லேபிள்கள்

சனி, 13 அக்டோபர், 2018

வீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்......! வீடு என்ற பெயரில்!

விமானம், சென்னை விமான நிலையத்தை அடைந்த போது, காலை, 11:00 மணி; மனைவி, மகனுடன், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான், தீபக். எல்லாருக்கும் நல்ல பசி; அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர்.
அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தான்.

அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை; லேண்ட் லைன் போனுக்கு தொடர்பு கொண்ட போதும், யாரும் எடுக்கவில்லை. 'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்...' என எண்ணியவன், மெனு கார்டில், தன் கவனத்தை திருப்பினான்.

சாப்பிட்ட பின், கால் டாக்சியில் கிளம்பினர். 15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி.
அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான். 'ரிங்' போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர்.

''மாமா... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா... போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,'' என்றான்.

''உனக்கு விஷயமே தெரியாதா... உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா...''
''இல்லயே மாமா... என்ன விஷயம்?''

''உனக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கு. உங்க அப்பாவும், அம்மாவும், முதியோர் இல்லத்துல இருக்காங்க; யாராவது வந்தா கொடுக்கச் சொல்லி அட்ரஸ் கொடுத்துருக்காரு உங்கப்பா; இரு எடுத்துட்டு வர்றேன்,'' என்று சொல்லியடியே உள்ளே சென்றார்.

'இவங்களுக்கு என்னாச்சு... எல்லா வசதிகளும் நிறைஞ்ச அபார்ட்மென்ட் இருக்கயில ஏன் முதியோர் இல்லத்தில போய் தங்கணும்...' என்று குழம்பிப் போனான்.

சில நிமிடங்களில் வெளியில் வந்த எதிர் வீட்டுக்காரர், ''இந்தாப்பா அட்ரஸ்... நோட் செய்துட்டு கொடு; வேற யாராவது வந்தா சொல்லணுமே...'' என்றார்.
விலாசத்தை காகிதத்தில் குறித்துக் கொண்டு, மீண்டும் அவரிடம் கொடுத்தான்.

''தேங்க்ஸ் மாமா... நான் வரேன்,'' என்று சொல்லி கிளம்பினான்.
அதுவரை மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவி ப்ரீதி, ''என்னாச்சு தீபக்?'' என்று கேட்டாள்.

''என்னத்த சொல்ல... முதியோர் இல்லத்துல தங்கி இருக்காங்களாம்...'' என்றான் கோபத்துடன்!

''முதியோர் இல்லமா... ஏன் வீட்டை விட்டுட்டு...'' என்றாள், ஆச்சரியத்துடன்!
அப்பார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்து, கால்டாக்சியில் ஏறியதும், ''முடிச்சூர் போப்பா,''என்று சொன்ன தீபக், மீண்டும், தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். அவர் எடுக்கவில்லை என்றதும், கோபத்தில் அவன் முகம் சூடானது.
''எங்கே போறோம்?'' என்று கேட்டாள் ப்ரீதி.

''அமைதி இல்லம்,'' சொன்னவனின் குரல் அதிர்ந்தது.
காரில் இருந்து இறங்கியவர்களின் கண்களில் பட்டது, 'அமைதி ஹோம்' போர்டு!

மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, இல்லத்தின் உள்ளே சென்றான், தீபக். வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர், ''யார் நீங்க, என்ன வேணும்...'' என்று கேட்டார்.

''ராமச்சந்திரன், மாலதி அம்மாளை பாக்கணும்,'' வியர்வையை துடைத்தபடியே சொன்னான். ப்ரீதியும், மகனும் மொபைலை நோண்டியபடி இருந்தனர்.

''நீங்க?''

''அவங்களோட பையன்,'' என்றான் தயக்கத்துடன்!
அவனை உட்கார சொன்னவர், ''சின்ன நிகழ்ச்சி நடக்குது சார்... பெரியவங்களோட நேரம் செலவழிக்கிறதுக்காக, ஒரு கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க, கொஞ்சம் வெய்ட் செய்யுங்க,'' என்று சொல்லி, உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில், மகிழ்ச்சியுடன் அங்கு வந்தனர், தீபக்கின் பெற்றோர். வெறுப்பு, கோபம் இரண்டும் சேர்ந்து, அவர்களை வெறித்தவன், ''என்னப்பா இதெல்லாம்... என்ன நினைச்சுட்டு இங்க வந்தீங்க...'' என்றான்.

''தீபக்...'' அப்பா பதில் சொல்ல முயன்றபோது, அங்கு வந்த சமையற்காரர், ''சார்... சாப்பாடு தயார்; சாப்பிட்டுட்டு வந்து பேசுங்க...'' என்றார்.
அவர்களையும் சாப்பிட அழைத்த போது, ''இல்ல; நாங்க இப்பத் தான் சாப்பிட்டு வர்றோம்; நீங்க போய் சாப்பிட்டு வாங்க,'' என்று சொல்லி, முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டான் தீபக்.

சாப்பிட்டு முடித்து அங்கு வந்த அம்மா, ''சாப்பிட்ட உடனே மூச்சு வாங்குதுப்பா... இப்ப எல்லாம் ஒண்ணும் முடியல,'' என்றபடி, அவனருகில் அமர, ''அம்மா... முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க; என்ன மடத்தனம் இது...'' என்று கர்ஜித்தான்.

அங்கு வந்த தீபக்கின் அப்பாவிடம், ''ஏன் மாமா...உங்களுக்காகத் தானே எல்லா வசதியும் இருக்கிற மாதிரி அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்திருக்கோம். சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு முதியோர் இல்லத்துல வந்து தங்கிட்டீங்களே... உங்க மகன் எவ்வளவு, 'ஷாக்' ஆயிட்டார் தெரியுமா...''என்றாள், ப்ரீதி.

''என் மானத்த வாங்கணும்ன்னே, இங்க வந்து தங்கி இருக்கீங்க... ரிசப்ஷன்ல இருந்தவர்கிட்ட, நான் அவங்க பையன்னு சொல்றப்ப, எப்படி கூனி, குறுகிப் போயிட்டேன் தெரியுமா...

''உங்களுக்கு அபார்ட்மென்ட்ல வசதி குறைவுன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லன்னு வேற வசதியான ப்ளாட் வாங்கி, அதுல உங்கள ராஜா மாதிரி தங்க வைச்சிருக்க மாட்டேனா...'' என்றவன், அம்மாவைப் பார்த்து, ''அப்பா தான் மடத்தனமா ஏதோ சொன்னார்ன்னா உனக்கு மூளை வேணாமா...சே, எதிர் ப்ளாட்டில் குடியிருக்கிற மாமா, 'உனக்கு விஷயமே தெரியாதா'ன்னு கேட்ட போது, அந்த இடத்துல என்னால நிக்கவே முடியல.

''சென்னை வந்து இறங்கின பின், எத்தனை முறை உங்களுக்கு போன் செய்றது... மொபைல்போனை கூட எடுத்துப் பேச முடியல இல்ல,'' எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்தான் தீபக்.

''உன் கோபம் புரியுதுப்பா. ஆனா...''
''என்னப்பா ஆனா...'' கோபமாக ஆரம்பித்தவனை, அமைதியாக இருக்கும்படி சைகையினால் கட்டளை இட்டவர், ''உன்கிட்ட சொல்லாம நாங்க இந்த முடிவ எடுத்திருக்க கூடாது தான்; ஆனா, முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்க... நாங்க இங்க வந்தது, மாற்ற முடியாத முடிவுன்னே சொல்லலாம்,'' என்றதும், அதிர்ச்சியுடன் அப்பாவை பார்த்தான்.

''ஆமாம் தீபக்... உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலன்னு கேட்ட இல்லயா... சொன்னா உனக்கு புரியாது; ஒத்துக்க மாட்டே; தர்க்கம் செய்வே... நீ சொன்னியே, அந்த அபார்ட்மென்ட்டுல எங்களுக்கு என்ன குறைன்னு... வசதியில எந்தவொரு குறையும் இல்ல; ஆனா, எங்களால எதிர் வீட்டுக்காரரைக் கூட சந்தித்துப் பேச முடியிறதில்லங்கிறது தான் பெரிய குறை. ''மாசத்துக்கு ரெண்டு, மூணு முறை, 'ஹலோ சார்... சவுக்கியமா...' அவ்வளவுதான் பேச்சு; எதிர் பிளாட்காரர் தான் இப்படின்னா, மத்த ப்ளாட்ல எல்லாம், யார் இருக்காங்கன்னே தெரியாது. நாங்க கூட, சில பேர் கூட பழக முயற்சி செய்தோம்; யாரும் ஈடுபாடு காட்டினா தானே... நாள் முழுக்க, நாங்க ரெண்டு பேரும், எங்களுக்குள்ளேயே என்னத்தப்பா பேசிக்கிறது...
''இங்க ஏன் வந்தோம்ன்னு கேட்டியே... இங்க எல்லாரும் எங்க வயசுக்காரங்க; மனம் விட்டு பேசுறோம்... சண்டை சச்சரவுகளும் வரத் தான் செய்யும்; அதுவும் வாழ்க்கைக்கு தேவை தானே... பேசிப் பழக, மனுஷங்க இல்லாதது என்ன வாழ்க்கை...

''நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட... உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி... வெறும் கட்டடம் மட்டும் வாழ்கையாகிடுமா?

''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு... நீ மறுபடியும் சென்னையில வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்தியமில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம். வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.

''தீபக்... இந்த முடிவை எடுத்ததுல, எனக்கு தான் பெரிய பங்கு இருக்கு,'' என்ற அம்மா, ''இங்கே, எல்லாரும் கிட்டத்தட்ட எங்க வயசுக்காரங்கிறதால சிரிச்சு, பேசி, கலகலன்னு பொழுது போகுது. செங்கல், சிமென்ட், கதவு, ஜன்னல், மாடுலர் கிச்சன், 'ஏசி' இதெல்லாம் மட்டும் வீடு இல்லப்பா, வீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்; இனிமே இது தான் எங்க வீடு,'' என்ற அம்மாவை, நிமிர்ந்து பார்க்க முடியாமல், தலைகுனிந்தான் தீபக்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts