லேபிள்கள்

செவ்வாய், 1 மார்ச், 2016

உல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்!

''எப்போ லீவு வரும்... டூர் போகலாம்' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷிதான். ஆண்டு முழுவதுக்குமான எனர்ஜியே வார, மாத சுற்றுலாப் பயணம்தான். வீட்டு வேலை, ஆபீஸ் டென்ஷன் என எந்த விஷயங்களைப் பற்றியும் நினைக்காமல் பயணம் மேற்கொள்வது மனதையும் உடலையும் உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்திவிடும். உங்களின் உல்லாசப் பயணம்... பாதுகாப்பானதாக இருக்க, இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுற்றுலா செல்பவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி அலசுகிறார்கள் பொது நல மருத்துவர் கருணாநிதி மற்றும் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்.

நோ டென்ஷன்
  திட்டமிடுதல்தான் டென்ஷனைக் குறைக்கும். போகும் ஊர்களைப் பற்றிய விவரங்கள், எந்த நேரம் போவது வசதி, சுவாரஸ்யத் தகவல்களை சேகரித்துக்கொள்ளுங்கள். அரிய ஊர்களுக்குப் போயும், முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியாமல் போகும்போது, மனச் சோர்வடைய நேரிடலாம்.  
  தொலைதூரப் பயணங்களுக்கு, முடிந்த வரை காரில் செல்வதைத் தவிர்த்து ரயிலில் செல்வது பாதுகாப்பானது.
  வெளியூருக்குக் கிளம்பும் முன்பு, கேஸ் இணைப்பு, மின் இணைப்பைத் துண்டிருத்திருக்கிறோமா, குழாய்களை மூடி இருக்கிறோமா, கதவைப் பூட்டியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபாருங்கள். இல்லையெனில், பயணிக்கும்போது, பலவித சந்தேகங்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதுவே மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

மிதமான உணவு
  அந்தந்த ஊருக்கு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதை சுவைத்துப் பார்ப்பது வித்தியாச அனுபவம் என்றாலும், வழக்கத்தைவிட சற்றுக் குறைவாகவே எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிடுவதால் வாந்தி, அஜீரணம், வயிற்றுப்போக்கு வருவதைத் தவிர்க்கலாம்.  
   அலைச்சலால், உடலில் உள்ள நீர்ச்சத்து பெருமளவு இழக்கப்படும். அதிகப்படியான நீர் இழப்பால் நா வறட்சி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் வரலாம். வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, பழங்களைச் சாப்பிட்டும் நீர் இழப்பை ஈடு செய்யலாம். காய்ச்சி வடிகட்டிய நீரை அதிகம் அருந்துவது பாதிப்பிலிருந்து மீள வழி செய்யும்.  
  சிலருக்கு வண்டியில் ஏறிய சிறிது நேரத்திலேயே, வாந்தி, மயக்கம், வயிற்றுப் புரட்டல் ஏற்படலாம்.  இஞ்சித் துண்டுடன், சீரகத்தூள், உப்புத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து எடுத்துச் செல்லுங்கள்.  
   காலை 11 மணி அளவில் இளநீர், நீர் மோர் அருந்துவது நல்லது.  மதிய நேரத்தில் சாப்பாட்டுடன் வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் சேர்த்த ரைத்தா, பச்சடி சாப்பிட்டால் உடலும் வயிறும் கூலாக இருக்கும்.
   ஆங்காங்கே கூல்டிரிங்ஸ் வாங்கி குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். சர்க்கரை சேர்த்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர் அருந்துவது நீர்க் கடுப்பு, நீர்ச் சுருக்கு வராமல் தடுக்கும்.
  எங்கு உணவு சாப்பிட்டாலும், வெந்நீரைப் பருகுங்கள். வெந்நீர் தொண்டையைப் பாதிக்காது. சளி பிடிக்காது. மினரல் வாட்டரைவிடச் சிறந்தது. செலவும் மிச்சம்.
  எண்ணெய், மசாலா உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற வெந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இதனால், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் பிரச்னை இருக்காது.    
 பெரும்பாலும் அசைவ உணவைத் தவிர்த்து, சைவ உணவு அதுவும் இயற்கை உணவுதான் பெஸ்ட். வயிற்றுப் பொருமல், அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.

மாசுக்களிலிருந்து தப்பிக்க...
 அதிகப்படியான தூசுக்களால் தலைமுடியும், சருமமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். முடி உதிர்வது, வலுவிழத்தல், சிக்கு படிதல், பொலிவிழந்து போகும். வழக்கமாக பயன்படுத்தும், தரமான ஷாம்பு, கண்டிஷனர்களை கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
' பனி பொழியும் இடங்களில் தலைக்கு ஸ்கார்ஃப் அணியலாம். சிலர் வெயிலில் செல்லும்போதும் தலைக்கு ஸ்கார்ஃப் போடுவார்கள்.  இதனால், தலையில் சிலருக்கு அதிகம் வியர்க்கும், முடி உதிரும். இவர்கள், ஸ்கார்ஃப் அணிவதைத் தவிர்த்து, காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளலாம். பயணத்தைத் தொடங்கும் முன்பு தலைக்கு நன்றாகக் குளித்துவிட்டு, முடி காய்ந்ததும் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யலாம். வண்டியில் பயணிக்கும்போது, தலைமுடி பறப்பதையும், தூசுக்கள் படிவதையும் தவிர்க்கலாம்.

உடல் உஷ்ணம் குறைய...
 எண்ணெய், அதிகக் கடினப் பொருட்கள் மசாலாக்கள் சேர்த்த உணவுகளை சாப்பிடுவதாலும் அஜீரணம், வாயுத் தொல்லை ஏற்படும். வாயுத் தொல்லையாலும், ஓய்வின்றி ஊர் ஊராகச் செல்வதாலும்கூட உடல் உஷ்ணம் அதிகரிக்கலாம். உடனடியாக ஜீரணக்கோளாறைச் சரிசெய்வது நல்லது.
 தலையில் தேங்காய் எண்ணெயைத் தடவி தலைக்குக் குளிப்பதன் மூலம் உஷ்ணம் தாக்காமல் காக்கலாம்.  
 மோர், இளநீர், பழச்சாறுகள் உஷ்ணத்தைக் குறைக்கும்.
 வெயிலின் உஷ்ணத்தால் சருமம் சூடாகிவிடும். இதைத் தடுக்க, அடிக்கடி கர்ச்சீப்பை தண்ணீரில் நனைத்து அடிக்கடி கை, முகம், கால்கள், கழுத்து போன்ற அனைத்து இடங்களிலும் ஒத்தி எடுக்கலாம். இதனால், தோல் வறட்சி, படிந்த அழுக்கும் நீங்கி, குளிர்ச்சியாக இருக்கும்.
 உஷ்ணம், தூக்கமின்மை காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்பட்டுச் சிவக்கலாம். நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை போன்ற ஃப்ரெஷ் பூக்களைக் கண்களில் வைத்து துணியால் கட்டிக்கொள்ளலாம். நல்ல குளிர்ச்சியைத் தரும்.

வலியிலிருந்து விலக...
 பஸ், காரில் பயணிக்கும்போது, கை, கால்களை மடக்க முடியாமல் ஒரே நிலையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். அவ்வப்போது எழுந்து, கால்களைச் சுழற்றுவதும், கைகளை சோம்பல் முறிப்பதும், காலைத் தூக்கியபடி வைத்துக்கொள்வதுமாக சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், வலிகள் இருக்காது. நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். வீக்கம் ஏற்படாது.
 பிரயாணக் களைப்பால் கால் வலி அதிகம் இருக்கும். வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து கால்களை நனைப்பதன் மூலம் பாத வலி பறந்துபோகும்.
பாதுகாப்பு
 மலை ஏறும்போது, காது அடைப்பதுபோல, குத்துவலிபோல ஏற்படலாம்.  வாயில் ஏதேனும் சாக்லேட் மென்றுகொண்டே செல்வதன் மூலம், இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
 வெயில் கொளுத்தும் இடமாகச் செல்வது என்றால், பருத்தி ஆடையை அணிந்து செல்லுங்கள். அதுவும் தளர்வாக இருக்கட்டும். அதீத வியர்வை, உடல் சோர்வைத் தடுக்கும்.  குளிர் பிரதேசத்துக்கு செல்வதாக இருந்தால், ஸ்வெட்டர், மங்கி கேப், மஃப்ளர் போன்றவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
 பிளாஸ்டிக்கினால் ஆன செருப்பு, ஹீல்ஸ் அணிவதைத் தவிர்த்து, வசதியான பக்கிள்ஸ் வைத்த செருப்பை அணிவது நல்லது. இதனால் குதிகால், கெண்டைக்கால் வலி வராமல் இருக்கும்.
 பயணிக்கும் வாகனத்தின் குஷன் சீட்டில் அமர்ந்து நெடுநேரம் பயணிக்கும்போது உட்காரும் இடத்தில் உஷ்ணக் கட்டி, பைல்ஸ் வருவதைத் தவிர்க்க, சீட்டின் மேல் பருத்தித் துண்டை விரித்து உட்காரலாம்.
 பயணிக்கும் குடும்ப உறுப்பினர் அனைவரிடமும், உங்களது செல்போன் நம்பர், டிக்கெட் ஜெராக்ஸ், ரசீது, முகவரிகளைக் கொடுத்து வையுங்கள். சமயத்தில் கை கொடுக்கும். காணாமல் போனாலும், சட்டென அவர்களைத் தேடி இணைவதில் சிரமம் இருக்காது.

கையோடு பையில்...
 அதிக அலைச்சல் மலச்சிக்கலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு 20 காய்ந்த திராட்சைகள் சாப்பிட்டால், காலையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சீரகத்தை தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து குளிப்பது உஷ்ணம், அலைச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வைத் தடுக்கும்.
 ஒரு பாக்கெட் வெந்தயத்தை வாங்கி எடுத்துச் செல்லுங்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில், தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.
 பருப்பு பொடி, ஊறுகாய், தக்காளித் தொக்கு, புளிக்காய்ச்சல் என்று தயார்செய்து செல்வதன் மூலம் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட ஃபீல் இருக்கும்.  
 மிளகு சீரகப் பொடி, பருப்புப் பொடி, சுண்டைக்காய்ப் பொடி, புளிக்காய்ச்சல், பொரித்த வடகம் என சில உணவுகளைத் தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. சரியான உணவு கிடைக்காத இடங்களில், வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்லது.  உடலுக்கும் உபத்திரவம் தராது.
 பிரயாணத்தின்போது சிலருக்கு வாந்தி வரலாம். புளிப்பான எலுமிச்சம்பழம், மாங்காய், ஆல்பகோடா பழம், இஞ்சி மரப்பா இவற்றை எடுத்துச் செல்லலாம். பஸ், கடல் விமானத்தில் பயணிப்பவர்களுக்கென, ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவு இல்லாத 'காக்குலஸ்' என்ற மருந்து இருக்கிறது. இதை பயணத்தின்போது கையில் வைத்திருக்கலாம்.
 தொப்பி, குடை, கூலிங்கிளாஸ், சன் ஸ்க்ரீன் லோஷன், ஆலுவேரா ஜெல் கிரீம், குக்கும்பர் ஜெல் கிரீம் வாங்கி எடுத்துச் செல்வதன் மூலம் வெயிலின் நேரடித் தாக்குதல் ஏற்படாமல் காக்கலாம்.
 வெகு தொலைவுப் பயணம் எனில், முதியோர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் அழைத்துச் செல்லாதீர்கள். அப்படியே விரும்பி அழைத்துப் போனாலும், அவர்களுக்கான மருந்து மாத்திரைகள், டானிக் வகைகள், டாக்டரின் மருத்துவ சீட்டு இவற்றையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். குளுகோஸ், வலி நிவாரணத் தைலங்கள் கைப்பையில் இருக்கட்டும்.
 வழக்கமாக நாம் பயன்படுத்தும் சோப், பவுடர், கிரீம் வகைகளைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். மாற்று பிராண்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அலர்ஜியைத் தவிர்க்க இது உதவும்
http://pettagum.blogspot.in/2014/05/blog-post_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts