லேபிள்கள்

சனி, 16 ஜனவரி, 2021

மக்கள் மனங்களைக் கவர!


அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
இந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் பெறவும் இஸ்லாம் காட்டும் சில வழிகாட்டுதல்களைத் தொகுத்து நோக்குவது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன்.
1. அல்லாஹ்வின் நேசத்தைப் பெறல்:
மக்கள் உங்களை நேசிக்க வேண்டுமா? அவர்களது மனதில் நீங்கள் நீங்காத இடத்தைப் பெற வேண்டுமா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.
அல்லாஹ்வின் நேசத்தைப் பெற பர்ளான கடமைகளையும், மேலதிகமான ஸுன்னத்தான அமல்களையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.
அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
"ஒரு அடியான் நபிலான வணக்கங்களால் அல்லாஹ்வை நெருங்கும் போது, "அவர் பார்க்கும் கண்களாகவும், கேட்கும் காதுகளாகவும், பிடிக்கும் கைகளாகவும், நடக்கும் கால்களாகவும் நான் மாறி விடுகின்றேன். அவன் கேட்டால் நான் கொடுப்பேன்!" என அல்லாஹ் கூறுகின்றான். (புகாரி 6502)
இவ்வாறு நெருங்கி அல்லாஹ்வின் நேசத்தையும், நெருக்கத்தையும் பெற்று விட்டால் அல்லாஹ் என்ன செய்கின்றான் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது;
அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
"அல்லாஹ் ஒரு அடியானை நேசித்து விட்டால் ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, "அல்லாஹ் இந்த மனிதரை நேசிக்கின்றான்! நீரும் அவரை நேசி!" என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்திலுள்ளவர்களை அழைத்து, "அல்லாஹ் இந்த மனிதரை நேசிக்கின்றான்! நீங்களும் அவரை நேசியுங்கள்!" என்று கூறுவார். அவரை வானத்திலுள்ளவர்கள் நேசிப்பார்கள். பின்னர் பூமி யிலுள்ளவர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6040)
ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பில் மேலதிகமாக;
"அல்லாஹ்வின் கோபத்தை ஒருவன் பெற்று விட்டால், அல்லாஹ் ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து "நான் இவரை வெறுக்கின்றேன்! எனவே நீரும் இவரை வெறுப்பீராக!" என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்திலுள்ளவர்கள் மத்தியில் "அல்லாஹ் இந்த மனிதனை வெறுக்கின்றான்! நீங்களும் இவரை வெறுத்து விடுங்கள்!" என்று கூறுவார். அவர்களும் அவரை வெறுப்பார்கள். பின்னர் பூமியில் அவர் மீது வெறுப்பு உண்டாகி விடும்!" என்றும் இடம்பெற்றுள்ளது.
(முஸ்லிம் 6873)
எனவே, மக்களால் நேசிக்கப்பட வேண்டும் என்றால் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்கு பர்ழான சுன்னத்தான அமல்களுடன், நீதி-நியாயம் தவறாமல் வாழ வேண்டும்.
"..அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்."
(2:195)
"..நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர் களை நேசிக்கின்றான். மேலும் தூய்மையானவர்களையும் நேசிக்கின்றான்." (2:222)
"..நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமை யாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்." (3:159)
"..நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்." (5:42)
"..நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களை நேசிக்கின்றான்." (9:4)
"..ஒரே அணியாக நின்று தனது பாதையில் போரிடுவோரை நிச்சய மாக அல்லாஹ் நேசிக்கின்றான்."
(61:4)
இவ்வாறு அல்லாஹ்வின் நேசத்தைப் பெற பல வழிகளைக் குர்ஆனும், ஸுன்னாவும் கூறுகின்றன. அவற்றைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் கோபத்தைப் தேடித் தரும் செயல்களை விட்டும் ஒதுங்கியிருந்து அவனது நேசத்தைப் பெற வேண்டும். அவனது நேசத்தைப் பெற்று விட்டால் மக்களது நேசத்தை இலகுவாகப் பெற்று விடலாம். மக்களது நேசத்தைப் பெறுவதற்கு இஸ்லாம் பல வழிகளை எமக்குக் கற்றுத் தந்துள்ளது.
அவற்றையும் நாம் கடைப்பிடித்தால்;
அன்பு நீடிக்கும்!
நட்பு நிலைத்திருக்கும்!
மக்கள் மனங்கள் எம்பால் ஈர்க்கப்படும்!
2. ஸலாம் சொல்லுங்கள்
ஒவ்வொரு சமூகமும் தமக்குள் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது வாழ்த்துக் கூறும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன. தமிழர்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர் "வணக்கம்!" என்று கூறுகின்றனர். சில போது இவ்வாறு கூறும் போது கைகூப்பிக் கும்பிட்டு வணக்கம் கூறுவதுமுண்டு. ஆங்கிலேயர் "குட் மோனிங்!", "குட் ஆப்டனூன்!", "குட் ஈவினிங்!", "குட் னைட்!" என நேரத்துக்கு ஏற்றாற்போல் முகமன் கூறுவர். இஸ்லாம், "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு!" என்ற அழகிய முகமனைக் கற்றுத் தந்துள்ளது. உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அன்பும், அருளும் உண்டாகட்டும் என்பது இதன் அர்த்தமாகும். இந்த முகமனை மகிழ்வோடு இருப்பவருக்கும் கூறலாம், துக்கத்தோடு இருப்பவர்களுக்கும் கூறலாம். காலைப் பொழுதைக் கவலையுடன் அடைந்தவனைப் பார்த்து "குட் மோனிஹ்!" (நல்ல காலைப் பொழுது) என்று கூற முடியாதல்லவா?
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமைச் சந்திக்கும் போது அவசியம் ஸலாம் கூற வேண்டும். எமக்கொருவர் ஸலாம் கூறி விட்டால் கட்டாயமாகப் பதில் கூறியே ஆக வேண்டும். பதில் கூறும் போது ஸலாம் சொன்னவர் சொன்னது போன்றோ அல்லது அதை விட அதிகமாகவோ கூற வேண்டும். இந்த ஸலாம் அன்பை வளர்க்கும். பிறரை நம் பால் ஈர்க்கும் புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இருக்கும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஸலாம் பெரிதும் உதவும். எனவே, தெரிந்த-தெரியாத அனைத்து முஸ்லிம் களுக்கும் ஸலாம் கூறுங்கள்.
"ஒரு விடயமுள்ளது! அதை நீங்கள் செய்தால் உங்களுக்குள் ஒருவர் மற்றவரை நேசிப்பீர்கள்! அதை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?" என நபி(ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, "உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்!" என்று கூறினார்கள். (முஸ்லிம்)
இந்த நபி மொழி ஸலாம் பரஸ்பரம் அன்பையேற்படுத்தும் என்று கூறுகின்றது. இங்கே ஸலாம் கூறுங்கள் என்று கூறாமல், "ஸலாத்தைப் பரப்புங்கள்!" என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
"நபித் தோழர்கள் ஒன்றாகச் சேர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மரம் இடையில் குறுக்கிட்டு மீண்டும் சந்திக்கும் போது கூட தமக்குள் ஸலாம் கூறிக் கொள்வார்கள்!"
(முஸன்னப் இப்னு அபீஷைபா 59, அபூதாவூத் 5202)
எனவே சந்திக்கும் போதெல்லாம் சளைக்காமல் ஸலாம் கூற வேண்டும்.
"இருவருக்கிடையே ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டு, மனக் கசப்பு ஏதேனும் ஏற்பட்டால் அந்த இருவரில் யார் முதலில் மற்றவருக்கு ஸலாம் கூறுகின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார்!"
புகாரி 6077, முஸ்லிம் 25, 2560.
எனவே நாம் அதிகமதிகம் ஸலாம் கூற வேண்டும். செலவில்லாமல் மக்கள் மனதைக் கவர இஸ்லாம் கூறிய அழகிய வழிமுறை இது! ஸலாம் கூறுவதால் எமக்கு நன்மையும் கிட்டுகின்றது. எனவே ஸலாம் சொல்லுங்கள்! தகுதி-தராதரம் பார்க்காமல் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள்! அன்பும், நட்பும் மலரும். பலம்பெறும்.
3. மலர்ந்த முகம் வேண்டும்:
பிறர் எம்மால் ஈர்க்கப்பட மலர்ந்த முகம் அவசியம். எப்போதும் எரிந்து விழும் முகத்தோடும், கடுகடுத்த சுபாவத்தோடும் இருப்பவர்கள் மக்களால் நேசிக்கப்பட மாட்டார்கள். ஏன்! சாதாரண மக்களை விடுங்கள். கடுகடுத்த முகத்தையுடைய, கோபத்தைக் கக்கும் வார்த்தை உடையவனை பெற்ற பிள்ளையும் ஒதுக்கும். கட்டிய மனைவியும் வெறுப்பாள். எனவே மலர்ந்த முகம் வேண்டும். அடுத்த சகோதரனை மலர்ந்த முகத்துடன் நோக்குங்கள். ஒரு புன்முறுவல் பூப்பதில் எதற்காக இந்தக் கஞ்சத்தனமென்று சிந்தித்துப் பாருங்கள். அடுத்தவரைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதில் அப்படியென்ன சிரமம் இருக்கின்றது? செலவு இருக்கின்றது? எனவே சந்திக்கும் சகோதரனைப் பார்த்து ஒரு முறை புன்னகைத்து விடுங்கள்!
நீங்கள் எதைக் கொடுக்கின்றீர்களோ அதுவே உங்களுக்கும் கிடைக்கும். புன்முறுவல் பூத்த முகத்துடன் அடுத்தவரை நோக்கும் போது அவரும் புன்முறுவல் பூப்பார். உங்களை அடுத்தவர் சிரித்த முகத்துடன் நோக்குவதை நீங்கள் விரும்பவில்லையா? மலரும் மலர்களைப் பார்க்க விரும்பாதவர்களும் பாரினிலுண்டோ?
சிரித்த முகத்துடன் உங்கள் சகோதரனைப் பார்ப்பதொன்றும் சாதாரண விடயம் அல்ல.
இதோ!
இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்!
"எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ண வேண்டாம்! உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாயினும் சரியே!" என்று நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கூறினார்கள் என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் 144, 2626, 6857)
இந்த நபி மொழி சிரித்த முகத்துடன் அடுத்தவரைச் சந்திப்பதை நல்ல செயலென்று கூறுவதுடன், அதைச் சாதாரண விடயமாக எண்ணி விட வேண்டாம் என்று கூறுகின்றது. அபூ தாவூதில் இடம் பெறும் நீண்ட ஒரு அறிவிப்பில் சிரித்த முகத்துடன் தன்னுடைய சகோதரனுடன் கதைப்பதைச் சாதாரண விடயமாக எண்ணி விட வேண்டாம்! அதுவுமொரு நல்ல காரியம்! (அபூதாவூத் 4086) என்று இடம்பெற்றுள்ளது.
சிரித்த முகத்துடன் மக்களைச் சந்திப்பது ஒரு ஸுன்னாவாகும். சிலர் மார்க்கத்தில் தாம் அதிக பேணுதலாக இருப்பதாகக் காட்டுவதற்காக அதிகம் பேச மாட்டார்கள். அதிகம் சிரிக்க மாட்டார். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தலையசைப்பையே பதிலாக அளிப்பர். இது நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவுக்கு முரணானதாகும்.
"நபி(ஸல்) அவர்கள் சிரித்த முகத்துடனன்றி என்னைப் பார்த்ததே இல்லை!" என ஜரீர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி 3035, முஸ்லிம் 135, 2475, 6519,
இப்னு மாஜா 159)
நபி(ஸல்) அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனே தன்னைச் சந்தித்ததாக இந்த நபித் தோழர் கூறுகின்றார். இந்த ஸுன்னாவை நாம் புறக்கணிக்கலாமா?
"அல்லாஹ்வின் தூதரை விடப் புன்முறுவல் பூக்கக் கூடிய எவரையும் நான் கண்டதில்லை!" என அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ்(ரழி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (திர்மிதி 3641, அஹ்மத் 17704)
(குறிப்பு: இந்த அறிவிப்பில் இப்னு வஹீயா என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றிருந்தாலும், இது "ஹஸன்" என்ற தரத்தில் உள்ள அறிவிப்பாகும் என அஹ்மதின் அடிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. திர்மிதியின் குறிப்பில் அறிஞர் அல்பானீ இந்த அறிவிப்பை ஸஹீஹானது என்று குறிப்பிட்டுள்ளார்.)
மக்கள் மனதைக் கவர விரும்புகின்றவர்களும், அன்பும் நட்பும் நீடிக்க விரும்புகின்றவர்களும் புன்முறுவல் பூத்தல் என்ற இந்த ஸுன்னாவை அவசியம் கைக்கொள்ள வேண்டும்.
அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
"உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 1956, இப்னு ஹிப்பான் 474)
ஒருவரைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதை ஒரு தர்மமாக இஸ்லாம் நோக்குகின்றது. நாம் சிரித்த முகத்துடன் ஒருவரைப் பார்க்கும் போது அவரும் புன்முறுவல் பூக்கின்றார். அவனது உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கின்றது; சோகம் களைகின்றது. உள்ளத்தில் இலேசாக மின்சாரம் பாய்வது போல் உற்சாகம் பிறக்கின்றது.
மாறாக, ஒருவனைக் கடுகடுத்த முகத்துடன் பார்க்கிறீர்கள். அவனுக்கு ஸலாம் சொல்லாமல் ஒதுங்கிக்கொள்கிறீர்கள். அவனது மனதில் ஆயிரம் குழப்பங்கள் தலை காட்டுகின்றன.
ஏன் சிரிக்காமல் போகின்றார்? நானேதும் தவறு செய்து விட்டேனா? நான் அன்று அப்படிச் செய்ததைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ? இப்படிப் பேசியதால் கோபித்துக் கொண்டிருக்கின்றாரோ? என ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. அவன் தேவையில்லாத அவஸ்த்தைக்கு உள்ளாகின்றான். எனவே நீங்கள் புன்முறுவல் பூப்பது நிச்சயமாக ஸதகாவேதான். எனவே இதில் கஞ்சத்தனம் காட்டாமல் மலர்ந்த முகத்துடன் உங்கள் சகோதரர்களையும், நண்பர்களையும் நோக்குங்கள். அவர்களது மனதை உங்களால் வெல்ல முடியும்.
நட்பு நீடிக்கும்!
அன்பு மலரும்!
பாசம் பலம் பெறும்!
எனவே, Smile please!
தயவு செய்து சிரியுங்கள்!
(4) முஸாபஹாச் செய்யுங்கள்!
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமைச் சந்திக்கும் போது இருவரும் தமது வலது கரங்களால் கைலாகு செய்துகொள்வதே முஸாபஹாவாகும். இந்த நல்ல பண்பு நட்பை வளர்க்கும்; அன்பை ஏற்படுத்தும்.
"நீங்கள் முஸாபஹாச் செய்யுங்கள்! அது குரோதத்தைப் போக்கும்! ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள்! நீங்கள் ஒருவரையொருவர் நேசிப்பீர்கள்! அது விரோதத்தைப் போக்கி விடும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஅத்தாவில் (3368) முர்ஸலான ஒரு அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
எனவே நண்பர்களையும், சகோதரர்களையும் சந்திக்கும் போது ஸலாம் கூறுவதுடன் முஸாபஹாவும் செய்வது அன்பை அதிகரிக்கும்; மக்களை நம் பால் ஈர்க்கும்.
நாம் சிரித்த முகத்துடன் ஸலாம் கூறி முஸாபஹாச் செய்யும் போது நட்பும், அன்பும் வலுப் பெறுமல்லவா? ஒதுங்கிச் செல்பவரும் ஒட்டிக்கொள்வார் அல்லவா?
"நபி(ஸல்) அவர்களை ஒருவர் சந்தித்து முஸாபஹாச் செய்தால், அவ்வாறு செய்தவர் தனது கையைத் தானாக எடுக்காத வரையில் நபி(ஸல்) அவர்கள் தனது கையைக் கழட்டி எடுத்து விட மாட்டார்கள்!" என அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதி 2490, அபூதாவூத் 4794, இப்னுமாஜா 3716)
எனவே, முஸாபஹாச் செய்த பின்னர் வேண்டா வெறுப்பு டன் செய்தது போல் கையை உடனே இழுத்து எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போன்று விரல் நுனிகள் படுமாறு சாதாரண மாக முஸாபஹாச் செய்வதைத் தவிர்த்து, உள்ளங்கைகள் முறை யாக இணையும் வண்ணம் முஸா பஹாச் செய்தல் வேண்டும்.
(5) முகத்துக்கு முகம் பாருங்கள்!
எம்மை நோக்கி ஒரு சகோ தரர் வரும் போது நாம் வேறு பக் கம் திரும்பிப் பார்த்தவாறு செல் வது அல்லது கதைக்கும் போது நேருக்கு நேராக முகத்தைப் பார்க் காமல் வேறு திசையைப் பார்த்துக் கதைப்பது வெறுப்பின் வெளிப்பாடாகவே இருக்கும். எனவே நாம் நேருக்கு நேராக முகம் பார்த்துச் சிரிக்க வேண்டும்; கதைக்க வேண்டும். அன்பும் நட்பும் வளரவும், அடுத்தவர் எம்மைப் பற்றி உயர்வாக எண்ணவும் இது வழிவகுக்கும். இதற்கு மாற்றமாக நடந்துகொள்வது பெருமையின் அடையாளமாகக் கூட ஆகிவிடும்.
லுக்மான்(அலை) அவர்கள் தனது மகனுக்குப் பின்வருமாறு உபதேசித்தாக அல்குர்ஆன் கூறுகின்றது;
"(பெருமை கொண்டு) உனது முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பி விடாதே! மேலும், பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொண்ட எந்தப் பெருமைக்காரனையும் நேசிக்க மாட்டான்." (31:18)
எனவே, மக்களை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது கர்வத்தின் அடையாளமாகும். கர்வம் கொண்டவனை யாரும் நேசிக்க மாட்டார்கள். எனவே நேருக்கு நேராக முகம் பார்த்துப் பேசுங்கள்.
இது குறித்து இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்;
"என் சகோதரனுக்காக நான் செய்ய வேண்டிய பணிகள் மூன்று உள்ளன:
அவன் முன்னோக்கி வரும் போது வேறு திசையைப் பார்க்காமலிருத்தல்!
சபைகளில் அவன் அமர்வதற்காக ஒதுங்கி இடங்கொடுத்தல்!
அவன் பேசினால் செவி கொடுத்துக் கேட்டல்!"
இந்த மூன்று பண்புகளும் ஒருவரது அன்பையும், நேசத்தையும் பெறுவதற்கான சிறந்த இலகுவான வழிகளாகும். எனவே உங்கள் சகோதரன் உங்களை எதிர்நோக்கி வரும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாதீர்கள். முகத்துக்கு முகம் பார்த்துச் சிரியுங்கள்! கதையுங்கள்! இதன் மூலம் அவர் மனதைக் கவர முடியும்.
(6) சபைகளில் இடங்கொடுங்கள்!
நாம் சபைகளில் இருக்கும் போது ஒருவர் அமருவதற்காக இடம் தேடிக்கொண்டிருக்கின்றார். அவர் அருகில் அமர்வதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தால் அவர் வெகுவாக எங்களால் கவரப்படுவார். அவரது அன்பையும், நேசத்தையும் நாம் பெறலாம்.
இது நாம் அவரை மதிப்பதையும், அவரது அந்தஸ்த்தைக் காப்பதையும், அவரது நலனில் அக்கறை காட்டுவதையும் எடுத்துக் காட்டும். அப்படியே அவர் அமரக் கூடிய அளவுக்கு இடமில்லை என்றாலும் இடம் கொடுப்பது போல் நாம் ஒதுங்க முயற்சி செய்யலாம்.
அதைப் பார்க்கும் அவர் தனக்கு அங்கே அமர இடம் போதாதென்று கருதி அமர வராமல் கூட இருக்கலாம். ஆனால், அது அவரது உள்ளத்தில் உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை ஏற்படுத்தும். நான் சபைக்குப் போனேன். ஒருவர் கூட எனக்கு இடம் தர முன்வரவில்லை என்ற கவலையையாவது அவருக்கு அளிக்காதிருக்கும்.
நாம் ஏற்கனவே கூறிய இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களது கூற்று இது சின்னச் செயலென்றாலும் நட்பையும், அன்பையும் வளர்ப்பதில், மக்கள் மனங்களைக் கவர்வதில் இதற்கு அதிக பங்கிருப்பதை உணர்த்துகின்றது.
இது குறித்து உமர்(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்;
"மூன்று விஷயங்கள் உமது சகோதரரது அன்பைப் பெற்றுத் தரும்! அவையாவன:
அவனைச் சந்திக்கும் போது அவனுக்கு ஸலாம் உரைத்தல்!
சபைகளில் அவனுக்காக ஒதுங்கி இடமளித்தல்!
அவன் விரும்பக் கூடிய அழகான பெயர்களைக் கொண்டு அவனை அழைத்தல்!"
எனவே, உங்கள் சகோதரருக்காக சபைகளில் ஒதுங்கி இடம் கொடுங்கள். அவரது உள்ளத்தில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்.
(7) பேசும் போது கவனத்துடன் காது கொடுங்கள்!
அல்லாஹ் மனிதனுக்கு ஒரு வாயையும், ஒரு நாவையும் கொடுத்துள்ளான். இரண்டு கண்களையும், இரண்டு காதுகளையும் கொடுத்துள்ளான். அதிகம் கேட்டு, அதிகம் பார்த்து அளவோடு பேச வேண்டும். ஆனால், சிலருக்கு உடலெல்லாம் வாய்தான் உள்ளது.
அடுத்தவர் பேசுவதைக் கேட்க இவர்களுக்குப் பிடிக்காது. இவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்; அடுத்தவர் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் நடந்துகொள்வர். இத்தகையோரை மக்கள் விரும்புவதில்லை. சரியான அறுவை என்று கண்டாலே வெருண்டோட ஆரம்பித்து விடுவர்.
சிலர் அடுத்தவர்கள் பேசும் போது அதை அவதானிக்க மாட்டார்கள். அது அவசியமற்ற பேச்சு என்பது போல் முகத்தைத் திருப்பிக்கொள்வர். அல்லது கவனத்தை வேறு திசையில் செலுத்துவர். பேசுபவர் பேச்சை முடிக்கும் முன்னரே பக்கத்தில் இருக்கும் மற்றொருவரிடம் வேறு ஒரு விடயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்.
அல்லது பேச்சை இடையில் நிறுத்தித் தான் பேச ஆரம்பிப்பார். இத்தகைய செயற்பாடுகள் பேசுபவரின் பேச்சையும், அவரையும் இழிவுபடுத்துவதாக அமையும். எனவே உங்கள் சகோதரன் பேசும் போது அவனது பேச்சை ஆர்வத்துடனும், அவதானத்துடனும் கேளுங்கள்.
சிலருக்கு மனதில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அதை யாரிடமாவது சொன்னால் மனதுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பேசுவர். இவர்களது பேச்சைக் காது கொடுத்துக் கேட்காவிட்டால் "அவன் எனக்கு ஒன்றும் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை! நான் சொல்வதைக் கூட அவன் காது கொடுத்துக் கேட்கவில்லையே! இவனெல்லாம் ஒரு மனுஷனா?" என அழுத்துக்கொள்வார்கள். எனவே நீங்கள் மக்கள் மனங்களைக் கவர வேண்டுமென்றால், உங்களது நட்பும், நேசமும் தொடர வேண்டுமென்றால் அடுத்தவர் பேசும் போது சற்றுக் காது கொடுத்துக் கேட்கப் பழகுங்கள்.
(8) நல்ல பெயர் கொண்டழையுங்கள்!
மரியாதையையும், கௌரவத்தையும் விரும்பாத மனிதர்கள் எவருமில்லை. ஒருவருக்கு நாம் உரிய மரியாதை வழங்காவிட்டால் அவர்கள் எங்களை விட்டும் விலகிச் செல்ல ஆரம்பிப்பார்கள். தாயிகளும், மனிதர்களை வழிநடாத்த முன்வரும் தலைவர்களும் மக்களை விரட்டுபவர்களாக இல்லாமல் தன் பால் ஈர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.
இந்த வகையில் ஒருவரை அழைக்கும் போது அவருக்கு விருப்பமான பெயரைக் கொண்டு அழைக்க வேண்டும். கட்டாயமாகப் பட்டப் பெயர் சூட்டி அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்டப் பெயர்களைச் சின்னப் பிள்ளைகள் கூட விரும்புவதில்லை.
" நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் மற்றொரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்.) இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும், பட்டப் பெயர் களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்." (49:11)
இந்த வகையில் பட்டப் பெயர் சூட்டுவதையோ, இழிவாகக் கிண்டல் பண்ணுவதையோ தவிர்ந்து அழகிய பெயர் கூறி அழைக்க வேண்டும்.
மனிதர்களில் சிலர் சர்வ சாதாரணமாகப் பழகுவார்கள்.
அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றினாலும் தம்மைச் சேர்ந்தவர்கள் நட்புணர்வுடனும், சகோதரத்துவ வாஞ்சையுடனும் "நானா!" என்று அழைப்பதையோ, ப்ரதர்-சகோதரர் என்று அழைப்பதையோ விரும்பி ஏற்றுக்கொள்வர். சிலர் தமது ஆசிரிய அந்தஸ்த்துக்கு ஏற்ப தம்மை "சேர்!" என அழைக்க வேண்டுமென எதிர்பார்ப்பர்.
இதை நாம் குறை காண வேண்டியதில்லை. அவருக்கு உரிய அந்த அந்தஸ்த்தை அளித்து அவரை அழைக்க வேண்டும்.
சிலர் எடுத்த எடுப்பிலேயே சுவாரஷ்யமாகப் பேச ஆரம்பித்து விடுவர். சாதாரண அறிமுகத்துடனேயே "மச்சான்! மச்சான்!" என உரையாட ஆரம்பித்து விடுவர். மற்றும் சிலர் கண்ணியமாக உரையாடுவர்.
பிறரும் தம்முடன் அப்படித்தான் உரையாட வேண்டுமென்று எதிர்பார்ப்பர். இத்தகையோருடன் "மச்சான்!" என்ற தோரணையில் உரையாடினால் எம்மைக் கண்டால் ஓட ஆரம்பித்து விடுவர். எனவே அவரவர் இயல்புகளைப் புரிந்து அவர்கள் எதிர்பார்க்கும் சமூக அந்தஸ்த்தை அளித்தே அவர்களுடன் உரையாட வேண்டும்.
சிலர் தனிமையில் இருக்கும் போது எத்தகைய கௌரவமும் பார்க்காது தோழமையுடன் சர்வ சாதாரணமாக உரையாடுவர். எனினும் அவர்களது பணியாட்களும், அவர்களுக்குக் கீழ் மட்டத்தில் பணி புரியும் ஊழியர்-மாணவர் முன்னிலையில் அப்படி உரையாடுவதை விரும்ப மாட்டார்கள். தமக்குக் கீழே இருப்பவர்களிடம் தனது ஆளுமை குறைந்து விடும் என அவர்கள் எண்ணுவது அவர்களது நிர்வாக ஒழுங்கை வைத்துப் பார்க்கும் போது குறை காணத் தக்கதல்ல.
நபி(ஸல்) அவர்களுடன் உரையாடிய ஒரு காபிர் நபி(ஸல்) அவர்களது தாடியைப் பிடித்தவராகப் பேசினார். இதை விரும்பாத ஒரு நபித் தோழர் அவரது கையைத் தட்டி விட்டார். இந்தச் செயலை நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை; அங்கீகரித்தார்கள்.
இதிலிருந்து ஒரு இடத்தில் ஒருவருக்கு வழங்க வேண்டிய மரியாதையை மறுப்பது சரியல்ல என்பதைப் புரியலாம்.
அந்தக் காபிரின் செயற்பாடு நபி(ஸல்) அவர்களது அந்தஸ்த்துக்குப் பங்கம் ஏற்படுத்தும் வண்ணமாக அமைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் தமது உயரிய பண்பு காரணமாக அதைக் கண்டிக்கவும் இல்லை; தடுக்கவும் இல்லை.
எனினும், ஒருவர் தடுத்த போது அதை அங்கீகரித்துள்ளார்கள். எனவே, மக்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையையும், அந்தஸ்த்தையும் வழங்குவதில் நாம் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை. பிறரை மதிப்பதைத் தமக்கு இழிவாகச் சிலர் கருதுகின்றனர். இது கர்வம் கொண்ட போக்காகும். அதே வேளை, இஸ்லாமிய அழைப்பாளர்களும், மக்கள் சேவகரும் மக்கள் எமக்கு அப்படி மரியாதை செய்ய வேண்டும்! இப்படி மரியாதை செய்ய வேண்டுமென்று எதிர்பார்த்திராது கீழ் மட்ட மக்களுடனும் சர்வ சாதாரணமாகப் பழகும் பக்குவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களால் மக்கா வெற்றிகொள்ளப்பட்டது. நபி(ஸல்) அவர்களையும் அவரது தோழர்களையும் ஊரை விட்டும் விரட்டியவர், கொலை செய்தவர், கொடுமை செய்தவர்களெல்லாம் நபி(ஸல்) அவர்களுக்கு முன் மண்டியிட்ட நிலையில் இருக்கிறார்கள்.
வெற்றி வீரர் உத்தம நபி(ஸல்) அவர்களது கண்ணி யம், அந்தஸ்த்து அனைத்துமே உயர்வானது. இந்த நிலை யில் ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களது உயர்ந்த அந்தஸ்த்துக் காரணமாகக் கூனிக் குறுகிக் கதைக்கலானார். நபி(ஸல்) அவர்கள் அந்த நிலையில் கூட அவரைப் பார்த்து, "அச்சமற்று சாதாரணமாகப் பேசு! நான் ஒன்றும் மன்னன் கிடையாது! காய்ந்த உரொட்டித் துண்டுகளைத் தின்றுகொண்டிருந்த ஒரு குறைஷிப் பெண் ணின் மகன்தான் நான்!" என்று கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 4366, 3733,
அல்முஃஜமுல் அவ்ஸத் 1260, இப்னுமாஜா 3312)
எனவே சமூகத் தலைவர்களையும், தாயிகளையும் கீழ் மட்ட உறுப்பினர்களும் சர்வ சாதாரணமாகச் சந்தித்துத் தனது நிலை குறித்துக் கதைக்கும் சந்தர்ப்பமிருக்க வேண்டும். இத்தகைய பண்பாளர்களால் மக்கள் வெகுவாகக் கவரப்படுவார்கள்.
இத்தகையவருடன் நேசத்தையும், பாசத்தையும் தொடர்வார்கள்.
(9) நான் உன்னை நேசிக்கின்றேன்:
ஒருவரை நாம் அல்லாஹ்வுக்காக நேசித்தால் அந்த நேசத்தை அவருக்கு எத்தி வைப்பதும் நேசமும், பாசமும், நட்பும், தொடர்பும் நீடித்து நிலைக்க உதவும்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
"ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தார். அப்போது ஒருவர் அவரைக் கடந்து சென்றார். இந்த மனிதர் அவரைச் சுட்டிக் காட்டி "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரை நேசிக்கின்றேன்!" என்று கூறினார். அப் போது நபி(ஸல்) அவர்கள் "இதை நீ அவருக்கு அறிவித்து விட்டீரா?" எனக் கேட்டார்கள்.
அவர் "இல்லை!" என்று கூறியதும், "அதை அவருக்கு அறிவித்து விடு!" என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அந்த மனிதர் அவரைச் சந்தித்து "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கின்றேன்!" என்று கூறினார்.
அதற்கவர் "யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அவனும் உன்னை நேசிப்பானாக!" என்று கூறினார்.
(அபூதாவூத் 5127, 5125, அஹ்மத் 12590)
மிக்தாத் இப்னு மஃதீகரிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
"உங்களில் ஒருவர் தன் சகோதரனை நேசித் தால் அதனை அவருக்கு அறிவித்து விடட்டும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி 2392, அஹ்மத் 17171)
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் ஒருவரை நேசித்தால் அவரிடம் "உங்களை நான் நேசிக்கின்றேன்!" என்று கூறி விடுவது நேசமும், நெருக்கமும் அதிகரிப்பதற்கும், அன்பும் நட்பும் நீடிப்பதற்கும் குறித்த அந்த நபரும் நம்மால் கவரப்படுவதற்கும் உதவியாக அமையும்.
(10) மக்களிடம் தேவையற்றிருங்கள்!
தொல்லைகள் தொடர்வதை யாரும் விரும்புவதில்லை. ஒரு கணவர் தன் மனைவியிடம் நேர-காலம் பார்க்காமல் தொடர்ந்தும் தேனீர் கேட்டுக்கொண்டிருந்தால் கட்டிய மனைவியும் அவனை வெறுப்பாள். இந்த மனுஷனுக்கு என்னுடைய கஷ்டம் விளங்குவதே இல்லையென அலுத்துக்கொள்வாள்.
இவ்வாறே, தொடர்ந்து தன்னிடம் உதவி கேட்கும் எவரையும் எவரும் விரும்பப் போவதில்லை. எனவே முடிந்த வரை பிற மனிதரிடம் உதவியையும், தேவையையும் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். பிறரிடம் தேவையற்று இருந்தால் நம்மை நேசிப்பார்கள்.
ஸஹ்ல் இப்னு ஸஃதுஸ் ஸாஇதீரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்! அதைச் செய்தால் அல்லாஹ்வும் என்னை நேசிக்க வேண்டும்! மனிதர்களும் என்னை நேசிக்க வேண்டும்!" எனக் கேட்டார். "உலகில் பற்றற்று வாழ்! அல்லாஹ் உன்னை நேசிப்பான்! மனிதர்களிடத்தில் தேவையற்று இரு! அவர்கள் உன்னை நேசிப்பார்கள்!" எனக் கூறினார்கள். (இப்னுமாஜா 4102)
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் குறித்து சர்ச்சையுள்ளது. இந்த அறிவிப்பைச் சில அறிஞர்கள் "ழயீப்" என்றும், சிலர் "ஹஸன்" என்றும் அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஸில்ஸிலா ஸஹீஹா 944)
இந்த அறிவிப்புக் குறித்து கருத்து முரண்பாடு இருப்பினும் பொதுவாகப் பிற மனிதர்களிடத்தில் தேவையற்று வாழ்வது வேண்டத்தகாத வெறுப்புகளைத் தவிர்ப்பதற்கான வழியாக இருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. எனவே மனிதர்களிடம் தேவையற்று வாழ்வது அவர்களது அன்பை இழக்காது இருப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும். எனவே இதில் உறுதியாக இருங்கள்! மக்கள் மனங்களை வெல்ல முடியும்.
(11) மக்கள் தொண்டு:
மக்களுக்குத் தொண்டு செய்பவனையே மக்கள் தலைவன் என்று கூறுவார்கள். ஒரு சகோதரன் தேவையுடன் உங்களிடம் வந்தால் அந்தத் தேவையை நிறைவேற்ற நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் அலுத்துக்கொள்ளாதீர்கள். பிறருக்கு உதவி செய்து அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியில் பங்கெடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
"அந்த மனிதரிடத்தில் ஒரு தேவைக்காகப் போனேன். உடனே வந்து உதவினார். இதை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன்!" எனப் பலரும் பேசுவதை உங்கள் காதுகளால் நீங்கள் பல தடவைகள் கேட்டிருப்பீர்கள். நீங்கள் செய்யப் போவது பெரிய வேலையாக இருக்க வேண்டும் என்பதில்லை. வேலை சின்னதாக இருந்தாலும் அவருக்காக நீங்கள் எவ்வளவு அக்கறை செலுத்துகின்றீர்கள் என்பதைத்தான் அவர் பார்க்கின்றார். மக்கள் மனங்களைக் கவருவதற்கும், அன்பும் நட்பும் நீடிப்பதற்குமான வழியாக மட்டும் இது அமையாது. அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிட்டுவதற்கும், அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கும் இது வழியாக அமையும்.
அபூஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்;
"ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரனாவான்! அவன் அவனுக்கு அநீதம் இழைக்க மாட்டான்! யார் தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றும் பணியில் இருக்கின்றானோ அவனது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான்! யார் ஒரு முஸ்லிமின் உலகக் கஷ்டத்தை நீக்குகின்றானோ அவனது மறுமைக் கஷ்டத்தை அல்லாஹ் நீக்கி விடுவான்! யார் முஸ்லிமின் குறையை மறைக்கின்றானோ அவனது குறையை அல்லாஹ் மறுமையில் மறைத்து விடுவான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 7028, அபூதாவூத் 4948, திர்மிதி 1425, இப்னுமாஜா 225)
தேவைகளை நிறைவேற்றுதல், கஷ்டங்களை நீக்குதல், மானத்தைக் காத்தல் போன்ற இந்தப் பண்புகள் சமூக அமைதி நிலவ அவசியமானவை. அத்துடன் இப்பணிகளைச் செய்வோர் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுவர்.
"மனிதர்களுக்கு அதிகம் நன்மை அளிப்போரே மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்துக்கு உரியோராவர்!" (தபரானீ – மஃஜமுல் கபீர் 13468)
எனவே அல்லாஹ்வின் நேசத்தையும், அவனது உதவியையும் பெற மனிதர்களுக்கு உதவுவது என்பது சிறந்த வழியாகும். உங்களால் முடிந்த வரை ஒருவரது கஷ்டத்தின் போது கைகொடுங்கள். தேவையின் போது கொடுத்து உதவுங்கள். வழி தெரியாமல் தடுமாறும் போது வழி காட்டுங்கள். சிக்கல்களின் போது தீர்வுகளுக்கான வழியைச் சொல்லுங்கள். அதன் பின்னர் அவர்களின் மனங்களில் ஏறி அமர்ந்துகொள்ள உங்களால் முடியும். நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். நீங்கள் சொல்வது காது தாழ்த்திக் கேட்கப்படும்.
(12) அன்பளிப்பும், அர்ப்பணமும்:
மனித உள்ளம் மாறுந்தன்மை கொண்டது. தனக்காக ஒருவர் அர்ப்பணிப்புடன் செயற்படும் போது அது நெகிழ்ந்து போகும். அவர் பால் பற்றுக்கொள்ளும். இவ்வாறே அன்பளிப்புக்களை வழங்கும் போது இயல்பாக மனித மனம் இறங்கி வந்து நம்முடன் முஸாபஹாச் செய்துகொள்ளும்.
எனவே அன்பும், நட்பும் தொடர நீங்கள் அழைப்பாளர்களாகவும், சமூகத் தலைவர்களாகவும் திகழ, மக்கள் மனங்களைக் கவர அன்பளிப்புச் செய்யுங்கள். அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்.
அபூஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்;
"நீங்கள் அன்பளிப்புச் செய்யுங்கள்! அதன் மூலம் ஒருவரையொருவர் நேசித்துக்கொள்வீர்கள்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஷுஃபுல் ஈமான் 8568, அதபுல் முப்ரத் (594)
(இந்த அறிவிப்பு முர்ஸல் என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அறிஞர் அல்பானீ இது "ஹஸன்" எனும் தரத்தில் உள்ள ஏற்றுக்கொள்ளத் தக்க அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.)
ஸப்வான்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
"நபி(ரழி) அவர்கள் மனிதர்களிலேயே எனக்கு வெறுப்புக்கு உரிய ஒருவராக இருந்தார்! அவர் எனக்குத் தாராளமாகத் தந்து உதவினார்! அவர் தொடர்ந்தும் அன்பளிப்புகளைத் தந்து மனிதர்களில் எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியவராக மாறினார்!"
(முஸ்லிம் 59, 6162, அஹ்மத் 15305)
இஸ்லாத்தின் மீது வெறுப்புடன் இருந்த ஒருவருக்கு நபி(ரழி) அவர்கள் அன்பளிப்புகளைக் கொடுத்து அதன் மூலம் அவரது வெறுப்பை நீக்கித் தன் மீது நேசத்தை உண்டாக்கியுள்ளார்கள். நபி(ரழி) அவர்கள் மீதிருந்த வெறுப்பு நீங்கி நேசம் பிறந்ததும் அவர் சொல்லும் சத்தியம் இந்த நபித் தோழருக்குப் புரிந்துள்ளது. எனவே, அன்பளிப்புச் செய்யுங்கள்! அன்பை வளருங்கள்! அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்! மக்களது அன்பைப் பெறுவீர்கள்.
(13) தொடர்புகள் நீடிக்கட்டும்:
நட்புக்கும், அன்புக்கும் அடிப்படை தொடர்புகள்தான். பாடசாலைக் காலத்தில் சக மாணவர்கள் நண்பர்களாகின்றனர். பணி புரியும் இடத்தில் சக ஊழியர்கள் நண்பர்களாகின்றனர். இந்த நட்புக்குத் தொடர்புதான் காரணம்!
எனவே நட்பு நீடிக்க வேண்டுமென்றால், அன்பு மங்கி மறைந்து விடாதிருக்க வேண்டுமென்றால் தொடர்பு கள் நீடிக்க வேண்டும். இந்தத் தொடர்புகளை நீடித்து நிலைக்கச் செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன.
நண்பர்களுடன் ஏதேனும் ஒரு அடிப்படையில் சந்திப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது விருந்தாகவோ, மார்க்க ஒன்றுகூடலாகவோ, சமூக சேவையுடன் சம்பந்தப்பட்டதாகவோ, சுற்றுலாவாகவோ அல்லது குடும்ப விஜயமாகவோ இருக்கலாம். இது நட்புணர்வு வளரப் பெரிதும் வழிவகுக்கும்.
இயந்திரமயமான இந்த உலக வாழ்வில் இதற்கெல்லாம் எங்கே நேரமுள்ளது என்று நீங்கள் சிந்திப்பது புரிகின்றது. முழுமையாக இதற்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் எப்போதாவது ஒரு நாள் இதற்கென நேரம் ஒதுக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் இன்றைய நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி குறுந்தகவல், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு எனத் தொடர்பு மங்கி மறைந்து விடாது பார்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் நட்பு நீடிக்க முயற்சிக்கலாம். எனவே, ஏற்பட்ட தொடர்பு அறுபட்டு விடாதிருக்கத் தொடர்ந்து தொடர்புகளை நீடியுங்கள்!
(14) நீங்கள் நேசியுங்கள்:
உங்களை ஒருவர் நேசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் அவரை நேசியுங்கள்! உங்கள் நேசத்தை வெளிப்படுத்துங்கள்! எதைக் கொடுக்கின்றீர்களோ அதுதான் திரும்பக் கிடைக்கும்.
எனவே, உங்களை ஒருவர் நேசிக்க வேண்டுமென்றால் அவர் மீது உங்களுக்கு நேசம் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்துங்கள்! இந்த நேசத்தை வெளிப்படுத்த அவருக்கு ஸலாம் சொல்லலாம். அவரை சுகம் விசாரிக்கலாம். அவர் நோயுற்றால் சென்று பார்க்கலாம். இப்படிப் பல வழிகள் மூலமாக உங்கள் நேசத்தை வெளிப்படுத்தலாம். நீங்கள் அவரை நேசிப்பதை அவர் உணர்ந்து கொண்டால் நிச்சயம் அவரும் உங்களை நேசிப்பார். அன்பையும், நேசத்தையும் கொடுத்துப் பெறுங்கள்! அதன் மூலம் அவர்களது மனங்களை வெல்லுங்கள்!
(15) நல்ல வார்த்தை கூறக் கற்றுக் கொள்ளுங்கள்:
எப்போதும் நல்லதையே பேசுங்கள்!
நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்!
ஒரு மனிதர் உங்களிடம் ஒரு பிரச்சினையைச் சொன்னால் கெட்ட வார்த்தைகளை அவரிடம் பேசாதீர் கள்! சிலரிடம் ஆலோசனைக்காகவோ, ஆறுதலுக் காகவோ ஒரு செய்தியைச் சொன்னால், "அப்படியா? அதைக் கைகழுவ வேண்டியதுதான்! தொலைந்தது தொலைந்ததுதான்! அது எங்க கிடைக்கப் போகுது? விட்டு விட்டு வேலையைப் பாருங்க!", "இந்தச் சனியன் உங்கள விட்டு எப்ப தீருமோ?" என்ற தொணியில் பேசுவர். இப்படிப் பேசுவதை எவரும் விரும்புவ தில்லை. நடந்து முடிந்த பிரச்சினையை ஒருவன் பேசு கின்றான் என்றால் ஆறுதல் வார்த்தைகளைப் பெறும் எண்ணத்தில்தான் பேசுகின்றான். அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கையூட்டும் உபதேசங்களும் தான் தேவையாக இருக்கும். "அந்த மனிதனிடம் போய்ப் பேசினதுக்குப் பிறகு நிம்மதியா இருக்கு. மனசில் இருந்த பாரமெல்லாம் இறங்கின மாதிரி இருக்கு" என்று பலரும் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். இதற்கு மாற்ற மாகக் கெட்ட வார்த்தைகள் பேசினால் "ஏண்டா அந்த ஆள்கிட்ட போய்ப் பேச்சுக் கொடுத்தேன்" என்று நொந்து போய் விடுவான்.
அபூஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்;
நபி(ஸல்) அவர்கள், "சகுனம் என்பது இல்லை! இருப்பினும் அல்பஃல் என்பது எனக்கு விருப்பமானது!" என்று கூறினார்கள். "அல்பஃல் என்றால்; என்ன?" என நபித் தோழர்கள் வினவிய போது, "நல்ல வார்த்தை கூறுவது" எனக் கூறினார்கள். (புகாரி 57,54,55,56, முஸ்லிம் 5931)
நல்ல வார்த்தை தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி:6022) இந்த அடிப்படையில் நல்ல வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் நாம் நல்லுள்ளங்களைக் கவர முடியும். எமது பேச்சு எமக்கு முன்னுள்ளவர்களை முகம் சுழிக்கச் செய்யக் கூடாது. மனது நோகும்படி அமைந்துவிடக்கூடாது. எம்முடன் கதைத்த பின்னர் அவர்களது மனக் குழப்பம் நீங்க வேண்டும். உள்ளத்தின் பாரம் குறைய வேண்டும். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எம்முடன் பேசுபவர் நண்பராகவோ அல்லது தஃவா ரீதியாக எம்முடன் தொடர்புபட்டவராகவோ அல்லது முன் பின் அறிமுகமில்லாதவராகக்கூட இருக்கலாம். எமது நல்ல பேச்சு அவர்களது உள்ளத்தில் எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
(16) பணிவு உயர்வைத் தரும்:-
கர்வம் கொண்டவர்களை எவரும் விரும்ப மாட்டார்கள். பணிவு என்பது உயர்வைத் தரும் நல்ல பண்பாகும். ஆகவே தான் அப்துல்லாஹ் இப்னு முஃகஸ்(ரழி) அவர்கள், "பணிவு என்பது கண்ணியத்தை அடைந்து கொள்வதற்கான ஏணியாகும்!" என்று குறிப்பிடுகின்றார்கள்.
முஸ்லிம்கள் தமக்கிடையே ஒருவர் மற்றவருடன் பணிவுடன் நடக்க வேண்டும் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது;
"(பெருமை கொண்டு) உனது முகத்தை மனிதர் களை விட்டும் திருப்பி விடாதே! மேலும், பூமியில் கர்வத் துடன் நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொண்ட எந்தப் பெருமைக்காரனையும் நேசிக்க மாட்டான்." (31:18)
நபி(ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் இதை ஏவினான்;
"அவர்களில் பல தரப்பினருக்கு நாம் வழங்கிய வசதிகளின்பால் உமது இரு கண்களையும் நீர் செலுத் தாதீர். அவர்கள் குறித்து நீர் கவலைப்படவும் வேண் டாம். நம்பிக்கையாளர்களுக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!" (15:88)
"உங்களில் ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாத அளவுக்கு அல்லது ஒருவர் மற்றவர் மீது அத்துமீறாத அளவுக்கு உங்களுக்கிடையே பணிவுடன் நடக்குமாறு எனக்கு வஹி மூலம் அருளப்பட்டது" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இயாழ் இப்னு இமார்(ரழி) -ஆதாரம்: முஸ்லிம்-7389, இப்னுமாஜா-4179, அபூதாவூத்-4897)
எனவே ஒருவருக்கொருவர் பணிவை வெளிப்படுத்த வேண்டும். அந்தப் பணிவு உங்களுக்கு உயர்வைப் பெற்றுத் தரும். கர்வம் கொண்ட சிலருக்கு பணிவு என்பது கூழைக் கும்பிடுவாகவும், கை-வாய் பொத்தி இருப்பதாகவும் அடிமைத்தனமாகவும் தெண்படலாம் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் வேண்டியதில்லை. பணிவு எனும் பண்பைக் கடைப்பிடியுங்கள் அது மார்க்கம் எமக்குச் சொல்லித் தந்த பண்பு. அதன் மூலமாக உயர்;ச்சி கிட்டும். மக்களால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்.
ஒரு மனிதன் மன்னிப்பதால் அல்லாஹ் அவனுக்கு கண்ணியத்தைத் தவிர வேறெதையும் அதிகரிப்பதில்லை. "அல்லாஹ்வுக்காக ஒரு மனிதன் பணிவுடன் நடந்தால் அவனை அல்லாஹ் உயர்வடையச் செய்யாதிருப்பதில்லை" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), ஆதாரம்: ஹிஃபுல் ஈமான்-7974 – முஅத்தா-3663)
(இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்கள் வரை உயர்த்தப்பட்டதா? இல்லையா? என்பதை நான் அறிய மாட்டேன்!" என இமாம் மாலிக்(றஹ்) அவர்கள் இந்த அறிவிப்புக் குறித்துக் கூறியுள்ளார்கள்.)
அதீஃ இப்னு ஹாதம் என்பவர் ஒரு கிறிஸ்தவ சிற்றரசர். அவரது சகோதரி போர்க்கைதியாக நபி(ஸல்) அவர்களிடம் இருந்தாள். இந்த அதீஃ நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதீஃ அவர்களைக் கண்டதும், தாம் அமர்ந்திருந்த துணியை எடுத்து விரித்து அதில் அமருமாறு கூறி விட்டுத் தரையில் அமர்ந்தார்கள். இதைக் கண்ட அதீஃ தனக்கு ஏற்பட்ட உணர்வைக் கூறும் போது "நபி(ஸல்) அவர்களது செயலையும்;, பணிவையும் நான் கண்ட போது இவர் பூமியில் உயர்வையோ, குழப்பத்தையோ விரும்பக்கூடியவர் அல்ல" என்று நான் அறிந்து கொண்டேன் என்று கூறினார்கள். இந்த சந்திப்பின் பின்னர் அதீஃ இஸ்லாத்தில் இணைந்துகொள்கின்றார். நபி(ஸல்) அவர்களின் பணிவும், பண்பும் ஒருவரை நேர் வழியின் பால் ஈர்த்தது.
பணிவு என்பதற்கான வரைவிலக்கணத்தை விளக்கும் அறிஞர்கள் "நீங்கள் சந்திக்கும் அனைத்து சகோதரனையும் உங்களை விடச் சிறந்தவராக எண்ணுதல் என்பதே பணிவாகும்.!" என்று குறிப்பிடுகின்றனர்.
மற்றும் சில அறிஞர்கள் பணிவின் உயர்வைப் பற்றிச் சொல்லும் போது, நீங்கள் பணிவைக் கைக்கொள்ளுங்கள். அப்போது நட்சத்திரம் போன்று இருப்பீர்கள். அது நிலத்தில் இருக்கும் நீரில் பார்ப்பவர்களுக்குப் புலப்படும் எனினும் அது வானத்தில் இருக்கிறது நீங்கள் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ளும் புகை போன்று இருக்காதீர்கள். அது ஆகாயத்தில் வலம் வந்தாலும் தரம் தாழ்ந்ததுதான் என்று குறிப்பிடுகின்றனர்.
எனவே பணிவைக் கைக் கொள்வது அல்லாஹ்விடமும், அடியார்களிடமும் உயர்வைப் பெற உதவும். அத்துடன் நட்பும் அன்பும் தொடரவும், மக்கள் மனங்களில் இடம்பிடிக்கவும் பெரிதும் உதவும்.
(17) பணிவிடை செய்யுங்கள்:-
அடுத்தவருக்கு ஹித்மத் எனும் பணிவிடை செய்யும் போது அவர்களின் அன்பையும், மதிப்பையும் இலகுவாகப் பெறமுடியும். அவர்களிடம் எமது ஆளுமைகளைச் செலுத்த முடியும். பார்ப்பதற்கு இது கௌரவக் குறைச்சலாகத் தென்பட்டாலும் இது கௌரவத்தைப் பெற்றுத் தரும்.
மக்களுடன் ஒரு பணியாள் போன்று பழகுங்கள் என சில அறிஞர்கள் குறிப்பிடுவர். நாம் பழகுகின்றவர்களுக்குச் சின்னச் சின்னப் பணிவிடைகள் செய்யலாம். தண்ணீர் தேவைப்படும் போது எடுத்துக் கொடுக்கலாம். ஏதேனும் பொருட்களைச் சுமக்க சிரமப்படும் போது சுமந்து கொடுக்கலாம். நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு இருக்க இடம் கொடுக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பணிவிடை செய்யும் போது அவர்களது அன்பைப் பெறமுடியும்.
உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்: நீ நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். வழி தெரியாமல் தடுமாறுபவனுக்கு வழி காட்டுவதும் தர்மமாகும். பார்வையற்றவருக்கு வழிகாட்டுவதும் தர்மமாகும். பாதையில் இருக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் தர்மமாகும். உனது வாளியில் இருந்து உன் சகோதரனின் வாளியில் நீரை ஊற்றுவதும் தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அபூதர்(ரழி) , ஆதாரம்: திர்மிதி – 1956)
எனவே முடிந்தவரை பணிவிடை செய்வதன் மூலம் தர்மம் புரிகின்ற நன்மையைப் பெற்றுக் கொள்வதுடன் அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொள்வோமாக.
(18) பயணங்களின் போது:-
பயணங்களின் போது ஒருவரை முறையாகப் புரிந்து கொள்ள முடியும். அத்துடன் பயணங்கள் என்பது நட்பையும் அன்பையும் வளர்க்கின்றன. எனவே தான் உமர்(ரழி) அவர்களிடம் யாரேனும் ஒருவர் மற்றொருவர் குறித்து நற்சான்று கூறினார். நீ அவருடன் கொடுக்கல்-வாங்கல் செய்துள்ளாயா? அவருடன் பயணம் செய்துள்ளாயா? என்றெல்லாம் விசாரிப்பார்கள்.
ஏனெனில், பயணத்தின் போது நண்பர்களுடன் நடந்து கொள்ளும் விதம் ஒருவரது சுய ரூபத்தை வெளிப்படுத்தக்கூடியதாகும்.
இமாம் முஜாஹித்(றஹ்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களுக்குப் பணிவிடை செய்யும் நோக்கத்தில் அவருடன் பயணம் செய்வார்கள். இது குறித்து அவர் குறிப்பிடும் போது, "நான் அவருக்குப் பணிவிடை செய்யச் சென்றால் அவர் எனக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்!" எனக் கூறுகின்றார்கள்.
இமாம் ரபீஆ(ரழி) அவர்கள் பயணத்தின் பண்பாடுகள் பற்றிக் கூறும் போது, "தனது கட்டிச்சாதனங்களை அடுத்தவருக்காக அர்ப்பணித்தல், தோழர்களுடன் கருத்து முரண்பாடு கொள்வதைத் தவிர்த்தல், அல்லாஹ்வின் வெறுப்பைப் பெற்றுத் தராத, நட்புக்கு மெருகூட்டும் விடயங்களில் நகைச்சுவை செய்வது" எனக் குறிப்பிட்டார்கள்.
பயணங்களின் போது தான் எடுத்துச் சென்ற உணவு தண்ணீர் போன்றவற்றை அடுத்தவருக்கு கொடுப்பது, சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அதை அப்படிச் செய்ய வேண்டாம், வாகனத்தை இங்கே நிறுத்த வேண்டாம், அங்கு தான் நிறுத்த வேண்டும் என்பது போன்ற விடயங்களில் கருத்து முரண்பட்டுக் கொண்டிருக்கலாகாது.
இவ்வாறே பயணத்தின் போது பேசாது "உம்" என்று இருப்பவர்கள் பயண நண்பர்களின் நெருக்கத்தை இழப்பர். பயணங்கின் போது பயணத்தின் களைப்பும், சோர்வும் நீங்க நகைச்சுவையாக உரையாட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது அடுத்தவர்களைக் கவி பாடச் செய்து கேட்டு இரசித்துள்ளார்கள்.
நான் பயணத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமையத் இப்னு அபூ ஸவ்த் என்பவரது பாடல்கள் எதுவும் தெரியுமா? என்றார்கள். நான் தெரியும் என்றதும் பாடு என்றார்கள். அது முடிந்த பின் இன்னும் பாடு என்றார்கள். இவ்வாறு அவரது கவிதைகளில் நூறு கவிதைகள்வரை பாடினேன். (முஸ்லிம்-6022, அஹ்மத்-19476)
சிலர் பயணத்தின் போது நான் ரொம்பப் பேணுதலான ஆள் எனக் காட்டிக் கொள்வதற்காக ரொம்ப முயல்வர். நபி(ஸல்) அவர்கள் பயணத்தின் போது சர்வ சாதாரணமாக இருந்துள்ளார்கள். நண்பர்களிடம் தவறுகளைக் காணும் போது தடுத்துள்ளார்கள். அதே வேளை அவர்களுடன் நகைச்சுவையாக உரையாடியுள்ளார்கள். கவிதை பாடவைத்துக் கேட்டுக்கொண்டு வந்துள்ளார்கள். ஹஜ்ஜின் பயணத்தின் போது கூட இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கவிதை பாடிய செய்திகளை நாம் காண்கின்றோம்.
அடுத்து பயணத்தின் போது ஏதேனும் பணிகள், வேலைகள் செய்ய வேண்டி ஏற்பட்டால் அதில் கட்டாயம் நாமும் பங்கெடுக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் சமைப்பதற்கான ஏற்பாடு நடந்த போது தான் விறகு சேர்த்து வரும் பொறுப்பை எடுத்தார்கள் என்பதைப் பார்க்கின்றோம். எனவே பயணங்களின் போது கலகலப்பாகவும் பொது வேலை களில் பங்குகொள்பவராகவும், அடுத்தவருர்களுக்குப் பணிவிடை செய்பவர்களாகவும் இருப்பவர்கள். மக்கள் மனங்களை வெல்வார்கள். மக்களால் நேசிக்கப் படுவார்கள். இத்தகையவர்களுடன் பயணம் செய்ய எவரும் விரும்புவர் என்பதும் கவனத்திற்கொள்ளத் தக்கதாகும்.
இரகசியம் பேணுதல்:-
நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.
அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்;று கூறுவர்.
இரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது உள்ளங்கள் எனும் கப்ருகளுக்குள் அவை அடக்கப்பட்டுவிடும் மீண்டும் அவை வெளியே வராது என்று குறிப்பிடுகின்றனர்.
உமர்(ரழி) அவர்களது மகள் ஹப்ஸா(Ë) அவர்களை உனைஸ் இப்னு குதாபா(ரழி) மணந்நிருந்தார். இவர் ஒரு பத்ர் ஸஹாபியாவார்.
இவர் மரணித்த பின்னர் உமர்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைச் சந்தித்து "நீங்கள் விரும்பினால் ஹப்ஸாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்!" என்று கூறினார்கள்.
உஸ்மான்(ரழி) அவர்கள் இது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகக் கூறி விட்டு சில நாட்களின் பின்னர் "தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை!" என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஹப்ஸா(Ë) அவர்களது திருமணம் தொடர்பாக அபூபக்கர்(ரழி) அவர்களிடம் உமர்(ரழி) அவர்கள் பேசினார்கள். அவர் ஒன்றும் கூறவில்லை. இவர் எந்தப் பதிலும்; தராததால் உமர்(ரழி) அவர்கள் வருத்தப்பட்டார்கள்.
இதன் பின்னர் ஹப்ஸா(Ë) அவர்களை நபி(ஸல்) அவர்கள் பெண் கேட்டு மணமுடித்தார்கள்.
இதன் பின்னர் அபூபக்கர்(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களைச் சந்தித்து, "நீங்கள் ஹப்ஸா விடயமாகப் பேசிய போது நான் பதிலளிக்காதது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் "ஆம்!" என்று கூறினார்கள். அது கேட்ட அபூபக்கர்(ரழி) அவர்கள், "நபி(ஸல்) அவர்கள் ஹப்ஸா பற்றிப் பேசினார்கள்! நபி(ஸல்) அவர்களது இரகசியத்தை வெளியிடவும் முடியாது! மறுக்கவும் முடியாது என்பதால்தான் நான் மௌனமாக இருந்தேன்! அவர்கள் மணமுடிக்காது விட்டிருந்தால் தாங்கள் வேண்டுதலை நான் ஏற்றிருப்பேன்!" என்று கூறினார்கள்.
(புஹாரி- 4005)
அபூபக்கர்(ரழி) அவர்கள் தனது நண்பரும் நபியுமான அல்லாஹ்வின் தூதரின் இரகசியத்தைப் பாதுகாப்பதில் காட்டிய அக்கறையை இந்த செய்தி எடுத்துக்காட்டுகிறது.
ஒருவரிடமும் கூற வேண்டாம் என்று கூறும் செய்தியை அதே போன்று ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று நாமும் கூறிவிடுகின்றோம். அவரும் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று கூறுகின்றார். இப்படியே இரகசியம் பரகசியமாகின்றது.
சிலர் நகமும் சதையும் போல ஒன்றாக இருந்து விட்டு ஏதேனும் பிரச்சினை காரணமாகப் பிரிந்து விட்டால் அவர் அப்படி இப்படி என்று பழைய குப்பைகளைக் கிளற ஆரம்பிப்பார்கள்; இரகசியங்களை அம்பலப்படுத்துவார்கள்.
இத்தகையவர்கள் நட்புக்கொள்ள அருகதையற்றவர்கள். அவர்களிடம் தூய அன்பையோ, நல்ல நட்பையோ எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.
நண்பன் எதிரியானாலும் அவன் நட்புடன் இருந்த போது நடந்த இரகசியங்களைப் பேணுவது கட்டாயமாகும்.
ஆனால், சிலர் எதிர் காலத்தில் பகையாளியாக ஆகிவிட்டால் பழிவாங்குவதற்காகவே நட்போடு இருக்கும் போதே திட்டமிட்டு செயற்படுகின்றனர். இரகசியங்களைச் சேகரித்து அதற்கான சாட்சியங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனிதனாக இருக்கவே தகுதியற்றவர்களாகின்றனர்.
தீமையை நன்மையைக் கொண்டு தடுத்தல் :-
மனிதன் அடுத்தவர்களுடன் இணைந்து வாழும் போது பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பல எதிர்ப்புக்களைச் சந்திக்க நேரிடலாம். தனது எதிரிகளை எதிர்ப்புணர்வுடனும் எதிர்கொள்ளலாம்.
அவ்வாறு எதிர்கொள்ளும் போது போபமும், குரோதமும் அதிகரிக்கும். எதிரிகளை அவர்களே நாணிக் கூணிப் போகும் அளவுக்கு நன்மை மூலம் எதிர்கொள்ளலாம் இதன் மூலம் எதிரியின் எதிர்ப்புணர்வு நட்பாகக் கூட மாறலாம்.
எனவே அன்பும் நட்பும் வளர மக்கள் மனங்களைக் கவர தீமையை நன்மை மூலம் தடுத்தல் என்பது நல்ல வழியாகும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இரும்பை இரும்பால் தான் அறுக்க வேண்டும் என்ற தத்துவம் கூறுவர் பலர். இது அன்பை வளர்க்க வழி வகுக்காது.
இது குறித்து அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;
"எது மிகச் சிறந்ததோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் வர்ணிப்பவற்றை நாமே மிக அறிந்தவர்கள்." (23:96)
"நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகி விடுவார்." (41:34)
நபி மொழிகளில் இதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்.
நபி(ஸல்) அவர்கள் தனது பகிரங்க எதிரிகளான துமாமா, ஹிந்தா, வஹ்ஸி போன்றோரை மன்னித்து இஸ்லாத்தின் பால் அவர்களை ஈர்த்தார்கள். தன்னையும் தனது தோழர்களையும் கொடூரமாக சித்திரவதை செய்தவர்களையும், தனது தோழர்கள் பலரைக் கொலை செய்து ஊரை விட்டும் விரட்டியடித்தவர்களையும் மன்னித்ததன் மூலம் அவர்கள் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாக மாற்றினார்கள்.
அபூஸினா(ரழி) அவர்கள் அறிவிக்கும் துமாமா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் இந்த அடிப்படையில் சிந்திக்க வேண்டிய நிகழ்வாகும்.
தூமாமா என்பவர் யமாமாவின் சிற்றரசராவார். அவர் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்தார். நபி(ஸல்) அவர்களை எங்கு கண்டாலும் கொலை செய்யுமாறு அவர் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
ஒரு முறை முஸ்லிம்கள் இவரைக் கைது செய்தனர். இவரை இனம்காணாத அவர்கள் இவரை மஸ்ஜிதின் தூணில் கட்டிவைத்திருந்தார்கள்.
இவரைப் பார்வையிட்ட நபி(ஸல்) அவர்கள் "துமாமாவே உங்களது நிலை என்ன?" எனக் கேட்ட போது,
"நான் செய்த குற்றங்களுக்காக என்னை நீங்கள் கொல்வதாக இருந்தால் என்னைக் கொல்லலாம்.
என்மீது நீங்கள் இரக்கம் காட்டினால் நன்றியுடைய ஒருவருக்கே நீங்கள் இரக்கம் காட்டுகின்றீர்கள்.
நீங்கள் செல்வத்தை விரும்பினால் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்!" எனக் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் துமாமாவை விடுதலை செய்தார்கள். அவர் குளித்து விட்டு ஷஹாதா கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்றார்கள்.
அப்போது அவர் "இந்த உலகிலேயே உங்கள் முகம்தான் எனக்கு வெறுப்பான முகமாக இருந்தது. இப்போது உங்களது முகம்தான் எனக்கு எல்லா முகங்களை விடவும் நேசத்திற்குறிய முகமாகத் திகழ்கிறது" என்று கூறினார்கள். (புகாரி 4372, முஸ்லிம் 4688)
நபி(ஸல்) அவர்களதும் நபித் தோழர்களினதும் மிகப்பெரிய எதிரியாக இருந்த துமாமா இஸ்லாத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக மாறினார். நபி(ஸல்) அவர்களை வெறுத்த அவர் தனது உயிரை விட அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்.
எனவே, தீமையைத் தீமை மூலம் தடுக்காமல் தீமையை நன்மை மூலம் தடுப்பதனால் அன்பும் நட்பும் வளரும்.
எனவே, எதிரிக்கும் நன்மை செய்து அன்பை வளர்க்கவும், உள்ளங்களை வெல்லவும் முயல்வோமாக.
நற்பண்புகள்:-
பிறரது உள்ளத்தை ஈர்க்கவும், அன்பையும் நட்பையும் பெற்றுக்கொள்ளவும் நாம் நற்பண்புள்ளவர்களாகத் திகழ்வது அவசியமாகும். மக்கள் நம் மீது மதிப்பு வைக்கவும், நாம் கூறுவதைக் கேட்டு நடக்கவும் இது பெரிதும் உதவும். நபி(ஸல்) அவர்கள் உயர்ந்த பண்புள்ளவர்களாக இருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்களது உயர்ந்த நற்பண்புகளால் பலரும் ஈர்க்கப்பட்டனர். நபித்துவத்திற்கு முன்னரே அஸ்ஸாதிக் (உண்மையாளர்), அல் அமீன் (நம்பிக்ககையாளர்) என மக்களால் போற்றத்தக்க விதத்தில் நபி(ஸல்) அவர்களது நற்பண்பு உயர்ந்து திகழ்ந்தது.
நபி(ஸல்) அவர்களிடம் இயல்பாகக் காணப்பட்ட மென்மையான போக்கு அன்பு, பாசம், கருணை, பிறருக்கு உதவும் பண்பு போன்ற எண்னற்ற நற்குணங்களால் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்டார்கள். எனவே பிறரது அன்பையும், நட்பையும் பெற விரும்புவர். பிறர் மீது தனது ஆளுமையைப் பிறயோகிக்க விரும்புவர் எவராயினும் நற்பண்புகள் அதற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என்பதைக் கவனத்திற் கொண்டு நடத்தல் அவசியமாகும்.
மென்மையான போக்கு:-
தவறைக் கண்டிக்கும் போதும் சாதாரனத் தொடர்பாடலின் போதும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் பிறரது அன்பை நாம் பெறமுடியும். கடுமையான போக்கு நண்பர்களையும் எதிரியாக்கி விடும். நெருங்கி வருபவர்களையும் தூரப்படுத்தும்.
"(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்துகொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்." (3:159)
நபி(ஸல்) அவர்களைச் சூழ எப்போதும் நபித் தோழர்கள் திரண்டிருப்பர். இதற்கு அவர்கள் போதித்த போதனை மட்டும் காரணம் அல்ல. அவர்களது மென்மையான போக்கும் காரணம் என மேற்படி வசனம் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கடும் சொல் சொல்பவராகவும் கடுகடுப்பானவராகவும் இருந்திருந்தால் இந்த நபித் தோழர்களெல்லாம் எப்போதோ அவரை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் எதிரிகளுடன் கூட மிக மென்மையான போக்கைக் கைக்கொண்டுள்ளார்கள். உணவில் தனக்கு விஷம் கலந்த பெண்ணுடனும், தான் உறங்கும் போதும் தன்னைக் கொலை செய்ய சதி செய்தவனுடனும் கூட அவர்கள் மென்மையான போக்கைக் கைக்கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.
தன்னுடன் கூட இருப்பவர்கள் தன்னைச் சூழ இருப்பவர்கள் தவறு செய்யும் போது மென்மையாகவே அந்தத் தவறுகளைச் களைய முயன்றுள்ளார்கள்.
அதனால் அவர்கள் அனைவரதும் அன்பையும் நட்பையும் பெற்றார்கள்; அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார்கள்.
ஒரு நாட்டுப் புற அறபி மஜ்ஜிதுக்குள் சிறுநீர் கழிக்க முயன்ற போது நபித் தோழர்கள் அவரைத் தடுக்க முற்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், தனது தோழர்களைப் பார்த்து "அவரை விடுங்கள்! அவர் தனது தேவையை நிறைவு செய்யட்டும்! நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டவர்களே தவிர கஷ்டப்படுத்த அனுப்பப்பட்டவர்களல்ல!" எனக் கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அதன் மேல் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுமாறு கூறினார்கள்.
(புகாரி 220, 6128, முஸ்லிம் 685, திர்மிதி 147)
பின்னர் நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தவரை அழைத்து "இது அல்லாஹ்வை ஸுஜூது செய்யும் இடமாகும்! இங்கு மலசலம் கழித்தல், அசுத்தப்படுத்துதல் என்பது கூடாது! இது அல்லாஹ்வினது வேதத்தை ஓதுவதற்கும், அவனை நினைவுபடுத்துவதற்கும் தொழுவதற்கும் உரிய இடமாகும்!" என இதமாக எடுத்துக் கூறினார்கள். (அஹ்மத் 12984)
மஸ்ஜிதுக்குள் சிறுநீர் கழித்த அவரிடம் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு மென்மையாக நடந்துள்ளார் என்பதை அவதானியுங்கள். அந்த மனிதரிடம் பேசும் போது நபி(ஸல்) அவர்கள் அவரை எந்த விதத்திலும் கடிந்துகொள்ளவில்லை. குறைத்துப் பேசவுமில்லை. எவ்வளவு இதமாகவும், இனிமையாகவும் சொல்ல வேண்டிய விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.
இதனை உணர்த்தும் மற்றுமொரு நிகழ்ச்சியையும் நினைவுபடுத்துவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.
ஆரம்பத்தில் தொழுகையில் ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறுவதும் பதில் கூறுவதும் வழக்கத்தில் இருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டது. முஆவியதிப்னுல் ஹகம் அஸ்ஸுலமீ(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,
"நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தும்மி விட்டு "அல்ஹம்துலில்லாஹ்!" எனக் கூறினார். நான் அதற்குப் பதில் கூறும் முகமாக "யர்ஹமுகல்லாஹ்!" என்று கூறினேன். அப்போது மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். "என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்!" என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது கரங்களால் தமது தொடைகளில் அடித்து எனது பேச்சை நிறுத்தினர். நான் மௌனமானேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். என் தாயும், தந்தையும் அவருக்கு அர்ப்பணமாகட்டும். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவரை விடச் சிறந்த ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் என்னை அதட்டவில்லை. எனக்கு அடிக்கவில்லை. என்னைத் திட்டவுமில்லை. "இந்தத் தொழுகையில் மனிதர்களிடத்தில் பேசக் கூடிய பேச்சுக்கள் எதையும் பேசலாகாது! அதில் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் தக்பீர்கள் அவனது வேதத்தை ஓதுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்;று கூறினார்கள்.
(முஸ்லிம்: 1227, 33 – அபூதாவூத்: 931, 930)
இந்த அடிப்படையில் மென்மையாக நடத்தல் என்பது பிறரது அன்பையும் நட்பையும் பெறவும், இருக்கும் அன்பையும் நற்பையும் வளர்க்கவும் சிறந்த வழியாகும். கடுகடுத்த முகமும், கடும் போக்கும் இருக்கும் நட்பையும் இழக்கச் செய்யும் என்பதைக் கவனத்திற்கொள்வோம்.
எனவே மென்மையான போக்கைக் கைக்கொள்வதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர முனைவோமாக!
அழகிய தோற்றம்:-
அழகை விரும்பாதவர் எவருமில்லை. அசிங்கத்தையும், அறுவருப்பையும் கண்டு விலகி ஓடுவதே மக்கள் இயல்பாகும். பிறர் தன் மீது நேசம் வைக்க வேண்டும்! மற்றவர்கள என்னுடன் நெருங்கிப் பழக வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் தமது வெளித் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
வெளித்தோற்றத்தை அழகுபடுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆள் பாதி ஆடை பாதி என்பர். ஆடையை வைத்தே மக்கள் மனிதனை எடைபோடுகின்றனர். எனவே ஆடைகள் அழகானதாகவும், கண்ணியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள்! கண்ணியமான ஆடை என்பது ஆளுமையை உயர்த்திக் காட்டும். இத்தகையவர்களுக்கு வார்த்தைக்கு மக்கள் அதிக மளிப்பளிப்பர்.
வெளித்தோற்றத்தை அழகு படுத்துவதில் தலைமுடிக்கும் அதிக பங்குள்ளது;
அபூஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்;
"யாருக்கு தலை மயிர் உள்ளதோ அதை அவர் கண்ணியப்படுத்தட்டும்!." என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 4165, 4163)
இவ்வாறே நடை, உடை, பாவனை அனைத்தையும் அழகாக வைத்திருப்பது மக்களை நம்மிடம் நெருக்குவதாக இருக்கும்.
சிலர் சமூக அந்தஸ்துப் பெற்ற பெரியவர்களாக இருப்பர். இவர்களது ஆடை நடைமுறையும் அவர்களுக்கு அதிக அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக இருக்கும். எனினும் அவர்கள் ஒழுங்காக வாய்ச் சுத்தம் செய்யாததால் நெருங்கிக் கதைப்பவர்கள் முகத்தை சுழிக்கின்றனர். எப்போது விஷயம் முடியும் எழுந்து ஓடிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே கதைப்பர். பிறர் நம்மை அண்டி வருவதில் பல் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.
ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூச் செய்யும் போதும் பல் துலக்குவது கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்று வீடு வந்தால் முதலில் பல் துலக்குவார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன.
வெற்றிலை சாப்பிடுவோர், புகை பிடிப்போர் தமது அருவருப்பான வாய் தோற்றம், நாற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டாவது இவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் தமது மனைவியர் தம்முடன் இல்லறத்தில் ஈடுபடும் போது எவ்வளவு வெறுப்புடன் நடந்து கொள்வர் என்பதையாவது இவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் தமது வாயிலிருந்து கெட்ட வாடை வெளியேறாதவாறு பார்த்துக் கொள்ளல் அவசியமாகும்.
அத்துடன் நல்ல மணம் வீசும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் சுன்னாவாகும்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
நபி(ஸல்) அவர்கள் சிவந்த தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களது வியர்வை முத்துப் போல் இருக்கும். நபி(ஸல்) அவர்களது கரத்தை விட மென்மையான பஞ்சையோ! பட்டையோ! நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களை விட அதிக மனம் உள்ள கஸ்தூரியையோ! அன்பரையோ! நான் மணந்ததில்லை.
(முஸ்லிம் 82, 6200, அஹ்மத் 13374)
எனவே அழகிய ஆடை அமைப்பு, நாகரீகமான சிகை அலங்காரம், உடல் சுத்தம், வாய் சுத்தம், நல்ல வாசனை என்பன போன்ற பிறரைக் கவரக்கூடிய அம்சங்கள் எம்மிடம் குடிகொள்வது அவசியமாகும். இவற்றின் மூலம் மக்கள் நம் மீது நேசம் கொள்வர். நெருங்கி வருவர். நமது தோற்றம் அவர்கள் மீது ஆளுமை செலுத்தும் வண்ணமிருந்தால் நாம் கூறுவதை அவர்கள் கேட்பார்கள். தஃவாவிற்கு இது பெரிதும் உதவியாக அமையும். எனவே உங்கள் வெளித்தோற்றத்தை அழகானதாகவும், பிறரைக் கவரத்தக்கதாகவும் அமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
குறை கூறுவதை விட்டுவிடுங்கள்:-
சிலர்; எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். எதிலும் அவர்கள் நிறை காண மாட்டார்கள். குறை காண்பதில் கிள்ளாடியாக இருப்பார்கள். இத்தகையவர்களை மனிதர்கள் நேசிக்க மாட்டார்கள். நெருங்கி இருக்கவும் விரும்ப மாட்டார்கள். எனவே, பிறரை வாழ்த்தவும், போற்றவும் நாம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறையைச் சுட்டிக் காட்டும் போதும் சில நிறைகளைச் சுட்டிக்காட்டி இந்தக் குறையை மட்டும் திருத்திக் கொண்டால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கும் என நாசுக்காகக் குறையைச் சுட்டிக்காட்ட முடியும்;. இதற்கு மாற்றமாகச் சிலர் எந்த நன்மையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். குறைகளை மட்டும் முகத்தில் அடித்தாற் போல் கூறிவிடுவர். அதே நேரம், தனது இந்த நடத்தை பற்றி போற்றிப் புகழ்ந்து கொள்வர். நான் அப்படித்தான் யாரெண்டும் பார்க்க மாட்டேன் முகத்துக்கு முகம் நேராகச் சொல்லிவிடுவேன் என்றெல்லாம் கூறுவர். இத்தகையவர்களது முன்னிலையில் மக்கள் சமாளித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்களைக் கண்டால் விலகி ஓட விரும்புவர்.
அனஸ்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,
"நான் நபி(ஸல்) அவர்களிடம் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளேன்! அவர்கள் ஒரு போது கூட சீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை! நான் செய்த ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதுமில்லை! செய்யாத ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்யவில்லை? எனக் கேட்டதில்லை.
(திர்மிதி 2015, அஹ்மத் 13035, 13373)
நபி(ஸல்) அவர்கள், இப்னு உமர் (வ) அவர்கள் பற்றிக் கூறும் போது "இப்னு உமர் நல்ல மனிதர்! இரவிலே அவர் எழுந்து தொழுதால் இன்னும் நன்றாக இருக்கும்!" என்று கூறினார்கள். இதன் பின்னர் இப்னு உமர்(ரழி) சிறிது நேரமே உறங்குபவர்களாக இருந்தார்கள். (புகாரி 1122, 1157, 3739, முஸ்லிம் 6525)
குறையைச் சுட்டிக்காட்ட விரும்பினால் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது எளிதில் பயனளிக்கும். எனவே, குறையை மட்டும் பார்க்காது நிறையையும் பார்க்கும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் குறை கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறையைப் போற்றி குறையை நாசூக்காகக் கூறக் கற்றுக்கொள்ளுங்கள். மக்கள் உங்களை மதிப்பர். மக்கள் மனங்களைக் கவர முடியும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப...

Popular Posts