லேபிள்கள்

ஞாயிறு, 6 ஜூன், 2021

முஸ்லிம்களும்சோதனைகளும்

மனிதர்களை சோதனைக்கு ஆளாக்குவது என்பது அல்லாஹுவின் நியதியாகும். அவர்களில் மூஃமின்கள் யார்? முனாஃபிகுகள் யார்? உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதையெல்லாம் பிரித்தறிய மனிதர்களுக்கு அல்லாஹ் சோதனைகளை ஏற்படுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான், "நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல்குர்ஆன் 29:2,3)

அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்டோம் என அனைவராலும் வாதிடமுடியும். ஆனாலும் அந்த நம்பிக்கையில் அவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா இல்லையா என்பது சோதனையின் மூலம் தான் உறுதி செய்யமுடியும்.

அல்லாஹ் கூறுகிறான், (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்துவைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (அல்குர்ஆன் 3:179)

சோதனை என்பது குறிப்பிட்ட காலத்தவருக்கு மட்டுமல்ல மாறாக எல்லா காலத்தவரையும் அல்லாஹ் சோதித்துள்ளான்
சோதனைகளை எதிர்கொள்வதில் மனிதர்கள் மூன்று தரப்பினர்களாக உள்ளனர்.

ஒன்று: நன்மைகளை இழந்தவர்கள் இவர்கள் வெறுப்புடனும், அல்லாஹுவைக்குறித்த தவறான எண்ணத்தோடும், இன்னும் விதியை குறைகூறியவர்களாகவும் சோதனைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள்.

இரண்டு: அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் பொறுமையோடும் அல்லாஹுவைக்குறித்த நல்லெண்ணத்தோடும் சோதனைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள்.

மூன்று: பொருந்திக்கொள்ளக்கூடியவர் சோதனையை பொருத்தத்தோடும், நன்றியுணர்வோடும் எதிர்கொள்ளக்கூடியவர்கள். இது பொறுமை என்பதை விட ஒருபடி மேலாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இந்தப் பாக்கியமானது அமைவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்:ஸஹீஹ் முஸ்லிம்.5726

முஃமினைப் பொறுத்தவரை அல்லாஹ் அவனது பாவத்திற்கான தண்டனையை உலகிலேயே விரைவாக வழங்கி மறுமையில் அவனது அந்தஸ்துகளை உயர்த்துகிறான் அதே நேரத்தில் காஃபிரையும், முனாஃபிக்கையும் உலகில் சோதனைகளின்றி வாழவைத்து மறுமையில் அவர்களுக்கு தண்டனையை வழங்க இருக்கிறான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அது முற்றிய பயிராகும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். இறைமறுப்பாளனின் நிலை, தனது அடித்தண்டின் மீது விறைப்பாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேடியாக வேரோடு சாய்ந்து விழும்வரை அதை எதுவும் சாய்ப்பதில்லை.
அறிவிப்பாளர் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள்.ஸஹீஹ் முஸ்லிம் 5411

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் பீடித்தால் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம், நிச்சயமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்" என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்குர்ஆன் 2:155,156,157)

சோதனையின் வடிவங்கள்
மார்க்கத்தில் சோதனை
செல்வத்தில் சோதனை
பிள்ளைகள் விஷயத்தில் சோதனை
இன்னும் இதுவல்லாத பலதரப்பட்ட சோதனைகளும் உள்ளன

நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; இந்த நிலைகளில் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 2:155)

இதில் மிகப்பெரிய சோதனை மார்க்கத்தில் ஏற்படும் சோதனையாகும்

அல்லாஹ்வின் தூதர்களும் பல்வேறுவிதமான சோதனைகளுக்கு ஆளானார்கள் அந்த சோதனைகளையெல்லாம் அவர்கள் பொறுமையாக எதிர்கொண்டு அல்லாஹ்வின் பொறுத்தத்தை தேடினார்கள் முஃமிகளும் அவர்களையே முன்மாதிரியாகக்கொண்டு சோதனைகளை சாதனையாக மாற்ற முயற்சிக்கவேண்டும்.
சோதனைகள் ஏற்படும்போது அதை ஒரு முஸ்லிம் எப்படி எதிர்கொள்ளவேண்டும்

1.இச்சோதனை அல்லாஹ்வின் புறத்தில் இருந்துள்ளது என்று உறுதிகொண்டு பொறுப்பை அல்லாஹ்விடம் ஒப்படைக்க வேண்டும்.
2. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாமலும், வெறுக்காமலும், காலத்தை ஏசாமலும் மார்க்கத்தை உறுதியாக பற்றிப்பிடித்து இருக்கவேண்டும்.
3.சோதனைகளை தடுப்பதற்கான பயனுள்ள காரியங்களில் ஈடுபடவேண்டும்.
4.செய்த பாவங்களுக்காக அல்லாஹ்வின் பக்கம் மீண்டு பாவமன்னிப்புத்தேடவேண்டும்.

சோதனையின் பயன்கள்

  • பாவங்கள் மன்னிக்கப்படும் தீமைகள் அழிந்துபோகும்.
  • மறுமையில் அந்தஸ்தும் படித்தரமும் உயரும்.
  • அல்லாஹ்வின் முன் பணிவதற்கும் தவ்பா தேடுவதற்குமான வாசலை திறக்கும்.
  • அல்லாஹ்வுடனான அடியானின் தொடர்பை வலுப்படுத்தும்.
  • நன்மையை இழந்த துர்பாக்கிய சாலிகளின் வலிகளை உணர்த்துகிறது.
  • விதியின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிபடுத்தும் எந்த நன்மையும் தீமையும் அல்லாஹுவைகொண்டல்லாமல் வேறில்லை என்ற உறுதியைத்தருகிறது.

சோதனைகளில் அகப்பட்டவர்கள் மீள்வதற்கான வழிகள்
1.பிரார்த்தனை ஈடுபடுவது
ஷைகுல் இஸ்லாம் இப்னுதைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் பிரார்த்தனை சோதனைகளை தடுக்கும் காரணிகளாகும். ஒருவரது பிரார்த்தனை வலுவானதாக இருந்தால் அது சோதனையைத் தடுக்கும். சோதனையின் காரணம் வலுவானதாக இருந்தால் பிரார்த்தனை அதனை தடுக்காது. என்றாலும் அச்சோதனையை குறைக்கவோ பலவீனமாக்கவோ செய்யும். எனவே தான் கிரஹணங்களின் போதும் ஆபத்துகளின் போதும் தொழவேண்டும், துவா செய்யவேண்டும், பாவமன்னிப்புக் கோரவேண்டுமென்றும் ஏவப்பட்டுள்ளது.

2.தொழுகையைப்பேணுவது
நபி அவர்கள் எதாவது சோதனை ஏற்பட்டால் தொழுவார்கள் நுல்:சுனன் அபீதாவூத் 1319
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்2:153

3.குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம்; ஆனால்

அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்குர்ஆன் 17:82)

எத்தகைய சோதனைகளை நாம் எதிர்கொள்ள நேர்ந்தாலும், ஈமானை இழக்காமல் இறுதி வரை பொறுமையோடு இருந்து வெற்றிபெறக்கூடிய பாக்கியத்தை அடைய மேற்கூறிய வழிகளை பின்பற்றி வாழ்வோமாக ஆமீன்

http://www.islamkalvi.com/?p=124083


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts