லேபிள்கள்

புதன், 23 ஜூன், 2021

தீங்கிழைத்தவனுக்கு உபகாரம்செய்வது..!

மனிதனுக்கு மிகவும் பாரமான காரியம் அவனது கடின உழைப்பு! பழுவான காரியங்களை மிகவும் சிரமப்பட்டுக்கூட செய்து முடித்துவிடுவான், சுமை தூக்கிப் பிழைக்கின்றவனுக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தினமும் அதைச் சுமந்து சுமந்து அவன் வாழ்க்கையைக் கழித்துவிடுவான். கடுமையான  பொருளாதார சிக்கல் வந்தாலும் பல வழிகளைக் கையாண்டு அதையும் கடந்துவிடுவான். ஆனால் அந்தக் கடின உழைப்பையும் விட, அவன் சுமக்கும் சுமையையும் விட, பொருளாதாரக் கஷ்டத்தையும் விட, மனிதனுக்கு  மிகவும் கடினமானது உள்ளத்தில் நல்ல எண்ணம் கொள்வது! அதிலும் பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வது.

ஒருவன் பரம ஏழையாக இருக்கின்றான், அவனது வருமானம் அவன் குடும்பத்திற்கே போதாத நிலை, அவனது பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் பிறரை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்துகின்றான். அதே நேரத்தில் அவன் யாரைப்பற்றியும் தவறான எண்ணம் கொள்வதில்லை! எந்த செலவும் இல்லாமல், எந்த நஷ்டமும் இல்லாமல் நல்லெண்ணத்தை உள்ளம் நிறையக் கொண்டுள்ளான். என்னிடம் செல்வம் இருந்திருந்தால் இன்னாருக்கு வழங்கி இருக்கலாம், இன்னின்ன காரியங்களைச் செய்திருக்கலாம், இன்னின்ன உதவிகளைச் செய்திருக்கலாம் என்று தம்மால் செய்யமுடியாத அவன், நன்மைகள் செய்வதற்காக உள்ளத்தில் நல்லெண்ணம் கொண்டதனால் அல்லாஹுவிடம் அவன் ஒரு நன்மையை அடைந்துகொள்கின்றான்.

அதே நேரத்தில் அந்தக் காரியத்தை அவன் செய்து முடித்துவிட்டால் பத்து நன்மைகளை  அல்லாஹுவிடம் அடைந்துகொள்கின்றான். ஒருவன் தன் உள்ளத்தில் எண்ணும் நல்ல எண்ணத்திற்கும் கூலி வழங்கப்படும் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்.

பொதுவாக மனிதன் தனக்கு எந்த அநீதமும் இழைக்காதவனைப் பற்றியோ, எந்தத் தீங்கும் செய்யாதவனைப் பற்றியோ உள்ளத்தில் நல்லெண்ணம் கொள்வதே இக்காலத்தில் மிகவும் கடினமான காரியம். ஒரு நல்ல மனிதனை பற்றி இன்னொருவன் நல்லெண்ணம் கொள்வதே சமூகத்தில் மிகவும் அரிதான விஷயம்! ஆனால் இங்கு ஒரு தீயவனுக்கு அதுவும் தனக்குத் துன்பம் இழைத்தவனுக்கு, அநீதி இழைத்தவனுக்கு நாம் உபகாரம் செய்யவேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது.

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ  اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ

நன்மையையும் தீமையும் சமமாக மாட்டாது, (எனவே, நபியே) நன்மையைக் கொண்டே (தீமையைத்) தடுத்துக்கொள்வீராக! அப்போது யாருக்கும் உமக்கும் பகைமை உள்ளதோ அப்படியானவர்கூட உற்ற நண்பரைப் போன்று ஆகிவிடுவார். (அல்குர்ஆன்:- 41:34)

இரவும்  பகலும் எப்படி ஒன்றோடு மற்றொன்று வேறுபட்டதோ, கருப்பும்  வெண்மையும் எப்படி ஒன்றோடு மற்றொன்று வேறுபட்டதோ அதேபோன்று நன்மையையும்  தீமையும் ஒன்றோடு மற்றொன்று வேறுபட்டது. அது இரண்டும் சமமானது அல்ல!

குறைந்தபட்சம் தீங்கிழைத்தவனை விட்டும் ஒதுங்கிவிடத்தான் எல்லோரும் விரும்புவர், அவனது நிழல்கூட நம்மீது பட்டுவிடக்கூடாது என்று அவனை விட்டும் தூரமாகிவிடுவர். ஆனால் அவனுக்கும் உபகாரம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு எல்லோருக்கும் வருவதில்லை! எவ்வளவு பெரிய புத்திசாலியும் இந்த நிலைக்கு அவ்வளவு எளிதில் வருவதில்லை.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹுவின் கட்டளையை மீறி உனக்குத் தீங்கிழைத்தவனை  அவன் விஷயத்தில் அல்லாஹுவுக்கு நீ கீழ்ப்படிவதன் மூலமே தவிர அதாவது அவனுக்கு உபகாரம் செய்வதன் மூலமே தவிர வேறு எதன் மூலமாகவும் நீ அவனைத் தண்டித்துவிட முடியாது. (இப்னுகஸீர்)

உபகாரம் செய்வதும், நன்மையை நாடுவதும் ஈவு இரக்கமற்ற எதிரியின் உள்ளத்தையும் நேசிப்பதற்கும், பரிவு காட்டுவதற்கும் தூண்டிவிடும்! அப்போது பகைவனும்  நேசனாக உபகாரம் செய்பவனாக மாறிவிடுவான், ஆனால் இங்கு ஒரு நிபந்தனை!

وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْاوَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ

பொறுமையாக இருப்பவர்களுக்கே தவிர வேறு யாருக்கும் இந்த (உயர்ந்த குணம்) வாய்க்கப்படுவதில்லை! மகத்தான பேறு பெற்றவருக்கே தவிர இது அருளப்படுவதில்லை! (அல்குர்ஆன்:- 41:35)

இந்த மகத்தான அருள் வழங்கப்பட்டவர் யார்? அதிக வணக்க வழிபாட்டில் ஈடுபட்டவரா? அல்லது அதிகமான தர்மங்கள் செய்தவரா? அல்லது அதிகமான போதனைகள் செய்தவரா? இல்லை! யார் பொறுமையாக இருந்தார்களோ, அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த பேரருள் கிடைப்பதில்லை.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையார் அல்லாஹுவுக்காக சகித்துக்கொண்டார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் இந்த அறிவுரையை ஏற்றுச் செயல்படமாட்டார்கள். ஏனெனில் தீங்கைப் பொறுத்துக்கொள்வது என்பது மனதுக்கு மிகவும் பாரதூரமான விஷயமாகும். பாக்கியம் பெற்றவர்களைத் தவிர வேறுயாரும் இதை அடையமாட்டார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: கோபத்தின் போது பொறுமை காக்கும்படி இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். பிறர் அறிவீனமாக நடந்துகொள்ளும் போது சாந்தத்தையும், பிறர் தீங்கிழைக்கும் போது மன்னிப்பையும் மேற்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். (இப்னுகஸீர்)

இந்த விஷயத்தில் யார் பொறுமையை உருவாக்குகின்றார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது கிடைப்பதில்லை!

ஆனால் ஷைத்தான் பொறுமையாளர்களுக்கு மிகப்பெரும் விரோதியும், துரோகியும் ஆவான்! ஒரு இறை நம்பிக்கையாளனுக்குப் பொறுமை ஏற்படுவதை ஷைத்தான் விரும்புவதில்லை! காரணம் பொறுமையை மேற்கொண்ட இறை நம்பிக்கையாளன் இவ்வுலகிலும் வெற்றியடைவான், மறுமையிலும் வெற்றியடைவான். ஆகவே தீங்கிழைத்த மனிதனுக்கு உபகாரம் செய்யும் வேளையில் ஷைத்தானின் ஆதிக்கத்தைத் தோற்கடிப்பதற்காக அல்லாஹ் அதன் அடுத்த வசனத்தில் கூறுகின்றான்:

وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

(நபியே) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதேனும் ஊசலாட்டம் ஏற்பட்டால் உடனே அல்லாஹுவிடம் பாதுகாப்புக் கோருவீராக! அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவான்.  (அல்குர்ஆன்:- 41:36)

அளவு கடந்த பொறுமையும், ஷைத்தானின் ஆதிக்கத்திற்கு

அடிபணியாத தன்மையும் யாரிடம் இருக்கின்றதோ அவர்தான் 'தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்யும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார்.

S.A. Sulthan

http://www.islamkalvi.com/?p=124201


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts