லேபிள்கள்

திங்கள், 25 மார்ச், 2019

லவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்!

லவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்!

 டாக்டர் வி.விக்ரம்குமார்
'மரம் உரித்துப் போட்ட பட்டைகள் அவை; நயமாகச் சுருண்டு உருண்டு காய்ந்த மரக்குச்சிகளைப்போல உருமாறியிருக்கும். ஆனால், அவற்றின் நறுமணம் அஞ்சறைப் பெட்டியை அலங்கரிக்கும். அது என்ன?' - இப்படியொரு வாசனைமிக்க விடுகதையைக் கேட்டால், நறுமணமூட்டிகளின் ரசிகர்களிடம் இருந்து 'லவங்கப்பட்டை' என்று பதில் வரும்.

சமையலில் மட்டுமன்றி வாசனைத் திரவியங்கள், மவுத் ஃப்ரெஷ்னர் எனப் பல்வேறு இடங்களில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது லவங்கப்பட்டை. பெரும்பாலான பற்பசைகளில் சேர்க்கப்படும் சகிக்கமுடியாத உள்பொருள் களின் சுவையை மட்டுப்படுத்த லவங்கப்பட்டைச் சாறு சேர்க்கப்படுவது பற்பசைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம். லவங்கப்பட்டையைப் புனிதமாகக் கருதி, கடவுளுக்குப் படைத்தனர் கிரேக்கர்கள். சாக்லேட் ரகங்களில் இந்தப் பட்டையைச் சேர்த்து நறுமணம் ஏற்படுத்துவது ஸ்பெயின் மக்களின் வாடிக்கை. நெதர்லாந்து திருவிழா உணவுகளில் ஒன்றான 'ஸ்பெகுலாஸ்' என்பதன் முக்கியப் பொருள் லவங்கப்பட்டை. மாதுளம் பழச்சாற்றை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் 'கோரெஸ்ட்' எனும் இரான் உணவிலும் பட்டை இடம்பெற்றுள்ளது.
பட்டையில்லாமல் பிரியாணியா? வாய்ப்பே இல்லை! பிரியாணியைத் தாங்கிப்பிடிப்பதே பட்டையின் பிரத்யேக மணம்தான். பிரியாணிக்குள் தனது சாரத்தை இறக்கி, செரிமானத்தைத் தூண்டும் இனிமையான வஸ்து லவங்கப்பட்டை. இதைப் பொடியாக்கினால் அதிலுள்ள நறுமண எண்ணெய் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால், பட்டைகளை அஞ்சறைப் பெட்டிக்குள் பாதுகாத்து வைப்பதே நல்லது.

ஐம்பது கிராம் வெண்ணெய், இரண்டு டீஸ்பூன் கருப்பட்டியுடன் ஒரு டீஸ்பூன் பொடித்த லவங்கப்பட்டையைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள் இதை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் விரைவில் சதை பிடிக்கும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த 50 கிராம் திரிபலா சூரணத்துடன் 15 கிராம் பட்டைத்தூள் சேர்த்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம். இதே கலவையை வாய் கொப்பளிக்கும் நீராகவும் பயன்படுத்தலாம். இதனால் பற்களில் உண்டாகும் கூச்சம், வாய் நாற்றம் மறையும்.

ஏலக்காய், தோல் சீவிய சுக்கு, லவங்கப் பட்டை... மூன்றையும் ஒன்றாகப் பொடித்து, 500 மில்லி கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வயிற்றுப்பொருமல், கழிச்சல் குணமாகும். லவங்கப்பட்டை, சோம்பு, கிராம்பு, சுக்கு தலா ஐந்து கிராம் எடுத்துக்கொண்டு 500 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். 100 மில்லியாக வற்றியதும் அதைப் பருகினால் உடலில் தோன்றும் அரிப்பு, எரிச்சல் மறையும். ஒவ்வாமைப் பிரச்னையைப் போக்கும்.
 

சுவாசக் கோளாறுகளைக் குணமாக்குவதிலும் லவங்கப் பட்டையின் பங்கு அதிகம். சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை - வகைக்கு ஐந்து கிராம் எடுத்து, சிறிது துளசி இலையும் கருப்பட்டியும் சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சிக்குடித்தால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் உடனடியாகக் குறையும். தொண்டையை அடிக்கடி செருமவைக்கும் வறட்டு இருமலுக்கு, அதிமதுரத்துடன் லவங்கப்பட்டை சேர்த்துப் பொடியாக்கி ஐந்து சிட்டிகை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

'அல்ஸைமர்' நோயின் தீவிரத்தை லவங்கப் பட்டையின் உட்சாரங்கள் குறைப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, யுஜெனால் போன்றவை அதன் மருத்துவக் குணம் மிக்க செயல்பாடுகளுக்குக் காரணமாகின்றன.

வெள்ளைச் சர்க்கரை சேர்த்த காபி, டீக்குப் பதிலாக லவங்கப்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் பருகிவந்தால் ரத்தத்தில் உள்ள
  எல்.டி.எல் கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவு கணிசமாகக் குறையும். லவங்கப்பட்டையைத் திரவ வடிவில் எடுத்துக்கொள்ளும்போது, சர்க்கரை மற்றும் இதயநோய்களுக்கான வாய்ப்புகள் தடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றுப்புண்களைக் குணமாக்க லவங்கப் பட்டையைப் பயன்படுத்தலாம். பதற்றம் குறைக்கவும் நினைவுத்திறன்அதிகரிக்கவும் லவங்கப்பட்டையைச் சேர்க்கலாம். லவங்கப்பட்டையை முகர்ந்து பார்த்தாலே மனஅழுத்தம் குறையும். பூஞ்சைகள் மற்றும் சில வகையான வைரஸ்களை எதிர்த்துப் போரிடக்கூடியது என்பதால் லவங்கப்பட்டை சேர்ந்த உணவுப் பதார்த்தங்கள் அவ்வளவு எளிதாகக் கெட்டுப்போகாது. பயணங்களுக்கு முன்பு சிறிது லவங்கப்பட்டையை நீர்விட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால் நீண்டதூரப் பயணங்களின்போது ஏற்படும் சிறுநீர் எரிச்சல் குறையும். தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மையும் பட்டைக்கு உண்டு. தலைபாரம் இருக்கும்போது, பட்டையை நீர்விட்டு அரைத்து நெற்றியில் பற்றுபோட்டால் விரைவில் பாரம் இறங்கும். லவங்கப்பட்டைகள் மற்றும் இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. வலிநிவாரணியாக லவங்கப்பட்டை எண்ணெய், பல் மருத்துவத் தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிளகு, பட்டை, இஞ்சி கலந்த சுவைமிக்க தயிரை மதிய உணவுக்குப் பிறகு, தென்தமிழக மக்கள் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

தேனுடன் லவங்கப்பட்டை, மிளகு, திப்பிலி மற்றும் சில நறுமணமூட்டிகளை ஒரு ஜாடியில் சேர்த்து சில நாள்கள் உரக்குழிக்குள் புதைத்து, சூரியஒளி விழும்படி தயாரிக்கும் பானம் முற்காலத்தில் புகழ் பெற்றதாக இருந்தது. பண்டிகை நாள்கள் மற்றும் விருந்தினர்களுக்கான பானமாகவும் இது இருந்திருக்கிறது. சுவையுடன் செரிமானத்தைத் தூண்டுவதற்காக இது பயன்பட்டுள்ளது. இந்தப் பானத்தில் சேரும் நறுமணமூட்டிகளுக்கு `சம்பரா' பொருள்கள் என்று பெயர்.

இலங்கையில் விளையும் லவங்கப் பட்டைக்கே தரத்திலும் குணத்திலும் மதிப்பு அதிகம். நீளமான பட்டையே முதல் தரமாகக் கருதப்படுகிறது. பட்டையை உரிக்கும்போது உதிர்ந்தவை, உடைந்தவை, சீவல்கள் எல்லாம் குறைந்த தரம். தரம் குறைந்த பட்டைகளை ஏற்றுமதி செய்வதில் மடகாஸ்கர் தீவு முன்னிலை வகிக்கிறது. லவங்கப்பட்டைகளுடன் பல்வேறு மரப்பட்டைச் சீவல்களைக் கலப்படம் செய்கின்றனர். முகர்ந்து பார்த்தால் அவற்றில் சிறிதும் வாசனை இருக்காது.

நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, மென்மேலும் பட்டை தீட்டி வளப்படுத்தும் லவங்கப்பட்டையை அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்றால் மிகையல்ல!
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_7.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts