லேபிள்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

நம்முடைய தேனீக்கள், நாம்...

உலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்கூடுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அழிகிறது.
தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர், தேனீயை வளர்ப்போர் என்று அனைவரும் அதைச் சமுதாயத்துக்கு நன்மை தரும் பூச்சியினமாகப் பார்க்கின்றனர்.
நெருக்கடியான தருணங்களில்தான் நாம் சில பாடங் களைப் படிக்கிறோம். இப்போதைய மனித சமூகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் கொடிய ரசாயனங்களின் தீமைகளை அறியவும், அழிவிலிருந்து காத்துக்கொள்ளவும் தேனடைகளின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறது.
தேன் கூடுகளின் எண்ணிக்கை குறைய ஒன்றல்ல, பல காரணங்கள் இருக்கின்றன.
1. பயிர்களைக் காக்க நாம் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
2. கரையான்கள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், வைரஸ் பூச்சிகள், இதர நோய்த் தொற்றுகள் தேன் கூட்டை அணுகக் கூடாது என்று தேனீ வளர்க்கும் தொழில்செய்வோர் இந்த ரசாயனங்களைக் கூடுகளுக்குள்ளும் தெளிக்கின்றனர்.
3. ஏக்கர் கணக்கில் ஒரே பயிரைச் சாகுபடி செய்வதால் வெவ்வேறுவிதப் பூக்கள் அந்தப் பகுதிகளில் பூப்பதில்லை. எனவே, தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தினாலும் அவை சேர்க்கும் தேனில் ஊட்டச் சத்துக்கள் குறைவாகவே இருக்கின்றன.
4. அமெரிக்காவில் தேனீ வளர்ப்போர், தேன் கூடுகளை அடிக்கடி இடம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதனாலும் தேன்கூடுகள் எண்ணிக்கையும் தேனீ எண்ணிக் கையும் கணிசமாகக் குறைகிறது.
தேனியிடம் பாடம்
உண்மையான பிரச்சினை எதுவென்றால், பிரச்சினைகளின் எண்ணிக்கை அல்ல, ஒவ்வொரு பிரச்சினையும் எப்படி இன்னொரு பிரச்சினை மீது வினைபுரிந்து, நிலைமையை மோசமாக்குகிறது என்பதுதான். தேனீக்களிடம் நாம் கற்க வேண்டிய ஒரு பாடத்தைக் கற்காமல் தவறவிடுகிறோம்.
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் 3 அல்லது 4 அல்லது அதற்கும் மேல் என்பது தேனீக்களின் வாழ்வியல் விதி. அதாவது, தேனீ சமூகமானது கூட்டு உழைப்பால் பலனை அதிகம் பெறுகிறது. ஒரு தேன் கூட்டை எடுத்து ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை சேகரித்த தேனில் 120 வகை பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் கிடைத்தன.
தனித்தனியாக அந்தத் தேன் துளிகளை ஆராய்ந்தால், தீங்கு செய்யாத நல்ல தன்மையுடனேயே இருக்கின்றன. ஆனால், ஒட்டு மொத்தமான தேனோ தீமைதரும் ரசாயனங்களின் கூட்டுக் கலவையாகத் திகழ்கிறது. இந்த அளவானது தேனீக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அறவே குலைத்துவிடும். அதன் அடுத்த கட்டமாக தேனீக்கள் அழிவும் தொடங்கிவிடும்.
உலகில் உள்ள தேனீ இனம் ஒட்டுமொத்தமாக அழிந்தால், அது மட்டுமல்ல - அதனுடன் சேர்ந்து நாமும் மிகச் சில வருடங்களிலேயே இறந்துபோவோம், அயல் மகரந்தச் சேர்க்கை தடைபடுவதால்!
நம்மை நாமே...
இந்த ஆய்வு முடிவுகள் பல விதங்களில் முக்கியத் துவம் வாய்ந்தவை. பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள் நாம் கொல்ல நினைக்கும் பூச்சிகளை மட்டும் கொல்வதில்லை. நமக்கு உறுதுணையாக உள்ள பூச்சியினங்களையும் அழிக்கவல்லவை. மறைமுகமாக நம்மை நாமே அழித்துக்கொள்ளக் காரணமாக இருப்பவை.
மனிதர்களுக்கு நோய் வந்தால் வெவ்வேறு மருந்துகள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு வியாதிக்காக நாம் சாப்பிடும் மருந்து, இன்னொரு வியாதிக்காகச் சாப்பிடும் இன்னொரு மருந்துடன் ரசாயன வினைபுரிந்து நமக்குள்ள நோய்களைத் தீவிரப்படுத்தவோ, புதிய நோயை ஏற்படுத்தவோ காரணமாக வாய்ப்பிருக்கிறது. நாம் சாப்பிடும் மருந்தின் தன்மை என்ன, அது எந்தெந்த ரசாயனங்
களை ஏற்கும், எவற்றை நிராகரிக்கும், எவற்றோடு போராடி கடும் விளைவை ஏற்படுத்தும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதேபோலத்தான். பூச்சிக்கொல்லிகள் பயிர்களைக் காக்கின்றன என்பதுடன் பாதிக்கவும் செய்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுக மாகவும் மனிதனையும் தாக்குகின்றன. பூச்சிக்கொல்லி தெளிப்புக்குப் பிறகு, சாகுபடியாகும் தாவரம் அல்லது தாவரப்பொருள், மனிதனால் உட்கொள்ளப்படும்போது அவனுடைய நோயையும் தீவிரப்படுத்துகிறது அல்லது பக்கவிளைவுகளைக் கடுமையாக ஏற்படுத்துகிறது.
எச்சரிக்கை மணி
தேன்கூடுகள் எண்ணிக்கை குறைகிறது என்றதும், 'இது ஏதோ தேனீக்களுக்கு வந்த பிரச்சினை' என்று மனிதர்கள் ஒதுங்கிக்கொள்ள முடியாது. 'இன்றைக்கு தேனீ, நாளை நாம்' என்ற எச்சரிக்கை மணி மூளையில் ஒலிக்க வேண்டும். தேனீக்கள் எந்தவித நோய் பாதிப்பையும் தாங்கும் அளவுக்குத் திறன் பெற்றவை.
தேனீக்கள் தோன்றி சுமார் 4 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும். 4 கோடி ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ முடிந்த ஒரு இனம் ரசாயனப் பூச்சிக் கொல்லிகளால் மறையத் தொடங்கியிருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கையான தகவல். இனி, இத்தகைய ரசாயனக் கலவைகளைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முன்னர், அவை எப்படி மனிதர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் என்பதையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
இயற்கையான சூழலோடு இணைந்து நாமும் எப்படி ஒரு சமூகத்தைக் கட்டியமைக்கலாம் என்ற பாடத்தைத் தேனீக்களிடமிருந்து நாம் படிக்க வேண்டும். தேனீக்களைப் போலவே வேறு வகை காட்டுத் தேனீ வகைகளும் இருக்கின்றன. அவையும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவக்கூடும். காட்டிலும் பயிர் நிலங் களிலும் வாழும் இயற்கையான தேனீக்களைப் போலவே மனிதர்களால் கூட்டுக்குள் வளர்க்கப்படும் தேனீக்களும் இருக்கின்றன.
தரிசாக நிலத்தை விடாமல், எல்லா நிலத்தையும் சாகுபடிக்குப் பயன்படுத்துவதாலும், ரசாயனப் பயன்பாட்டாலும், மலர்களைத் தவிர வேறு எவற்றிலி ருந்தும் தேன் கிடைக்காததாலும், பூக்கள் இல்லாத பகுதிகளாக நிலங்கள் மாறிவருவதாலும் தேன்கூடுகள் குறைகின்றன, தேனீக்கள் அழிகின்றன. அத்துடன், வீரியம் மிகுந்த களைக்கொல்லிகள் நிலங்களில் தானாகவே வளரும் காட்டுத்தாவர வகைகளை அழித்துவிடுகின்றன. உண்மையில், இந்தத் தாவரங்களில் பூக்கும் பூக்கள்தான் தேனீக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. இயற்கையில் எதுவுமே வீணோ, தீங்குபயப்பதோ அல்ல. உயிர்ச் சங்கிலியில் அவை யாவும் ஒரு கண்ணி.
சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் உள்ள எனது ஆய்வுக்கூடம் சமீபத்தில் புதிய ஆய்வு முடிவைத் தெரிந்துகொண்டது. கடுகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கைத் தரிசாக விட்டுவைத்தால், அதில் காட்டுச் செடிகள் போல சில வளர்ந்து அதில் பூக்கும் பூக்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அதன் விளைவாக கடுகுச் செடியில் பூக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கடுகு விளைச்சலும் பல மடங்கு பெருகியிருக்கிறது. காட்டுச் செடிகளில் பூக்கள் பூத்ததும் பலவகைத் தேனீக்கள் அந்த மலரை மொய்க்கின்றன. எனவே, மகரந்தச் சேர்க்கை விரைவாகவும் வலுவாகவும் நடக்கிறது.
சிறிதளவு நிலத்தைக்கூடத் தரிசாக விடாமல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு அமெரிக்காவில் ஒரு பண்ணைக்கு 27,000 டாலர் வீதம் லாபம் கிடைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலத்தைத் தரிசாக விடும் விவசாயிக்கோ அதே அளவு நிலப்பரப்பில் 65,000 டாலர் லாபம் கிடைக்கிறது. இதுநாள் வரையில், நிலப்பரப்பில் முழுமையாகச் சாகுபடி செய்து, தேனீக்களையும் வளர்த்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று நம்பிவந்தோம். நாம் வளர்க்கும் தேனீக்கள் மட்டும் போதாது, காட்டுவகை தேனீக்களும் அவசியம். அவை வளர ஒரு பங்கு நிலத்தைத் தரிசாகப் போட்டு, அதில் ஏதாவது காட்டுத்தாவரங்கள் பூக்களுடன் வளர்வது நல்லது என்று புரிகிறது.
இந்த ஆய்வு முடிவு வெறும் பயிர் வேளாண்மை பற்றியது மட்டுமல்ல. தேனீக்களின் எண்ணிக்கை குறைவதால், மனித இனத்துக்கு நேரக்கூடிய ஆபத்தும் சேர்ந்தே வெளிப் படுகிறது. இயற்கையோடு சமநிலையைப் பராமரிப்பதன் மூலமே நாம் வாழ முடியும். காட்டுத்தாவரம், தேனீ, மனிதன் மூவருமே உயிர்ச் சங்கிலியின் பிணைப்பு. ஒன்று அழிவது மற்றவற்றுக்கு நல்லதல்ல என்பதே உண்மை. நாம் நலமாகவும் வளமாகவும் வாழ தேனீக்களும் வாழ்வது அவசியம்.
- தமிழில்: சாரி
தி நியூயார்க் டைம்ஸ்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா ? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அத...

Popular Posts