ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதா?
இன்றைய காலக்கட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில், ஏ.டி.எம் கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.
என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏ.டி.எம் கொள்ளைகளும், பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏ.டி.எம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்படி இருக்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டால், அச்சச்சோ ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதே... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டே இருப்போம்.
அவ்வாறு தொலைந்துவிட்டால் உடனடியாக அதனை எப்படி பிளாக் செய்வது? எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்வது? என்ற விவரங்கள் தெரியுமா? தெரியாது எனில் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கானதே...!!
முதலில் பிளாக் செய்யுங்கள்:
நீங்கள் உங்களது ஏ.டி.எம் கார்டினை தொலைத்து விட்டால், பதற்றப்படாமல் உடனே பிளாக் செய்யுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் உங்களது கார்டினை எளிதில் பிளாக் செய்து கொள்ளலாம். அதற்காக பல வழிமுறைகளும் உள்ளன.
பலரும் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு எப்போது தொலைத்தோம் என்பது கூட தெரியாமல் இருந்து விடுகின்றனர். அதை நாம் பார்த்து அதற்காக வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும்.
மேலும் பின் நம்பரை அறிந்து கொள்ள இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனே தங்களது வங்கிக் கிளையை அணுகி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்.
எவ்வாறு பத்திரமாக பார்த்துக்கொள்வது?
உங்கள் பின் நம்பரை யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்திருப்பது நல்லது.
பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும்.
அதே போல் பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனமான வேலையை தவிர்ப்பது சிறந்தது.
சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்கள் நமது பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
அதனால் ஏ.டி.எம் சென்டரை விட்டு வெளியேறும் போது கார்டு நம்மிடம் தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக