வீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்டிப்பார்ப்பது குறையும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.
* ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தால், அது வேறொரு பக்கம் கண்டிப்பாக வெளியேற வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் சீராக இருக்கும்.* அறையில் போதிய ஜன்னல்களை அமைத்து விட வேண்டும். அந்த ஜன்னல்களில் சில நீண்ட நீளம், அகலம் கொண்டவையாக அமைவது நல்லது.
* காலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை நன்றாக திறந்து வையுங்கள். ஆனால், வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது, அவற்றை மூடிவிடுங்கள். வெப்பமானது வீட்டுக்குள் அதிகம் உட்புகாமல் இருக்கும்.
* சமையல் அறையில் சமைக்கும்போது வெளிப்படும் புகை காற்றில் கலந்து அறை முழுவதும் பரவ வாய்ப்பு இருக்கிறது. அதனால் வீட்டில் உள்ளவர்கள் அவதிக்குள்ளாக நேரிடும். ஆகவே சமையல் அறை காற்றோட்ட வசதியுடன் அமைந்திருந்தால் மட்டும் போதாது. சமைக்கும்போது வெளிப்படும் நெடியை வெளியேற்றும் வகையிலும் அமைய வேண்டும். அதற்கு எக்சாஸ்ட் பேன் பொருத்துவது அவசியம். அவை சமைக்கும்போது புகையுடன் கலந்து வெளிப்படும் நெடியை ஈர்த்து வெளியேற்றி விடும். அதனால் புகை காற்றில் கலப்பது தவிர்க்கப்படும்.
* வெயிலின் தாக்கம் வீட்டினுள் நுழையாமல் இருக்க மெல்லிய ஜன்னல் திரைகளை உபயோகிக்க வேண்டும். கனமான ஜன்னல் திரைத் துணிகளை தவிர்ப்பது நல்லது. மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்துவதன் மூலம் வீடு காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்.
* பால்கனி மற்றும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பயன்படுத்துங்கள். அவற்றை அவ்வப்போது ஈரப்படுத்தி வையுங்கள். அவை வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் காற்றில் கலந்து இதமான சூழலை ஏற்படுத்தும்.
* வீடுகளில் காற்றோட்டத்திற்காக பொருத்தப்பட்டிருக்கும் சீலிங்பேன் மற்றும் எக்சாஸ்ட் மின்விசிறிகளை அடிக்கடி தூசி படியாமல் சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில் தூசி படிந்து இருந்தால் அதன் சுழற்றி வேகம் குறைந்துவிடும். எனவே மின்விசிறிகளை நன்றாக பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
* மஞ்சள் நிறத்தில் ஒளிரும் விளக்குகளை வீடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வெப்பத்தை அதிக அளவில் உமிழக்கூடியவை. அதற்கு மாறாக சி.எப்.எல். போன்ற ப்ளோரெஸண்ட் விளக்குகளை பயன்படுத்தலாம். இவை அதிக அளவில் வெப்பத்தை வெளியிடுவதில்லை.
* பொதுவாக வீட்டிற்குள் வெப்பமானது மேற்கூரை வழியாகவே அதிகமாக உட்புகும். இதனால் வீட்டின் கூரையை குளுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தற்போது பிரபலமாகி வரும் 'பால்ஸ் சீலிங்' முறையில் வீட்டின் மேற்கூரையில் பொருத்தினால் வீட்டிக்குள் வெப்ப தாக்கத்தை குறைக்கலாம். இல்லையெனில் வீட்டின் மேற்கூரையில் வைக்கோலைப் பரப்பி, அதில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வந்தால் வீடு குளுமையாக இருக்கும்.
* வீட்டின் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறுசிறு செடிகளை தொட்டியில் வளர்ப்பது கோடை வெப்பத்தைக் குறைக்கும் காரணிகளாக அமையும்.
* அறைக்குள்ளும் அலங்கார செடிகளை வளர்க்கலாம். அவை அறைக்குள் பரவி இருக்கும் காற்றில் கலந்திருக்கும் தூசுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவையாக இருப்பது நல்லது. அதன் மூலம் அறைக்குள் சுத்தமான காற்றை சுவாசிக்க வழி பிறக்கும்.
* வீட்டின் காற்றோட்டமான ஒரு ஓரத்திலோ, பால்கனியிலோ, சிறிய தொட்டி அல்லது வாளியில் நீரை நிரப்பி வையுங்கள். அவையும் வெப்பத்தாக்கத்தை குறைப்பதில் பங்கெடுக்கும். ஆனால் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், கொசுக்கள் அல்லது பூச்சிகளின் கூடாரமாகிவிடும்.
https://redhilsrealestateagency.wordpress.com
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக