
'உங்களில் எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி எடுக்கட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.
குடிக்கும் பாத்திரத்தில் ஊதி குடிக்கலாகாது!
குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா
"(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.
'உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்' அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி
இடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது!
'உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்; சாப்பிடுகிறான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.
தங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில் குடிப்பது கூடாது!
'எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
"வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்." அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி   "நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், 'தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கம், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.
வீண் விரயம் செய்வது கூடாது!
"உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை." (7:31)
ஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை மூச்சுவிட்டு அருந்த வேண்டும்!
(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும் போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி
உணவா? தொழுகையா? எது முதலில்?
"இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்." என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.
'உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது' அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
உணவில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: மைமூனா (ரலி), ஆதாரம்: புகாரி.
தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக் கூடாது! ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும்!
'பரக்கத் உணவின் நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே ஓரங்களில் சாப்பிடுங்கள்; உணவின் நடுப்பகுதியில் இருந்து சாப்பிடாதீர்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா
உணவுத் தட்டில் வலது கரத்தால் அருகில் இருப்பதை எடுத்துச் சாப்பிட வேண்டும்!
(நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ஆதாரம்: புகாரி.
உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்!
(சாப்பிடும் போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு துண்டு கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.
விரல்களை சூப்பி சாப்பிட வேண்டும்! கைக்குட்டையால் துடைக்க வேண்டாம்!
"தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அஅவன் அறிய முடியாது!" அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.
இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட வேண்டும்!
"இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்." என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல!
"(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
"இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) 'நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.
சாய்ந்தவாறு அல்லது வயிற்றில் படுத்தவாறு சாப்பிடுவது கூடாது!
"நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்." என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
உணவில் குறை கூறாதீர்கள்!
"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்" அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.
பால் அருந்திய பிறகு வாய்கொப்பளித்தல்:
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, 'இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: புகாரி.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சாப்பிட்டார்கள்?
"நபி (ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை." அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், 'எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், '(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது' என்று பதிலளித்தார்கள்.
ஒரு சபையில் பானங்களை வலது புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, 'வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், '(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன்' என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம்: புகாரி.
பானங்களை பரிமாறுபவர் இறுதியில் தான் பருக வேண்டும்!
'….(பானங்களை) ஊற்றுபவர் தான் இறுதியில் பருக வேண்டும்' (முஸ்லிமில் இடம்பெறும் நீண்ட ஹதீஸில் இடம் பெறும் வாசகம்.) அறிவிப்பவர்; அபூ கதாதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்' என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி.
தோல் பையின் வாயிலிருந்து நீர் அருந்துவது கூடாது!
நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.
உண்ணும் போதும் பருகும் போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்!
'ஒரு அடியான் உணவைச் சாப்பிடும் போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும் போது அந்த நீருக்காக அவனைப் புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அஹ்மத்
சாப்பிட்டபிறகு கூற வேண்டிய துஆ!  
"அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்" என யாரேனும் கூறினால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும். ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி   பொருள்: "எனது எவ்வித சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச்செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்"   நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்து சாப்பாட்டுத் தட்டு எடுக்கப்படுமானால் 'அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி கைர முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹூ ரப்புனா'  என்று கூறுவார்கள்.
பொருள்: துய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின் பால் தேவையுடையவன் அல்லன்! உன்னை யாரும் விட்டுவிட முடியாது


--
*more articles click*
www.sahabudeen.com


வியாழன், 2 ஜனவரி, 2014

அனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்

அனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்

ஒவ்வொரு உலாவியும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழிமுறைகளையும் வைத்துள்ளன. இதற்கான ஷொர்ட் கட் கீ தொகுப்புகளும் அந்த உலாவிக்கே உரித்தானவையாக இருக்கும்.
இருப்பினும் பல ஷொர்ட் கட் கீகள் அனைத்து உலாவிகளும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந்துள்ளன.
இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த உலாவியைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேகமாகவும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷொர்ட் கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. டேப்களுக்கான சில ஷொர்ட் கட் கீகள்:
Ctrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.
Ctrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.
Ctrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.
இந்த செயல்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியை தவிர, மற்ற உலாவிகளில்,
Ctrl+Page Up கீ தொகுப்பு செயல்படுத்தும்.
Ctrl+Shift+Tab –முந்தைய டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது உள்ள டேப்பிற்கு இடது புறம் உள்ள டேப்பிற்குச் செல்லும். இந்த செயல்பாட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியைத் தவிர மற்ற உலாவிகளில் Ctrl+Page Down கீ தொகுப்பு செயல்படுத்தும்.
Ctrl+W, Ctrl+F4– அப்போதைய டேப்பினை மூடும்.
Ctrl+Shift+T– இறுதியாக மூடிய டேப்பினைத் திறந்து தளத்தைக் காட்டும். இப்படியே இந்த கீகளை அழுத்த, அழுத்த, முந்தைய மூடப்பட்ட டேப்களில் உள்ள தளங்கள் திறக்கப்படும்.
Ctrl+T– புதிய டேப் திறக்கப்படும்.
Ctrl+N– புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறக்கப்படும்.
Alt+F4– அப்போதைய விண்டோ மூடப்படும். உலாவிகளில் மட்டுமின்றி, அனைத்து அப்ளிகேஷன்களிலும் இந்த கீ தொகுப்பு இதே செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
2. மவுஸ் சார்ந்த ஷொர்ட் கட் கீ தொகுப்புகள்:
Middle Click a Tab– டேப்பில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸின் நடுமுனையைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.
Ctrl+Left Click, Middle Click –பின்னணியில் இயங்கும் டேப்பில், லிங்க் ஒன்றைத் திறக்கும்.
Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, அதற்கான தளம் புதிய உலாவி விண்டோவில் திறக்கப்படும்.
Ctrl+Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, தொடர்புடைய தளம் புதிய முன்புறமான டேப்பில் திறக்கப்படும்.
3. பிரவுசரில் உலா வருதல்:
Alt+Left Arrow, Backspace– பின் நோக்கிச் செல்ல.
Alt+Right Arrow, Shift+Backspace – முன் நோக்கிச் செல்ல.
F5– மீண்டும் தொடக்கத்திலிருந்து தளத்தை இறக்கித் தர.
Shift+F5 – தளத்தை இறக்குவதுடன், கேஷ் மெமரியை ஒதுக்கித் தரும். இணைய தளம் முழுமையும் புதியதாக இறக்கித் தரப்படும்.
Escape – தளம் இறக்கம் செய்வது உடனடியாக நிறுத்தப்படும்.
Alt+Home – ஹோம் பேஜ் எனக் குறிக்கப்பட்ட தளம் திறக்கப்படும்.
4. பெரிதாக்குதல்:
Ctrl and +, Ctrl+Mousewheel Up – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி பெரிதாக்கப்படும்.
Ctrl and -, Ctrl+Mousewheel Down – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி சிறிதாக்கப்படும்.
Ctrl+0 – மாறா நிலையிலான அளவில் தளம் காட்டப்படும்.
F11– மொனிட்டரின் திரையில் முழுக் காட்சி காட்டப்படும்.
5. மவுஸ் உருளை உருட்டுதல்:
Space, Page Down– தளத்தின் ஒரு பிரேம் கீழாகச் செல்லும்.
Page Up– ஒரு பிரேம் மேலாகச் செல்லும்.
Home – தளத்தின் பக்கத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்.
End – தளத்தின் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.
Middle Click – மவுஸ் கர்சர் வேகமாக, திருப்பும் திசைக்கேற்ப, கீழாகவோ, மேலாகவோ செல்லும்.
6. அட்ரஸ் பார்:
Ctrl+L, Alt+D, F6– அட்ரஸ் பாருக்கு கர்சர் இயக்கம் செல்லும், இதில் டைப் செய்திட ஏதுவாக.
Ctrl+Enter – www. என்பதை முன்னாலும், .com என்பதனைப் பினாலும் இணைக்கும்.
Alt+Enter – அட்ரஸ் பாரில் உள்ள முகவரிக்கான தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.
7. தேடல்:
Ctrl+K, Ctrl+E – உலாவியில் உள்ள சர்ச் பாக்ஸ் உள்ளே கர்சர் இயக்கம் செல்லும். உலாவிக்கென சர்ச் பாக்ஸ் இல்லை என்றால், அட்ரஸ் பாருக்குச் செல்லும். (இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Ctrl+K செயல்படுவதில்லை, அதற்குப் பதிலாக அதே செயல்பாட்டினை Ctrl+E என்ற கீகள் செயல்படுத்தும்)
Alt+Enter – புதிய டேப் திறக்கப்பட்டு, சர்ச் பாக்ஸில் தேடல் தொடங்கும்.
Ctrl+F, F3 – அப்போதைய பக்கத்தில் தேடலைத் தொடர, அந்தப் பக்கத்தில் உள்ள சர்ச் பாக்ஸைத் திறக்கும்.
Ctrl+G, F3 – தேடப்படும் சொல் இடம் பெறும் அடுத்த இடம் கண்டறியப்படும்.
Ctrl+Shift+G, Shift+F3– தேடப்படும் சொல் இடம் பெறும் முந்தைய இடம் கண்டறியப்படும்.
8. ஹிஸ்டரி மற்றும் புக்மார்க்ஸ்:
Ctrl+H – பிரவுசிங் ஹிஸ்டரி திறக்கப்படும்.
Ctrl+J– டவுண்லோட் ஹிஸ்டரி திறக்கப்படும்.
Ctrl+D – அப்போதைய இணையதளம் புக்மார்க் செய்யப்படும்.
Ctrl+Shift+Del – பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கான விண்டோ திறக்கப்படும்.
9. மற்ற செயல்பாடுகள்:
Ctrl+P– அப்போதைய தளப் பக்கத்தினை அச்செடுக்கும்.
Ctrl+S – உங்கள் கணணியில், அப்போதைய தளம் கோப்பாக பதியப்பட்டு சேவ் செய்யப்படும்.
Ctrl+O –உங்கள் கணணியில் இருந்து ஒரு கோப்பு திறக்கப்படும்.
Ctrl+U– அப்போதைய தளப்பக்கத்திற்கான, சோர்ஸ் கோட்(source code) திறக்கப்படும். (இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கப்பட மாட்டாது)


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 1 ஜனவரி, 2014

மருந்துக்கு பதில் கீரை

மருந்துக்கு பதில் கீரை


காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும்.
சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.
சில வகை ளின் மருத்துவ குணங்கள்
முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.
புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.
சிறுகீரை- உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை- முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
அரைக்கீரை: நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை-வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
பசலைக்கீரை-பருப்புக்கீரை
குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.
மணத்தக்காளி கீரை- அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டாஇ நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை- உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது.
குமட்டிக் கீரை- இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.
தொய்யல் கீரை- தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.

மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts