லேபிள்கள்

வியாழன், 5 ஜனவரி, 2017

பூச்சி உருண்டைகளைப் பாவிப்பதில் அவதானம் வேண்டும்

அவள் துடித்துப் பதைத்து ஓடிவந்தது நியாயம்தான். ஒரு தாய்க்கு தன் குழந்தையின் உயிர் பற்றிய பயமும் பதகளிப்பும் இல்லாமல் போய்விடுமா. தாயின் பதற்றத்தைப் புரிந்துகொள்ளமல் சிரித்தபடி நின்றாள் மகள். பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த வயதில் இருக்கப் போவதில்லையே!!

பிரச்சனை பூச்சி உருண்டை வடிவில் வந்தது.
பூச்சி உருண்டை எனச் சொல்லப்படும் இவை பளிச்சிடும் வெள்ளை நிற உருண்டைகளாகும். Naphthalene balls, moth balls  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இனிப்பு வகைகள் போன்ற தோற்றம் கொண்டதால் வாயில் போட்டுவிடலாமா என எண்ணத் தோன்றும்.

மசகு எண்ணெய் மற்றும் நிலக்கரித் தாரிலிருந்து இவற்றைத் தயாரிப்பார்கள். சிகரட் புகையிலும் இது இருக்கிறது. வாகனங்கள் உமிழ்ந்தெறியும் புகையிலும் இருக்கவே செய்கிறது.
பொருட்களையும் உடைகளையும் சேமித்து வைக்கும் அலுமாரி, பெட்டி போன்றவற்றில் பூச்சி கொல்லியான இதைப் போட்டு வைப்பார்கள். பல உணவகங்களிலும் கழிப்பறைகளிலும் வாஷ் பேசினில் போட்டு வைத்திருப்பதையும் காணலாம். இதிலிருந்து எழும் மணமானது கரப்பொத்தான் மற்றும் சிறுபூச்சிகளை வெருட்டி அடிக்கும். மணத்தை எழுப்பும் இவை படிப்படியாகக் காற்றிலேயே கரைந்து அற்றுப் போகும்.
ஏனைய பூச்சி கொல்லிகளைப் போலவே இது மனிதர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம்.

உட்கொள்ளும் போது

ஆயினும் இதனை தற்செயலாகவோ வேண்டும் என்றே உட்கொண்டால் பாதிப்பு அதிகமாகும். பாதிப்பின் தீவிரம் உட்கொள்ளப்பட்ட நப்தலீனின் அளவைப் பொறுத்தது ஆகும்.
இரைப்பையை உறுத்துவதால் வயிற்று வலி, ஓங்களாம், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் ஏற்படும். இவை தானே மாறிவிடக் கூடும்.

ஆயினும் அதிகளவில் உட்கொண்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதந்குக் காரணம் நப்தலீன் ஆனது குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களைப் பாதித்து அவற்றைச் சிதைவடைய வைப்பதே ஆகும். அதிக இரத்தக் கலங்கள் அழியும்போது ஒரு வகை இரத்தசோகை ஏற்றபடும். இதை
 hemolytic anemia  என்பார்கள். சிதைந்த இரத்தத்தின் ஹீமகுளோபினானது சிறுநீருடன் வெளியேறும். சிறுநீர் செந்நிறத்தில்; வெளியேறும்.

அதிகமாக உட்கொண்டிருந்தால் சிறுநீரகம் ஈரல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்புறும்.

நப்தலீனால்
 குருதியில் உள்ள இரும்புக் கூறானது  ferrous என்பதற்கு பதிலாக ferric ஆக மாறும்.  இரத்தத்தினால் உடலுக்குத் தேவையான ஒட்சிசனைக் குருதியால் காவிச் செல்ல முடியாது போய்விடும். உடல் நீலம் பாரிக்கும். methemoglobinemia என்ற இது மற்றொரு கடுமையான விளைவாகும். இந் நிலை தொடரும்போது உடலுக்கு வேண்டிய ஒட்சிசன் இல்லாமையால் வலிப்பும் மரணமும் தொடரலாம்.

நப்தலீன் நச்சு பெரியவர்களை விட குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுவது அதிகம்.

உட்கொள்வதால் மாத்திரம் மட்டுமின்றி, அதன் மணத்தைச் சுவாசிப்பதாலும் குழந்தைகளில் பெரும் பாதிப்பு ஏற்படலாம். நப்தலீனால் மாசடைந்த உடைகள் படுக்கை விரிப்புகள் மற்றும் னiயிநசள போன்றவற்றைத் தொடர்ந்து அணியும்போது அதன் நச்சுத்தன்மை சுவாசத்தின் ஊடாக உடலை அடைந்து, இத்தகைய பாதிப்புகளை பாலகர்களில் ஏற்படுத்தி இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

ஏனைய பாதிப்புகள்

இதன் மணம் சிலருக்கு கண்களில் எரிவை உண்டாக்கும். கண்ணில் நேரடியாகப் பட்டால் கண்கள் சிவந்து நோய்
 conjunctivitis ஏற்படலாம். நீண்டகாலமாக தொடர்பு ஏற்படும்போது வெண்புரை எனப்படும் கற்றரக்ட் ஏற்படவும் கூடும். கண்ணில் பட்டால் உடனடியாக கண்களை நீரினால் நன்கு கழுவுங்கள்.

சருமத்தில் படும்போது சருமத்தை சற்று உறுத்தலாம். உடனடியாகக் கழுவிவிடுதல் போதுமானது. தொடர்ச்சியான தொடர்பு கொண்டிருந்தால் ஒவ்வாமை அழற்சியை ஏற்படுதுவது உண்டு. இதைக் கையாள வேண்டியிருந்தால் வேலை முடிந்ததும் உடனடியாகவே கைகளை நன்கு கழுவுவது முக்கியமானது.

இதன் மணமானது பலரிலும் சுவாசத் தொகுதியில் உடனடிப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிகளவு எச்சில் சுரப்பது, ஓங்காளம், சத்தி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலரில் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

glucose-6-phosphate dehyrogenase
 (G6PD) பிரச்சனை உள்ளவர்களில் பாதிப்பு அதிகமாகும்

நப்தலீனானது மிருகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் ஒன்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் மனிதர்களில் இது பற்றிய தெளிவான ஆய்வு அறிக்கைகளைக் காண முடியவில்லை.

அந்த 5 வயதுக் குட்டிப் பெண் 2-3 பூச்சி உருண்டைகளை முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டாளாம். பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தையின் உடலில் எந்தவித பாதிப்புகளும் தெரியவில்லை. காலையில் சிறுநீர் சற்று இரத்தக் கலரில் போனது என அம்மா கூறினாள்.

உடனடியாகவே சிறுநீரைப் பரிசோதித்தபோது அதில் மாற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. இருந்தபோதும் இரண்டு நாட்களுக்கு அவதானிப்பில் வைத்திருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

குழந்தைகள் தவறுதலாக உட்கொள்வதை அறிவோம்.

அதேபோல விளையாட்டாக அவற்றை முக்கினுள் அல்லது காதினுள் செலுத்தி விடுவதும் உண்டு. அவ்வாறு நடந்தால் நீங்களாக அதை எடுக்க முயலவேண்டாம். மூக்கினுள் கிடப்பதை எடுக்க முயலும்போது அது பிற்புறமாக விழுந்தால் சுவாசக் குழாயினுள் வீழ்ந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் பாரிய ஆபத்து உள்ளது.

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அதை உட்கொண்டிருந்தால் அதன் பாதிப்பை குறைப்பதற்கு
 Activated charcoal  உபயோகிப்பது உண்டு. குருதி சேதமடைந்திருந்தால் குருதி மாற்றீடு செய்ய நேரலாம். நாளம் ஊடாக திரவங்களை ஏற்றவும் தேவை ஏற்படலாம்.

செல்லக் குழந்தைக்காப் பயந்து வந்த தாயானவள் தங்களது செல்லப் பூனைக்காகவோ நாய்க்காகவோ மருத்துவரிடம் செல்ல நேரலாம். ஏனெனில் பாதிப்பு உங்கள் வீட்டில் உள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல வளர்ப்பு மிருகங்களிலும் ஏற்படலாம்.

எனவேதான் பூச்சி உருண்டைகளைப் பாவிப்பதில் அவதானம் தேவை என்றோம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts