லேபிள்கள்

சனி, 9 மார்ச், 2019

உங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்!

உங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்!

ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி, பலர் கேட்கும் ஒரே கேள்வி... என்ன மைலேஜ் தரும்? என்பதாகவே இருக்கும்.

பவர், டார்க், தொழில்நுட்பம், வசதிகள், டாப் ஸ்பீடு... இவற்றில் நமது வாகனம் சிறப்பாக இருக்க வேண்டும் என ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி பலர் கேட்கும் ஒரே கேள்வி... `என்ன மைலேஜ்  தரும்?' என்பதாகவே இருக்கும். 
 அதுவும் தற்போது பெட்ரோல்/டீசல் விலை தொட்டிருக்கும் புதிய உச்சத்தால், ரன்னிங் காஸ்ட் மீது பலரின் கவனம் விழுந்திருக்கிறது. எனவே, உங்கள் வாகனம் கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும், அதன் மைலேஜை அதிகரிப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும் என எண்ணுகிறோம். 
 சர்வீஸ் வேண்டும் மக்களே!
ஒவ்வொரு நிறுவனமும் தமது வாகனங்களுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை சர்வீஸ் செய்வது குறித்த அட்டவணையை, Owners Manual-ல் வழங்கியிருக்கும். எந்த வாகனமாக இருப்பினும், அது சிறந்த கண்டிஷனில் இருந்தால்தான் சிறந்த மைலேஜ் கிடைக்கும். புதிய வாகனங்களை அந்தந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில், சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வதே நலம். அப்போதுதான் பின்னாளில் வாரன்ட்டி க்ளெய்ம் செய்வதில் எந்தச் சிக்கலும் எழாது.
சில சந்தர்ப்பங்களில் உங்கள் வாகனத்தை வெளியிடங்களில் சர்வீஸ் விட நேர்ந்தாலும், முடிந்த அளவுக்கு வாகன நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட உதிரிபாகங்களைப் பயன்படுத்துங்கள். பைக் என்றால் செயின் ஸ்ப்ராக்கெட்டையும், கார் என்றால் வீல் அலைன்மென்ட்டையும் சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது செக் செய்யவும். இது சரியாக இல்லாதபட்சத்தில், அது உங்கள் வாகனத்தில் மைலேஜில் சிறிய பாதிப்பைத் தரலாம்.
கச்சிதமான ஆக்ஸிலரேஷனே போதும்!
ஆக்ஸிலரேட்டரில் முழு பலத்தைக் காட்டுவதைவிட, தன்மையாகப் பயன்படுத்துவது நல்ல மைலேஜைத் தர உதவும். இது பிரேக்குக்கும் பொருந்தும். மேலும் தேவையில்லாமல் வாகனத்தை விரட்டி ஓட்டுவதைவிட, நிலையான வேகத்தில் க்ரூஸ் செய்வது, இன்ஜினுக்கும் பர்ஸுக்கும் நல்லது. இந்த நேரத்தில் சரியான கியரில் பயணிப்பதும் முக்கியம். ஏனெனில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் செல்வது, இன்ஜினின் செயல்திறனைப் பாதிக்கும். 
தவிர, ஆரஞ்சு விளக்கு எரியும்போதோ - சிக்னலை நெருங்கும்போதோ வேகமெடுப்பதைவிட, படிப்படியாக கியரைக் குறைத்து வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. பைக் என்றால் சரியான சீட்டிங் பொசிஷன் மற்றும் கார் என்றால் கதவுக் கண்ணாடிகளை ஏற்றிவிட்டுக்கொண்டு செல்லும்போது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் பக்காவாக இருக்கும். அதனால் நல்ல மைலேஜும் கிடைக்கும்.
காற்று அழுத்தம்... முக்கியம்!
வாகனம் வைத்திருக்கும் பலரும், பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத விஷயம் இதுதான். ஆனால், உங்கள் வாகனத்தின் மைலேஜில் 5 முதல் 10 சதவிகிதம் பங்கு வகிப்பது, டயர் பிரெஷர்தான். ஒவ்வொரு வாகனத்தின் பர்ஃபெக்ட்டான டயர் பிரெஷர் குறித்த விவரங்கள், அதன் Owners Manual-ல் வழங்கப்பட்டிருக்கும். தற்போதைய வாகனங்களில் பெரும்பாலும் டியூப்லெஸ் டயர்களே இருக்கின்றன. அவை டியூப் டயர்களைவிடக் குறைவான அளவிலேயே காற்றழுத்தத்தைக் கைவிடும் என்பதுடன், இதில் பஞ்சர் சரிபார்ப்பதும் சுலபம். 
ஒருவேளை உங்கள் வாகனத்தின் டயரில் வழக்கத்தைவிடக் குறைவான காற்றழுத்தம் இருந்தால், அது கூடுதல் உராய்வைத் தந்து மைலேஜைக் குறைக்கும். இதுவே அதிக காற்றழுத்தம் இருந்தால், அது உங்கள் வாகனத்தின் ஓட்டுதல் அனுபவத்தைப் பாதிக்கும். எனவே வாரத்துக்கு ஒருமுறை அல்லது வாகனத்துக்கு பெட்ரோல்/டீசல் நிரப்பும்போதோ, டயரில் சரியான காற்றழுத்தத்தை மெயின்டெயின் செய்வது, மைலேஜையும் டயரின் ஆயுளையும் கூட்டும். இதுவே நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டால், அது டயரின் வெப்பநிலையைச் சீராக்குவதில் உதவும்.
அதிக ஐடிலிங் கூடாது!
நெரிசல்மிக்க டிராஃபிக்கில் செல்லும்போது, சிக்னல்கள் நம்மை நிழல்போல பின்தொடர்வது வழக்கமான ஒன்றுதான். எனவே, சிக்னலில் 10 விநாடிக்கும் அதிகமாக நிற்க நேர்ந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடலாம். இதனால் எரிபொருள் சேமிப்பதுடன், காற்று மாசடைவதும் கட்டுப்படுத்தப்படும். பைக் என்றால் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது அதிக எரிபொருளைப் பயன்படுத்தும் எனவும், கார் என்றால் ஏசி ஆஃப் ஆகிவிடும் என்பதாலும், சிக்னலில் நிற்கும் பலர் தமது வாகனங்களை ஆஃப் செய்யாமல் ஐடிலிங்கில் விடுவதைப் பார்க்க முடியும்.
இன்னும் சிலர் ஏதோ ரேஸுக்கு ரெடியாவதுபோல ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டே இருப்பார்கள். இதற்குப் பதிலாக, காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது, சில நிமிடம் ஐடிலிங்கில்விடுவது நன்மை தரும். அப்போதுதான் ஆயில் இன்ஜின் முழுவதும் பரவியிருக்கும். இதனால் சரியான வெப்பநிலையில் இயங்குவதற்கும் இன்ஜின் ரெடியாகியிருக்கும். 
லைட் வெயிட் நல்லது!
உங்கள் வாகனத்தின் எடை குறைவாக இருந்தால், அது இயங்குவதற்குக் குறைவான எரிபொருளையே எடுத்துக்கொள்ளும். இதனால் உங்கள் வாகனத்தின் மைலேஜில் கணிசமான முன்னேற்றம் தெரியும். எனவே, பைக் என்றால் இரண்டு நபர்களுக்கு மேலே செல்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது வாகனத்தின் ஆயுளையும் பாதிக்கும். இதுவே கார் என்றால், ரூஃப்புக்கு மேலே அல்லது டிக்கியில் அளவுக்கு அதிகமான பொருள்களைக் கொண்டுசெல்வது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் மைலேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேவைப்படும்போதுதான் க்ளட்ச்!
உங்கள் வாகனத்தில் கியர் மாற்றுவதற்கு மட்டுமே க்ளட்ச்சைப் பயன்படுத்த வேண்டும்; நெரிசல்மிக்க டிராஃபிக்கில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கு அல்ல என்பதை நினைவில்கொள்ளவும். அதுவும் சிக்னலில் நிற்கும்போது நியூட்ரலில் இல்லாமல், முதல் கியரில் க்ளட்ச்சைப் பிடித்துக்கொண்டே நிற்பதைப் பார்க்க முடியும். 
அது மைலேஜையும் க்ளட்ச் ப்ளேட்டின் ஆயுளையும் குறைக்கும். மேலும், பிரேக் பிடிக்கும்போது க்ளட்ச்சைப் பிடிக்கவே கூடாது மக்களே! இவற்றையெல்லாம் தவிர்க்க, சரியான கியரில் சரியான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தினாலே போதுமானது. 
தரமான எரிபொருள் அவசியம்!
எத்தனை பெட்ரோல் பங்க் இருந்தாலும், கலப்படம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. எனவே, முடிந்த அளவுக்கு ஒரே பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவதை வாடிக்கையாக்கிக்கொள்ளுங்கள். மேலும் IOC, BP, HP போன்ற எரிபொருள் நிறுவனங்கள், Company Owned & Company Operated (COCO) பாணியில் பெட்ரோல் பங்க்குகளைக் கொண்டுள்ளன. இவற்றில் உங்கள் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பும்போது, கலப்படமற்ற எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும். 
ப்ரீமியம் எரிபொருள் என்றால் அது போனஸ்! ஏனெனில், தொடர்ச்சியாகக் கலப்படம் செய்யப்பட்ட எரிபொருளில் இயங்கும் வாகனம், முதலில் மைலேஜைக் குறைத்து, பிறகு கார்புரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் தொடங்கி இன்ஜின் வரை அனைத்தையும் படிப்படியாக காலி செய்துவிடும். மேலும் பெட்ரோல் டேங்க்கை ஃபுல் செய்வதற்கு, காலை அல்லது இரவு நேரத்தில் நிரப்புவது லாபகரமாக இருக்கும். அதாவது மதிய நேர வெயிலில், எரிபொருள் விரைவாகவே வெப்பமயமாகும் தன்மையைக்கொண்டிருக்கிறது
Thanks to vikatan.com
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_25.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts