லேபிள்கள்

திங்கள், 9 ஜனவரி, 2017

அதிமதுரம்

சித்தா, ஆயுர்வேதம் மட்டுமல்லாது, சீனத்திலும் ஜப்பானிய கம்போ மருத்துவத்திலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகை அதிமதுரம். சர்க்கரைச்சத்து இல்லாமலே இனிக்கும் இந்த வேர், உச்சி முதல் பாதம் வரை உருவாகும் பல்வேறு நோய்களை நீக்கும் அமிர்தம். உடல் வெப்பத்தைத் தணித்து, வாய்ப்புண், நா வறண்டு போதல், காமாலை, வறட்டு இருமல், வயிற்றுப் புண், சிறுநீர் எரிச்சல், உளவியல் நோய்கள் முதலான உஷ்ணம் காரணமாக (பித்தம் காரணமாக) வரும் அனைத்து நோய்களுக்குமே அதிமதுரம் பயன்படுகிறது.

இன்று எப்படி, கசப்பான மருந்துகளைக்கூட, சுகர் சிரப், மணமூட்டிகள் சேர்த்து வழங்குகின்றனரோ, அதேபோல், அந்தக் காலத்தில் கசப்பான மருந்துகளுடன் அதிமதுரத்தைக் கலந்து அதன் அருவருப்பை நீக்கிடவும் பயன்படுத்தி வந்தனர். இன்றைய நவீன உணவு விஞ்ஞான முறை, இதன் இனிப்புச் சுவையைப் பிரித்தெடுத்து, உணவில் இனிப்புச் சுவையைக் கூட்ட பயன்படுத்திவருகிறது. இதன் இனிப்புச் சுவை வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றாலும், சர்க்கரை நோயாளிக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றும் குளுக்கோஸ் சத்து இதில் கொஞ்சமும் கிடையாது.

கைக்குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் இழைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்தில் அதிமதுரம் சேர்க்கப்படுகிறது. அதிமதுரத்தை அரைத்து, குச்சிபோல் காயவைத்து, தாய்ப்பாலில் இழைத்துக் கொடுப்பார்கள். உரைமருந்தில் சேர்க்கப்படும் சுக்கு, திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், அக்கிரகாரம், வசம்பின் காரத்தை அதிமதுரத்தின் இனிப்புச்சுவை மறைத்து, குழந்தை சப்புக்கொட்டிச் சாப்பிடும்படி செய்துவிடும்.

வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமலைவிட அதிகம் வதைக்கக்கூடிய ஒன்று. சிலருக்கு பல வாரங்கள் தொடரும் இந்த வறட்டு இருமல், தொண்டையைப் புண்ணாக்கி, விலா எலும்புகளில் வலியையும் தரும். இந்த வலி பெரிதும் அதிகரிக்கையில், ஒவ்வொரு இருமலிலும் தன்னிச்சையாய் சிறுநீர் வெளிப்படும் தொல்லைகூட உருவாகும்.

இந்த வறட்டு இருமலுக்கு அதிமதுரம் மிகச் சிறந்த மருந்து. அதிமதுரக்கட்டையில் சிறுதுண்டை வாயில் அடக்கிக்கொண்டு உமிழ்நீரை விழுங்கி வந்தாலே, வறட்டு இருமல் நீங்கும். கொஞ்சம் நாள்பட்ட இருமல் இருப்போருக்கு, அதிமதுரம், கடுக்காய், மிளகு இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, இந்த பொடி மூன்று சிட்டிகையை தேன் அல்லது பனங்கற்கண்டுடன் கலந்து கொடுக்க, வறட்டு இருமல் மாறும்.

சித்த மருத்துவத்தில் கண்ட அவிழ்தம் எனும் மிகச் சிறப்பான மருந்து ஒன்று உண்டு. அதிமதுரம், அக்கரகாரம், அரத்தை, சுக்கு இவற்றை நன்கு பொடித்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது இந்த பொடியை நான்கு சிட்டிகை எடுத்து, பாலில் மையாக அரைத்து, அதோடு, பாலில் வேகவைத்த பேரீச்சையைச் சேர்த்து அரைத்து உருட்டி எடுப்பதுதான் கண்ட அவிழ்தம்.

 நாவில் தடவி வந்தாலே, புற்றுமுதலான நாட்பட்ட நோய்களில், பிற மருத்துவத்தால் தணிக்க முடியாத நாவறட்சி நீங்கும். குறிப்பாக, புற்றுநோயில் கீமோதெரப்பி சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் உடல் வெம்மையால் வரும் வறட்டு இருமலுக்கும் நாவறட்சிக்கும் மிகவும் பயனளிக்கும் இந்த கண்டஅவிழ்தம்.

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலிக்கு மிக எளிய மருந்து, அதிமதுர சோம்புக் கசாயம். சித்த மருத்துவப் புரிதல்படி, மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி வருவது, அதிகப் பித்தத்தால்தான். பெண்களுக்கு மாதவிடாயினை ஒட்டி, அல்லது பலருக்கும் வெயிலில் அலைச்சல், இரைச்சலான இடத்தில் இருத்தல், புழுக்கமும் கூட்டமும் நிறைந்த இடத்தில் வசித்தல் போன்ற காரணங்களால், மைக்ரேன் வரும். இதற்கு வலி மாத்திரையை அடிக்கடி எடுப்பது வயிற்றுப் புண்ணை வரவழைக்கும்.

அதிமதுரமும் பெருஞ்சீரகம் எனும் சோம்பும், ஆர்கானிக் வெல்லமும் சமஅளவு எடுத்துப் பொடித்து, அரை தேக்கரண்டி அளவு சாப்பிடலாம். அல்லது இந்தத் தூளை தேநீர் போடுவதுபோல் கசாயமாக்கியும் அருந்தலாம். சுவையான தலைவலி மருந்து இது.

கோடையின் உச்சம் இது. எனவே காமாலை வரும் காலம். முட்சங்கன் வேர்ப்பட்டை, அதிமதுரம் சமஅளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து, சின்ன சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி, காயவைத்து காமாலை வரும்போது, கீழாநெல்லி கற்கம் கொடுப்பதுடன், இந்த மாத்திரையையும் கொடுத்தால், காமாலை நோயும் போகும். கல்லீரலும் சீராகும். அதிமதுரத் தூளை பால், நெய், வெல்லம் சேர்த்து லேகியமாகக் கிளறி, அதனை சிறு நெல்லிக்காய் அளவு கொடுக்க, கோடையில் வரும் சிறுநீர் எரிச்சல் போகும்.

இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் வதைக்கும் நோய், எதுக்களித்தல் (Gastroesophageal reflux disease). மாறுபட்ட உணவும் வாழ்வியலும் இரவுத்தூக்கக் கேடாலும் வரும் இந்தத் தொல்லை, பலருக்கும் பல ஆண்டுகள் தொடரும் நோய். இதற்கு, அதிமதுரத்தூள் உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி காலையும், மாலையும் எடுப்பது நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் மிகச் சிறந்த மருந்து இது. அதிமதுரத்தின் எளிய மலமிளக்கித் தன்மை, வயோதிகத்தினருக்கும் நல்ல பயனளிக்கும். அதிமதுரம் நாவில் மட்டுமல்ல; நோயற்ற வாழ்வும் தந்து வாழ்வையும் இனிக்கச் செய்யும் நாட்டு மருந்து.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts