லேபிள்கள்

செவ்வாய், 11 ஜூலை, 2017

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
நரகத்திலிருந்து பாதுகாத்தல்
கடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார்.

மனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் சிரமப்படுகின்றார். அதற்காக எவ்வளவு பணம் செலவழிப்பதற்கும் தயாராகுகின்றார். சிலநேரம் சொத்துக்களை விற்றாவது காப்பாற்ற முனைகின்றார்.
உலகின் எல்லா தொல்லைகளிலிருந்தும் காப்பாற்ற நினைக்கும் கணவன், தன் அன்புக்குரிய மனைவியை நரகத்திலிருந்து காப்பாற்றவும் தன்னாலான அனைத்து வழிகளையும் மேற் கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான கணவனின் அன்பும் பொறுப்புமாகும். 


நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தையும் விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்களாகும். அதன் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறுசெய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வர்கள். (66:6)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணியக் கூடியவளாக மனைவியை மாற்றுவது கணவனின் கடமையாகும். முஸ்லிமான முஃமினான, சாலிஹான பெண்ணாக மனைவி அமையும்போதே குடும்ப வாழ்வு அருளுக்குரியதாக மாறிவிடும்.
குடும்ப வாழ்வில் மனைவி சில தவறுகளை விடும்போது அல்லது கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சில குறைகளை விடும் போது கணவன் கோபப்படுவதை விட அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் தவற விடும்போதே கோபப்பட வேண்டும். காரணம் மறுமை வாழ்வில் மனைவியுடன் வாழ்வு மற்றும் பொறுப்புப் பற்றி கணவன் விசாரிக்கப்பட இருக்கிறார்.
கணவன் தன் குடும்பத்தின் மேய்ப்பாளராவார். அவரது மேய்ப்புப் பற்றி (பொறுப்பு) குறித்து விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி.

குடும்ப வாழ்வில் கணவனின் கடமையும் பொறுப்பும் இந்த உலகத்துடன் முடிவடைவதல்ல. அது குறித்த விசாரணை மறுமையுடன் முடிவடை கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கணவன் இபாதத்களில் கவனம் செலுத்துவதுடன் மனைவியையும் இபாதத்களில் ஈடுபடுத்த வேண்டும்.
நபியே! உமது குடும்பத்தாருக்கு தொழுகையைக் கொண்டு ஏவி, நீர் அதில் பொறுமையாகவும் இருப்பீராக. (20:132)

தொழுவது முதல் அனைத்து இபாதத்களிலும் கணவன் முன்மாதிரியாக இருந்து, மனைவியை வழி நடாத்த வேண்டும். இபாதத்களில் முதன்மையாக இருப்பது தொழுகையாகும். மனைவியுடனான தொடர்பும் இந்த வணக்கத்தின் மூலமே வலுப்படுத்த வேண்டும்.
மனைவி இஸ்லாத்தின் வரம்பை மீறும்போது கணவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதற்கு இடம்கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வுக்கு மாறு செய்து மனைவியை திருப்திப்படுத்துவதை விட மனைவியுடன் கோபப்பட்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்த வேண்டும்.
குடும்ப வாழ்வில் ஏற்படும் தகராறுகள் பிரச்சினைகள் காரணமாக (அற்பமான காரியங்களுக்காக) மனைவியை விவகாரத்துச் செய்வதை விட அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமாக நடக்கும் போதே விவாகரத்து குறித்து முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மனைவியை நரகத்தை விட்டும் காப்பாற்றிக் கொள்ள வழி பிறக்கும்.
மனைவிக்காக செலவு செய்தல் மனைவிக்கு உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, உறையுள் கொடுப்பது, போஷிப்பது உட்பட இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கின்ற அனைத்து செலவுகளும் கணவனுக்குரிய பொறுப்பாகும். இந்த பொறுப்பிலிருந்து கணவன் ஒருபோதும் ஒதுங்கிவிட முடியாது.
பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். (4:34)
இறுதிய ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டேன். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து உபதேசம் செய்தார்கள். அப்போது அறிந்து கொள்ளுங்கள். மனைவியரிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் உங்களிடம் கட்டுப்பட்டு உள்ளவர்களாவர். அது அல்லாத எதையும் நீங்கள் அவர்களிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எனினும் அவர்கள் தெளிவான மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர.
அவர்கள் பாவம் செய்தால் அவர்களை படுக்கையிலிருந்தும் ஒதுக்கி விடுங்கள். கடுமையாக இல்லாமல் லேசாக அடியுங்கள். (அதன் மூலம் அவர்கள்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.
அறிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியரிடம் உங்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் உங்களை உரிமை என்பது, உங்கள் விரிப்பில் நீங்கள் விரும்பாதவர்களை உட்காராமலிருக்கச் செய்வதும் உங்கள் வீடுகளில் நீங்கள் விரும்பாதவர்களை அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.
அறிந்துகொள்ளுங்கள். உங்களிடம் அவர்களுக்குரிய உரிமைகள் என்பது அவர்களுக்கு உடையும் உணவும் தருவதும் நல்ல முறையில் நடந்து கொள்வதுமாகும் எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அம்ர் (ரழி), நூல்: திர்மிதி)

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். அப்போது நபியவர்கள் நீர் சாப்பிடும் போது அவளையும் நீர் சாப்பிடச் செய்ய வேண்டும். நீர் ஆடை அணியும்போது அவளுக்கு அணியச் செய்ய வேண் டும்… என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)

கணவனுக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இந்த ஹதீஸ் களில் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மனைவியுடன் கணவன் நடந்துகொள்ளும் ஒழுங்கு முறைகளையும் விளக்கப்படுத்துகிறார்கள்.
மனைவி ஏழையாகவோ பணக்காரியாகவோ இருந்தாலும் செலவழிப்பது கணவனின் கடமையாகும். மனைவியிடம் செல்வம் இருக்கின்றது. அவளது செலவுகளை அவளது செல்வத்திலிருந்து பார்த்துக் கொள்ளட்டும் என கணவன் சொல்ல முடியாது. அல்லது மனைவி சம்பாதிக்கின்றாள், அவளது சம்பாத்தியத்திலிருந்து அவளது செலவுகளை கவனித்துக் கொள்ளட்டும் என்றும் சொல்ல முடியாது.
கணவன் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் சுற்றி வயிறாற உண்டுவிட்டு, மனைவியை பட்டினியில் போடக் கூடாது. தனக்கென புத்தாடையொன்றை வாங்கி விட்டு மனைவிக்குக் கொடுக்காது விட்டு விடக் கூடாது. தன்னுடைய சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுபோல் மனைவியின் தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு விவாகரத்தில் முடிவு காண முனைந்து, மனைவி தலாக்கிற்கான இத்தாவில் இருக்கும்போது கூட மனைவிக்கான அத்தனை செலவுகளையும் பொறுப்பேற்க கணவன் கடமைப்பட்டுள்ளான். போதுமான செலவுகளை கணவன் தராது விட்டால் அவனது பணத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் போதுமான அளவு பணத்தை எடுத்துக் கொள்வதற்கு மனைவிக்கு தடையேதுமில்லை. இவ்வாறான அனுமதியை ஹின்தா(ரலி) அவர் களுக்கு நபியவர்கள் வழங்கினார்கள்.
மனைவி இத்தாவுடைய காலத்தில் சுகவீனமுற்றாலும் அவளுக்குரிய மருத்துவ வசதியை செய்துகொடுப்பதும், பெருநாள் தினத்தை அடைந்தால் பெருநாளுக்குரிய செலவுகளை பொறுப்பேற்பதும் கணவனின் கடமையாகும்.
மணம் முடித்து மனைவியை தீண்டுவதற்கு முன் அவளை விவாகரத்துச் செய்தாலோ அல்லது மஹரை நிர்ணயம் செய்யாமல் மணம் முடித்து விவாகரத்து செய்தாலோ அப்போது கணவன் தனது வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப மனைவிக்கு ஏதேனும் வசதியை அளிப்பதும் கடமையாகும். (பார்க்க: அல்குர்ஆன் 2:236)
மஹரை நிர்ணயம் செய்து மனைவியை தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்தால் நிர்ணயித்த மஹரில் அரைவாசியை மனைவிக்குக் கொடுப்பதும் கணவனின் பொறுப்பாகும். (பார்க்க 2:237)
மனைவியை தலாக் கூறிய சந்தர்ப் பத்தில் பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அக்குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கும் உணவளிப்பதும் உடையளிப்பதும் கணவனின் கடமையாகும். அக்குழந்தையின் பராமரிப்புக்கான முழுமையான செலவுகளும் கணவனையே சாரும். (பார்க்க 2:233)
வசதி உள்ளவர் (கணவர்) தமது வசதிக்கு ஏற்ப செலவிடப்பட்டும் யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்திற்குப் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான். (65:3)
கணவனின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டே செலவுகளை மனைவியும் பெற வேண்டும். கணவனை கஷ்டத்திற்குள்ளாக்கி செலவுகளை கோரக் கூடாது.
பொதுவாக மனைவி இத்தாவுடைய காலத்தில் இருக்கும்போதும் தலாக்கிற்குப் பின் குழந்தைக்கு பாலூட்டும் போதும் அதற்குரிய செலவுகளை கணவன் பொறுப்பேற்காமல் மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு செல்கிறான். அல்லது தலை மறைவாகின்றான். இத்தாவுடைய காலத்தில் பெற்றோர் தனது மகளை தங்களது வீட்டுக்கு அழைத்து செல்வதால் கணவனது செலவுகளை பெற்றுக் கொள்வதில்லை. கணவனும் கொடுப்பதில்லை. இது பெரும் தவறாகும். இந்தத் தவறை பெற்றோர் செய்யக் கூடாது. கணவன் எச்சந்தர்ப்பத்திலும் மனைவிக்குரிய இக்கடமையை செய்ய பின்நிற்கவும் கூடாது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts