லேபிள்கள்

வெள்ளி, 1 மார்ச், 2019

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆக்கப் பூர்வமாக அவற்றைச் செயல்படுத்திட வேண்டுமெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழிகளைத் தேர்ந்தெடுத்தலே போதுமானது.

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு நிச்சயம் பணம் தேவை. அந்த பணத்தை எவ்வாறு ஈட்டுவது? என்ன செய்தால் உங்களைத் தேடி உங்களை தேவைகளுக்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்க முடியும்?

இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த கேள்விக்கான விடை என்னவாக இருக்கிறது நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா?

சரியான விடைகள் உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் சுற்றும் முற்றும் பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என கவனியுங்கள். அன்றாட உங்களது செயல்களை ஊன்று கவனியுங்கள். ஆம். நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

உங்களைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு தொழில், வேலை போன்றவற்றைச் செய்து கொண்டிருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை மூல காரணம் பணம் சம்பாதிப்பதுதான். அதுதான் அவர்கள் குறிக்கோளாக இருக்கும்.

கீரை விற்கும் கண்ணம்மா முதல் பால் விற்கும் பாலசுப்ரமணி வரை அனைவருமே பணத்தை தேடித்தான் அலைகிறார்கள்.

பணம் பத்தும் செய்யும்.. பணம் பாதாளம் வரை செல்லும்... பணம் இல்லையென்றால் பிணம் என்ற பழமொழிகள் அனைத்துமே பணத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை பறைசாற்றுபவைகள்தான்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எப்படி சம்பாதிப்பது? என்ன செய்வது என்பதில் அதிக குழப்பம் உள்ளது என்று புலம்புபவர்கள் பலர்.

ஆனால் உண்மையில் ஒருவருக்கு பணம் சம்பாதிக்க தெரியாது என்பதெல்லாம் பொய். அதற்கான முயற்சிகளை அவர் எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

உதாரணமாக நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்றாலே,
  முதலில் காலணி தான் அணிய வேண்டும். அதிலிருந்தே உங்களது தேடலைத் தொடங்கலாம். சாதாரணமாக பார்த்தால் அது ஒரு காலணி. ஆனால் வியாபார, தொழில் ரீதியான கண்ணோட்டத்துடன் அதை அணுகினால் அது ஒரு பணம் தரும் பொருள்.

ஆம். நண்பர்களே.. அந்த காலனியை நீங்கள் முதலில் ஒரு கடைக்காரரிடம் வாங்கியிருப்பீர்கள். அவர் நிச்சயமாக ஒரு செருப்பு கடை வைத்திருப்பார். அதிலிருந்து அவருக்கு வருமானம் கிடைக்கும். அந்த செருப்புகளை ஏதோ ஒரு டீலரிடம் இருந்து அவர் பெற்றிருப்பார். அதை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்பவருக்கும் நோக்கம் பணம் சம்பாதிப்பதாக மட்டுமே இருக்கும். அந்த செருப்பை தயாரித்த நிறுவனத்திற்கும் அதுவே முழு முதற் காரணமாக இருந்திருக்கும்.

அதைத் தயாரிக்க உதவிய இயந்திரங்களும், அதைத் தயாரித்தவர்களுக்கும் அப்படியே. செருப்பு தயாரிக்க உதவிய மூலப் பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் "பணம் சம்பாதிப்பதை" அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.

இப்படி சாதாரண காலணியில் கூட இத்தனை ஆயிரம் விஷயங்கள் உண்டு. அன்றாடம் நாம் பயன்படுத்தும் "அழகு சாதனப்பொருட்கள்" கூட அப்படித்தான்.

வீட்டு உபோயகப் பொருட்கள் முதற்கொண்டு, நாம் அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்கள் வரை பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே தயாரித்து/உருவாக்கப்பட்டு விற்கப்படுகிறது.

இவ்வாறு உங்களைச் சுற்றியே உங்களுக்கான பணம் ஈட்டும் வழிகள் 1000 உண்டு. அவற்றில் உங்களுக்குப் பிடித்தமான, உங்களால் செய்ய முடிந்த வியாபாரத்தை, தொழிலை நீங்கள் ஆரம்பிக்கலாம்.

தொழில் ஆரம்பிப்பது என்றால் அதற்கான முதலீடு, மூலதனம் வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்று யோசித்து, அதை கைவிடுபவர்கள் வாழ்க்கையில் என்றுமே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியாது.

தடைகள் அனத்தையும் உள்வாங்கி, அதை எதிர்கொள்ளும் சக்தி படைத்தவர்களால் மட்டுமே தொழில் தொடங்க முடியும். எடுத்த எடுப்பிலேயே "எதிர்மறை சிந்தனை" நிச்சயம் அந்த செயல் முடிக்க உதவாது.

தொழில் தொடங்க சுய ஆய்வு செய்திடுங்கள்:

ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதைப்பற்றிய அறிவு, அனுபவம் நிச்சயம் வேண்டும். அதைப் பெற்றிட முதலில் முயலுங்கள். எந்த ஒரு தொழிலும் இலாபகரமானதுதான். அதை நாம் எப்படி செய்கிறோம், எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் "சூட்சுமம்" அடங்கியுள்ளது.

நம் வீட்டிற்கு வரும் கீரை விற்கும் ஆயா, தனது வருமானத்தை பெருக்கிட செய்யும் வழிமுறை கூட ஒரு நல்ல உதாரணம்தான். 5 ரூபாய்க்கு கிடைக்கும் கீரையை வாங்கி, நம் இல்லம் வந்து அங்கு 10 ரூபாய்க்கு விற்கிறாள். 5 ரூபாய் இலாபம். பத்து வீடுகளில் விற்றால் 50 ரூபாய். 20 கற்றை கீரை விற்று முடித்தால் நிகர லாபகம் ரூபாய் 100.

ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தை தன்னுடைய 100 ரூபாய் மூலதனத்தின் மூலம் பெற்றுவிடுகிறாள். ஆக, செய்யும் தொழில் எதுவாக இருப்பினும், அது தரமானதா, பயன்மிக்கதா, அதிலிருந்து நல்ல வருமானம் கிடைக்குமா என்றுதான் கணக்கிட வேண்டுமே தவிர, அது செய்தால் இப்படி ஆகிவிடும்,இது செய்தால் அப்படி ஆகிவிடும்..
செய்து நசிந்துவிட்டான். இவன் கடன்காரன் ஆகிவிட்டான் என்ற எதிர்மறை எண்ணங்களை வளர விட்டால் ஆபத்துதான். துவகத்திலேயே அதுபோன்ற எண்ணங்களை விட்டு, அந்தந்த பகுதியில் என்னென்ன தேவைகள் இருக்கிறது? போட்டிகள் குறைவாக இருக்கிறது என ஆய்ந்தறிந்து, அதற்கேற்ற வகையில் தொழில் அமைத்து, அதை விரும்பிச் செய்தால் கண்டிப்பாக தொழிலில் வெற்றி பெறலாம்.

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள் என தலைப்பிட்டுவிட்டு கதை கதையாக எழுதுகிறீர்களே என உங்களுக்கு நினைக்கத் தோன்றும்.

100 வழிகளை 100 தலைப்பிட்டு எழுதிவிடலாம். அதற்கு சிறிய விளக்கமும் கொடுத்துவிடலாம். அது போன்று எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எழுதினால் அது ஒரு பாட புத்தகம் மாதிரி (தியரி) ஆகிவிடும். பாடம் படித்து விடுவதினால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில், தொழிலில் வெற்றி பெற முடியுமா என்றால் 100% இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

செயல்படுவதில்தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது. அதில்தான் தொழிலின் நிரந்தர வெற்றி அடங்கியிருக்கிறது.

உங்கள் தெருவில், நகரத்தில் கூட நீங்கள் நிறைய கடைகளை பார்த்திருப்பீர்கள். ஒரு சிலர் புதியதாக தொடங்கி சில மாதங்களில் கடையை மூடிவிடுவார்கள். ஒருவர் அந்த தொழிலில் அதிகம் சம்பாதிக்கிறார் நாமும் அதைப் போலவே செய்து சம்பாதித்து விட வேண்டும் என்ற போட்டியில் கடை வைத்தால், உண்மையில் ஒரு சில மாதங்களில் காணாமல்தான் போவார்கள்.

அந்த தொழில் எப்படி செய்வது? என்ன செய்தால் "வாடிக்கையாளர்"களை கவரலாம் என்பன போன்ற சுவாரஷ்யமிக்க தொழில்நுட்பம்/சாதுர்யம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி பொருள் கொடுத்தால் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்ற நேர்த்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை வாடிக்கையாளர்களிடம் காட்ட வேண்டும்.

கடின உழைப்பு, அதிக பொறுமை இரண்டுமே தொழிலில் வெற்றிப் பெறுவதற்கான இருவழிகள்.

எனக்கு பிசினஸ் செய்ய ஆசை? யாருமே சப்போர்ட் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.
 

இப்படி சொல்பவர்களை முட்டாள் என்று கூட சொல்லலாம். உனக்கு யாருமே வழிகாட்டவில்லை, உதவவில்லை என்றால், உனக்கான வழிகளை நீயே அமைத்துக்கொள். தேடிக்கொள். அப்படி இருந்தால்தான் எவரையும் எதிர்பார்க்காமல் உன்னால் சொந்தக் காலில் நிற்க முடியும்.

சாதாரணமாக கண்ணுக்குத் தட்டுப்படும் ஒரு தென்னங்கீற்றைக் கூட , லாவகமாக பின்னி, கீற்றாக்கி விற்க முடியும். நாலு தென்னை மட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குச்சிகள் ஒரு துடைப்பமாக உருவாகிறது. இன்று நகரங்களில் ஒரு துடைப்பத்தின் விலை
  50 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கண்ணில் காண்பவை அனைத்துமே உங்களுக்கு வருமானத்தை தரக்கூடிய வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடியவைதான். தேவை ஆக்கப்பூர்வான சிந்தனை. அவ்வளவுதான்.

ஹா..ஹா... இதென்னா பணம் சம்பாதிக்க வழிகள் சொல்றேன்னுட்டு 100 க்கும், 50க்கும் சம்பாதிக்கிற பாட்டி கதைகள் சொல்றீங்களேன்னு உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம்.

என் பாட்டி அடிக்கடி சொல்வது போல, ஒவ்வொன்னாதான் நூறாகும், ஒட்டுக்கா நூறாகாது. 100 என்பது துவக்கத்திலேயே வந்துவிடாது. ஒன்று, இரண்டு என ஆரம்பித்து 99 முடிந்த பிறகு 100 என்ற இலக்கம் வரும்.

அதுபோலதான், படிப்படியான முன்னேற்றம் தான் சரியானதாக இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பல லட்சங்கள் முதலீட்டில் அனுபவமில்லாமல் குதித்துவிட்டு, பணத்தை வியாபாரத்தில் தொலைத்துவிட்டு, பிறகு வருந்துவதால் பயனேதும் இல்லை.

எந்த ஒன்றுக்குமே துவக்கப்புள்ளி உண்டு. அது சுழியத்தில்தான் தொடங்கும். அது முடியும்போது, அதன் மதிப்பு எண்ணிலடங்காது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

துவழக்கூடாது
என்ன இது? எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கிறதே? ஒரு நாளைக்கு பத்து துடைப்பம் விற்பது இலக்கு. ஆனால் ஒன்று கூட விற்காமல் இன்று நாள் கடந்து விட்டதே என்று வருத்தப்படக்கூடாது. இந்த இடத்தில்தான் வாடிக்கையாளர்களின் மனதை படிக்க வேண்டும். வியாபார யுக்தியை செயல்படுத்த வேண்டும். உங்களிடம் பொருள் இருப்பதை அவர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அதனுடைய தரத்தை எடுத்தியம்ப வேண்டும். பொருளுக்கு தேவை இருக்கும்போது வாடிக்கையாளர்கள் கட்டாயம் வந்தே தீருவார்கள். இங்கு போனால், இந்த பொருள் இவ்வளவு தரத்தில் கிடைக்கும் என்பதை அவர்களின் மனதில் ஆழ பதியவிட்டால் போதும். உங்களுக்கு அவர்கள் மூலம் இலவச விளம்பரம் கிடைத்துவிடும்.

விற்பனை இல்லையென துவழாமல், அன்றைய தினத்தை மறந்துவிட்டு, அடுத்த தினத்தில் நடக்கப் போவற்றை நின்று கவனிக்க வேண்டும். மனதளவில் துவழந்து வாடினால், நீங்கள் துடைப்பம் பிசினஸ் செய்யக்கூட தகுதியற்றவர்.

எனக்குத் தெரிந்த பணம் சம்பாதிக்க 100 ஆக்கப்பூர்வான வழிகள் என்னென்ன என்பதை இனிவரும் கட்டுரைத் தொடர்ச்சியில் காணலாம். அதுவரைக்கும் ஒன்றுக்கு 100 முறை இந்த கட்டுரையை வாசியுங்கள்.

https://www.softwareshops.net/2018/07/100-creative-way-to-earn-money.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts