லேபிள்கள்

வியாழன், 25 அக்டோபர், 2018

குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்.....Good Parenting !

பாலுக்கும் மனிதர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை பால் மனிதர்களின் வாழ்வில் ஒன்றியிருக்கிறது. தாய்ப்பாலைவிட குழந்தைகள் அதிகம் பருகுவது பசும்பால்தான். குழந்தைக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம், விட்டமின் பி12 என ஏராளமான சத்துக்கள் பாலில் கிடைப்பதால், குழந்தையின் முதல் ஆறு மாதங்கள் பால் மட்டுமே முழு உணவுத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வோர் உணவாகக் குழந்தை உண்ணத் துவங்குகிறது. மற்ற உணவுகளோடு பாலும் அதிகளவில் வழங்கப்படுகிறது. இப்படி குழந்தையின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் பால், சரியான வழியில்தான் நமக்குக் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாலில் நடக்கும் அரசியல் அதிர்ச்சிகரமானவை.

பாலில் யூரியா கலக்கப்படுகிறது. பசுக்களின் பால் சுரப்புக்காக மருந்துகள், ஊசிகள் போடப்படுகின்றன. ஆண்டிபயாடிக் மருந்துகள் பசுக்களுக்கு வாரி வாரிக் கொடுக்கப்படுகிறது. இப்படி எல்லாம் செய்து பசுவின் மடியிலிருந்து கரக்கப்படும் பாலை அருந்தும் மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகிறது என்ற சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, 'பசுவின் கரந்தப் பாலை அப்படியே கொடுக்கக் கூடாது. பதப்படுத்தப்பட்டு, பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலைதான் கொடுக்க வேண்டும்' என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்? எந்த மாதிரியான பால் நல்லது என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார், மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர், செல்வ பிரமிளா.

'பாலில் கால்சியம் உட்பட ஏராளமான சத்துகள் இருக்கிறது. மற்ற உணவுகளைவிட பாலைக் குடிக்கும்போது கால்சியம் சத்துகள் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட பால் நல்லது. தற்போது சின்தடிக் பால் என விற்பனைக்கு வருகிறது. ஐந்து அல்லது ஆறு நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்கிறார்கள். சின்தடிக் பால் வகைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது. பதப்படுத்தப்பட்ட ஆவின் பால் நல்லது. சிறிய குழந்தைகள் சாதம் போன்ற உணவுகளைச் சாப்பிடத் துவங்குவதற்கு முன்னர், அழும்போது தேவைக்கேற்ப பால் வழங்கலாம். எந்த வயதுடைய குழந்தையாக இருந்தாலும், பாட்டிலில் பால் கொடுக்கக் கூடாது. பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுப்பதால், இன்பெக்க்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், ஸ்பூனில் கொடுக்க வேண்டும். கொஞ்சம் பெரியவர்களானதும் டம்ளரில் குடிக்கப் பழக்க வேண்டும்.

வளரிளம் பருவக் குழந்தைகளுக்குப் பால் மிகவும் அத்தியாவசியமான, அவசியமான உணவு. குழந்தைகள் உணவு உண்ணத் துவங்கிய பின்னர் காலையில் ஒரு டம்ளர், மாலையில் ஒரு டம்ளர் என 500 மி.லி அளவில் பால் வழங்கினால் போதும். பாலில் சுண்ணாம்புச் சத்து, கால்சியம் அதிகளவில் உள்ளது. பற்களின் ஆரோக்கியத்துக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பால் அவசியமான ஒன்று. எப்போதெல்லாம் எந்த அளவில் பாலைக் கொடுக்க வேண்டும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். சில பெற்றோர்கள், மற்ற உணவுகளை ஊட்டுவதற்குச் சோம்பல் பட்டு வளர்ந்த குழந்தைகளுக்குக்கூட பாலை ஊற்றிக் கொடுப்பதை பார்க்க முடிகிறது. அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவு தூக்கத்தில் குழந்தைகள் அழுதால்கூட, பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுத்துவிடுவார்கள். எதற்காக அழுகிறது, ஏன் அழுகிறது என்பதையெல்லாம் கவனிப்பது இல்லை. இதுவும் தவறு. தூக்கத்தில் பாலைக் கொடுப்பதால் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று, வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்குப் பற்கள் விழுந்து முளைப்பதற்குள், சொத்தைகள் அரிக்கப்பட்டு இருக்கும். பற்களைச் சுத்தப்படுத்தாமல் பாலைக் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்குப் பற்களின் சுகாதாரம் அவசியம். தொடர்ந்து பால் அருந்திக்கொண்டே இருக்கும் குழந்தைகளால் கடினமான பொருட்களை கடித்து மெல்ல இயலாத நிலை ஏற்படும்.

காலையில் எழுந்ததும் பல் முளைத்த குழந்தைகள் பல் துலக்கிய பின்னரும், பல் முளைக்காத குழந்தைகளாக இருந்தால் வாய் கொப்பளித்த பின்னரும் ஒரு டம்ளர் பால் குடிப்பது சரியான வழிமுறை. பின்னர், பெரியவர்கள் போல அவர்களும் காலை உணவாக இட்லி, தோசை உட்கொள்ள வேண்டும். பல பெற்றோர்கள் இட்லி, தோசைக்கும் குழந்தைகளுக்கு பால் ஊற்றி, சர்க்கரை போட்டு சாப்பிட வைக்கின்றனர். ஒரு வயது முடியும்போதே சட்னி அல்லது சாம்பாரை தொட்டு சாப்பிடப் பழக்க வேண்டும். மாலை நேரத்தில் ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம். இரவு பருப்பு சாதம் அல்லது பால் சாதம் அல்லது இட்லி என திட உணவாகக் கொடுத்தாலே போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் தூக்கத்தில் பால் கொடுப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் செல்வ பிரமிளா.--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts