லேபிள்கள்

சனி, 23 ஜனவரி, 2021

இஸ்லாமிய இல்லம்!


வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.
வீடு அமைதியின் அடித்தளம்:
"உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)" (16:80)
இந்த வசனம் வீடு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் வழங்கும் இடமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
வீடு கேடயம்:
பித்னாக்களின் போது வீட்டில் முடங்கி விடுவது பாதுகாப்புக்கான வழியென இஸ்லாம் கூறுகின்றது.
"யார் தனது நாவைக் கட்டுப்படுத்தித் தனது வீட்டிலேயே தங்கி விடுகின்றாரோ அவரும், யார் தனது தவறுகளை நினைத்து அழுகின்றாரோ அவரும் நற்செய்தி பெறட்டும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தபரானீ 212)
"தனது வீட்டில் ஒருவர் அமர்ந்து அதனால் அவரது பிரச்சினையிலிருந்து மக்களும், மக்களது பிரச்சினையிலிருந்து அவரும் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்!" என நபி(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத் 22093, தபரானீ 16485)
பித்னாவின் போது ஒருவர் தனது வீட்டிலேயே தங்கி விடுவது அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே ஒரு மனிதன் தனது பணி நேரம் போக ஏனைய நேரத்தை வீட்டில் கழிப்பது சிறப்பானதாகும். இந்த வகையில் வீடு ஒரு கேடயமாகத் திகழ்கின்றது எனலாம்.
சிலர் வீட்டில் தொல்லை தாங்க முடியாது என்று பாதையோரங்களில் காலத்தைக் கடத்துகின்றனர். இதனால் பல பித்னாக்கள் உண்டாவதை அவதானித்து வருகின்றோம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
உயிருள்ள வீடுகள்:
உங்கள் இல்லங்களில் அல்லாஹ்வை அடிக்கடி நினைவுகூறுங்கள்!
அபூமூஸா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
"அல்லாஹ் நினைவுகூரப்படும் வீட்டுக்கும், அல்லாஹ் நினைவுகூரப்படாத வீட்டுக்குமான உதாரணம் உயிருள்ளவனுக்கும், செத்த பிணத்துக்கும் ஒப்பானதாகும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 221, 1859, இப்னு ஹிப்பான் 854)
அல்லாஹ் நினைவுகூரப்படாத வீடு செத்த பிணத்துக்கு ஒப்பாக்கப்படுகின்றது. எனவே உங்கள் வீட்டை உயிருள்ளதாக மாற்றுங்கள்!
அல்லாஹ் நினைவுகூரப்படுவதன் மூலம் உங்கள் வீட்டை உயிரோட்டமுள்ளதாகவும், ஆன்மீக ஆறுதலை வழங்கும் இடமாகவும் மாற்றுங்கள்!
இன்று எமது இல்லங்களில் அல்லாஹ் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ஷைத்தான் நினைவுகூரப்படுகின்றான். இந்த இழிநிலை நீங்க வேண்டும்.
வீட்டை விட்டும் ஷைத்தானை விரட்டுங்கள்!
உங்கள் இல்லங்களில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இன்று எமது இல்லங்கள் குர்ஆன் ஓதப்படாத மையவாடிகளாக மாறிவிட்டன.
"உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கி விடாதீர்கள்! ஸூறதுல் பகறா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகின்றான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 212, 1860, திர்மிதி 2877, அஹ்மத் 7821)
இந்த ஹதீஸ் குர்ஆன் ஓதப்படாத வீடுகளைக் கப்றுகளாகச் சித்தரிக்கின்றது. ஸூறதுல் பகறாவைக் குறிப்பாக வீட்டில் ஓத வேண்டும். அதன் மூலமே ஷைத்தானை விரட்ட வேண்டுமென இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இன்றைய எமது இல்லங்கள் ஷைத்தான்களின் இருப்பிடங்களாக மாறிவிட்டன. இசை, சினிமா, பாட்டு, கூத்து என ஷைத்தானின் கீதங்கள் இசைக்கப்படுகின்ற அதே வேளை, ஷைத்தானை விரட்டுவதற்கான எந்த முயற்சியையும் நாம் செய்யாமல் இருக்கின்றோம்.
"உங்கள் வீடுகளில் ஸூறதுல் பகறாவை ஓதுங்கள்! ஏனெனில் எந்த வீட்டில் ஸூறதுல் பகறா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 2062, 2063, 3029, தபரானீ 8564)
ஷைத்தான் நுழையாமல் இருக்கவும், நுழைந்த ஷைத்தானை விரட்டவும் வீடுகளில் ஸூறதுல் பகறா ஓதப்பட வேண்டுமென ஹதீஸ்கள் கூற, நாமோ ஷைத்தான்களை அழைத்து எமது இல்லங்களில் குடியமர்த்தி விருந்தும் படைத்து வருகின்றோம். எனவே முதலில் ஷைத்தானை விரட்ட வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஷைத்தானுக்கு உணவளிக்காதீர்கள்!
நாம் நமது இல்லத்தில் ஷைத்தான்களுக்கு இடங்கொடுப்பதுடன் உணவும் அளித்து வருகின்றோம்.
"ஒரு மனிதர் தனது வீட்டுக்குள் நுழையும் போதும், உணவுண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர்ந்தால் ஷைத்தான் மற்ற ஷைத்தான்களிடம் "இங்கே உங்களுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ இல்லை!" என்று கூறுவான். வீட்டுக்கு நுழையும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் "உங்களுக்குத் தங்க இடம் கிடைத்து விட்டது!" என ஷைத்தான் கூறுவான். அவர் உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் "தங்க இடமும், உண்ண உணவும் கிடைத்து விட்டது!" என்று கூறுவான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 103, 5381, அபூதாவூத் 3767, 3765, இப்னுமாஜா 3887)
இன்று எத்தனையோ தந்தைமார் தொழில் முடிந்து வீட்டுக்கு வரும் போது ஷைத்தானையும் கூட அழைத்துக்கொண்டே வருகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் தமது உணவில் ஷைத்தானுக்குப் பங்கு கொடுக்கின்றனர். எனவே வீட்டுக்குள் நுழையும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும்; உண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும். இதன் மூலம் ஷைத்தானுக்குத் தங்க இடமும், உண்ண உணவும் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
கூட வரும் ஷைத்தான்:
இரவு உறங்க வரும் போது கூட வரும் ஷைத்தான் நீங்கள் தொழிலுக்குச் செல்லும் போதும் கூடவே வருவான். அவனைத் துரத்த வேண்டியது உங்கள் பொறுப்பு!
நீங்கள் வீட்டை விட்டும் வெளியேறும் போது "பிஸ்மில்லாஹ் தவக்கல்து அலல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்!" என்று ஓதிக் கொண்டு வீட்டை விட்டும் வெளியேறுவதன் மூலம் ஷைத்தானின் தொடர்பைத் துண்டிக்கலாம். அதாவது வீட்டுக்குள் நுழையும் போதும், வீட்டை விட்டு வெளியேறும் போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்!
தொழுகை மூலம் வீட்டை உயிர்பெறச் செய்யுங்கள்!
"மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும், "எகிப்தில் உங்களிருவரின் சமூகத்திற்கும் வீடுகளை அமைத்து, உங்கள் வீடுகளை நீங்கள் கிப்லாவாக ஆக்கித் தொழுகையை நிலை நாட்டுங்கள். இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்!" என நாம் வஹி அறிவித்தோம்." (10:87)
பர்ழான தொழுகையைப் பொறுத்த வரையில் ஆண்கள் அதனைப் பள்ளியில் தொழுவது அவசியமாகும். ஆனால் ஸுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். பெண்களைப் பொறுத்த வரையில் பர்ழான தொழுகைகளையும் வீட்டில் தொழுவதே சிறப்பானதாகும். இந்த வகையில் வீட்டில் தொழுகை நிலைநாட்டப்பட வேண்டும். இதன் மூலம் வீட்டில் ஆன்மீக உயிரோட்டம் மங்கி மறையாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
வீடு கல்விக்கூடமாக!
வீட்டைக் கல்விக் கூடமாகப் பாவிப்பது மிக அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியருக்கு வீட்டில் வைத்துத்தான் மார்க்கத்தைப் போதித்தார்கள். குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்று மத்ரஸாக்களிலும், பாடசாலைகளிலும் கற்றுக் கொடுக்கப்படும் நல்ல விடயங்களை நடைமுறை வாழ்வில் கொண்டு வரும் பயிற்சியை வழங்குவதில் வீட்டுச் சூழலுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதைப் பெற்றோர் மறந்து விடக்கூடாது.
உண்ணும் போது "பிஸ்மில்லாஹ்!" கூற வேண்டும் என்பதை மத்ரஸாவில் கற்றுக் கொடுக்க முடியும். இதை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வீடு தானே வழங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களிடம் சில பெண்கள் வந்து, "ஆண்கள் எங்களை மிகைத்து விட்டார்கள்! எங்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்குத் தனியான ஒரு நாளை ஒதுக்குங்கள்!" எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்கு வருமாறு கூறி அங்கு வைத்து அவர்களுக்கு மார்க்கம் போதித்தார்கள்.
(அஹ்மத் 7357, 7351, இப்னு ஹிப்பான் 2941, நஸாஈ 5898)
எனவே, வீட்டுச் சூழலைக் கல்விச் சூழலாக்குங்கள்! நல்ல நூற்களை வாங்கி வையுங்கள்! உங்கள் வீட்டில் ஒரு சிறிய நூலகம் இருக்கட்டும்! முடிந்தால் மார்க்க உரைகள் அடங்கிய ஒலி-ஒளி நாடாக்களுக்கான ஒரு ஏற்பாட்டையும் செய்யுங்கள்! கிடைக்கும் ஓய்வுகளை மார்க்க அறிவையும், உணர்வையும் வளர்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
ஒன்றாக உண்ணுங்கள்!
உணவு உண்ணும் போது குடும்பமாக ஒன்றாக அமர்ந்து உண்ணப் பழகுங்கள்! குறைந்த பட்சம் இரவு உணவையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!
இதன் மூலம் குடும்ப உறவு வலுப்பெறும். பகிர்ந்து உண்ணும் பக்குவம் வரும். அடுத்தோரை அனுசரித்துச் செயற்பட வேண்டும் என்ற எண்ணமும், பக்குவமும் ஏற்படும். இந்தப் பழக்கம் இல்லாததால்தான் இளைஞர்கள் இரவு நேரத்தில் வீதியில் அலைந்து திரிந்து வம்புகளை வளர்க்கின்றனர். நான் உரிய நேரத்துக்குப் போக வேண்டும். வீட்டில் நான் போகும் வரை யாரும் உண்ண மாட்டார்கள் என ஒருவன் எண்ணினால் வீதியில் அலைந்து திரிவானா? எனவே ஒன்றாக இருந்து உண்ணும் நல்ல பழக்கத்தைக் கைவிடாது தொடர வேண்டும்.
நல்லோர் வரவு:
"எனது இரட்சகனே! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கையாளராக எனது வீட்டில் நுழைந்தவரையும், மேலும் நம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! இன்னும் இவ்வநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறெதையும் நீ அதிகப்படுத்த வேண்டாம்!" (என்றும் பிரார்த்தித்தார்.)
மேற்படி வசனத்தில் எனது வீட்டில் நுழையும் முஃமின்கள் என்ற வார்த்தையை அவதானியுங்கள்! இந்த அடிப்படையில் வீட்டுக்கு நல்ல மனிதர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் உங்களது குழந்தைகளுக்கு நல்லோரது தொடர்பு ஏற்படும். நல்லோரை அதிகம் சந்திக்கும் போது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வளரும். இதே வேளை கெட்டவர்கள் வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் வேண்டும்.
ஆலோசனை செய்யுங்கள்!
வீட்டு விவகாரங்களில் வீட்டில் உள்ளோரிடம் குறிப்பாக வளர்ந்த பிள்ளைகளிடம் ஆலோசனை செய்யுங்கள்! அவர்களது சிந்தனைத் திறன் வளரவும், பொறுப்புணர்ச்சி ஏற்படவும், பெற்றோரை மதிக்கும் மனோபக்குவம் வளரவும் இது வழி வகுக்கும்.
குழந்தைகள் விவகாரத்தில் அவதானம் தேவை:
உங்கள் பிள்ளைகளது நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? வகுப்புகள் நடக்கும் நேரம், நடக்கும் இடம், நடக்கும் நாட்கள், முடிவடையும் நேரம் என்பவற்றை அறிந்து வைத்திருங்கள்!
உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் குறித்தும் இதே அவதானத்துடன் இருங்கள்! அவர்களது தொலைபேசித் தொடர்புகள் எத்தகையவை என்பதையும் கவனம் செலுத்துங்கள்! பெற்றோரின் கவனயீனம்தான் அதிகமான பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. முடிந்த வரை வீட்டுச் சூழலை இஸ்லாமிய மயப்படுத்துதல் இஸ்லாமிய தஃவாவில் மிக முக்கியமான விதியாகும். இது விடயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts