லேபிள்கள்

சனி, 19 மார்ச், 2016

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

'ஒரு சர்க்கரையில்லாத காபி கொடுங்க', 'ஸ்வீட்... சின்ன பீஸ் போதும்' - பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே உச்சரித்து வந்த வார்த்தைகள் இவை. ஆனால், இன்றைய இளைஞர்களும் ஹோட்டல், பார்ட்டி, பங்ஷன்களில் தித்திப்பு உணவுகளை அதிகம் தவிர்க்க... இப்போது தனியாக சர்க்கரை இல்லாத டீ கேன்களை விருந்துகளில் வைப்பது சகஜமாகிவிட்டது. காரணம், 'கசப்பான' சர்க்கரை நோய்தான். 

மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சர்க்கரை நோய் பற்றிய பயத்திலேயே பலரும் வாழ்கின்றனர். சர்க்கரையைக் கட்டுப்படுத்த வழி தேடி, கடைசியில் 'அறுகம்புல் ஜூஸ்' விற்பவர் முன் போய் நிற்கிறார்கள். அரிசியைக் கண்டால் அலறுகிறார்கள். நடையோ நடை என்று நடக்கிறார்கள். 'சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. 

வாழ்க்கை முறையில் சின்னஞ்சிறு மாற்றங்களை செய்து கொண்டால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்' என்கிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பரணிதரன்.

'சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உணவு விஷயத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியம்  இல்லை. சுவையான லட்டு, அல்வா சாப்பிடக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எதை, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும்'' என்கிறார்.
உடல் எடை
உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்கவேண்டும். உடல் எடை சற்று அதிகமாக இருந்தால், ஐந்து அல்லது 10 சதவிகிதம் எடையைக் குறைப்பது கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன். 

உடலில் உள்ள எல்லா கொழுப்பும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதில்லை. கொழுப்பு எங்கே அதிகம் படிகிறது என்பதுதான் முக்கியம். அதிலும், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு ஆபத்தானது. இப்படி வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்திருப்பவர்களை 'ஆப்பிள்' டைப் என்போம். இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ.க்குக் கீழும், பெண்களுக்கு 80 செ.மீ.க்குக் கீழும் இருக்க வேண்டும்.

 ஆரோக்கியமான உணவு
 சாப்பிடும் உணவைத் திட்டமிடுவது அவசியம். தட்டில் ஊட்டச்சத்து நிறைவாகவும், கொழுப்பு மிகமிகக் குறைவாகவும், கலோரி தோராயமான அளவிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இலையின் ஒரு பகுதியில் சாதத்தை அதிகமாகவும், மற்றொரு பகுதியில் காய்கறியை வைத்தும் சாப்பிடுவோம். இலையைத் திருப்பி காய்கறிகள் அதிகமாகவும், சாதம் குறைவாகவும் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கரிப்பதில் கார்போஹைட்ரேட்டுக்குதான் முக்கிய பங்கு இருக்கிறது. 

எது எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளதோ அது எல்லாம் கார்போஹைட்ரேட் நிறைந்தது. உணவில் வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, வண்ணங்களைச் சேர்க்கலாம்.

 வயிறு நிறைய பயிறு
முடிந்தவரை சமைக்காத இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது, எந்த நோயில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம். 

வயிறு நிறைய முளைவிட்ட தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள என்சைம்கள் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலைப் பாதுகாக்கும். மேலும், நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். இதனால், நம் உடல், சர்க்கரையைக் கிரகிக்கும் வேகம் குறையும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஆப்பிள், கேரட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சர்க்கரையை மட்டுமல்ல, ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கும்.

 வீட்டு உணவு
வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செய்யப்படும் உணவுகளில் சுவையூட்டிகள், நிறமேற்றிகள் உள்ளிட்ட பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், உணவு நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. ஜங்க் ஃபுட் சுவைமிக்கதாக இருந்தாலும், அதில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளன. அவற்றில், கார்போஹைட்ரேட்தான் அதிக அளவில் உள்ளது. வீட்டில் என்ன சமைக்கிறோம்; அதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம். இதனால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு தவிர்க்கப்படும். உணவை பொறுமையாக மென்று சாப்பிடவேண்டும். போதும் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு சாப்பிட வேண்டாம். கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.  

 உடற்பயிற்சி
அன்றாட உடற்பயிற்சி நோயின் தீவிரத்தைக் குறைத்து, எதிர்காலத்தில், சர்க்கரை நோய் ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகளைக் குறைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் செலவிடப்படும் கலோரி காரணமாக உடல் எடை குறைகிறது. இதனால், உடல் பருமனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. உடற்பயிற்சியானது இன்சுலின் ஏற்புத் தன்மையை (சென்சிடிவிட்டி) அதிகரிக்கிறது. தொடர் உடற்பயிற்சியால் கொழுப்பும், உயர் ரத்த அழுத்தமும் குறைகிறது. எனவே, தினமும் உடற்பயிற்சிக்கு என்று நேரத்தை செலவிடுவது அளவில்லா ஆரோக்கியத்தைத் தரும்.

சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்...
1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.
4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.
5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்
http://pettagum.blogspot.in/2014/04/blog-post_6301.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப...

Popular Posts