லேபிள்கள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

இளநீ இளநீ இளநீ..' அருதலையோ இளநீர்

உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை வெறியோடு குண்டுகள் அங்கும் இங்கும் தாறுமாறகப் பறக்கின்றன. சில போர் வீரர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். நாளம்; ஊடாக சேலைன் ஏற்ற வேண்டிய நிலையில் சிலர் இருந்தபோதும் சேலைனுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
மருத்துவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவில்லை. அருகில் உள்ள மரத்தின் கனியைப் பறித்து அதில் உள்ள நீரை சேலைனாக நாளம் ஊடாக ஏற்றுகிறார்கள். போர் வீரர்களது உயிர் காக்கப்பட்டது.

போரிடும் இரு பக்க வீர்களுக்கும் அவ்வாறு சிகிச்சை செய்யபட்டமை பதிவாகியுள்ளது.

போரிட்டவர்கள் ஜப்பானியர்களும் ஆங்கிலேயர்களும். சேலைனாக ஏற்றப்பட்டு உயிர் காத்த திரவம் இளநீர். இது இரண்டாவது உலகமகா யுத்தக் காட்சி.

இலங்கையர்களான நாங்கள் என்றும் இளநிப் பிரியர்களாவே இருக்கிறோம். இங்கு பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஒரு செவ்விளநீர் மரமாவது அலங்காரமாகக் காட்சி தரும். அவற்றில் மஞ்சள் நிற காய்கள் குலை குலையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி ரம்யமானது.
வீதி ஓரங்களில் செவ்விளர்க் குலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தாகத்திற்கு இதமான பானமாகவும், சலக்கடுப்பைத் தணிக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் என ஒவ்வொருவம் வேறு வேறு தேவைகளுக்காக இளநீரை நாடுகிறார்கள்.
ஓவ்வொரு காயிலும் சுமார் 200 முதல் 1000 மில்லி லீட்டர் அளவு இளநீர் கிடைக்கிறது. 5 மாதங்களுக்கு உட்பட்ட காயின் இளநீர் உவர்த்தன்மை கொண்டது. காலம் செல்லச் செல்ல அதன் சுவை அதிகரிக்கும். இருந்த போதும் முற்றிய தேங்காயில் நீர் வற்றிவிடும்.

சுதேச வைத்திய முறைகளான ஆயள்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுகிறது.

அதேபோல நவீன மருத்துவ முறையிலும் இதற்கு நிறைய இடம் உண்டு.

இதில் உள்ளவை என்ன?

இது இனிப்புள்ள பானம். அதில் சுலபமாக உறிஞ்சப்படக் கூடிய இனிப்பும், பொட்டாசியம் சோடியம் போன்ற கனிமங்களும் நிறைய உண்டு.
ஆச்சரியமான நல்ல விடயம் என்னவென்றால் இது நீராகராமாக இருந்தபோதும் அதில் நார்ப்பொருள் 11 சதவிகிதம் இருக்கிறது என்பதாகும். இது கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibre) என்பது குறிப்பிடக் கூடியதாகும். கொழுப்பு மிகக் குறைவாக ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. மாறாக தேங்காய்ப் பாலில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. கொலஸ்டரோல் அறவே கிடையாது

இதன் பயன்பாடுகள்

நீராகரமாக அருந்துவதற்கு ஏற்ற நல்ல பானம். இன்று இளைஞர்களும், யுவதிகளும் ஏனையோரும் தாகம் எடுக்கும்போதும், உணவு உண்ணும் போதும் மென்பானங்களை அருந்துகிறார்கள். அவற்றில் சீனிச் சத்து மிக அதிகமாக உள்ளது.
அவற்றால் ஏற்படும் எடை அதிகரிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இளநீரால் ஏற்படாது. அதனுடைய இயற்கையான தன்மையும், அதன் காரமும் இனிப்பும் சேர்ந்த சுவையும், ஐஸ் இல்லாமலே குளிர்மை உண்ர்வை ஊட்டும் தன்மையும் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.

வயிற்றோட்ட நோய் ஏற்படும் போது உடலில் நீரிழப்புத் தன்மை ஏற்படாதிருக்க மீள நீரூட்டும் பானத்தை (ORS) உலக சுகாதார ஸ்தாபனம்
 (WHO) சிபார்சு செய்கிறது. அதிலுள்ள விரைவில் சமிபாடடையக் கூடிய இனிப்பும், பொட்டசிய சத்தும் அதற்குக் காரணமாகும்.

இளநீரில் அமைனோ அமிலங்கள், கனிமங்கள், நொதியங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் இருக்கிறது. இதனால் இது சற்று தடிப்புத்தன்மை கொண்டபோதும் ழுசுளு சை ஒத்த பலன்; கிடைக்கிறது. குழந்தைகளும் பெரியவர்களும் வயிற்றோட்ட நோயின் போது இதை அருந்துவதால் நீரிழப்பு நிலை ஏற்படாது தடுப்பதுடன் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவதையும் தடுக்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கான பானமாகவும் இதைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கடுமையான விளையாட்டின் போது வியர்வையாக வெளியேறும் சோடியம் கனிமத்தையும், இழக்கபடும் கலோரிச் சத்தையும் இது ஈடு செய்யப் போதுமானது அல்ல என்ற கருத்தை சில ஸ்போர்ட்ஸ் மருத்துவ வைத்தியர்கள் முன் வைக்கிறார்கள்.

வெகிர்குரு, கொப்பளிப்பான் போன்ற நோய்களின் போது சருமத்தில் இது பூசக் கூடியது என சில மருத்துவர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் இது பற்றிய அனுபவபூர்வமான அறிவு என்னிடம் இல்லை.

சலக்கடுப்பு நோய்க்கு கை வைத்தியமாக பலர் இளநீர் இருந்துவதுண்டு. அது கொடுக்கும் குளிர்மை உணர்வும், அதிலுள்ள பொட்டாசியச் செறிவும் காரணமாக இருக்கலாம்.

ஆயினும் சிறுநீரக செயலியப்பு நோயுள்ளவர்களுக்கு இதிலுள்ள அதிக பொட்டாசியம் சத்து ஆபத்தானது என்பதை மறக்கக் கூடாது. அதேபோல அற்ரீனல் செய்பாட்டுக் குறைபாடு, பாம்புக் கடி போன்றவற்றின் போதும் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோயுள்ளவர்களும் இளநீர் அருந்தலாம். அதில் இனிப்பு உள்ள போதும், அது மென்பானங்களில் உள்ளது போல அதிக செறிவில் இல்லை. இளநீரில் நார்ப்பொருளும் சேர்ந்து இருப்பதால் சாதாரண சீனி போல குருதியில் சீனி அளவை அதிகரிக்காது. உடல் எடையை அதிகரிக்கவும் மாட்டாது. ஒமேகா 3 கொழுப்பு இருப்பதும் நல்ல விடயமாகும்.

உயர் இரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கு இது ஏற்ற பானமாகும். சில ஆய்வுகள் இளநீரானது பிரசரைக் குறைக்க உதவும் என்கின்றன. அதிலுள்ள அதிக பொட்டாசியம் இதற்குக் காரணமாகும். மாறாக உப்பில் உள்ள சோடியம் பிரசரை அதிகரிக்கிறது என்பதை அறிவீர்கள்தானே. வாழைப்பழத்திலும் பொட்டாசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான கருத்துக்கள்

பெரும்பாலனவர்கள் கருதுவதுபோல இது குளிர்மையான பானம். சளித் தொல்லையைக் கொண்டுவரும், அதை மேசமாக்கும் என்பவை தவறான கருத்துகளாகும். சளி, ஆஸ்த்மா போன்ற நோயுள்ளவர்களும் தாராளமாக அருந்தலாம்.

இளநீர் பிரியர்கள் அது மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். உணவு ஜீரணமடைவதை அதிகரிக்கும். முதுமையடைவதைத் தடுக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இவை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட முடிவுகள் அல்ல.

இறுதியாகச் சொல்வதானால்
  • இளநீர் நல்ல பானம். மென்பானங்கள், 
  • இனிப்பூட்டப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றை விட மேலானது. 
  • இயற்கையான பானமான இது புத்துணர்ச்சி ஏற்படுத்தக் கூடியது. 
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரும் அருந்தக் கூடியது. 
  • மருத்துவ ரீதியாகவும் நன்மைகளைத் தரக் கூடியது. 
  • நிரிழிவு, பிரஷர், சளித்தொல்லை இருதய நோயுள்ளவர்கள் என யாவரும் அருந்தக் கூடியது.
ஆனால் சிறுநீரக செயலிழப்பு நோயுள்ளவர்களுக்கு ஆகாது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2014/04/blog-post_28.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts