லேபிள்கள்

ஞாயிறு, 13 நவம்பர், 2022

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கேலிச்சித்திரம்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..! முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்தி வாழ்கின்றவர்கள் தான் நினைத்த போக்கில் அவனுடைய வாழ்கையை இந்த உலகில் அமைத்துக் கொள்ள முடியாது. அழங்காரங்கள் நிறைந்த இந்த உலகில் அல்லாஹ்வுக்கும் றஸுலுக்கும் கட்டுப்பட்டு தன் ஆசைகளையும், மனோ இச்சைகளையும் கட்டுப்படுத்தி அடக்கமான முறையில் வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான்.

அல்லாஹ் சொல்கிறான்.

وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல் குர்ஆன் 5:92

ஈமான் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் கூறும் செய்தி.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

அல் குர்ஆன் 2:208

இஸ்லாத்தில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுப்பது உண்மையான நம்பிக்கையாளர்களின் அடையாளம் கிடையாது. பரிபூரணமாக தீனுல் இஸ்லாத்தில் நுழையுமாறே றப்புல் ஆலமீன் கூறுகிறான். ஆகவே முஸ்லிம் அடையாளத்துடன் இருப்போர் அனைவரும் இம்மார்கத்தில் முழுமையாக நுழைய முயற்சிக்க வேண்டும்.

1) இத்தலைப்புக்கான காரணம்.

இன்று பலதரப்பட்ட கலைகள் நவீன வளர்ச்சியுடன் உலகில் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அக்கலைகளில் எது மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டது ….? எது முரண்பட்டது? என்ற அடிப்படைகளை கவனிக்காது பலரும் அவைகளைப் படிப்பதிலும். அவற்றை நடை முறைப்படுத்துவோரை வாழ்த்துவதிலும் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றார்கள்.

அந்த வரிசையில் "கேலிச் சித்திரம்" (Cartoon) வரைதல் ஒரு சிறந்த கலையாக இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அதன் விளைவாக நபிமார்களின் சரிதைகள், நபித்தோழர்களின் சரிதைகள் என அனைத்தும் கார்ட்டூனாக வெளிவந்தள்ளது. அது மாத்திரமின்றி ஹதீஸ்களுக்கான விளக்கங்களும் கார்ட்டூன் வடிவில் இமேஜாக வெளியிடப்படுகின்றது. நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல கார்ட்டூனை சிறந்த ஊடகமாகக் கருதும் பலர் இதில் ஒரு படி மேலே சென்று ஆலிம்களை கேவலப்படுத்தவும், நாட்டு ஜனாதிபதியைக் கேலி செய்யவும், இன்னுமுள்ள பிரபலங்களை கேலி செய்யவும், கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் அவ்வப்போது நடை பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மையப்படுத்தி கேலிச்சித்திரங்களை வெளியிடுகின்றார்கள்.

முஸ்லிம்களின் தலைமை என நோக்கப்படும் அமைப்புக்களைக் கூடக் கொச்சைப்படுத்தி அரபுப் பெயர் கொண்ட பலர் கேலிச்சித்திரம் வரைவதை நீங்கள் சில சந்தர்ப்பங்களில் அவதானித்திருப்பீர்கள். இது பற்றி சம்பந்தப்பட்டோரிடம் விளக்கம் கேட்டால் கார்டூனிஸ்ட்கள் பலரும் சொல்லும் பதில் கேலிச்சித்திரத்தை ஒரு கலையாகவும், அதை வெளியிட்ட ஊடகத்தை முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காண ஊடகமாகவும் மட்டுமே நோக்க வேண்டும் என்ற கருத்துப்பட அவர்களின் சிந்தனைகளை முன்வைப்பார்கள். இந்த முன்னுரையுடன் இப்போது நாம் தலைப்புக்குள் நுழைவோம்.

2) இஸ்லாத்தில் பிறரைக் கேலி செய்ய அனுமதியுண்டா..?

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் கேலி செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் கேலி செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (கேலி செய்யவேண்டாம்.) அவர்கள் (கேலி செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்.
(
அல்குர்ஆன் : 49:11)

ஒரு முஃமின் எப்படி இருக்க வேண்டும்.? பிறரை எப்படி மதிக்க வேண்டும்..? என்ற விடயங்களைப் பற்றித் தெட்டத் தெளிவாக மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் கூறிவிட்டான். பிறரைக் கேலி செய்வதும், பட்டப்பெயர் கூறி அழைப்பதும் பெரும் குற்றமாகும். இத்தகைய செயலைச் செய்வோரை அநியாயக்காரர்களாக அல்லாஹ்வே அடையாளப்படுத்தியுள்ளான்.

3) கேலி செய்வது யாருடைய பண்பாடு..?

முனாபிக்களைப் பற்றி அல் குர்ஆன்;

وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே' எனக் கூறுகின்றனர்.

அல் குர்ஆன் 2:14

وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ

அவர்களிடம் (இதுபற்றிக்) கேட்டால் "வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம்" என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்பீராக!

அல் குர்ஆன் 9:65

காபிர்களைப் பற்றி அல் குர்ஆன் :

زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا ۘ وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَاللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

(ஏகஇறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறான்.

அல் குர்ஆன் 2:212

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ

. (முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தவர்களைச் சூழ்ந்தது.

அல் குர்ஆன் 6:10

وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ

எந்தத் தூதர் அவர்களிடம் வந்தாலும், அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததேயில்லை.

திருக்குர்ஆன் 15:11

وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ

(முஃமின்கள் ) அவர்களைக் கடந்து செல்லும் போது கண் சாடையால் கேலி செய்து கொண்டிருந்தனர்.

அல் குர்ஆன் 83:30

அல்குர்ஆன் முழுவதிலும் கேலி செய்வது முனாபிக்களினதும், இறை மறுப்பாளர்களினதும் பண்பு என்றே அல்லாஹ் கூறுகிறான்.பிறரைக் கேலி செய்வதை அநீதியாகவே இஸ்லாம் சொல்கின்றது. அதை ஒரு போதும் இஸ்லாம் அங்கிகரிக்க வில்லை.

4) மார்க்கத்தையும், மார்க்கம் பேசுவோரையும் கேலிக் கூத்தாக ஆக்குவோரின் நிலை :

இன்று அல்லாஹ் அருள் செய்த சிலரைத் தவிர பலருக்கு அல் குர்ஆன், அல் ஹதீஸிலிருந்து மார்க்கத்தைப் பேசுவது ஒவ்வாமையாகவே உள்ளது. ஷிர்க், பித்அத்துகளை விட்டு ஒதுங்கி இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணும்படி உபதேசிக்கப்பட்டால் மார்க்கத்தைப் போதிப்போரை தலிபான்களாகவும், பக்தாதிகளாகவும் கேலி செய்கின்றார்கள் . இந்தகையோர் பற்றி அல்லாஹ் கூறுவதைப் படியுங்கள்..

ذَٰلِكُم بِأَنَّكُمُ اتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًا وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாகக் கருதியதும், இவ்வுலக வாழ்வு உங்களை மயக்கியதுமே இதற்குக் காரணம். இன்று அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்கள் (உலகுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு வணக்கங்கள் செய்ய) வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

அல் குர்ஆன் 45:35

وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ

தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.

அல் குர்ஆன் 5:58

وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُم بِذِكْرِ الرَّحْمَٰنِ هُمْ كَافِرُونَ

(முஹம்மதே! ஏகஇறைவனை) மறுப்போர் உம்மைக் காணும் போது உம்மைக் கேலிப் பொருளாகவே கருதுகின்றனர். இவர் தான் உங்கள் கடவுள்களைப் பற்றி விமர்சிப்பவரா? (எனக் கூறுகின்றனர்.) அவர்கள் அளவற்ற அருளாளனை நினைவு கூர மறுப்பவர்கள்.

அல் குர்ஆன் 21:36

فَاتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّىٰ أَنسَوْكُمْ ذِكْرِي وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ

. "எனது நினைவை விட்டும் உங்களை மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்களைக் கேலிப் பொருளாகக் கருதினீர்கள். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டுமிருந்தீர்கள்" (என்று இறைவன் கூறுவான்.)

அல் குர்ஆன் 23:110

ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِينَ أَسَاءُوا السُّوأَىٰ أَن كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَكَانُوا بِهَا يَسْتَهْزِئُونَ

அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதி அவற்றைக் கேலி செய்ததால் தீமை செய்தோரின் முடிவு தீமையாகவே அமைந்தது.

அல் குர்ஆன் 30:10

وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ

நமது வசனங்களில் எதையேனும் அவன் அறிந்தால் அதைக் கேலியாக எடுத்துக் கொள்கிறான். அவர்களுக்கே இழிவு தரும் வேதனை உள்ளது.

அல் குர்ஆன் 45:9

ذَٰلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا

அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

அல் குர்ஆன் 18:106

5) அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கேலிக் கூத்தாக்குவோருடன் நட்புப் பாராட்டுவோரின் நிலை :

இன்னும் சிலர் இருப்பார்கள் அவர்கள் நேரடியாக எதையும் எழுதவோ, பேசவோ மாட்டார்கள் . ஆனால் அவர்களின் நட்புவட்டாரத்தில் உள்ளோர் ஒரு பதிவைப் பகிர்ந்தால் அது மார்க்க வரம்புகளுக்கு உற்பட்டதா..? இல்லையா..? என சிந்திக்காது அப்பதிவை ஆதரித்து முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் லைக், ஹாஹா என சிம்போல் அடையாளங்களைப் பதிந்து அவர்களின் தகவலுக்கு ஆதரவு வழங்குவார்கள். நன்மையை ஏவித் தீமையைத் தடுப்போரை முல்லாக்கள் எனப் பட்டப்பெயர் சூட்டி அழைப்பார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்:

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல் குர்ஆன் 5:2

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ ۚ وَاتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏகஇறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

அல் குர்ஆன் 5:57

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ ۗ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல் குர்ஆன் 4:140

இஸ்லாம் பிறரைக் கேலி செய்வதையும், மார்க்கத்தில் உள்ளவற்றைக் கேலி செய்வதையும்,. மார்க்கத்தைப் பேசுவோரைக் கேலி செய்வதையும், மார்க்கத்தை நடை முறைப்படுத்துவோரைக் கேலி செய்வதையும் தடுத்திருக்க அவற்றுக்குத் துணை போவதும் ஹராமான, தடுக்கப்பட்ட காரியமாகும் என்பது தெட்டத் தெளிவான உண்மையாகும்.

அநியாயக்காரர்களின் பக்கம் சாய்ந்து விடாதீர்கள்.

11:113 وَلَا تَرْكَنُوْۤا اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُۙ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏

இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.

6) கேலிச் சித்திரம் வரைவதை இஸ்லாம் வரவேற்குமா..?

கேலி செய்வது முஸ்லிமுடைய பண்பு கிடையாது., அல் குர்ஆனும், அல்ஹதீஸும் கேலி செய்வதைத் தடுத்திருக்க அதை ஒரு தனிக் கலையாகச் செய்வதை ஒரு போதும் இஸ்லாம் அனுமதிக்காது என்பதை மேலே நான் முன்வைத்த ஆதாரங்களினூடாக இலகுவாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும். விபச்சாரத்தை எப்படி இஸ்லாம் தடை செய்துள்ளதோ அது போல் தான் விபச்சார விடுதிகளை அமைக்கத் துணை போவதையும் தடை செய்துள்ளது. இது போல் தான் பிறரைக் கேலி செய்வதைத் தடை செய்துள்ள இஸ்லாம் அதை ஒரு கலையாகக் கற்பிப்பதையும், அப்படியான கலைஞர்களை பாராட்டுவதையும் பொதுவாகவே தடை செய்தே உள்ளது.

அல்லாஹ் சொல்கிறான்:

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல் குர்ஆன் 5:2

நபிகளாரைப் பார்த்து அல்லாஹ் சொன்ன செய்தி.

إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ

கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.

திருக்குர்ஆன் 15:95

கேலிச் சித்திரம் வரைவோர் அதைப் பெரும் கலையாகக் கற்பனை பண்ணுவதுடன் ஒரு கருத்தை அடுத்தவர்களுக்கு இலகுவாக புரியும் விதத்திலும், விமர்சிக்கப்படுகின்றவர் கோவப்படும் விதமாக, அல்லது தன் தவறை உணரும்படி முன்வைக்க சிறந்த ஊடக முறையாகவும் இத்துரையை கருதுகின்றார்கள். இதன் காரணத்தால் தான் இவர்கள் யாரை விமர்சிக்க நினைக்கின்றார்களோ அவரை அடையாளப்படுத்தும் விதமாக உருவங்களை வரைவார்கள். இது இன்றைய உலக நடைமுறையில் சாதாரண விடயமாக மாறிவிட்டது.

7) உருவப்படம் வரைகின்றவர் பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள்:

1: உருவம் வரையும் நபர் படைப்பினத்தில் மிகக் கெட்டவராவார்.

உம்மு ஹபீபா (ரலி) வும், உம்மு ஸலமா (ரலி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற (கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்களுள் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்நிலையில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873; முஸ்லிம் 822, நஸயீ 0704, அஹ்மத் 23731)

2: உருவம் வரையும் நபர் மறுமை நாளில் அதற்கு உயிர் கொடுக்குமாறு ஏவப்படுவார்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன்.

"யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒரு போதும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார்.

கேட்டவர் அதிர்ச்சியுடன் பெரு மூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி),

'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம், மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.

(அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963; முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751, நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்).

3:அல்லாஹ்வைப் போல் படைக்க முற்படுபவன்.

நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன்.

அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி),

'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்?

அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்' என்றார்கள்

அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

4: உருவப்படம் உள்ள வீடுகளுக்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் உள்ளே வராமல் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு,

'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?' என்று கேட்டேன்.

அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை?' என்று.. கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்து கொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்" என்றேன்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்" என்று சொல்லி விட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை" என்றும் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5181, 5937; முஸ்லிம் 4287, அஹ்மத், முவத்தா மாலிக்).

நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி) நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278, திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத் 4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்).

5: அல்லாஹ்வின் சாபம்.

வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி 5962, அஹ்மத் 18281)

அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..! மேலே நான் சுட்டிக்காட்டிய அனைத்து ஹதீஸ்களும் உருவம் வரைதல் தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கைகளாகும். இந்த ஆதாரங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடப்போருக்குத் தன் தவறைத் திருத்திக் கொள்ளப் போதுமானதாக இருக்கும். இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் இணைத்து விளங்குவோர் பொதுவாகவே இஸ்லாத்தில் உயிரினங்களின் உருவத்தை வரைவது தடை செய்யப்பட்ட காரியம் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாம் உருவம் வரைவதை வன்மையாகக் கண்டித்துத் தடை செய்திருக்கப் பிறரைக் கேலி செய்யும் முகமாக உருவம் வரைவதை ஒரு போதும் அனுமதிக்காது. முஸ்லிம் பெயர்களில் வலம் வரும் அஷ்ஷெய்க்களும், கார்ட்டூனிஸ்ட்களும் தம் தவறைத் திருத்திக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

6: உருவப்படம் சிதைக்கப்படாது இருந்த தலையணையை நபி (ஸல்) அவர்கள் பாவித்தார்களா.? உருவப்படம் வரையலாம் என்போரின் சான்றுகளின் நிலை.

உருவப்படம் வரைதல் / சிலைகளை செதுக்குதல் போன்றவை தடைசெய்யப்பட்ட காரியங்களாகும்.

கண்ணியம் கொடுக்கும் நோக்கில் இல்லாமல் உருப்படம் வரைய முடியும் அது தடைகிடையாது என்று சொல்கின்றவர்களின் சான்றுகளின் நிலை.

உருவப்படங்களை கண்ணியமற்ற முறையில் பாவனை செய்ய வரையலாம் என்போர் ஆதாரமாகக் கொள்ளும் முதலாவது ஹதீஸ்.

1: ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவுக்கும் செய்தியானது.

உருவமுள்ள திரைச் சீலை ஒன்றை வாங்கி நான் மறைத்திருந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்து திரும்பி வந்தார்கள்

அவர்கள் வீட்டில் நுழைந்த போது எனது திரைச்சீலையை வெறுத்த நிலையில் ஆயிஷாவே இதைக் கொண்டு சுவர்களையா மறைக்கின்றாய்..? என்று கேட்டார்கள்.

பின்னர் நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலயே நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து இருக்கக் கண்டேன்.
(
முஸ்னத் அஹ்மத்)

இரண்டு முறைகளில் இந்த ஹதீஸ் லஈப் ஆன செய்தி:

காரணம் 01:

இந்த ஹதீஸில் வரும் அறிவிப்பாளர்களில் அஸ்மா பின்த் அப்திர்ரஹ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர். இன்னும் இதன் அறிவிப்பாளர்களில் மற்றுமொருவரான
உஸாமா பின் ஸைத் அல் லைதீ என்பவரை ஹதீஸ்கலை வள்ளுணர்கள் பலஹீனமானவர் என்று கூறி உள்ளார்கள்.

ஸஹீஹ் ஆன ஹதீஸ்

நான் என்னுடைய அலுமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479).

அதில் உருவம் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமான செய்தியும் இல்லை.

காரணம்: 02
ஸஹீஹ் ஆன ஹதீஸ்கு மாற்றம்.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்று விட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன்.

நபி (ஸல்) அவர்கள் இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!' என்றேன்.

நபி(ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்;

'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்படும்.

எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 2105

இந்த ஹதீஸ் சொல்லும் செய்திகள்:

1: உருவத்தை தலையணையில் ஏற்படுத்தி கொள்வது அல்லாஹ்வின் தண்டனைக்குரிய காரியம்.

2: நபி (ஸல்) கண்ணியமான பொருள், கண்ணியம் அற்ற பொருள் எனப் பிரித்து கண்ணியம் அற்றவைகளில் உருவப்படம் வரையலாம் என அனுமதி வழங்க வில்லை.

3: எந்தத் தலையணையில் உருவம் உள்ள நிலையில் நபி (ஸல்) இருந்தார்கள் என்று முஸ்னத் அஹ்மதில் வரும் ஹதீஸில் வந்த அதையே இங்கே தடை செய்ததுள்ளமை அந்த செய்தி ஆதாரம் அற்ற செய்தி என்பதற்கு இன்னொரு சான்றாகும்.

உருவங்களை வரைய அனுமதிப்போர் ஆதாரமாகக் காட்டும் இரண்டாம் ஹதீஸ்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து கூறினார். நான் இரவு வந்த போது நீங்கள் இருந்த வீட்டில் என்னை நுழைய விடாமல் தடுத்தது எதுவென்றால் வீட்டில் ஒரு உருவம் இருந்ததும், இன்னும் உருவங்கள் உள்ள திரைச்சீலை இருந்ததும், அங்கே ஒரு நாய் இருந்ததுமாகும்.

எனவே அந்த உருவச் சிலையை ஒரு மரத்தைப் போன்று மாற்றி விட்டு மிதிபடக்கூடிய விதத்தில் அந்த திரைச்சீலையை இரண்டு தலையனையாக மாற்றுமாறும், அந்த நாயை விரட்டி விடுங்கள் எனவும் கட்டளையிடுங்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு முறைகளில் ஆதாரம் அற்ற செய்தி:

1:இதில் வரும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பலஹீனமானவர்.

இமாம் அஹ்மத் மற்றும், இமாம் அபூ ஹாதிம், இமாம் யஹ்யா இப்னு யஸீத் போன்றவர்கள் இவரை குறை கண்டுள்ளார்கள்.

இதே அறிவிப்பாளர் யூனுஸ் அவர்களின் தந்தை அபூ இஸ்ஹாக் என்பவர் நம்பகமானவர். அவர் கூறும் செய்தி மகனின் செய்திக்கு முரண்படுகின்றது.
இமாம் முஜாஹித்' இடமிருந்து இந்த ஹதீஸை செவியுற்ற இரண்டாம் நபர் இவரின் தகப்பனார் ' அபூ இஸ்ஹாக் ஆவார்.

ஆதாரமான செய்தி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிப்ரீல் (அலை) வந்து ஸலாம் கூறிய போது உள்ளே வாருங்கள் என நான் சொன்னேன் . அப்போது அவர் சொன்னார் வீட்டிலே உருவங்கள் உள்ள திரை இருக்கின்றது.

"அவற்றின் தலைகளைத் துண்டித்து விரிப்பாக, அல்லது சாய்ந்து இருக்கும் தலையணையாக ஆக்கிக் கொள்ளுங்கள் ."

ஏனெனில் உருவம் உள்ள வீடுகளில் நாம் நுழைய மாட்டோம் எனக் கூறினார்கள்.

இந்த உறுதியான அறிவிப்பாளரான 'அபூ இஸ்ஹாக்' என்பவரின் அறிவிப்பில் சொல்லப்பட்ட செய்தியை விட மேலதிகமாக மற்ற அறிவிப்பாளரான 'யூனுஸ்' என்பவரால் பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது. இவரின் நம்பகத்தன்மையில் குறைபாடு உள்ளதால், மேலதிகமான செய்திகள் பலவீனமானதாகும். அவைகளை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.

2: கருத்துரீதியான முரண்பாடு:

உருவங்களின் தலையைத் துண்டித்து விடும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறுவது உருவம் சிதைக்கபட்டதாக மாற்றப்படுகின்றது என்பதற்கு சான்றாக உள்ளது .

இதன் மூலம் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பவரின் அறிவிப்புக்கு மாற்றமாக உருவம் சிதைக்கபட்ட திரைச்சீலையை கொண்டு தான் தலையணை தயார் செய்யப்பட்டது என்பது அவரின் தந்தை அபூ இஸ்ஹாக்கின் அறிவிப்பின் மூலம் தெளிவாகின்றது.

உருவப்படங்களை / கேலிச்சித்திரங்களை ஆடைகளில் அனுமதிப்போர் முன்வைக்கும் மூன்றாம் ஆதாரம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உருவப்படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) கூறுகிறார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்ட போது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களுடைய வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. மைமூனா (ரலி) அவர்களுடைய பராமரிப்பில் வளர்ந்த உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் , உருவப்படங்களைப் பற்றி ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா? என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், துணியில் வரையப்பட்டதைத் தவிர' என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.

மேலும் புகாரி 3226 ஹதீஸையும் பார்க்க!

தெளிவு :

இந்த ஹதீஸில் வரும் " துணியிலுள்ள வேலைப்பாட்டைத் தவிர' என்ற வார்த்தையை ஆதாரமாக் கொண்டு சிலர் ஆடைகளில் அலங்காரத்துக்காக வரும் சிறிய உருவங்களை அனுமதிக்கப்பட்டதாக வாதிடுவார்கள். இங்கே கவனத்திற் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் உண்மையில் " துணியிலுள்ள வேலைப்பாட்டைத் தவிர" என்ற வாசகம் றஸுலுள்ளாஹ்வின் வார்த்தையாக ஆதாரபூர்வமான எந்த செய்தியிலும் பதிவு செய்யப்பட வில்லை. இன்னும் இச்செய்தி உருவப்படம் தொடர்பாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கும் அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக உள்ளது. அவர்களின் செய்திகளில் இவ்வாறான எந்த விதிவிலக்குகளும் இடம்பெற வில்லை. எனவே " துணியிலுள்ள வேலைப்பாட்டைத் தவிர" என்ற விளக்கம் ஸைத் (ரலி) அவர்களின் தனிப்பட்ட விளக்கமாக நோக்கப்படுவதே நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளுக்கு முரண்படாத வண்ணம் ஹதீஸ்களை விளங்க உதவியாக இருக்கும்.

உருவப்படமுள்ள திரைச் சீலையை சிதைக்க வேண்டும் என்ற நபிகளாரின் வெளிப்படையான செயலுக்கு மாற்றமாக ஸைத் பின் காலித் (ரலி) அவர்களுகளின் செயல் இருப்பதால் நபிகளார் திரைச் சீலையிலும், தலையணையிலும் இருந்த உருவத்தைத் தடைசெய்த விடயம் இவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் அது ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டில் நடந்த விடயம். நபிகளாரின் எல்லா விடயங்களையும் எல்லா ஸஹாபாக்களும் அறிந்திருக்கவில்லை . எனவே அந்த சஹாபியின் தனிப்பட்ட அச் செயலை அவரின் சொந்த விளக்கமாக கருதுவதே பொருத்தமாகும்.

கண்ணியப்படுத்தி மரியாதை வழங்கும் நோக்கில் உருவம் வரைவது தடை செய்யப்பட்டது போன்று நாம் தரக்குறைவாக எண்ணும் பொருட்களில் உருவங்களை வரைவதும் தடை செய்யப்பட்ட காரியமாகும்.
எனவே ஒரு கார்ட்டூனின் மூலம் நல்ல தகவல்களை வழங்க நினைப்பது பிஸ்மில் சொல்லி மதுமானம் குடிப்பதை ஒத்த செயலாகும்.

8) தன் தவறை நியாயப்படுத்த பிறர் தவறை முன்ணுதாரணமாகக் கொள்வது அறிவார்ந்த செயலா..?

சில பட்டதாரிகளின் வாதங்களைப் பார்க்கும் போது மிகவும் நகைப்புக்குரியதாக உள்ளது. கேலிச் சித்திரம் வரைவதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் அரபு நாடுகளின் உருவப்படமுள்ள பாடப் புத்தகங்களாகும் . அவர்கள் கேலிச்சித்திரங்களைப் பாடப்புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளதால் நாமும் பயன்படுத்தலாம் என்பதே இவர்களின் வாதம். நான் இத்தகையோரிடம் கேட்கிறேன் பொய் பேசுவதை இஸ்லாம் தடை செய்திருக்க ஒரு ஆலிம் பொய் பேசினால் பொய் பேசுவது ஹலால் என்று ஆகிவிடுமா.?

பாத்திமா (ரழியழ்ழாஹு அன்ஹா) திருடினாலும் கை வெட்டப்படும் என நீதியை நேர்த்தியாகச் சொன்ன மார்க்கத்தில் இருந்து கொண்டு பாத்திமா திருடியதைப் போல் நானும் திருடினேன் எனச் சொல்வது எப்படி நியாயமாகும்..? உருவம் வரைவது அடிப்படையிலையே இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரியமாக இருக்க எந்தப் பெரிய உலமா சபை நல்லதைச் சொல்ல கார்ட்டூனைப் பயன்படுத்தினாலும் அது தவறு என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

நன்நடத்தையில் தான் பிறரை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் தீய நடத்தையில் கிடையாது.

9)உருவப்படம் விடயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேக சட்டமா..?

உருவப்படம் வரைதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்பதை மேலே விரிவாக நாம் ஆராய்ந்தோம். இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்ய நபி (ஸல்) அவர்களுக்குக் கூட எந்த அதிகாரமும் கிடையாது என்பது அடிப்படை.

அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.

قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِ‌ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?" என்று கேட்டு "அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது" என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
(
அல்குர்ஆன் : 7:32)

يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 66:1)

நபியாகவே இருந்தாலும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இந்த மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதை ஹராமாக்கிக் கொள்ளவோ, ஹராமானாதை அனுமதிக்கவோ முடியாது.

கேலிச் சித்திரம் வரைவது இஸ்லாம் அங்கீகரித்துள்ள ஒரு கலையாக இருந்தால்.? நல்ல விடயங்களைக் கூடக் கேலிச் சித்திரங்களின் மூலம் சமூகத்துக்கு நேர்த்தியாக எத்திவைக்க முடியும் என்றால்.? ஏன் நபி (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர் என்ற உண்மையை கார்ட்டூன் வரைந்து எடுத்துக் கூற முடியாது..? ஏன் நபிகளாரின் உருவப்படம் என வரைவோரை எதிர்க்க வேண்டும்..? நபியை மட்டும் கார்டூன் வரைவது தடை என பிரத்தியேக சட்டம் ஏதும் ஹதீஸ்களில் வந்துள்ளதா…? மேற்குலகம் நபியைக் கேலிச் சித்திரம் வரைந்தால் நாம் ஏன் கொதித்தெழ வேண்டும்..? உங்கள் பார்வையில் அது அவர்களின் ஊடக சுதந்திரமாச்சே..? அவர்கள் தாங்கள் வணங்கும் சிலைகளுக்கே உருவம் கற்பித்திருக்க நபி (ஸல்) அவர்கள் அவர்களின் பார்வையில் எம்மாத்திரம்..? கார்டூனிஸ்ட்டுகள் இதற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளீர்கள்.

10) இஸ்லாத்தின் நிலைப்பாடு:

ஹராம், ஹலால் அனைத்தும் அனைவருக்கும் பொதுவான சட்டமாகும். அல்லாஹ் என்ன என்ன சட்டங்களில் யார் யாரைக் குறிப்பாக்கினானோ அவர்கள் அதில் மாத்திரம் விதிவிலக்கானவர்கள் . பிறரைக் கேலி செய்யும் விடயத்திலோ, உருவப்படம் வரைதல் விடயத்திலோ, இவரைக் கேலி செய்யுங்கள், இவரின் உருவத்தை மாத்திரம் வரையாதீர்கள் என அல்லாஹ் யாரையும் விதிவிலக்காகச் சொல்ல வில்லை. இது அனைவருக்கும் பொதுவான சட்டமே.

நபிகள் நாயகத்தின் உருவப்படத்தை வரைவது எப்படித் தடை செய்யப்பட்ட காரியமோ அது போல் தான் மற்றவர்களின் உருவங்களையும் கேலிச் சித்திரமாக வரைவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. இந்த சட்டத்தில் யாரும் விதிவிலக்கானவர்கள் கிடையாது.

உயிருள்ளவற்றின் உருவங்களை வரைவதை தடை செய்துள்ள மார்க்கத்தில் இருந்து கொண்டு பிற மனிதனைக் கேலி செய்ய சித்திரம் வரையலாம் என்பது எந்த அளவு அறிவீனமான வாதம் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

இஸ்லாமிய வங்கி, இஸ்லாமிய ஊடகம், போன்ற என்ன பெயர்களில் இயங்குவோராக நீங்கள் இருந்தாலும் அதில் இஸ்லாத்துக்கு மாற்றமான உலக வலக்குகளை நீங்கள் பின்தொடர வேண்டியதில்லை. அப்படியான ஒரு மனநோய் உங்களிடமிருந்தால் "இஸ்லாமிய" என்ற விளம்பரப் பெயரை உங்கள் நிர்வணத்தின் கீழ் இருந்து அகற்றி விட்டு எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள். இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்துக்கு முரணாணவற்றை அறிமுகம் செய்யாதீர்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன.

பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் விட்டு விடுவார்;

பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்'
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2051.

தெளிவான ஹராத்தை விட்டு நாம் எப்படி பாதுகாப்பாக இருப்போமோ அது போல் சந்தேகங்களை விட்டு ஒதிங்கிக் கொள்வதும் எம்மீது கடமையாகும். சந்தேகமானதில் தொடரக்கூடியவர் பாவத்தில் சென்று விழுந்து விடுவார் என்பது அல்லாஹ்வின் தூதரின் வாக்கு மூலமாகும். அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக..

அல்லாஹ் மிக அறிந்தவன்.

http://www.islamkalvi.com/?p=126083


--

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts